privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

-

நேற்று (5.11.2013) இரவு தனது முகநூல் பக்கத்தில் ம.க.இ.க. தோழர்களுக்கு “திறந்த கடிதம்” ஒன்றை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார்.

2011 முதல் இன்றுவரை நிகழ்ந்தவை என்று பல சம்பவங்களைக் குறிப்பிட்டு, அவை குறித்த அவரது விமரிசனங்களையும் அதில் எழுதியிருக்கிறார். இத்தனை நாட்களுக்குப் பின்னர், இப்படியொரு கடிதத்தை அவர் இப்போது எழுதுவதற்கு என்ன காரணம்? அதையும் அக்கடிதத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் உதயகுமாரை இடிந்தகரையில் நேரில் சந்தித்திருக்கின்றனர். அக்டோபர் 12 ஆம் தேதி தூத்துக்குடியில் நடத்தவிருந்த பேரணி, பொதுக்கூட்டம் குறித்த துண்டறிக்கைகளைக் கொடுத்து, தாதுமணல் கொள்ளைக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தைப் பற்றியும் விளக்கியிருக்கின்றனர். இச்சந்திப்பு பற்றி உதயகுமாரும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்று தாது மணல் கொள்ளை எதிர்ப்பியக்கத்தை வரவேற்று வழக்குரைஞர்களிடம் உதயகுமார் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது கடிதத்தில் வேறு குரலில் பேசுகிறார். சென்ற மாதம் வரை அவரை பல சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்த தோழர்களிடம் பேசாத பல “பிரச்சினைகளை” இப்போது அவர் பட்டியலிட்டு அடுக்குகிறார்.

தாது மணல் கொள்ளை என்ற பிரச்சினை பற்றி அவரது நிலை என்ன? இதனை 16, அக், 2013 ஆனந்த விகடன் பேட்டியில் அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.

“தாதுமணல் கொள்ளையர்களின் அனுதாபிகள் எங்கள் ஊர்களில் இருக்கிறார்கள். அதைப் பேசினால், ஊர் மக்களிடையே பிளவு வரும்; சமுதாயப் பிரச்னைகள் எழும்… நாங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மட்டும்தான். அனைத்து தீய சக்திகளுக்கும் எதிரான மக்கள் இயக்கமல்ல ..”

என்று கூறி தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை தங்களால் எடுக்க இயலாத காரணத்தை விளக்கியிருக்கிறார்.

அவரால் எடுக்க இயலாத தாது மணல் பிரச்சினையை ம.க.இ.க வும் அதன்  தோழமை அமைப்புகளும் எடுப்பது குறித்து நியாயமாக அவர் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி, “கடலோர கிராமங்களில் வேலை செய்யாதீர்கள்” என்று ம.க.இ.க வுக்கு ஏன் அறிவுருத்துகிறார் என்று புரியவில்லை. தாது மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கடலோர மக்கள். போராட விரும்புகிறவர்களும் அவர்கள்தான்.

நாங்கள் கடலோர கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கனிம மணல் கொள்ளையர்கள் மட்டுமே என்று இதுகாறும் நாங்கள் எண்ணியிருந்தோம். உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.

அவரது கடிதத்தில் கூறியுள்ளவை அனைத்துக்கும் உடனே பதில் அளிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம் – நிதி தொடர்பான அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டைத் தவிர. தனது கடிதத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மீது உதயகுமார் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை தோழர் ராஜுவுக்குத் தெரிவித்தோம்.

அவர் இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், இதில் தொடர்புள்ள மற்றவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதன் நகலை இத்துடன் இணைத்திருக்கிறோம்.

இவண்,

காளியப்பன்,
மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

________________________

அனுப்புநர்:

ராஜு, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
கை பேசி: 94432 60164

 பெறுநர்

ஊர் நலக்கமிட்டி, இடிந்தகரை
பங்குத்தந்தை, இடிந்தகரை
பங்குத்தந்தை சுசீலன்,  கூட்டப்புளி
சுந்தரலிங்கம், கூடங்குளம்
திரு.சுப.உதயகுமார்,ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை.

ஐயா,

வணக்கம்.

நேற்று (5.11.2013) திரு சுப.உதயகுமார், இணையத்தில் தனது முகநூல் பக்கத்தில் எங்களது வழக்குரைஞர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், பல தவறான தகவல்களை எழுதியிருக்கிறார். அதன் நகலை உங்களுக்கு இணைத்திருக்கிறேன். அதில் கண்டுள்ள எல்லா விசயங்களையும் உங்களிடம் எழுப்புவது என் நோக்கமல்ல. வழக்குகளுக்காக நாங்கள் பெற்ற தொகை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளவை உண்மைக்கு மாறானவை என்பதால், அவை குறித்து உங்கள் அனைவரின் கவனத்துக்கு கொண்டு வருவது அவசியம் என்று கருதுகிறேன்.

சங்கரன் கோயில் இடைத்தேர்தல்முடிந்த பின்னர், மார்ச் 19, 2012 அன்று ஜெயலலிதா அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. கூடங்குளத்தில் போராட்டக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உட்பட 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் வைக்கப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சாலை மறியல் செய்த பங்குத்தந்தை சுசீலன் உட்பட்ட கூட்டப்புளி மக்கள் 178 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டனர்.

இதனை ஒட்டி வள்ளியூர் நீதிமன்றம், நெல்லை நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களில் சிறையில் இருப்பவர்களைப் பிணையில் எடுப்பது தொடர்பான பணிகளை நாங்கள் செய்தோம். 12 வெளியூர் வழக்குரைஞர்கள் சுமார் 15 நாட்கள் இந்த வேலைகளைச் செய்ய வேண்டியிருந்த காரணத்தினால், போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட நடைமுறைச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு ஆயின. இவையன்றி நீதிமன்றச் செலவுகள். குறிப்பாக மக்கள் மீது தேசத்துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடப்பட்டிருந்ததாலும், அதனை அங்கீகரிக்கும் விதத்தில் நீதிமன்றம் நடந்து கொண்டதாலும்,  மூத்த வழக்குரைஞர் ஒருவரை அமர்த்த வேண்டியதாயிற்று. அவரை வெளியூரிலிருந்து அழைத்து வர வேண்டியிருந்த்தால் அதற்கு  குறிப்பிட்ட அளவு செலவிட வேண்டியதாயிற்று. அந்தச் செலவுகள் குறித்த உள்விவரங்கள் அனைத்தும் நாங்கள் உங்களிடம் கொடுத்துள்ள கணக்கில் உள்ளன.

இச்செலவுகளுக்காக கூட்டப்புளி பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் முக்கியஸ்தர்கள் வழியாக பல தவணைகளில் மொத்தம் ரூ. 65,000, மற்றும் கூடங்குளத்தில் கைதானோருக்காக அந்த ஊர் முன்னணியாளரிடமிருந்து ரூ.5000 ஆக மொத்தம் ரூ.70,000 பெற்றிருந்தோம். அதற்கான செலவு கணக்கை, உதயகுமாரிடமும், கூட்டப்புளி பங்குத்தந்தையிடமும், கூடங்குளம் சுந்தரலிங்கத்திடமும் ஆளுக்கொரு நகல் கொடுத்து விட்டோம்.

இதன் பின்னர் கூடங்குளம் மக்கள் மீது போடப்பட்ட ராஜத்துரோக வழக்குகளுக்கு எதிராக நாங்கள் நெல்லையில் நடத்திய கருத்தரங்கினை ஒட்டி ஏப்ரல், 21, 2012 அன்று இடிந்தகரை சென்றிருந்தபோது எமது வழக்குரைஞர்கள் சுமார் 50 பேரை மேடையில் அமரச் செய்து, “நமக்காக ஒருகாசு கூட கட்டணம் வாங்காமல் பணியாற்றிய வழக்குரைஞர்களுக்கு நன்றி கூறுவதாக” உதயகுமாரும் புஷ்பராயனும் மக்கள் மத்தியில் அறிவித்தனர்.

பின்னர் செப்டம்பர், 2012 இல் நடைபெற்ற கடலோர முற்றுகை, போலீசு தாக்குதல், கடலில் மனிதச் சங்கிலி, சகாயம் மரணம் ஆகியவை தொடர்பான பணிகளில் நாங்கள் உங்களோடு இணைந்து ஈடுபட்டோம். இவற்றைத் தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்குகள் எதையும் போராட்டக்குழு எங்களிடம் ஒப்படைக்கவில்லை.

“பிணையெடுப்பதில் காலதாமதமாகிறது” என்று கருதிய மக்கள் சிலர், “நீங்கள் வழக்கை நடத்துங்கள்” என்று எங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் கேட்டனர். “உதயகுமார் யாரிடம் வழக்கை ஒப்படைத்திருக்கிறாரோ அவர்கள்தான் செய்ய முடியும். எங்களிடம் வழக்கு தரப்படவில்லை” என்று அவ்வாறு கேட்டவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம். வழக்குகளை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்களிடமும் வேறு சிலரிடமும் உதயகுமார் ஒப்படைத்திருப்பதாக பின்னர் கேள்விப்பட்டோம்.

இதற்குப் பின்னர் திடீரென்று ஒரு புது வதந்தி பரப்பப் பட்டது.  “உங்களுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேல் போராட்டக் கமிட்டி பணம் கொடுத்திருக்கிறதாமே” என்று வள்ளியூர், நெல்லை, நாகர்கோயில் நீதிமன்றங்களில் சில வழக்குரைஞர்கள் எங்கள் வழக்குரைஞர்களிடம் போகிற போக்கில் குறிப்பிட்டனர். யார் சொன்னார்கள், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் இல்லாமல், ஒரு கிசு கிசு செய்தி போல இது பரப்பப் பட்டது.  எனவே இதனை மறுத்து, “நாங்கள் கட்டணம் வாங்காமல்தான் பணியாற்றினோம்” என்பதைக் கூறவேண்டியது அவசியமாயிற்று.

இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக கூட்டப்புளி, இடிந்தகரை ஊர்க்கமிட்டியைச் சேர்ந்தவர்களிடமும் கூடங்குளம் முன்னணியாளர்களிடமும் நாங்கள் அப்போதே சொல்லியிருக்கிறோம். “இப்படி கிளப்பி விடுவது யார்” என்று தாங்கள் உதயகுமாரிடமே கேட்டதாகவும், தான் அவ்வாறு கூறவில்லை என்று உதயகுமார் மறுத்ததாகவும் அவர்கள் எங்களுக்கு தெளிவு படுத்தினர். இந்த பொய்ப்பிரச்சாரம் பற்றி நாங்கள் முறையிட்டது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

இப்பிரச்சினையை அரைகுறையாக விடக்கூடாது என்பதால், மே, 9 2013  அன்று இடிந்தகரையில் நேரடியாக உதயகுமாரிடமே நாங்கள் இது பற்றி கேட்டடோம். நாங்கள் வாங்கிய பணம், அதற்கான கணக்கு ஆகியவற்றின் நகலை மீண்டும் ஒருமுறை அவர் கையில் கொடுத்தோம். “இரண்டு இலட்சம் வாங்கியதாகவெல்லாம் யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி யாராவது சொன்னால், என்னிடம் அனுப்புங்கள். நான் விளக்குகிறேன்” என்று அவர் எங்களுக்குப் பதிலளித்தார்.

இப்போது தனது கடிதத்தில்,  மொத்தம் ரூ.1,95,000 கொடுத்தது போலவும் அதில் 1.25 லட்சம் ரூபாய் இடிந்தகரை மக்கள் எங்களுக்கு கொடுத்ததாகவும் உதயகுமார் எழுதியிருக்கிறார். மார்ச் 2012 நடைபெற்ற கைது தொடர்பான வழக்குகளைத்தான் நாங்கள் கையாண்டோம். அவை கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள். அதற்கான பணத்தைக் கொடுத்த அவர்களிடம் கணக்கும் கொடுத்துவிட்டோம்.

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகள்- கைது என்பது கடலோர அணுஉலை முற்றுகைப் போராட்டத்துக்குப் பின்னர்தான். இந்த வழக்குகள் எதுவும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டோம். இடிந்தகரை மக்களிடமிருந்து 1.25 இலட்சம் நாங்கள் வாங்கியதாக உதயகுமார் கூறுகிறார். ஒருபைசா கூட நாங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை.

இடிந்தகரை, கூடங்குளம், கூட்டப்புளி மக்கள் அனைவரும் இந்தக் கணம் வரை எங்களுடன் நேசமாகத்தான் பழகுகிறார்கள். யாரும் இப்படி ஒரு கேள்வியை எங்களிடம் கேட்டதில்லை. அவ்வாறு இருக்கும்போது எங்களுக்கு எதிராக இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வேறு ஏதாவது ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அல்லது எங்கள் பெயரைச் சொல்லி 1.25 இலட்சம் ரூபாயை யாரோ கையாடல் செய்திருக்க வேண்டும்.

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் அது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

எங்கள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளைப் போடும் மிக மோசமான போலீசு அதிகாரிகளுக்குக் கூட, இப்படி ஒரு பொய்க்குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்த மனம் வந்ததில்லை. வெளிநாட்டுப் பணம் வருவதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, கண் கலங்கி குமுறியவர் உதயகுமார். அந்த வலி மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

எந்த இடிந்தகரை மக்களிடமிருந்து எங்களுக்கு 1.25 இலட்சம் பணம் கொடுக்கப்பட்டதாக உதயகுமார் கூறுகிறாரோ, அந்த இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், கூட்டப்புளி பங்குத்தந்தை மற்றும் ஊர்க்கமிட்டியினருக்கும், கூடங்குளம் முன்னணியாளர்களுக்கும் என்னுடைய இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.

இடிந்தகரை மக்கள் முன்னால் உதயகுமார் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு பகிரங்க விசாரணை நடத்தப்படவேண்டும். அதில் கூட்டப்புளி, கூடங்குளம் முன்னணியாளர்களும், போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும். இந்த வழக்குகளைக் கையாண்ட எமது வழக்குரைஞர்கள் அனைவரும் இடிந்தகரைக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறோம்.

தேதியை இடிந்தகரை ஊர்க்கமிட்டி தெரிவிக்கட்டும்.

நன்றி.

______________________