privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை!!

மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை!!

-

வி.வி. மினரல், பிஎம்சி, ஐஎம்சி, ஐஓஜிசி, டிரான்ஸ்வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் சட்ட விரோதமாக நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் மணல் அள்ளுவது குறித்து விசாரணை செய்ய தமிழக அரசால் வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்ட்த்தில் 17,18 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக் குழுவினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் காண்பிக்கும் இடங்களுக்கு மட்டுமே சென்று ஆய்வு செய்கின்றனர். ஆய்வு செய்யும் சில இடங்களில் தாது மணல் நிறுவனத்தினர் அனுமதிக்கப்படுகின்றனர். தாது மணல் நிறுவனங்களினால் பணம் கொடுத்து அனுப்ப்ப்பட்ட சிலர் ஆய்வு குழு அதிகாரியிடம் தாது மணல் ஆலை இயங்காததால் வேலை வாய்ப்பு பறி போவதாகக் கூறி மனு கொடுக்க அனுமதிக்கப்படுகின்றார்கள்.

ஆனால் மணல் அள்ளுவதால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள கடலோர கிராம மக்கள் ஆய்வுக் குழுவை சந்தித்து, தங்கள் கிராமத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் எங்கெல்லாம் தாது மணல் அள்ளப்பட்டுள்ளது, என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கூற அனுமதி அளிக்கப்படவில்லை.

“மணல் ஆலைக்கு எதிரான பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டால் மணல் ஆலை வேண்டும் என்று கூறும் பொது மக்களையும் நாங்கள் அனுமதிக்க வேண்டும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும்” என்று காவல் துறை அதிகாரிகள் தடுத்து விட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்த உவரி மக்களிடம்,”நான் இது குறித்து முடிவு செய்ய முடியாது ஆய்வுக் முழு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்” எனக்  கூறி விட்டார். தாது மணல் வேண்டும் என்று கூறும் பொது மக்களாக காவல் துறையால் கூறப்படுபவர்கள் தாது மணல் ஆலைகளால் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் நபர்கள் என்பது காவல்துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்கு தெரிந்ததே.

இது குறித்து இடிந்தகரையைச் சார்ந்த பெண்கள் கூறும் போது, “இன்று 18.10.13-ம் தேதி எங்கள் ஊருக்கு அருகில் உள்ள தில்லைவனம் தோப்பு பகுதியில் ஆய்வுக்குழுவினர் வந்ததை அறிந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலை 10.00 மணிக்கு சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றோம். நாங்கள் வருவதை தூரத்தில் வைத்தே பார்த்துவிட்ட ஆய்வுக் குழுவினர் அனைவரும் வாகன்ங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். நாங்கள் மதியம் 2.00 மணி வரை அங்கு காத்திருந்து விட்டுத் திரும்பினோம். நாங்கள் சிறிது தூரம் திரும்பச் சென்றதும் மீண்டும் ஆய்வு குழுவினர் வாகனங்களில் அதே இடத்திற்கு திரும்பி வந்தனர். அதன் பின்னர் கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளரும் வேறு அதிகாரிகளும் எங்களை தொடர்பு கொண்டு மாலை 5.00 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருமாறு கூறினர். எக்காரணம் கொண்டும் ஆய்வு செய்யும் இட்த்தில் ஆய்வு அதிகாரிகளை சந்திக்க முடியாது என்று கூடங்குளம் காவல் ஆய்வாளர் கூறிவிட்டார்.”

அதேபோல உவரி பகுதியிலும் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சந்திக்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை. உவரி மக்களை டி.எஸ்.பி தொடர்பு கொண்டு மாலை 5.00 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார்.

17.10.13-ம் தேதி வி.வி.மினரலுக்கு சொந்தமான வாகனங்களும், வி.வி. மினரல்ஸில் பணி புரிபவர்களும் அரசு அதிகாரிகளுடன் தாது மணல் அள்ளிய இடங்களில் வந்து ஆலோசனை செய்துள்ளனர். ஆய்வுக் குழு ஆய்வு செய்ய தேவையான உபகரணங்களை வி.வி. மினரலுக்கு சொந்தமான வாகன்ங்களிலேயே எடுத்து வந்தனர் என்று பஞ்சல் கிராமவாசி ஒருவர் கூறினார். மேலும் மறுநாள் ஆய்வுக்கு வந்த ஆய்வுக் குழுவினர் தாது மணல் எடுக்கப்பட்ட அனைத்து இடங்களையும் பார்வையிடாமல் குறிப்பிட்ட சில இடங்களையே பார்த்து சென்றதாகவும், ஆய்வுக் குழுவினரை சந்திக்க முயற்சி செய்தால் வி.வி. ஆட்களால் தாக்கப்படும் சூழல் இருந்த்தால் பயந்து நாங்கள் ஆய்வுக் குழு அருகில் செல்ல முயலவில்லை என்றும் கூறினார்.

ஆய்வுக் குழுவினரை சந்தித்து மனுகொடுக்க மாலை 5.00 மணிக்கு செல்லும் போது உடன் வருமாறு கூறியதன் அடிப்படையில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் சென்றனர்.

18.10.13 ம் தேதி மாலை 5.00 மணியளவில் இடிந்தகரையைச் சேர்ந்த சுமார் 40 பெண்கள் முழக்க அட்டையுடன் முழக்கமிட்டவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தனர். உடனே அங்கு இருந்த இரு காவல் உதவி ஆய்வாளர்கள் ஓடி வந்து மக்களை தடுத்தனர். மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் தலையிட்டு அவர்களை தடுக்கக் கூடாது என்று வாதிட்டு ஆட்சியர் அலுவலக கட்டிடத்தினுள் அழைத்துச் சென்று அமரச் செய்து கோஷங்கள் எழுப்பச் செய்தோம்.

தாசில்தார் வந்து, “ஆட்சியரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினார்.

அதற்குள் உவரி, கூத்தங்குளி, கூட்டப்புளி, பெருமணல், கூட்டப்பனை மக்களும் வரவே மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் அவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை செய்ததின் அடிப்படையிலும் உவரியைச் சார்ந்த மக்கள், “நாங்கள் ஆய்வுக்குழு தலைவரை சந்திக்க வந்துள்ளோம் . அவரைத்தான் நாங்கள் சந்திப்போம், எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை” என்று கூறி, இதையே ஏனைய ஊர் மக்களிடமும் தெரிவிக்க அவர்களும் ஏற்றுக் கொண்டனர். மேலும் மக்களுடைய நிலைப்பாடு தாசில்தாரிடமும் அதற்குள் குவிந்து விட்ட காவல் துறை அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்ட்து.

“ஆய்வுக் குழு தலைவர் வரமாட்டார், உங்களை இங்கு எந்த ஆய்வாளரும். டி.எஸ்.பி யும் வரச் சொன்னார்களோ அவரிடமே போய் கேளுங்கள். எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை” என்று அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் பிரான்சிஸ் திமிராக கூறினார்.

“நாங்கள் ஆய்வுக்குழுத் தலைவரை சந்திக்காமல் செல்ல மாட்டோம்” என்று உறுதியாக மறுத்து விட்டு மக்கள் ஆட்சியர் அலுவலகம் வாயிலில் அமர்ந்து விட்டனர்.

“நாங்கள் தகவல் கூறி விடுகின்றோம். நீங்கள் வாயிலை விட்டு ஒதுங்கி நில்லுங்கள்.” என்று காவல் துறையினர் கூறினர்.

“நாங்கள் போராட்டம் நடத்த வரவில்லை. ஆய்வுக்குழு தலைவரை சந்திக்க வந்துள்ளோம். அவரை சந்திக்க அனுமதித்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்” என்று கேள்வி எழுப்பவே,

“ஆய்வுக்குழு உறுப்பினர் வந்து மக்களை சந்திப்பார் இப்போதாவது ஒதுங்கி நில்லுங்கள்” என்று காவல்துறை துறை கேட்டுக் கொண்ட்து.

இரவு 8.00 மணி ஆகி விட்ட்தால், “ஆண்கள் ஓரமாக இருந்து கொள்கிறோம், பெண்கள் வாயில் அருகே வாகனம் செல்ல இடையூறு இல்லாமல் இருப்பார்கள்” என்று காவல்துறையினர் அனுமதியை எதிர்பார்க்காமல் பெண்கள் அமர்ந்துவிடவே வேறு வழியின்றி போலீசு அமைதி காத்தது.

சிறிது நேரத்தில் அங்கு வந்த துணை ஆணையர் முனைவர் லோகநாதன் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களை அழைத்து, “இது வரை இந்த இட்த்தில் அமர்ந்து யாரும் போராடியது இல்லை. இது ஒரு முன்னுதாரணமாக ஆகி விடும் தயவு செய்து பெண்களுக்கும் பாதுகாப்பாக வேறு அறை தருகின்றோம்.” என்று கூறினார்.

“ஆட்சியர் அலுவலக வாயிலே பாதுகாப்பான இடமாக நாங்கள் கருதுகின்றோம். இது தவிர மணல் கம்பெனி கைக்கூலிகள் 100 பேருக்கு மேல் திரண்டு வந்துள்ளனர். இந்த பெண்களுக்கு அவர்களால் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள முடியுமா” என்று எழுப்ப்ப்பட்ட கேள்விக்கு “இங்கு பெண்களுக்கு என்ன பிரச்சனை வந்திடப் போகிறது” என்ற பதில் தான் வந்த்து. பெண்களும் உறுதியாக அமர்ந்திருந்தனர்.

தாது மணல் முதலாளிகளின் கைக்கூலிகளும் ஆய்வுக்குழு தலைவரை சந்தித்து மனுகொடுக்க வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை காவல் துறையினர் தனியாக ஒரு இட்த்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

சுமார் 8.30 மணியளவில் ஆய்வுக்குழு தலைவர் வந்த்தும் 5 பேர் மட்டுமே அனுமதி என்றதும், “7 ஊர்களில் இருந்து மக்க்ள் வந்துள்ளனர். ஊருக்கு 5 பிரதிநிதி, ம.உ.பா.மைய வழக்கறிஞர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று மக்கள் நிபந்தனை விதிக்க,  மொத்தம் 10 பேர் ம.உ.பா.மைய வழக்கறிஞர் அதில் ஒருவர் என்று உடன்பாடு ஏற்பட்ட்து. உவரியை சார்ந்த் நிர்வாகிகள் ம.உ.பா.மைய உண்மை அறியும் குழு அறிக்கையை ஆய்வுக்குழு தலைவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்திருந்தனர்.

10 பேரும் ஆய்வுக்குழு தலைவர் அறைக்குள் நுழைந்த்தும் அங்கிருந்த மாவட்ட ஆட்சியாளர் சமயமூர்த்தி உவரி நிர்வாகிகளைப் பார்த்து உங்கள் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு சேங்ஷன் ஆகி விட்டது என்று கூறியதை மக்கள் கண்டு கொள்ளவில்லை.

ஆய்வுக்குழுத் தலைவர் பிரதிநிதிகளிடம்,”நான் நீங்கள் கொடுக்கும் மனுவையும், அவர்கள் கொடுக்கும் மனுவையும்  ஃபார்வர்டு பண்ணுவேன். சம்பந்தப்பட்ட இடம் ஒவ்வொன்றிற்கும் நீங்கள் அழைத்தால் எங்களால் வரமுடியாது. 2 நாட்களில் எங்களுக்கு டார்கெட் முடிக்க வேண்டும். ஒவ்வொரு இட்த்திலும் மக்களை சந்தித்தால் குறைகளை கூறிக் கொண்டே இருப்பார்கள். எங்கெல்லாம் சட்ட்த்திற்கு புறம்பாக மணல் எடுத்துள்ளார்களோ அது பற்றிய விபரங்களை எனக்கு நாளைக்கே தாருங்கள். நான் இந்த முறை இல்லாவிட்டாலும் இரண்டாம் கட்ட ஆய்வு பண்ண உள்ளேன். அப்போது வந்து கண்டிப்பாக பார்ப்பேன்” என்று கூறினார்.

“தாது மணல் சம்பந்தமாக உள்ள தகவல்களை நீங்கள் ஆட்சியரிடமே கொடுக்கலாம்” என்று ஆய்வுக்குழு உறுப்பினர் கூறியதும், ஆட்சித்தலைவர் “நீங்கள் கொடுக்க்க்கூடியதை கவரில் போட்டு ஒட்டி சீல் பண்ணி கொடுங்கள். நான் அதை ஐயாகிட்டே சேர்த்து விடுகிறேன்” என்று கூறினார்.

உடனே ம.உ.பா.மைய வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலையிட்டு, “நாங்க உங்களிடம் கொடுக்க முடியாதா கலெக்டர் மூலம் தான் கொடுக்க வேண்டுமா” என்று கேட்ட்தும், தோழர் கேட்ட்தன் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஆய்வுக் குழு தலைவர் ககன்தீப்சிங் பேடி, “கலெக்டர் ரொம்ப நல்லவர், நேர்மையானவர். அவரை நம்பி கொடுக்கலாம்” என்று கூறினார். மேலும், “நீங்கள் எனது முகவரிக்கு அனுப்பியோ, நேரடியாக சந்தித்தோ தரலாம்” என்றும் கூறினார்.

ம.உ.பா.மைய வழக்கறிஞர் ராமச்சந்திரன் ம.உ.பா.மைய உண்மை அறியும் குழு அறிக்கையையும், வெளியீடையும் கொடுத்து விட்டு, “சென்னையிலிருந்து குமரி வரை கடற்கரையில் சட்டம் ஒழுங்கு அபாயம் காத்துக் கொண்டிருக்கிறது. விவி பணம் கொடுத்து ஊரை ரெண்டு பண்ணியிருக்கிறான். தனிநபருக்காக மக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்” என்று தெரிவிதார்.  பெரியதாளையில் தூண்டில் வளைவு பாலம் உள்ள கடல் பகுதி பிஎம்சி நிறுவனத்தின் கழிவு மணலால் நிரப்ப்ப்பட்ட புகைப் படத்தையும் காண்பித்தார். மேலும் கழிவு நீரால் சகதியாகி உள்ளதையும் , ஒவ்வொரு இட்த்திலும் ஒன்ற்ரை அடி ஆழம் தோண்டி பார்க்க வேண்டும். கீழே கழிவு நீர் கலந்த மண் இருக்கும் என்றும் கழிவுநீரால் சகதியான பகுதியின் மேல் மணல் போட்டு மூடியுள்ளனர் என்பதையும் வலியுறுத்தி கூறினார்.

மேலும் கிரானைட் கொள்ளை குறித்த புகார் தெரிவிக்க மதுரையில் பேஸ்புக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் வசதி செய்து கொடுத்தது போல் நீங்களும் பேஸ்புக்கில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். குறுகிய கால ஆய்வு என்பதால் அவ்வாறு முடியாது என்றும் கூறிவிட்டார்.

மேலும் ஊர் ஊருக்கு பணம் கொடுத்து ஊரையே பிரித்திருக்கிறான், கூத்தங்குழி ஊரில் வெடிகுண்டு வீசியதால் கூத்தங்குழி ஊரிலிருந்து நாங்கள் மேறு ஊரில் தஞ்சம் அடைந்திருக்கின்றோம் என்றும் , கடற்கரை கிராமங்களில் 99 சதவீதம் பேர் கடல் தொழிலுக்குத்தான் செல்கின்றோம், மணல் கம்பெனி முதலாளிகள் பணம் கொடுத்துதான் வேலைவாய்ப்பு பறிபோவதாக சிலரை கூறவைத்து ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளனர் என்று கூறினார்.

மேலும் உவரியைச் சார்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு.அந்தோணி, “அவர்கள் தாது மணல் சட்ட்த்திற்கு புறம்பாக அள்ளப்பட்டதை ஆய்வு செய்யத்தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆலை வேண்டும் என்று மனு கொடுப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளலாம். இது ஆய்வுக் குழு ஏற்படுத்தப்பட்ட்தன் நோக்கத்திற்கே முரணானது” என்று கூறினார். இத்ற்கு ஆய்வுக்குழுவிலிருந்து எந்த பதிலும் இல்லை.ஒவ்வொரு ஊர் சார்பாகவும் ஊர் மக்கள் கையெழுத்து பெற்று மனு அளிக்கப்பட்ட்து.

திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு தலைவரான உவரியைச் சார்ந்த திரு ஜோசப், “எப்படியாவது மணல் கொள்ளையைத் தடுத்து இந்த மக்களை காப்பாத்துங்கய்யா” என்று எழுந்து நின்று கும்பிட்டு கண்கலங்கி உணர்ச்சி பொங்க கூறியது மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள அளவற்ற பற்றையும், மக்களின் மீதும் மண்ணின் மீதும் தொடுக்கப்படும் அநீதி எப்படியாவது தடுக்கப்படாதா என்ற ஆதங்கத்தில் உள்ளத்தையும் வெளிப்படுத்துவதாக் இருந்த்து.

press-1மேலும் 17.10.13 தேதி ஆய்வுக் குழு ஆய்வு செய்ததை படம் எடுக்க விடாமலும், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மணல் ஆலை ஊழியர்களால் சிறை பிடிக்கப்பட்டு தாசில்தார் பேச்சுவார்த்தை நட்த்தி விடுவிக்கப்பட்ட செய்தி வெளிவ்ராமல் பத்திரிகைகளே பார்த்துக் கொண்டுள்ளன. இது குறித்த சிறிய அளவிலான செய்தி 18.10.13 ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியாகி உள்ளது.

ஆய்வுக்குழு நிர்ண்யிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் ஆய்வு செய்யவில்லை.

தாது மணல் கொள்ளையில் நேரடியாக உடந்தையாக உள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் , அதிகாரிகள் கூறும் தகவலில் அடிப்படையில் மட்டுமே தற்போது வரை ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் பார்த்தால் ஆய்வுக்குழு தலைவர் நேர்மையானவர், ஆய்வு நேர்மையாகத்தான் நடைபெறும் என்று மக்களில் சிலர் நம்புவது அறியாமை என்பது தெளிவாக தெரிகின்றது.

ஆய்வுக் குழுத் தலைவரை பாதிக்கப்பட்ட மக்கள் சந்திப்பதற்கே மிக உறுதியான போராட்டம் நடத்த வேண்டியுள்ளதையும் ஆய்வுக்குழுத் தலைவ்ரைப் பார்த்து மக்கள் மனு கொடுப்பதைக் கூட எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று மணல் மாபியாக்கள் விரும்புவதை நடைமுறைப்படுத்த தயாராக உயர் போலீசு அதிகாரிக்ளும், காவல்படையும், அரசு அதிகாரிகளும் நடந்து கொள்வதையும் பார்க்கும்போது அரசு மணல் மாபியாக்களுக்கு உடந்தையாக உள்ளதை தெளிவாக காண முடிந்த்து.

நேற்று நடந்த போராட்டத்தில் ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் மக்களுடன் உறுதியாக களத்தில் நின்றது, வழிகாட்டியது மற்றொருமுறை ம.உ.பா.மையம் மக்களுடன் உறுதியாக முன்னணியில் நிற்கும் என்ற நம்பிக்கையை இடிந்தகரை உள்ளிட்ட கடலோர மக்களுக்கு ஏற்படுத்துவதாக அமைந்தது. “இன்னும் சில நாட்களில் மூன்று மாவட்ட மக்க்ளை ஒன்றிணைத்து தாது மணல் கொள்ளைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நட்த்துவோம், நீங்களும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், நீங்கள் நட்த்தும் போராட்டங்களில் நாங்களும் உறுதியாக் கலந்து கொள்வோம்” என்று மக்கள் கூறிச் சென்றதன் மூலம் தாது மணல் கொள்ளையர்கள் தண்டிக்கப்படக் கூடிய காலம் நெருங்கி விட்டதை உணர முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.