privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்

முள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்

-

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த  நேர்காணலின் கட்டுரை வடிவம்

கேள்வி

2009 முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை முடிந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழா வரும் நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் நடக்க இருக்கின்றது. இது தமிழர் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்ச்சி என்று அறிவித்திருக்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்

தஞ்சை ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்கு, அதை நினைவு கூரும் விதத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. குறிப்பாக, இலங்கையில் அத்தகைய சின்னங்களெல்லாம், நினைவிடங்களெல்லாம் அழிக்கப்படுகின்ற சூழலில், சிங்கள குடியேற்றங்களும், இராணுவத் திணிப்புக்களும் நடைபெறுகின்ற சூழலில், ஈழ விடுதலைக்கு முக்கியப் பின்தளமாகிய தமிழகத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படுவது நியாயமான ஒன்று தான்;

ஆனால் அப்படி ஒரு நினைவு முற்றம் அமைக்கும் போது, அதை யாருடைய துணை கொண்டு அமைக்கிறோம், யாரை அதன் திறப்பு விழாவிற்கு அழைக்கிறோம் என்பதெல்லாம் பரிசீலனைக்கு உரிய விடயங்களாகும். பழ.நெடுமாறன் இணையத்தில் இந்த விழாவிற்கு விடுத்திருக்கும் அழைப்பில் “தஞ்சை பெரிய கோவில் என்பது தமிழனுடைய வெற்றியின் ஒரு சின்னம், அது கலைக் கோவில்; இந்த முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் தமிழினத்தினுடைய அவலத்தின் சின்னமாக இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இங்கே வர வேண்டும்; இதை வந்து காண்பதன் மூலம் இப்படி ஒரு அவலம், தமிழ் மக்களுடைய வாழ்வில் இனியும் ஒரு முறை நேரக்கூடாது என்பதற்கான படிப்பினையை நாம் பெற வேண்டும்” என்று சொல்கிறார்.

அதில் நான் உடன்படுகிறேன், இதை பார்ப்பதன் மூலம் எதிர் காலத்தில் இப்படி ஒரு அவலம் தமிழ் மக்களுக்கு நேரக் கூடாது என்ற படிப்பினையை நாம் பெறவேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அந்த படிப்பினையை சிற்பங்களைப் பார்ப்பதன் மூலம் மட்டும் ஒருவர் பெற்று விட முடியாது. இந்த சிற்பங்களுக்காக பல ஓவியர்கள், சிற்பிகள் உழைத்திருக்கிறார்கள்; அதை அங்கீகரிக்கிறோம் என்றாலும், இந்த நினைவு முற்றத்தை உருவாக்குவதற்கு யார் பின்புலமாக இருந்தார்கள், யார் இதில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.

ஆனந்த விகடன் பேட்டியில் நெடுமாறன் “துரோகிகளை நாங்கள் அழைக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார். அதாவது தி.மு.க-வினர், இன்ன பிறரை அழைக்கவில்லை என்று சொல்கிறார். அதிலே ஒன்றும் கேள்வியில்லை.

Page-01ஆனால் அழைக்கப்பட்டிருப்பவர்கள் யார்? அவர்கள் எல்லாம் ஈழ விடுதலைப் போராட்டத்தினுடைய நண்பர்களா, ஆதரவாளர்களா, உந்து சக்திகளா என்று பார்த்தால், அப்படித் தெரியவில்லை. அவர்கள் சொல்வது போல இது தமிழர்கள் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருக்குமா, இருக்காதா என்பதை நாம் எதை வைத்து முடிவு செய்ய முடியும்? நடந்தவற்றை எல்லாம் திரும்பப் பரிசீலனை செய்தால் இது திருப்பு முனையா, இல்லையா என்று புரிந்து கொள்ளலாம்.

கேள்வி

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மிகப் பெரிய அவலம், அதை நினைவு கூர்வதற்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் விமர்சனம், பரிசீலனை, எதிர்ப்பு என்றெல்லாம் பார்க்க வேண்டுமா?

பதில்

எதை விமர்சிக்கலாம் என்று நாம் தேடி அலையவில்லை. முள்ளிவாய்க்கால் ஒரு மிகப் பெரிய துயரம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை; ஆனால் “அது அரசியலுக்கு அப்பாற்பட்டது, அதில் அரசியல் இல்லை” என்று சொல்வது முற்றிலும் தவறு; அதை ஏற்க முடியாது.

“மாவீரர் கல்லறைகளை அங்கே தகர்க்கிறார்கள், நினைவுச் சின்னங்களை தகர்க்கிறார்கள், அதனால் தான் தமிழகத்தில் இந்த சின்னத்தை எழுப்புகிறோம்” என்று நெடுமாறன் சொல்கிறார். அதை தகர்ப்பதில் சிங்கள இனவெறி அரசியல் இருக்கிறது. அது போல சின்னம் எழுப்புவதிலும் ஒரு அரசியல் இருக்கிறது, எனவே நினைவுச் சின்னம் எழுப்பும் போது, யாரைக் கொண்டு அதைச் செய்விக்கலாம் என்பதில் ஒரு வரையறை வேண்டும்.

உதாரணமாக ஈராக்கில் அமெரிக்கா படுகொலை நடத்துகிறது, அதற்குப் பல வளைகுடா நாடுகள் துணை நிற்கின்றன. துணை நின்ற வளைகுடா நாடுகளிடமே நன்கொடை வாங்கி அங்கே ஒரு நினைவுச்சின்னம் எழுப்பினால் அது கேலிக் கூத்தாக இருக்காதா?

“துரோகிகளை அழைப்பதில்லை” என்று நெடுமாறனே சொல்கிறார். அழைக்கப்பட்டிருப்பவர்களில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? அதில் ஏன் விளார் நடராசன் இருக்கிறார். அவர் யார்? அவருக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பக்கூடாதா? இது “அரசியலா”?

பாரதிய ஜனதா கட்சிக்காரர்களை அழைத்திருக்கிறீர்களே, அவர்கள் யார்? அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நண்பர்களா? எதிரியா? எப்படி அழைத்திருக்கிறீர்கள் என்று கேட்கக் கூடாதா? இது “அரசியலா”?

இது எப்படி இருக்கிறது என்றால், கல்யாண வீட்டிலும், எழவு வீட்டிலும் “அரசியல் பேசாதீங்க” என்பார்களே, அந்த மாதிரி இருக்கிறது. இது தனிப்பட்ட துக்கம் அல்ல, தனிப்பட்ட எழவு வீடல்ல. நடந்திருப்பது ஒரு இனப்படுகொலை; இனப்படுகொலை என்பது ஒரு அரசியல் படுகொலை, அரசியல் காரணத்திற்காக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருந்திருக்கின்றன, அதனால் அரசியல் பேசித்தான் ஆக வேண்டும்.

Page-02கேள்வி

நடராசனைப் பற்றி சொன்னீர்கள், தமிழ் நாட்டில் ஈழ விடுதலையை ஆதரிக்கக் கூடியவங்க எல்லாக் கட்சிகளிலும் இருக்காங்க, கட்சித் தலைமையே ஈழ விடுதலையை எதிர்த்தாலும், தனி நபர்களாக ஒவ்வொருத்தரும் ஆதரிக்கிறாங்க, நன்கொடை குடுக்குறாங்க. சசிகலா நடராசனும் அது மாதிரி ஒரு ஆள், அப்படி எடுத்துட்டு போகலாம் இல்லையா, இதுல என்ன பிரச்சினை உங்களுக்கு?

பதில்

“கட்சி நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஈழ ஆதரவாளர், தமிழ் உணர்வாளர் நடராசன்” என்று கூறுவது, நடராஜனுக்கே கூட ஒரு புது செய்தியாகத்தான் இருக்கும்! நடராசன் என்பவர் தமிழ் நாட்டு அரசியலுக்கு எப்படி வந்தார் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

1991-ம் ஆண்டில் தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி வந்தது. ஜெயலலிதா எப்படி ஆட்சிக்கு வந்தார்? ஜெயலலிதா பெரும்பான்மை பெற்று தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது ராஜீவ் கொலை. ராஜீவ் கொலையில் சிதறிய அவரின் உடலின் புகைப்படத்தை சுவரொட்டிகளாக அடித்து, தமிழகம் முழுவதும் ஒட்டி, இந்தக் கொலைக்குக் காரணம் தி.மு.க-வினர் தான் என்று பிரச்சாரம் செய்து, காங்கிரசாரும், அண்ணா தி.மு.க-வினரும் தி.மு.க-வினருக்கெதிரான ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தமிழகம் முழுவதும் திமுகவினரின் இரண்டு லட்சம் வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன. பல பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. ஜெயலலிதா அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்று என்ன செய்தார்? வெற்றி பெற்ற கணம் முதல், புலிகளைத் தமிழ் மண்ணிலிருந்து துடைத்தெறிவது, ஈழ அகதிகளை இங்கிருந்து வெளியேற்றுவது என்பதற்கான வெளிப்படையான நடவடிக்கைகளில் இறங்கினார். ஈழ ஆதரவு, அகதிகளுக்கு ஆதரவு என்று பேசியவர்களெல்லாம், தடா முதல், NSA முதல், ராஜதுரோகக் குற்றச்சாட்டு முதல், பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

ஆக, இந்தக் காலகட்டம் முழுவதும், ஈழ எதிர்ப்பு, புலி எதிர்ப்பு காலகட்டமாக இருந்தது. அன்றைக்கு தினமலரும், வாழப்பாடி ராமமூர்த்தியும், சோ-வும் தான் இந்த அரசாங்கத்தை வழி நடத்தினார்கள். இப்படிப்பட்ட அரசியல் அதிகாரத்தின் பின்புலத்தில்தான், அதாவது ஈழ எதிர்ப்பு அரசியலின் பின்புலத்தில் தான் நடராசன் என்ற “ஈழ ஆதரவாளர்” உருவாகின்றார். இந்தப் பின்புலத்தில் அவர் சசிகலாவின் கணவர்; உடன்பிறவா சகோதரியின் கணவர் என்ற முறையில் கட்சிக்குள் செல்வாக்கு பெறுகிறார்.

உடன்பிறவா சகோதரி, அன்பு சகோதரிக்கு எப்படி அறிமுகமானார் என்பது ஒரு தனிக்கதை. ஒரு வீடியோ கடை மூலம் அறிமுகமாகிறார். அன்றைய கால கட்டத்தில் எதற்கும் உருப்படாதவர்களுடைய தொழில் ஒரு வீடியோ கடை திறப்பது என்று இருந்தது. அது அழகிரி குடும்பமாக இருக்கட்டும், அல்லது இன்றைய சன் டீவி-யினுடைய கலா நிதி மாறன் குடும்பமாக இருக்கட்டும், எல்லாருமே வீடியோ கடையிலிருந்து தொடங்கியவர்கள் தான். அப்படி ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட் கொடுத்து சசிகலாவுக்கு ஏற்பட்ட பழக்கம், போயஸ் தோட்டம் வரை சென்றது. சசிகலாவின் கணவன் என்ற முறையில், இவர் அண்ணா தி.மு.க-வில் ஒரு அதிகார மையமாக மாறினார். இந்த வகையில் நடராசன் தமிழகத்தின் ‘வரலாற்று’ மனிதர் ஆனார்!.

முற்றம் திறப்பு
முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா – நடராசன் தலைமையில் நெடுமாறன் திறந்து வைப்பு.

பிரபல மார்க்சிய அறிஞர் பிளக்கனோவ், வரலாற்றில் தனி நபர்களின் பாத்திரம் என்ன என்று சொல்லும் போது ”ஒரு மன்னன் பெண் பித்தனாக இருக்கலாம். மன்னனுடைய குதிரை லாயக்காரனும் பெண் பித்தனாக இருக்கலாம். குதிரை லாயக்காரன் பெண் பித்தனாக இருந்தால் அதில் அரசியல் விளைவு ஒன்றும் கிடையாது; ஆனால் மன்னன் பெண் பித்தனாக இருந்தால் அதற்கு அரசியல் விளைவு உண்டு” என்பார். அதுபோல, ஜெயலலிதாவின் அன்புச் சகோதரி சசிகலாவின் கணவர் என்ற முறையில் நடராசன் அந்த இடத்தில் உட்கார்ந்து விட்டார். ஆகையினால் அதற்கு ஒரு மிகப் பெரிய அரசியல் விளைவு இருந்தது.

அந்த “அரசியல் விளைவு” மன்னார்குடி மாஃபியா என்ற கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கியது; அந்தக் குடும்பம் முழுவதும் தமிழ் நாட்டைச் சூறையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படி ஒரு சூறையாடலைத் திட்டமிட்டுத் தலைமை தாங்கி நடத்தியவர் நடராசன். இந்த கொள்ளையைப் பற்றி நான் மேலும் விவரிக்க வேண்டிய தேவையில்லை. தமிழகம் அறிந்த உண்மை இது.

இப்படி ஒரு கொள்ளையை நடத்தியது மட்டுமல்ல, சாதி ரீதியாக முக்குலத்தோரை ஒரு சக்தியாக உருவாக்கி தமிழக அரசியலில் நிறுத்தியது நடராசன் என்ற நபருடைய தமிழ் இன விரோத, சாதி வெறி நடவடிக்கை.

கேள்வி

இன உணர்வு இருப்பவர்களுக்கு சாதி உணர்வு இருக்க கூடாது என்கிறீர்களா? இது இரண்டையும் எப்படி பிரித்து பார்க்க முடியும்?

பதில்

நடராசனுடைய தனிப்பட்ட சாதி உணர்வை பற்றி பேசவில்லை. அவர் ஏன் சொந்த ஜாதியில் திருமணம் செய்தார், பெண் எடுத்தார் என்பதையா பேசுகிறோம்?, நாம் பேசுவது குதிரைலாயக்காரனின் பெண் பித்தை பற்றி அல்ல, மன்னனின் பெண் பித்தை பற்றிப் பேசுகிறோம்.

அவர் சாதிக்காரர்களை அரசியல் ரிதீயாக ஒன்று திரட்டினார். தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் என்று இருந்தவர்களை முக்குலத்தோர் என்று ஒன்று திரட்டி அதை ஒரு அரசியல் சக்தியாக்கி அண்ணா தி.மு.க வின் ஒரு படை போன்று அதை மாற்றியதில் நடராஜனுடைய பங்கு முதன்மையானது. காலனியாதிக்க எதிர்ப்பு போராட்ட வீரன் பூலித்தேவனை, தேவர் சாதிக்காரனாக சித்தரித்து, அதற்கு ஒரு விழா எடுத்து இன்றைக்கும் அதை செய்வது நடராசன்தான்.

இன்றைக்கு தேவர் குருபூசை விழா அமர்களமாக நடக்கிறது, சாதிக் கலவரம் ஆண்டு தோறும் நடக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம், இதை இப்படி ஒரு நிறுவனமாக ஒழுங்கமைத்து எல்லாக் கட்சியினரும் போய் அங்கு வழிபாடு செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி, அதை ஒரு அச்சுறுத்தும் சாதி வெறி கும்பலாக ஆக்கி வைத்தது நடராசன். அதிமுக அட்சியில் காவல் துறையில் எல்லா எஸ்.ஐ போஸ்டிங்கிலும் ஒரே சாதிக்காரர்கள் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அந்த காலகட்டத்தில் வந்தன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு சாதி வெறிக் கும்பலை அரசியல் அதிகாரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி, அதை வைத்துக் கொண்டு மிரட்டுவது என்பதை உருவாக்கியது நடராசன்.

தஞ்சை ஆர்ப்பாட்டம்
நெடுமாறனை எதிர்த்து தஞ்சையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

இதை சாதி உணர்வு என்று எப்படி பார்க்க முடியும், சொல்லப் போனால தமிழன், தமிழ் இன உணர்வு கொள்வதற்கு எதிராக அவனை சாதி வெறியனாக சாதிக்கு உள்ளே தள்ளியது நடராசன். தமிழின உணர்வுக்கு எதிரான வேலையை செய்தவர் நடராசன். அது ஒரு பிரச்சனையாகவே இவர்களுக்குப் படவில்லை என்று தெரிகிறது.

பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி சம்பத் கமிசன் அறிக்கை வந்திருக்கிறது. முற்றிலும் தற்காப்பிற்காக நடத்தப்பட துப்பாக்கிச்சூடு என்று அந்த அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கை, சரியாக தேவர் ஜெயந்தி நடக்கும் அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. இதற்கு ஒரு நோக்கம் இருக்கிறதா இல்லையா? இதை உருவாக்கியது, இதற்கு அடித்தளமாக இருந்தது நடராசன். நடராசன் இப்படி ஒன்றை உருவாக்கியதன் தொடர்ச்சியாகத்தான் தென் மாவட்டங்களில் 95,96-ல் நடைபெற்ற சாதிக் கலவரங்கள், அதாவது தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் நடந்தன.

இந்த தமிழ் இன உணர்வாளர், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு கார் கொடுத்தேன் என்பவர், பணம் கொடுத்தேன் நிலம் கொடுத்தேன் என்பவர், நத்தம் காலனிக்கு போனாரா? அங்கே தாக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா?. அதுபோல தமிழ்நாட்டின் எத்தனை பகுதிகளில் ஆதிக்க சாதி வெறியர்களால் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுகிறார்கள், அதற்கெல்லாம் இவர் போகிறாரா, பார்க்கிறாரா? அதைப் பற்றி எல்லாம் இந்த “இன உணர்வாளர்கள்” என்ன கருதுகிறார்கள்?

இது நடராஜனுடைய பிரச்சனை மட்டுமல்ல. “இவ்வாறு செய்வது தவறு இல்லை. இப்படியெல்லாம் செய்து கொண்டே ஒருவன் தமிழ் உணர்வாளனாகவும் இருக்க முடியும்” என்று கருதுகிறார்களே அது தான் பிரச்சனை.

நடராசன் சோ வுக்கு எதிராக பேட்டி கொடுத்திருக்கிறார். சோ வுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு என்ன? அண்ணா திமுக என்ற கட்சியில் அதனுடைய பார்ப்பன பாசிச அரசியல் நடவடிக்கைளை மேலிருந்து வழி நடத்தியவர் சோ ராமசாமி. இன்னொரு பக்கம் அதிமுக கட்சியின் அணிகளை கீழிருந்து சாதி ரீதியாக திரட்டுவதும், ஊழல் செய்வதும், கொள்ளை அடிப்பதும், அதிலே பங்கு வசூலிப்பதுமான வேலைகளை ஒழுங்கமைத்துக் கொடுத்து, மன்னார்குடி மாஃபியாவாக இயங்கியது நடராஜனுடைய வேலை. இப்படி ஒரு வேலைப் பிரிவினையில்தான் அந்தக் கட்சி இயங்கியிருக்கிறது. இதன் மூலம் நடராஜனுக்கு அனைத்திந்திய அளவில் தொடர்பு, கன்சிராமோடு தொடர்பு, இவருக்கு உத்தர பிரதேசத்தில் பினாமி சொத்துக்கள் அவர்களுக்கு இங்கே தமிழகத்தில் பினாமி சொத்துக்கள், என தேசிய அளவில் நடராசன் அரசியல் பிரமுகர் ஆனார்.

சென்ற ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற் பொங்கல் விழாவில் பிராணாப் முகர்ஜியின் உறவினரை அறிமுகப்படுத்தினார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. பிரணாப் முகர்ஜி யார்? தமிழ் உணர்வாளர்களை கேளுங்கள் யார் என்று கூறுவார்கள். ஈழ விடுதலையின் எதிரி. அந்த எதிரியின் நெருங்கிய உறவினர் இவருக்கு தெரிந்தவராம், இவர் கையில் இருக்கிறாராம். “இன்னும் பல பேரை கொண்டு வருவேன்” என்று பெருமையாகப் பேசுகிறார் இந்த அரசியல் தரகர்.

(சசிகலா) நடராசனை சிறப்பிக்கும் அழைப்பிதழ்
(சசிகலா) நடராசனை சிறப்பிக்கும் அழைப்பிதழ்

இவர் ஒரு அரசியல் தரகர் என்று அருவருப்பாக பார்க்கின்ற ஒரு மனோபாவம் கூட இந்த தமிழ் உணர்வாளர்களிடம் இல்லை. இப்படி முறைகேடாக சொத்து சேர்த்தவர்கள், நிழலான தொழில் செய்த நிழல் மனிதர்கள் பல பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஜேப்பியார் சாராயம் விற்றவர், நிறைய ரவுடித்தனங்கள் செய்தவர், பின் வயதாகி ஒரு கட்டம் வந்த பிறகு அவர் வள்ளலாக அவதரிக்கிறார், அதுபோல ராமசாமி உடையார் சாராயம் விற்று பின் மெடிக்கல் காலேஜ் கட்டி வள்ளலாகி விட்டார்.

நடராஜனுக்கு மட்டும் அவர்களைப் போல கடைசி காலம் வரை காத்திருக்க பொறுமை இல்லை. ஆரம்பத்திலேய அப்படி ஒரு பிரமுகராக வேண்டும் என்று ஆசை. ஆரம்பத்திலேயே “புதிய பார்வை” என்று ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிறார். நவீன அச்சு இயந்திரங்களை கொண்டு வந்து இறக்கி தன்னை பத்திரிகை ஆசிரியாராக, அறிவு துறையாளர் போல அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இதை இவர்களெல்லாம் அங்கீகரிக்கிறார்கள் என்பது தான் கேவலம்!

1991-96 க்கு இடைப்பட்ட காலத்தில் கடுமையான அடக்குமுறை ஈழத்தமிழர்கள் மீதும் புலிகள் மீதும் நிலவிய அந்த காலத்தில், 1995-ம் ஆண்டில் தமிழகமே காறி உமிழ்ந்த வளர்ப்பு மகன் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு சென்று வாழ்த்தி, விருந்துண்டு, சிறப்பித்து விட்டு வந்தவர் பழ.நெடுமாறன். இன்றைக்கு “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்” என்று உலகத் தமிழினத்தையே வரவழைத்து நடராசன் வீட்டு விருந்துக்கு அழைத்து செல்கிறார். இதை நான் கேவலப்படுத்துவதற்காக சொல்லவில்லை.

“முற்றத்துக்கு நடராசன் நிதி கொடுத்தார்” என்று அவர்கள் இவர்கள் சொல்லுகிறார்கள் ஜூனியர் விகடனில் ஒரு விளம்பரம் வருகிறது. “முற்றம் தந்த முதல்வனே” என்று வாசகம். நடுவில் பிரபாகரன் படம், இந்த பக்கம் முத்துராமலிங்க தேவர், அந்த பக்க பூலித்தேவன் படம்! முள்ளி வாய்க்கால நினைவு முற்றம் என்பது முக்குலத்தோர் தமிழினத்திற்கு தந்த பரிசா? இப்படி விளம்பரம் கொடுக்கலாமா? இதை நெடுமாறனும் மற்றவர்களும் அங்கீகரிக்கிறார்களா? இது ஒரு ஆண்டை வீட்டு விழா போல நடக்கிறது. இநத மூன்று நாள் நிகழ்ச்சியில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் நடராஜனுடைய தமிழரசி திருமண மண்டபத்தில்தான் நடக்கவிருக்கின்றன.

அங்கு நடராசன் ஆண்டு தோறும் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். சினிமா துணை நடிகர்களை அழைத்து வந்து ஆட வைப்பது வழக்கம். இப்போது அதற்கு பதிலாக இந்த விழாவை அவர்கள் நடத்துகிறார்க்ள். இதற்கு மேல் நடராஜனுடைய வரலாறை நான் சொல்லத் தேவையில்லை. வரலாற்றில் ஆர்வம் உள்ள மாணவர்கள் (90-களின்) ஜீனியர் விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகளை புரட்டிப் பார்த்தால் கஞ்சா செரினா வழக்கு முதல் நடராஜனுடைய வரலாறு முழுவதையும் அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற ஆண்டு இதே தமிழரசி கல்யாண மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்காக தன் இரண்டு கார், கையிலிருந்த பிரேஸ்லெட் நகைகளை எல்லாம் நன்கொடையாக கொடுத்து. “நான் இந்த உலகத்தில் இரண்டு பேருக்கும் மட்டும் தான் கட்டுப்படுவேன். ஒன்று சசிகலா இன்னொன்று நெடுமாறன்” என்று அந்த மேடையில் பேசினார் நடராசன். நாம் சசிகலாவை கேட்க முடியாது, அதனால், நெடுமாறன்தான் நடராஜனுடைய இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி

இதே விழாவில் பி.ஜேபி பங்கேற்கிறது. பி.ஜே.பி பங்கேற்பதை கண்டித்து இணையத்தில் பலர் விமர்சனமாக எழுதி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஈழப் போராட்டத்திற்கு பா.ஜ.க உதவியதாக வை.கோ பேசிக்கொண்டிருக்கிறார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்

இந்த நிகழ்ச்சிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், அர்ஜூன் சம்பத் ஆகியோரை அழைத்திருக்கிறார்கள், சுப்பிரமணிய சாமியை ஏன் அழைக்கவில்லை என்று தெரியவில்லை. “ஈழ விடுதலைக்கு ஆதரவளித்த” பா.ஜ கட்சியில் தான் அவரும் சேர்ந்து இருக்கிறார். ஏன் அழைக்கவிலை என்று தெரியவில்லை.

தஞ்சை ஆர்ப்பாட்டம்
தஞ்சை ஆர்ப்பாட்டம்

“காங்கிரஸ் அளவுக்கு பி.ஜே.பி எதிரி அல்ல” என்பது இவர்கள் உருவாக்குகின்ற சித்திரம். ஆனால் உண்மை அதுவல்ல. “நடுக்கடலில் புலிகளின் ஆயுதக் கப்பலை இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்திய போது, இந்தியக் கடற்படையின் பிடியில் இருந்து கப்பலை விடுவித்து ஆயுதங்களை புலிகளுக்கு சேர்ப்பதற்கு உதவியவர் வாஜ்பாய்” என்று வை.கோ மேடைகளில் அடிக்கடி சொல்வது வழக்கம். கடைசியாக விருதுநகர் மாநாட்டில் கூட, 2004 வரை எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த்தாகவும், 2004 க்கு பிறகு தான் சிங்கள அரசுக்கு இந்திய அரசு, காங்கிரஸ் அரசு உதவி செய்ய ஆரம்பித்ததாகவும் பேசி இருக்கிறார்.

இது எல்லாமே வடிகட்டிய பொய். ஆயுதக் கப்பலை காப்பாற்றுவதற்கு வாஜ்பாய் உதவி செய்தாராம். 2000-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த புகழ் பெற்ற ஆனையிரவு முற்றுகை பற்றி உணர்ச்சி பொங்கப் பேசும் வைகோ, அதற்கப்புறமுள்ள கதையை ஏன் பேசுவதில்லை? ஏறத்தாழ நாற்பதாயிரம் சிங்கள சிப்பாய்களை சுற்றி வளைத்து, அவர்கள் சரணடைந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில், மேல் கையில் புலிகள் இருந்த போது, புலிகளுடைய காலைப் பிடித்து இழுத்தது யார்?

2000 ஏப்ரலில் நடந்து கொண்டிருந்த தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியில் ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இந்த சுற்றி வளைப்பில் சிங்கள ராணுவம் சிக்கிய உடன் இலங்கை அரசு அபயக் குரல் எழுப்புகிறது. உடனே வாஜ்பாய், புலிகள் “இந்த முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அவர்களை விடுவிக்க வேண்டும், இல்லையென்றால் இங்கிருந்து இந்திய படைகள் அனுப்பப்படும்” என்று எச்சரிக்கிறார்.

இவர்கள் வாஜ்பாய் அரசின் சார்பாக புலிகளிடம் தரகு வேலை செய்கிறார்கள். வாஜ்பாய் சொன்னதை புலிகள் கேட்கவில்லையென்றால் என்ன நடந்திருக்கும்? வாஜ்பாய் சொன்னது போல படையை அனுப்ப வேண்டியிருந்திருக்கும். படையை அனுப்பியிருப்பார்களா? ஒரு முறை ஐ.பி.கே.எப்-1 சென்று செருப்படி பட்டு திரும்பி வந்திருக்கிறது. இரண்டாவது ஐ.பி.கே.எப்-ஐ அனுப்பியிருக்க முடியுமா? அன்றைக்கு முடியாது என்ற தடுமாற்றத்தில் இந்திய அரசு இருந்தது. வாஜ்பாய் அரசுக்கு அப்படி ஒரு சங்கடம் நேராமல், கத்தியில்லாமல் ரத்தமில்லாமல், எந்த சேதமுமில்லாமல், புலிகளை வாபஸ் வாங்க வைத்து, சிங்கள ராணுவத்தை காப்பாற்றிவிட்ட கைக்கூலிகள் இவர்கள்.

2009-ல் போர் நிறுத்தத்திற்கு கருணாநிதி ஏற்பாடு செய்யவில்லை. காங்கிரஸ் அரசில் பதவிக்காக அவர் அதை செய்தார் என குற்றம் சாட்டுகிறார்கள். உண்மைதான். ஆனால் 2000-ல் நீங்கள் செய்தது என்ன? “ஈழம் அடைந்துவிடலாம், புலிக்கொடி ஏறப் போகிறது” என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் புலிகளின் காலைப் பிடித்து இழுத்தீர்கள். இதனை எப்படிச் சொல்வது? வாஜ்பாய் அரசுக்கு சுமுகமாக வேலையை முடித்துக் கொடுத்தீர்கள் என்று சொல்வதா? அல்லது சிங்கள அரசுக்கு சுமுகமாக வேலையை முடித்துக் கொடுத்தீர்கள் என்று சொல்வதா?

இப்படி தங்களுடைய துரோகமும் சேர்ந்திருப்பதினால் இவர்கள் பாரதிய ஜனதாவைப் பற்றி பேசுவதில்லை. பாரதிய ஜனதா இப்படி செய்தது என்று குற்றம் சாட்டினால், இவர்கள் தங்களுடைய பாத்திரத்தை பேச வேண்டியிருக்கும். அதனால் தான் அதை கவனமாக இருட்டடிப்பு செய்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றம்பிரபாகரனுடைய வாழ்க்கை வரலாறைப்பற்றி நெடுமாறன் ஒரு பெரிய நூல் (பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம்) எழுதியிருக்கிறார், அண்டன் பாலசிங்கத்தின் ”போரும் சமாதானமும்” என்ற நூல் இருக்கிறது. இரண்டு நூல்களிலும் இந்த முற்றுகை எப்படி விலக்கி கொள்ளப்பட்டது. வாஜ்பாய் அரசு அன்றைக்கு என்ன செய்தது? இவர்கள் பாத்திரம் என்ன – என்பது பற்றி எதுவும் கிடையாது. அந்த இடம் இருட்டாக இருக்கிறது. அப்படி ஒரு இருட்டடிப்பை, மோசடியை இவர்கள் செய்யக் காரணம் இவர்களுடைய பாத்திரம் அப்படிப்பட்டது.

வாஜ்பாய் அரசு அதோடு நிறுத்தவில்லை. தமிழீழத்தை அடைய விடாமல் பிரபாகரனையும், புலிகளையும் தடுத்தது மட்டுமல்ல. அந்த நாட்களில் ராமதாசு, வை.கோபால்சாமி எல்லாம் இங்கு தமிழீழம் தமிழீழம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது டெல்லியிலிருந்து தாக்கீது வருகிறது – சுப்பிரமணிய சாமி, சோ போன்றவர்கள், “என்ன, இவர்கள் எல்லாம் தமிழீழம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசக் கூடாது” என்கிறார்கள். உடனே ராமதாசு, வைகோ போன்றோர் சொல்கிறார்கள் “தமிழீழம் என்பது எங்கள் கொள்கை. நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம். அதை ஆதரிக்கச் சொல்லி உங்களை கேட்கவில்லையே” என்ற ரீதியில் பதிலளிக்கிறார்கள். இப்படிப்பட்ட நகைச்சுவை நாடகங்கள் எல்லாம் இங்கே அரங்கேறியிருக்கின்றன.

அதற்கு பின்னர் அத்வானி பிரபாகரனை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும் (extradition) என்று கோருகிறார். அப்படி கோருவதற்கு துணை நின்று குரல் கொடுத்தது யார் என்றால், வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் இந்திரஜித் குப்தா. தா.பாண்டியன், நல்லகண்ணு ஆகியோரின் வலது கம்யூ கட்சிதான். அதற்குப் பிறகு “2002-ல் சமாதான பேச்சு வார்த்தை நார்வே அரசின் மூலமாக தொடங்கிய பிறகு “அந்த நபரை இந்தியாவிடம் ஒப்படைப்பது என்ற கேவலமான காரியத்தை நாங்கள் செய்ய மாட்டோம்” என்று இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் பதிலளித்தார். ஆனால் அந்த கேவலமான காரியத்தை செய்தது பாரதிய ஜனதா கட்சி. இதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன.

இத்தனை ஆதாரங்களையும் மறைத்து விட்டு பாரதிய ஜனதா கட்சி ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்ததைப் போல ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்கள். இன்னும் விவரங்களை நீளமாக சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு பின்னால் இறுதிப்போர் கால கட்டத்தில் (2008-09) இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்தார்கள். அதில் பாரதிய ஜனதாவும் உறுப்பினராக இருக்கிறது. பாரதிய ஜனதாவையும் சேர்த்து வைத்துக் கொண்டு, அவர்கள் இனப் படுகொலையை தடுக்க துணை நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாரதிய ஜனதாவும், மாநிலத்தில் ஜெயலலிதாவும் வெற்றி பெறும் பட்சத்தில் ஈழத்தில் போர் நிறுத்தம் வந்து விடும் என்று ஒரு தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்த இவர்கள் வேலை செய்தார்கள். இனப்படுகொலை நடந்து முடிந்தது. அதற்குப் பின்னால் நாடாளுமன்றத்தில் விவாதம் வரும்போது “இனப்படுகொலை” என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று பேசியவர் சுஷ்மா சுவராஜ்.

அதற்குப் பிறகு சுஷ்மா சுவராஜ், ராஜபக்சேவை போய் பார்க்கிறார், நெக்லெஸ் வாங்கிக் கொண்டு வருகிறார், பாரதிய ஜனதா கட்சியின் குழு போகிறது, இந்திய முதலாளிகளோடு பாஜக எம்பிக்கள் இலங்கை போகிறார்கள். இப்போது கடைசியாக ஆர்.எஸ்.எஸ் ஒரு குழுவை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் விழாவிலே பொன்.ராதாகிருஷ்ணனோடு அதே அரங்கத்தில் பங்கேற்கவிருக்கின்ற தமிழ்தேசிய பொதுவுடைமை கட்சியினுடைய மணியரசன் தன்னுடைய பத்திரிக்கையில் இதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். காங்கிரசைப் போலத் தான் பாரதிய ஜனதாவும், ஈழ விடுதலைக்கு அது எதிரிதான் என்று விரிவாக எழுதியிருக்கிறார். எழுதி விட்டு அவர்களுடன் சேர்ந்து விழாவில் பங்கேற்கவும் செய்கிறார்.

பி.ஜே.பி என்பது ஈழ விடுதலைக்கு ஆதரவாக எதுவும் செய்ததில்லை என்பது மட்டுமல்ல, திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் “மொழிவாரி மாநிலங்களைப் பிரித்ததே தவறு” என்று பேசியவர் மோடி. அதுதான் அவர்களுடைய கொள்கை. தமிழ் தேசிய இனம், கன்னட தேசிய இனம் என்று இனத்தையே அங்கீகரிக்க மறுப்பவர்கள் அவர்கள். அவர்கள் இன விடுதலையை பெற்றுத் தருவார்கள் என்றும், ஈழத்தமிழர்களுக்கு தன்னுரிமையை பெற்றுத் தருவார்கள் என்றும் கூறுவது மிகப்பெரிய மோசடி.

பாஜக வினரே அப்படியெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை. “ராஜாதி ராஜ, ராஜ கம்பீர” என்று அவர்களுக்கு இல்லாத பண்புகளை எல்லாம் பாரதிய ஜனதாவின் மீது ஏற்றி நெடுமாறனும், வைகோவும், இன்ன பிறரும்தான் அவர்களை இப்படி சித்தரித்து காட்டுகிறார்கள். இது அப்பட்டமான பொய் என்பது மட்டும் தான் உண்மை.

கேள்வி

புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்துக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் தேசியக் கட்சியான பாரதிய ஜனதா “துணிச்சலுடன்” கலந்து கொண்டு பேசுகிறது. இதை ஏன் இந்தக் கோணத்தில் பார்க்கக்கூடாது?

பதில்

பார்க்கலாம். புலிகள் இயக்கத்தை தடை செய்த ஒரு கட்சி; காங்கிரஸ் ஆட்சி புலிகள் இயக்கத்தை தடை செய்யும் போதெல்லாம், அதற்கு முழு மனதாக ஆதரவு கொடுத்த ஒரு கட்சி; நாள் தோறும் புலி எதிர்ப்பு அறிக்கை விடுவதையே தன்னுடைய பணியாக கொண்டிருக்கின்ற சுப்பிரமணிய சாமி என்ற பிறவியை தன்னுடைய கட்சியிலே சேர்த்து வைத்திருக்கின்ற ஒரு கட்சி – யாரோ ஒரு நபரை அனுப்பி வைத்து ஈழத் தமிழினத்திற்கு ஆதரவாக பேசுவது போல ஒரு நாடகத்தை நடத்திக் காட்டுகிறது. அதையும் நம்புவதற்கான மூடர்கள் தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதால் இந்தக் கோணத்திலும் பார்க்கலாம்.

நெடுமாறன் தாக்கரேயின் வீட்டுக்கு போனாராம். தாக்கரே வீட்டில் பிரபாகரனுடைய படம் மாட்டி வைத்திருக்கிறாராம். அதை பார்த்து இவர் நெகிழ்ந்து போய் விட்டதாக எழுதுகிறார். பால் தாக்கரே என்பவன் யார்? ஒரு காலத்தில் தமிழர்களை மும்பையிலிருந்து விரட்டியடித்த ஒரு பாசிஸ்ட், இன வெறியன். 1992-ல் முஸ்லீம்களுக்கு எதிரான மிகப் பெரிய படுகொலையை கட்டவிழ்த்து விட்டவன். அதற்குப் பின்னால் பீகாரையும், உ.பியையும் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களை அடித்து விரட்டியவன். அப்படி ஒரு பாசிஸ்டால் பாராட்டப்படுவதை, ஒரு பெரிய அங்கீகாரமாக கருதுபவர் நெடுமாறன் என்பதால், பாரதிய ஜனதா ஈழ விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்பது குறித்து அவர் பெருமை கொள்ளலாம்.

ஆனால், பாரதிய ஜனதாவைப் பொறுத்த வரைக்கும் ஈழப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறது? தமிழ் நாட்டுக்கு வரும் போது இது தமிழர்களுடைய போராட்டமல்ல, இந்துக்களின் போராட்டம் என்று சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். வட இந்தியாவுக்கு போகும் போது இலங்கை என்பது அகண்ட பாரதத்தின் ஒரு அங்கம், பௌத்தர்கள், தமிழர்கள் உட்பட எல்லோரும் நம்மைச் சேர்ந்தவர்கள் தான், சிங்களவர்கள் ஆரிய இனத்தின் தொடர்ச்சி என்று அங்கே பேசுகிறார்கள்.

தமிழினம் என்கிற வரையறையை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் தமிழுணர்வு என்பதை இந்து உணர்வாக மாற்றுவது எப்படி என்பது தான் அவர்களுடைய கவலை. இவர்கள் இங்கே பொன்.ராதாகிருஷ்ணனை மேடையேற்றட்டும். அங்கே வேறொரு காரியம் நடக்கிறது.

என்ன காரியம்? இலங்கையில் அசோக வனம் உருவாக்கப்படுகிறது. அது பாரதிய ஜனதா கட்சியின் ஒத்துழைப்போடு, ஆதரவோடு நடக்கிறது. அதை இவர்கள் இங்கிருந்து போய் பாராட்டுகிறார்கள். ராஜபக்சே அங்கிருந்து சாஞ்சிக்கு வருகிறான். அதற்கு அவர்களால் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதை எதிர்த்து வைகோ ஒரு போராட்டமும் நடத்திக் கொள்கிறார்கிறார். அதற்குப் பிறகு இவர்கள் ஈழத்தமிழருக்கு பாஜக ஆதரவென்று பேசிக்கொள்கிறார்கள்.

ஆக, பாரதிய ஜனதாவின் தமிழின ஆதரவு என்பதெல்லாம் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய தமிழ் உணர்வை இந்து உணர்வாக மாற்றுவதற்கு பாரதிய ஜனதாவும், சங்க பரிவாரமும் செய்கின்ற ஒரு சதி என்று தான் சொல்ல முடியும்.

கேள்வி

இந்தச்சதி, தமிழ் தேசிய வாதிகளுக்கு தெரியாதா? இது கூட தெரியாமல்தான் அவர்கள் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறிர்களா?

பதில்

ஆம் அவர்களுக்குத் தெரியும். தமிழகத்தில் இருந்து பெரியாரின் அரசியல் செல்வாக்கை ஒழிப்பது என்பது பார்ப்பனக் கும்பலின் நீண்ட நாள் கனவு. இங்கே பார்ப்பன பாசிசம் தலையெடுப்பது என்பது ஒரே வழியில் நடக்கவில்லை. பல வழிகளில் நடக்கிறது.

அதில் ஒன்று அரசியல் சந்தர்ப்ப வாதிகள், பிழைப்பு வாதிகளை வைத்துக் கொண்டு காலூன்ற முயற்சிப்பது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நாம் பார்த்து வருவது அதுதான். பா.ம.க., ம.தி.மு.க., தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசில் கூட்டணி – பதவி என்ற ஆதாயங்களுக்காக தமிழ் நாட்டின் கதவுகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு திறந்துவிட்டார்கள். இது பார்ப்பன பாசிசம், இவர்களின் அரசியல் பிழைப்பு வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டு நுழையும் வழி.

இரண்டாவதாக, கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக தலையெடுத்து வளர்ந்து வருகின்ற சாதி சங்கங்கள் ராமதாஸ் தலைமையில் இப்போது தீவிரம் அடைந்திருக்கின்றன. சாதி சங்கம் என்றால் என்ன? சாதி சங்கம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்ற சாதி மறுப்பு, சுயமரியாதை மரபை வேரறுப்பதற்கானது. ஆர்.எஸ்.எஸ். வேண்டுவது அதைத்தான். வட நாட்டில் “லவ் ஜிகாத்” என்று சொல்லி, முஸ்லீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தாக்குதல் தொடுக்க வைக்கிறார்கள். ஜாட் என்பது ஒரே நேரத்தில் சாதியாகவும், இந்துவாவும் இருக்கிறது. வன்னியர் சங்கம், உடையார் சங்கம், முக்குலத்தோர் சங்கம், என்று சங்கங்களை இவர்களால் ஒன்றிணைக்க முடியுமென்றால், அவர்களை மிகவும் இயல்பாக இந்து மதவெறிக்கு கொண்டு வந்து விட முடியும். ஆகவே இதனை பாஜக வினர் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

மூன்றாவதாக பயன்படும் வழிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்த வரையில், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஆர்.எஸ்.எஸ். நேரடியாக கால் பதித்த காலம் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற பிறகுதான். எம்.ஜி.ஆர் ஆர்.எஸ்.எஸ்ஸை அனுமதித்த பிறகுதான் மண்டைக்காடு கலவரம் வந்தது. பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பினர் பல்வேறு அதிகார நிறுவனங்களிலே பங்கு பெறும் சூழ்நிலை வருகிறது. விநாயகர் ஊர்வலம் என்பதெல்லாம் ஏறத்தாழ நிறுவன மயமாக்கப்படுகிறது.

மோடியின் திருச்சி கூட்டத்தில் ஒரு பேச்சாளர், “அன்னைக்கு ஒரு பிள்ளையாரை பெரியார் உடைத்தார். இன்று தமிழ்நாடு எங்கும் பல்லாயிரம் பிள்ளையார்கள்! உங்களால் என்ன செய்ய முடியும்” என்று சவால் விட்டு பேசினார். அப்படி ஆர்.எஸ்.எஸ். இங்கே காலூன்றி இருக்கிறது. இருப்பினும், இத்தனைக்குப் பிறகும் தமிழகம் தங்கள் கைக்கு வந்துவிட்டதாக அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பாரதிய ஜனதாவினருக்குக் கிடைத்திருக்கிற ஒரு அரிய வாய்ப்பு -இந்த தமிழ் தேசிய அமைப்புகள்.

“தமிழ் இனம்” என்பது வழியாக இந்துத்துவம் உள்ளே நுழைந்து விட முடியும் என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். இது ரொம்ப முக்கியமான விசயம். தமிழ் நாட்டை பொறுத்த வரைக்கும் “யார் தமிழன்” என்ற கேள்வி ரொம்ப நாளாக இருக்கிறது. என்னென்ன சாதிகளெல்லாம் தமிழ்ச் சாதிகள். இன்ன சாதிகளெல்லாம் தமிழ் சாதிகள் கிடையாது. பார்ப்பனர்கள் தமிழர்கள் – பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்று பல வரையறைகள் இருக்கின்றன.

பெரியாரைப் பொறுத்த வரையில், திராவிடன் என்று சொல்லுவதாக இருக்கட்டும், தமிழன் என்று சொல்வதாக இருக்கட்டும், அவர் “பார்ப்பனியம், மனுதர்மம், சாதியாதிக்கம், சமஸ்கிருதம்” இவற்றுக்கு எதிராக “சுயமரியாதை, நாத்திகம், சமத்துவம்” என்ற உன்னதமான, சமத்துவ விழுமியங்களை முன்வைத்து அதிலிருந்து தமிழன் என்பதை பெரியார் முன்நிறுத்தினார். அதை அப்படி உருவாக்க முடியும் என்று கருதினார். அப்படி உருவாக்க முடிந்திருக்குமா முடிந்திருக்காதா என்பது வேறு. ஆனால் கருத்தியல் ரீதியில் அது முற்போக்கானது. அப்படி ஒரு விழுமியத்தை பெரியார் உருவாக்கினார்.

ஆனால் அதற்கு மாற்றாக இப்போது உருவாகி வளர்ந்து வருகின்ற தமிழ் தேசியம் என்பது கன்னட எதிர்ப்பு, தெலுங்கன் எதிர்ப்பு, மலையாளி எதிர்ப்பு என்று அண்டை மாநில மக்களை தமிழனுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையிலோ, காவிரி பிரச்சினையிலோ, பாலாறு பிரச்சினையிலோ, வேறு ஒரு பிரச்சினையிலோ அண்டை மாநிலத்தவரை எதிரியாக காண்பதன் மூலம் தமிழன் தன்னை வரையறுத்துக் கொள்வது – என்ற முறையில் பார்க்கப்படுகிறது.

அல்லது பிறப்பின் அடிப்படியில் இன்னின்ன சாதிகள் தமிழ்ச் சாதி, மற்ற சாதிகள் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள், கன்னடம் பேசுபவர்கள் அவர்களையெல்லாம் தமிழ் இனத்தில் சேர்க்க முடியாது – என்று பல வரையறைகள் நிலவுகின்றன. இவையெல்லாம் பெரியார் கொடுத்த வரையறையுடன் ஒப்பிடும் போது பிற்போக்கானவை. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதனால்தான் பெரியாரை ஒரு வேற்று மொழிக்காரன் என்ற அடிப்படையில், அவர் தமிழனுக்கு எதிரான சதிகாரன், சூழ்ச்சிக் காரன் என்கிறார்கள்.

பெரியாரை மட்டுமல்ல, அது யாராக இருந்தாலும் “வடுகன், சதிகாரன், சூழ்ச்சிக்காரன் என்று பிறப்பு அடிப்படையில், சாதிய கண்ணோட்டத்தில் எப்படி பார்ப்பார்களோ அப்படி “இந்த மொழி பேசுபவன் என்பதனால் இவன் நம்ப முடியாதவன்” என்று சித்தரிப்பது இந்த புதிய தமிழ் தேசியத்தினுடைய முக்கியமான குணாதிசயம். இது ஒரு பிற்போக்கு தமிழ் தேசியம்.

ஆனால் தமிழ் நாட்டில் பெரியார் முன் வைத்த தமிழ் எனும் அடையாளம், பிற்போக்கானது போலவும், ஈழத்தில் உருவாகி வளர்ந்து வந்த தேசியம் முற்போக்கு தேசியம் போலவும் இவர்கள் காட்டுகிறார்கள் அது உண்மை அல்ல.

சொல்லப் போனால் திராவிட இயக்கத்துக்கு ஒப்பான ஒரு சீர்திருத்த இயக்கம் ஈழத்தில் கிடையாது. ஈழத்தில் இருந்த தமிழ் தேசியம் எந்த ஒரு முற்போக்கு அம்சமும் இல்லாத ஒரு தேசியம். சைவம், பார்ப்பனியம், சாதிய உணர்வு இதன் அடிப்படையில கட்டமைக்கப் பட்ட தேசியம் தான் அது. 70-களில் கூட அங்கே தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம் ஆலய நுழைவு போராட்டங்களை நடத்தும்போது, இவர்கள் விதந்து போற்றுகின்ற தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் பல இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்து நின்றார்கள். சிங்களப் பேரின வாதத்தின் தாக்குதல் நடைபெறுகின்ற சூழலில் கூட கூட தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் படிக்க கூடாது என்று பாடப் புத்தகத்தைப் பிடுங்கிக் கொளுத்துகிறார்கள். அப்போதுதான், எழுத்தாளர் தோழர் டானியல் “யாழ் நூலகத்தை கொளுத்தியது சரி” என்று ஒரு அறிக்கை விடுகிறார்.

அப்படிப்பட்ட சாதி வெறியோடு இணைந்த தேசீயம்தான் அங்கே இருக்குற மரபு. ஆனால் அதை முற்போக்கு போல காட்டுகிறார்கள். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-க்கு, இந்துத்துவ சக்திகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் தமிழ் தேசியவாதிகளை பிடித்தால் பெரியாரை, அவர் தோற்றுவித்து வளர்த்த முற்போக்கு விழுமியங்களை இந்த தமிழ் மண்ணிலிருந்து துடைத்தெறிந்து விடலாம் என்பது அவர்கள் கணக்கு.

தமிழ் நாட்னி மக்கள் அரசியல் ரீதியாக பின்தங்கி இருக்கலாம். ஆனால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய மரபு பெரியாருடைய மரபு. அதன் காரணமாகத்தான் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி இந்த நாடே பற்றி எரிந்த போது இங்கு மதக் கலவரம் என்று ஒன்று நடக்கவில்லை. அதன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே சாதிப் பெயரை சேர்த்து போட்டுக் கொள்வது இழிவு என்று பண்பாட்டு ரீதியாகவே அதனை வெறுத்து ஒதுக்குகின்ற ஒரு மனோபாவம், உயர் சாதி என்று சொல்லப்படுவோர் உள்ளிட்டு எல்லார் மத்தியிலும் பொதுக் கலாச்சாரத்திலேயே அது வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட முற்போக்கான அம்சங்களை ஒழித்துக் கட்டி, பழையபடி தன்னுடைய விழுமியங்களை நிலை நாட்டுவதற்கு இந்த தமிழ்த் தேசியவாதிகள் உதவுவார்கள் என்று இந்துத்துவா சக்திகள் கருதுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகை ஆர்கனைசர். அதன் முன்னாள் ஆசிரியர் தருண் விஜய், (எம்.பி) என்பவர் சமீபத்தில் தமிழின் மேன்மைகள் பற்றிப் பேசுகிறார். ‘இந்தியாவில் வட பகுதியில் இருக்கின்ற நாம் இத்தனை காலம் தமிழின் பெருமைகளை பற்றி அறியாமல் இருந்து விட்டோம். தமிழை இண்டாவது ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்’ என்று திடீரென்று என்று தமிழ் மேல் காதல் வந்து புகழ் பாடுகிறார். மோடி இங்கே வந்து “சங்க இலக்கியம்” என்கிறார். பழந்தமிழ் இலக்கியம், மரபு உள்ள தமிழ் என்று அவர் பேசுகிறார்.

செத்துப் போன மொழியான சமஸ்கிருதத்தை முதல் செவ்வியல் மொழியாக அறிவித்தது யார்? பாரதிய ஜனதா. தமிழ் மேல் இவர்களுக்கு வெறுப்பும் துவேசமும்தான் இருக்கிறது. இன்று வரையில் வரையில் தமிழ் வழிபாட்டை எதிர்ப்பவர்கள் இவர்கள். இதே பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இப்பொழுது சேர்ந்திருக்கிற சுப்ரமணியசாமி தில்லையில் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்.

இதே தில்லையில் அர்ஜூன் சம்பத் தமிழில் பாடுவதற்கு எதிராக தீட்சிதர்களை திரட்டிக் கொண்டு வந்து கலகம் செய்தவர். ஆனால், இவர்களை எல்லாம் தமிழினத்தின் நேச சக்திகளாக நெடுமாறன் கருதுகிறார். மொழி வாரி மாநிலமே தப்பு என்று மோடி பேசுகிறார். நெடுமாறனோ பொன் இராதாகிருஷ்ணனை ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர் என்று அழைத்துக் கொண்டு வருகிறார். அர்ஜூன் சம்பத்தை உள்நாடு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் மேடை ஏற்றி அவரை கௌரவப்படுத்துகிறார்.

அர்ஜூன் சம்பத்துக்கும் நெடுமாறன் போன்றோருக்கும் தினமணி தொடர்ச்சியாக மேடை அமைத்துக் கொடுக்கிறதே, என்ன அடிப்படையில்? தினமணிக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீது அவ்வளவு காதலா? அவ்வளவு அக்கறையா? ஆர்.எஸ்.எஸ் சார்பு கருத்துக்களை யார் முன் வைக்கிறார்களோ அவர்களை முன்னுக்குத் தள்ளுவது, பழைய பாணியில் சோ, ராமகோபாலன் வழியாக இந்துத்துவத்தைக் கொண்டு வருவது இங்கு சாத்தியப்படவில்லை. அதற்காக அவர்களுக்கு இப்படிப்பட்ட தமிழர்கள் – தமிழ் ஆழ்வார்கள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் வழியாக தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஐ புகுத்துவது என்பது திட்டமிட்டு நடக்கிறது.

2009-ல் பாரதிய ஜனதா கட்சி இனப்படுகொலைக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இங்கே இருந்து வைகோ டெல்லிக்கு சில நூறு பேரை அழைத்துக் கொண்டு போய் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். அந்த ஆர்ப்பாட்ட்டத்திற்கு அத்வானியை அழைத்து வந்து மைக்கை கொடுத்து பேச வைக்கிறார். சங்கராச்சாரியை கொலை வழக்கில் கைது செய்த போது துடித்துப்போய், மனித சங்கிலி, சாலை மறியல், பொதுக் கூட்டமெல்லாம் நடத்திய அத்வானி, இலங்கையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது சொந்த முறையில் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லையே! டெல்லிக்குப் போய் அத்வானிக்கு ஒரு தமிழ் ஆதரவு முகமூடியை உருவாக்கித் தர வேண்டிய அவசியம் வைகோ-வுக்கு என்ன என்ற கேள்வி வருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது ஒரு பிரச்சனை. கருணாநிதி ஆட்சி காலத்தில் ஒரு அரசாணை போடப்பட்டது, சட்டம் இயற்றப்பட்டது. அன்றைக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் அதற்கு எதிராக உச்சநீதி மன்றத்துக்குப் போனார்கள். இன்று வரையில் அந்த வழக்கு விசாரணைக்கு வராமல் ஜெயலலிதா அரசு வாய்தா வாங்குகிறது. ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் பார்ப்பனர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிக்காமல் எப்படி தவிர்க்கலாம். அவர்களை எப்படி மாரியாத்தா, காளியாத்தா கோயிலுக்குத் தள்ளலாம் என்று சதித் திட்டம் தீட்டுகிறது. அதைப் பற்றி இந்த “தமிழ் உணர்வாளர்கள்” யாரும் பேசுவதில்லை. இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது. இதெல்லாம் ஏன் இவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையாக தெரிய மாட்டேன் என்கிறது?

நெடுமாறன் பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு “உலகப் பெருந்தமிழர்” என்று விருது கொடுக்கிறார். அதைக் கேள்விக்குள்ளாக்கிய நீலவேந்தன் (ஆதித் தமிழர் பேரவை) புறக்கணிக்கப்படுகிறார். இது என்ன வகைத் தமிழ் உணர்வு? இந்தத் “தமிழ் உணர்வு”தான் இந்துத்துவத்துக்கு பிடித்திருக்கிறது.

இந்த தமிழ் தேசியர்கள் ஏமாளிகளாக, அரசியல் தெரியாமல் இந்துத்துவத்திடம் ஏமாந்து விட்டார்கள் என்று கருத முடியவில்லை. தமிழருவி மணியன் மோடியை ஆதரிக்கிறார். பல பேர் “தமிழருவி மணியனா இப்படி. அவரா மோடியை ஆதரிப்பது?” என்று எழுதுகிறார்கள். அவர் ஏதோ பயங்கரமான புரட்சிக்காரர் போலவும், கொள்கை ரீதியாக மலையிலிருந்து பாதாளத்தில் விழுந்து விட்டது போலவும் எழுதுகிறார்கள்.

ஆனால், தமிழருவி மணியன் என்ன சொல்கிறார்? அவர் மோடியை ஆதரிப்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர் மதச் சார்பின்மைக்குத் தரும் விளக்கத்தைப் பாருங்கள். பெரும்பான்மை சிறுபான்மையை ஒடுக்கக் கூடாதாம். சிறுபான்மையும் பெரும்பான்மையை ஒடுக்கக் கூடாதாம். இதற்கு என்ன பொருள்? அதாவது, சிறுபான்மையினர்க்கு வழங்கப்படும் “சலுகைகள், பாதுகாப்பு” என்பதை அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் என்றும், தாஜா செய்வது என்றும் வாக்கு வங்கி அரசியல் என்றும் அதை கொச்சைப்படுத்தி, எல்லோரையும் சமத்துவமாக நடத்துவது என்ற போர்வையில் பெரும்பான்மையின் அதிகாரத்தை சிறுபான்மையின் மீது நிலை நாட்டுவது – இதைத்தான் மோடி பேசுகிறார். அதையேதான் தமிழருவி மணியன் பேசுகிறார்.

தன்னுடைய அரசியலை நியாயப்படுத்துவதற்கு, “ஜெயபிரகாஷ் நாராயணனை விட பெரிய மதச்சார்பற்ற தலைவரை நீங்க பார்த்திருக்க முடியுமா? அவரே ஆர்.எஸ்.எஸ்-சோடு கூட்டு சேர்ந்தார். கடவுளே கூட குரங்கோடு கூட்டு வைத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது நான் பாரதிய ஜனதாவோடு கூட்டு வைக்கலாம் என்று சொல்வதில் என்ன தப்பு?” என்கிறார். ராமன் அனுமாரோடு கூட்டணி வைத்தான் என்று சொன்னால், ராமனுக்கு அனுமார் அடிமை. ராமனுக்கு வேண்டிய வேலையை செய்து கொடுத்தது குரங்கு. நீங்கள் பஜ்ரங் தளத்தோடு கூட்டு வைத்தால், குரங்குக்கு நீங்கள் அடிமை, குரங்கை உங்களுடைய முதுகில் நீங்கள் சுமக்கப் போகிறீர்கள். இரண்டும் எப்படி ஒன்றாகும்?

பால் தாக்கரே வீட்டில் பிரபாகரன் படம் தொங்குகிறது என்று சொன்னால், தாக்கரே யார் என்று நெடுமாறனுக்குத் தெரியாதா? தமிழர்களை விரட்டி அடித்தவர், கொடூரமான ஒரு இனக்கொலையாளி என்பது தெரியாதா? அது தெரியும் அவருக்கு, அதற்குப் பிறகும் அவரை ஒரு பெரிய மனிதனாகவும், அவருடைய வீட்டில் பிரபாகரன் படம் தொங்குவது ஒரு கௌரவமாகவும் அவருக்குத் தோன்றுகிறது என்றால், தாக்கரேவை அவரால் அங்கீகரிக்க முடிகிறது என்று சொன்னால், நெடுமாறனை ஏமாளி என்றா நாம் சொல்ல முடியும். அப்படி சொல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன்.

அதே போலத்தான் வைகோவும். மோடியின் பீகார் கூட்டத்தில் குண்டு வெடித்தது. மோடி அது பற்றி கூட்டத்தில் பேசவில்லையாம். அதனால், மோடியின் பெருந்தன்மையை, பொறுப்புணர்ச்சியை வைகோ மெச்சுகிறார். யாருடைய பெருந்தன்மையை? 2000 முஸ்லீம்களை கொலை செய்து விட்டு, அதற்கு “வினை, எதிர்வினை” என்று விளக்கம் கொடுத்த வக்கிரமான ஒரு பாசிஸ்டின் பெருந்தன்மையை அவர் மெச்சுகிறார். வைகோவால் மெச்சப்பட்ட அந்த பாசிஸ்ட் மோடி அடுத்து என்ன செய்கிறார்? குண்டு வெடிப்பில் செத்துப் போனவர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று அவர்களுடைய அஸ்தி கலசத்தை வைத்து ஊர்வலம் விடுகிறார். கோத்ராவுக்குப் பின்னால், குஜராத்தில் என்ன நடந்ததோ அதேபோல செய்கிறார். இப்படிப்பட்ட ஒரு பாசிஸ்ட்டின் பெருந்தன்மையை பாராட்டக்கூடிய மனம் வைகோவிற்கு எப்படி வருகிறது. இது ஏமாளித்தனமா? அப்படி என்னால் கருத முடியவில்லை.

கருணாநிதியை இவர்கள் ஈழம் தொடர்பான விஷயத்தில் கறாராக விமர்சிக்கிறார்கள், வசை பாடுறார்கள், அம்பலப்படுத்துகிறார்கள், கருணாநிதியைப் பொறுத்த வரைக்கும் எல்லாம் நடக்கிறது. ஆனால், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக, புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா இழைக்காத கொடுமை, அடக்குமுறை எதுவும் இல்லை. பேச்சு மாற்றிப் பேசுவது, மிகவும் அலட்சியமாக நேற்று சொன்னதை இன்று மறுப்பது இதெல்லாம் ஜெயலலிதாவுடைய அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நடந்திருக்கிறது. “தனி ஈழம் வாங்கிக் கொடுப்பேன்” என்றார், சட்டசபையில் தீர்மானம் போட்டார். இப்போது “தமிழர்களுக்கு சிங்களரோடு சம உரிமை கிடைக்கும் பட்சத்தில் காமன்வெல்த் மாநாட்டுக்குப் போகலாம்” என்று தீர்மானம் போட்டார். ஒரு மென்மையான குரலில் வைகோ ஆட்சேபம் தெரிவிக்கிறார். நெடுமாறனோ மற்றவர்களோ பேச மறுக்கிறார்கள். ஏன் மறுக்கிறார்கள்? பேசினால் ஜெயலலிதா கைது செய்து விடுவார் என்று அச்சமா?

நெடுமாறனோ, வை கோபால்சாமியோ, சீமானோ மற்றவர்களோ சிறைச்சாலைக்கு அஞ்சுபவர்கள் என்று நான் நினைக்கவில்லை. “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, என்னை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்று கூறும் மிகவும் உறுதியான வீரர்கள் அவர்கள். ஜெயலலிதாவை எதிர்க்க அவர்களுக்கு மனது வர மாட்டேன் என்கிறது. அதுதான் விசயம். கருணாநிதியை பேசுவது போல அவர்களால் ஜெயலலிதாவை எதிர்த்து பேச முடியவில்லை. இயல்பாகவே அவர்களுக்கு நாக்கு எழும்பவில்லை. இவர்களுடைய இந்த “இயல்பு” இந்துத்துவத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

இதற்கு முன்னால் நான் பட்டியலிட்ட அனைத்தும் ஒரு ஐயத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் ஏமாளிகள் அல்லர். இவர்கள் வெறும் அரசியல் சந்தர்ப்ப வாதிகளும் அல்லர். இவர்களில் எத்தனை பேர் தமிழ்வேடம் தரித்த இந்துத்துவவாதிகள் என்ற ஐயம் எழுகிறது. அதனால்தான் இவர்கள் இந்த நிலையை எடுக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் பேசுகின்ற தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவ பாசிசத்துடன் மிக நெருக்கமாக இருக்கக் கூடிய ஒரு வெறி பிடித்த, பாசிசத் தன்மை வாய்ந்த, பிற்போக்குத் தனமான தேசியமாக இருக்கிறது.

இதை தயவு தாட்சணியமே இல்லாமல் நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது, இதை முறியடிக்க வேண்டியிருக்கிறது.

கேள்வி

நீங்க அளிக்கிற விளக்கங்கள் எல்லாம், தி.மு.க.வுக்கான மறைமுகமான ஆதரவு என்று சிலர் சொல்லக் கூடும் இல்லையா?

பதில்

நாங்கள் இந்த தி.மு.க – அண்ணா தி.மு.க, காங்கிரஸ் – பாரதிய ஜனதா ஏன்ற தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கிறோம். திமுக, அண்ணா திமுகவையோ, காங்கிரஸ், பாஜகவையோ பயன்படுத்தி எந்த வகையிலும் ஈழப் போராட்டம் முன்னேற முடியாது என்பதை 30 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இல்லை, இவர்களை பயன்படுத்திதான் ஈழ விடுதலையை சாதிக்க முடியும் என்பது நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அனைவரது கொள்கை. அந்த அடிப்படையில்தான் அவர்கள் காங்கிரஸ், பாரதிய ஜனதா, திமுக, அதிமுகவை மாற்றி மாற்றி ஆதரித்து, அவர்கள் ஆதரவைப் பெற்று ஈழத்துக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.

நாங்களோ இந்த தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கிறோம். இந்தியாவின் இந்த தேர்தல் அரசியல் அமைப்பு என்பதே ஈழ விடுதலைக்கு உதவி செய்யக் கூடியது அல்ல என்பது எங்கள் கருத்து. நாங்கள் சொல்கின்ற இந்த விமர்சனங்களை திமுக-வுக்கு பயன்படும் என்று வியாக்கியானப்படுத்துவது ஒரு முழு அவதூறு, தெரிந்தே செய்யப்படும் ஒரு அவதூறு. அதற்கு எப்படி விளக்கம் அளிக்க முடியும்?

சில நாட்களுக்கு முன்னால் “முள்ளிவாய்க்கால் முற்றம்” உள்ளே சென்று வந்த தோழர்கள் சொன்னார்கள். “தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்ற பெயரில் அங்கே எம்.ஜி.ஆர் படம் இருக்கிறது, ராஜாஜி படம் கூட இருக்கிறது, ஆனால் பெரியார் படம் இல்லை” என்று வருத்தத்தோடு ஒரு தோழர் சொன்னார். பெரியார் படம் வைக்கவில்லை என்றால் மகிழ்ச்சி! தயவு செய்து அங்கே அதை வைத்து விடாதீர்கள். இதை பெரியாருக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகவே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

கேள்வி

சரி தோழர், 30 ஆண்டுகளாக ஈழப் போராட்டத்தில் வைகோ நெடுமாறன் போன்றவர்களுடைய பங்கை நீங்க நிராகரிக்கிறீர்களா?

பதில்

அது எப்படி நிராகரிக்க முடியும்? எத்தனை முறை இரண்டு பேரும் சிறை சென்றிருக்கிறார்கள், எத்தனை முறை ஈழம் சென்று வந்திருக்கிறார்கள். எத்தனை காலம் புலிகள் இயக்கத்தின் தலைமையோடு அவர்கள் நெருக்கமான உறவில் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் அவர்களுடைய நூல்களில் – அவர்களுடைய உரைகளில் பதிவு செய்திருக்கிறார்கள்! அதனால் அவர்களுடைய பாத்திரத்தை நிராகரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் பாத்திரம் தோற்றுவித்த விளைவு என்ன என்பதுதான் இப்போது கேள்வி.

இப்பவும் நெடுமாறனை கேளுங்கள், இந்திரா இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும், எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்கிறார். எப்படிப் பார்த்தாலும் இந்தியாவின் தயவில் ஈழம் என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளாக இவர்கள் பேசி வரும் கொள்கை. புலிகளுக்கும் அப்படி ஒரு பிரமை இருந்தது உண்மை. புலிகளுக்கு அப்படி ஒரு பிரமை இருந்தாலும் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். இவர்கள் பாத்திரம் என்ன?

அப்படி ஒரு பிரமையை அகற்றி, “இந்தியாவை நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தாதே” என்ற தெளிவை இவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட விமர்சனம் வைத்தவர்களை எல்லாம் நிராகரித்தார்கள். எத்தனை முறை இந்தியாவிடம் அடிபட்ட பிறகும், மீண்டும் மீண்டும், “இந்தியாவின் தயவில்லாமல் நாம் விடுதலை பெற முடியாது” என்ற கருத்தைத்தான் அங்கே உருவாக்கினார்கள். இந்திய அமைதிப்படைத் தாக்குதல்களுக்கு பிறகும் கூட இக்கருத்தைத்தான் உருவாக்கினார்கள். இந்தியாவின் நலனுக்காக, வெற்றி பெற்ற புலிகளைப் பின்வாங்கச் செய்தார்கள். இவர்கள் அனைவரும்தான் இப்படிப்பட்ட ஆலோசனைகளை வழங்கியவர்கள். இந்த அரசியலின் முடிவுதான் – முள்ளிவாய்க்கால்!

புலிகள் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆனால், இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்குமாறு புலிகளுக்கு ஆலோசனை கூறிய இவர்கள் இதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்கள்? கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பிறகே தோல்வி நிச்சயமாகி விட்ட நிலையில், இந்தியாவின் மீதும் தேர்தல் அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைக்கச் சொல்லி, போர் நிறுத்தம் வாங்கித் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை புலிகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்த இவர்கள், தங்களது செயலுக்கு எந்த வகையில் பொறுப்பேற்று விளக்கம் அளிக்கிறார்கள்?

தோல்விக்கு இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகின்ற ஒரே ஒரு விளக்கம். “20-30 நாடுகள் சேர்ந்து இலங்கைக்கு உதவி செய்து ராணுவ ரீதியாக புலிகளை ஒடுக்கி விட்டார்கள்” என்பதுதான். அது ராணுவ ரீதியான தோல்விக்கான விளக்கம்! அரசியல் ரீதியாக இந்திய அரசின் மீது நம்பிக்கை வைக்கச் சொன்னீர்களே, அதற்கு நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட புலி ஆதரவாளர்களின் விளக்கம் என்ன? உங்களுடைய வழிகாட்டுதலால் ஏற்பட்ட விளைவு என்ன?

காங்கிரசை நம்பக்கூடாது, தி.மு.க.வை நம்பக் கூடாது என்று எந்தத் தேதியிலிருந்து உங்களுக்குப் புரிந்தது? 2008 அக்டோபர் மாதத்துக்குப் பிறகா? அது வரைக்கும் சோனியா காந்தியின் தாய் உள்ளத்துக்கு வேண்டுகோள் விடுத்தீர்கள். கருணாநிதி தலைமையில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள். அதற்குப் பிறகு உங்கள் நம்பிக்கையை ஜெயலலிதாவுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மாற்றிக் கொண்டீர்கள். அதற்காவது ஏதாவது அடிப்படை இருக்கிறதா?

ஒரு அடிப்படையும் இல்லை. இந்த மடம் இல்லையென்றால் அந்த மடம் என்ற கதைதான்! பாரதிய ஜனதாவும் ஜெயலலிதாவும் ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருப்பார்கள், போர் நிறுத்தம் கொண்டு வருவார்கள் என்று ஒரு பிரமையை புலிகளுக்கு உருவாக்கினீர்கள். உங்களுடைய வாக்குறுதியைக் கேட்டு அவர்கள் அந்த பேரழிவுப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்தார்கள்.

இறுதியாக, நந்திக் கடலோரம் 1.5 சதுர கிலோமீட்டர் பரப்பில் 1.5 லட்சம் மக்களைக் கொண்டு குவித்து, ஒரு இனப் படுகொலையை நடத்துவதற்கு வாய்ப்பான சூழ்நிலையை எதிரிக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வரை இங்கே நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தீர்கள். அதன் பிறகு தேர்தல் முடிவு வருகிறது, நான்கு நாட்கள் பொறுத்திருங்கள் என்று காத்திருக்கச் சொன்னீர்கள். அந்த நாட்களில் மட்டும் 20,000 பேர் கொல்லப்பட்டார்கள். தேர்தல் முடிவோ வேறு விதமாக திரும்பி விட்டது.

ஆனால் நடந்திருக்கும் எதற்கும் நீங்கள் பொறுப்பு ஏற்பதில்லை. எதற்கும் நீங்கள் பதில் சொல்வதில்லை, ஒரு தலைமை என்பது, அல்லது தலைமையுடன் நெருக்கமாக இருந்து வழிகாட்டுபவர்கள் என்பவர்கள் நேர்ந்து விட்ட தவறுகளுக்கு பொறுப்பேற்று விளக்கம் சொல்ல வேண்டும். சீனத்தில், ரஷ்யாவில் சோசலிசம் தோற்று விட்டது என்றால் அது ஏன் என்ற விளக்கத்தைச் சொல்வது ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை.

நீங்கள் முப்பது ஆண்டு காலமாக, “நாங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தோடு நகமும் சதையுமாக இருந்தோம், ரத்தமும் சதையுமாக இருந்தோம்” என்று சொல்லிக் கொள்பவர்கள், அந்தப் போராட்டத்தின் தோல்வி குறித்து விளக்கம் அளிக்காமல் ஏன் ஓடி ஒளிகிறீர்கள்?

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த அந்தக் கடைசி நான்கு நாட்களில் புலிகளும் அந்த மக்களும் பரிதவித்து யார் யாரை எல்லாமோ தொடர்பு கொண்டார்கள், உங்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்திருப்பார்களா? அந்த நான்கு நாட்களில் வைகோ, நெடுமா, சீமான் உள்ளிட்ட முன்னணியாளர்கள் எங்கு இருந்தீர்கள். நீங்கள் எல்லாம் அவர்களுக்கு என்ன பதில் சொன்னீர்கள்? என்ன செய்யலாம் என்று வழி காட்டினீர்கள்? அது எல்லாமே மர்மமாக இருக்கிறது. அவர்கள் ப.சிதம்பரத்தை தொடர்பு கொண்டார்களா? கஸ்பாரை தொடர்பு கொண்டார்களா? உங்களைத் தொடர்புகொண்டார்களா, யார் என்ன சொன்னீர்கள்? இது எல்லாமே ஒரு மர்மக் குகையாக இருக்கிறது. பரிதாபத்துக்குரிய முறையில் அவர்கள் கொல்லப்பட்டார்கள். நீங்களோ கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள்.

எல்லாம் முடிந்து விட்டது, இப்போது வைகோ சொல்லுகிறார். இந்தியாதான் இந்தப் படுகொலையின் கூட்டாளி என்று! சீமான் வழிமொழிந்து குற்றம் சாட்டுகிறார். இதெல்லாம் செய்து விட்டு, சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினால், “நாங்கள் தீர்மானத்தை ஆதரிக்கிறோம் -வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம்” என்று கூத்தாடுகிறார்கள். ஜெயலலிதா என்ன தீர்மானம் நிறைவேற்றினார்? இந்தியா இனப்படுகொலையின் கூட்டாளி என்று தீர்மானம் நிறைவேற்றினாரா? திரும்ப மத்திய அரசுக்கு – இனப்படுகொலையின் கூட்டாளியான இந்திய அரசுக்கு – வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றினால் அதைப் பாராட்டுகிறீர்கள். என்ன கேலிக் கூத்து இது?

இந்தியாதான் குற்றவாளி என்றால், இந்தியாவைக் குற்றம் சாட்டுவதுதான் உங்கள் நோக்கம் என்றால், அதை நோக்கி உங்கள் நடவடிக்கை இருக்க வேண்டும். ஒரு பக்கம் வாய்ச்சவடால் பேசிக் கொண்டே எந்த இந்திய அரசைக் குற்றவாளி என்று சொல்லுகிறீர்களோ, அந்த இந்திய அரசின் கீழ் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரோடு கூட்டணி சேர்வது, மோடியோடு சேரலாமா என்று வைகோ யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்குத் தமிழருவி மணியன் தரகு வேலை பார்க்கிறார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் இந்தியா தனிமைப்பட்டு விடும் என்று கரியவாசம் சொன்னாராம். அதனால், “இலங்கை என்ற எலி இந்தியா என்ற யானையை மிரட்டுகிறது” என்று நான்கு நாட்களுக்கு முன்னாலே தினமணியில் நடுப்பக்க கட்டுரை எழுதுகிறார் நெடுமாறன். எலி யானையை மிரட்டலாமா? “இந்த தெற்காசியப் பகுதியில் இந்தியா ஒரு யானை; பாகிஸ்தான் ஒரு பூனை; இலங்கை ஒரு எலி. யானை இந்தப்பகுதியை ஆள வேண்டும்” என்பதுதான் நெடுமாறனுடைய கனவு.

இதே கனவைத்தான் திருச்சியில் மோடி வெளியிட்டார். “இந்தியா இந்தப் பகுதியில் யானையாக இருக்க வேண்டும். மன்மோகன் சிங் அப்படிப்பட்ட ஆட்சியைத் தரவில்லை. நான் வந்தால் அப்படிக் கொடுப்பேன். இலங்கையையும், பாகிஸ்தானையும் அடக்கி வைப்பேன்” என்ற ஒரு நம்பிக்கையை அந்த மேடையில் ஊட்டினார். ‘தெற்காசிய பிராந்திய வல்லரசாக இந்தியாவைக் காண வேண்டும், வலிமை மிக்க இந்த பிராந்திய வல்லரசால் தூக்கி எறியப்படும் எலும்புத் துண்டாக ஈழ விடுதலை இருக்க வேண்டும்” என்பதுதான் நெடுமாறனின் கருத்து.

ராஜபக்சே என்ன சொல்கிறார்? ‘நான் பெரும்பான்மை, என்னுடைய தயவில் தமிழர்கள் வாழ வேண்டும். தமிழர்கள் எலி’ என்று சொல்லுகிறார். மோடி என்ன சொல்கிறாரோ அதை ராஜபக்சேயும் சொல்லுகிறார். மோடி என்ன சொல்லுகிறாரோ அதைத்தான் நெடுமாறனும் சொல்லுகிறார்.

ஈழ விடுதலை என்பதை ஒரு தேசிய இனம் பெறுகின்ற சம உரிமையாக, ஜனநாயக ரீதியான உரிமையாக இருப்பதை, வல்லரசு, ஒடுக்கப்பட்ட அரசு என்று இல்லாமல் சமமான உரிமை பெற்ற அரசுகளாக இருப்பதை நெடுமாறன் கூறவில்லை. மாறாக, யானை தின்ற கவளத்தில் எலி தின்னக் கிடைக்கின்ற ஒரு சோற்றுப் பருக்கையாகத்தான் ஈழ விடுதலையைக் கூறுகிறார். யானையின் தயவில் எலிகளாம். நான் சொல்லவில்லை புலிகளை எலிகள் என்கிறார் நெடுமாறன்.

கேள்வி

நீங்க சொல்ற விமர்சனங்கள் சரியாக்கூட இருக்கலாம். ஆனா, இப்ப இசைப்பிரியா படுகொலை குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் காமன்வெல்த் மாநாடு பற்றிய சர்ச்சைகள் நடந்துக்கிட்டிருக்கின்றன. இப்ப நீங்க விமர்சிக்கிறீங்க. இது சரியான தருணமா?

பதில்

காமன்வெல்த் என்பது பிரிட்டன் உருவாக்கிய ஒரு அடிமை நிறுவனம். அதிலிருந்து இலங்கையை நீக்குவது, இந்தியா அந்த மாநாட்டை புறக்கணிப்பது என்பதெல்லாம், இனப்படுகொலை செய்த இலங்கையை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவது, ஒரு சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்குவது போன்ற ஒரு நடவடிக்கை. அதுதான் அந்த கோரிக்கையினுடைய வரம்பு.

இசைப்பிரியாவின் கொலைக்கு ராஜபக்சேதான் பொறுப்பு, ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், ஈழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு யார் பதில் சொல்வது? இந்தக் கேள்வியை வேறு எந்தத் தருணத்தில் எழுப்புவது? இசைப் பிரியாவின் இறுதிக்காட்சிகளை, இறுதிக் கணங்களை வீடியோவில் பாருங்கள். குஜராத்தில் இஷ்ரத் ஜகானின் உயிரற்ற உடல் கிடத்தப்பட்டிருக்கும் காட்சியையும் பாருங்கள். சிங்களப் பாசிசத்திற்கும், இந்துப் பாசிசத்திற்கும் என்ன வேறுபாட்டை உங்களால் காண முடிகிறது? இசைப் பிரியாவுக்கும் இஷ்ரத் ஜகானுக்கும் என்ன வேறுபாட்டை காண முடிகிறது.

இசைப்பிரியாக்களுக்கு அஞ்சலி செலுத்த இந்திய ராஜபக்சேக்கள் வருகிறார்கள் – முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு.

நீங்களும் போகிறீர்களா?

000

  1. // இவர்களில் எத்தனை பேர் தமிழ்வேடம் தரித்த இந்துத்துவவாதிகள் என்ற ஐயம் எழுகிறது. அதனால்தான் இவர்கள் இந்த நிலையை எடுக்கிறார்கள். //

    ம்ம்ம். என்ன கடைசில இப்படி சொல்லிட்டாரு!

    பிஜேபியோடு பழகின/பழகுற எல்லாரையும் விமர்சித்தார், கலைஞரை தவிர.

  2. மானங்கெட்ட தமிழ்த் தேசியவாதிகளே, பதில் கூறுங்கள்.. வெட்கமே இல்லாமல் மதவெறிப் பொறுக்கிகளான பா.ஜ.க வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஈழத் தமிழ்மக்களுக்கு நினைவிடம். அப்படியே மோடியையும் அழைத்திருக்கிலாம். மோடிக்கும் பொன்.ராதா கிருஷ்ணனுக்கும் கொள்கையளவில் என்ன வேறுபாடு?

    பா.ஜ.க வும் சிவசேனாவுக்கும் கொள்கை ரீதியில் தொடர்பு இருப்பது போல, சிவசேனவுக்கும், இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் வலதுகரமாக திகழும் இனவாத அமைச்சரான விமல் வீரவன்ச வுக்கும் தொடர்பிருக்கிறது.( BBS suspects Wimal – Shiv Sena links (Audio) http://colombogazette.com/2013/05/13/bbs-suspects-wimal-shiv-sena-links/ )

    ஆக, ராஜபக்சே வின் இந்திய வடிவம் தான் மோடி என்பதில் ஐயமில்லை. அப்படியென்றால் ராஜபக்சேவின் ஆதரவுடன் ஈழ மக்களுக்கு நினைவிடம். சபாஷ்!

  3. Tamilanukku tamilanthan ethiri. If vinavu wants to convert to other religion no issue.but dont denigrate hinduism.can any other religion give this much freedom? Can vinavu review the drawbacks of foreign religions?vinavu unnecessarily drags ishrat into lanksn problem.this is not the article to discuss.y cant vinavu disvlosr its suport to itd prrfrrred religion rather than crocodile type crying for tamil cause.vinavu is dividing hindus further in the name of cong type seculatism.

  4. புதிய தொழில். நவம்பர்மாதம் இலாபத்தை எதிர்பார்க்கலாம்.இந்தியாக்காரனை நம்பி சிலோன்காரன் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறான்.

  5. அதன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே சாதிப் பெயரை சேர்த்து போட்டுக் கொள்வது இழிவு என்று பண்பாட்டு ரீதியாகவே அதனை வெறுத்து ஒதுக்குகின்ற ஒரு மனோபாவம்,//அடடா அப்படியா? சாதிப்பெயரை சேர்த்து போட்டுக்கொள்வது இழிவு என்று மிகச்சிலர் தான் நினைக்கிறார்கள். தமிழர்களே மற்ற அனைவரை காட்டிலும் மிக அதிக சாதி வெறி கொண்டவர்கள் என்பது கண்கூடு. தெருப்பெயரிலிருந்தும் சொந்தப்பெயரிலிருந்தும் சாதியை நீக்கி விட்டார்கள். ஆனால் மனத்தளவில் மிகப்பெரும் சாதிவெறியர்களே. ஈவேராவின் போலி பகுத்தறிவு வாதம் இதையே சாதித்து இருக்கிறது.

  6. அதாவது, சிறுபான்மையினர்க்கு வழங்கப்படும் “சலுகைகள், பாதுகாப்பு” என்பதை அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் என்றும், தாஜா செய்வது என்றும் வாக்கு வங்கி அரசியல் என்றும் அதை கொச்சைப்படுத்தி, எல்லோரையும் சமத்துவமாக நடத்துவது என்ற போர்வையில் பெரும்பான்மையின் அதிகாரத்தை சிறுபான்மையின் மீது நிலை நாட்டுவது – இதைத்தான் மோடி பேசுகிறார். அதையேதான் தமிழருவி மணியன் பேசுகிறார்.// ஈவேரா முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் இடம் குறித்து ஒப்பாரி வைத்ததை நீர் படித்ததில்லையா? அய்யோ பாவம்.

  7. போலி பாதிரி ஜகத் விஸ்பரை பிடித்து லாடம் கட்டினால் ஈழம் குறித்த அந்த நான்கு நாட்கள் ரகசியங்கள் அனைத்தும் வெளி வரும்…

  8. தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள் முகாம் முல்வேலி முகாமைவிட மோசமாக உள்ளது.காவல் துறை கயவாளிகளின் மனித உரிமை மீறல்கள் அவர்களை நடை பிணங்களாக மாற்றிஉள்ளன. ஊழல் பெருச்சாளி நடராசனின் காசில் முள்ளிவாய்க்கால் முட்றம் காணும் நெடு மாறன் வைகோ சீமான் கும்பல் இவர்களை பற்றி பேசினால் ஜெயாவின் கோப பார்வைக்கு ஆளாக நேரும் என்பதால் கள்ள மெளனம் காக்கின்றனர்.

  9. அருமையான பதிவு. உங்களுடைய பல கேள்விகள் மிக சரி.யார் தமிழர்கள்?? என்ற கேள்வியை நானும் பலமுறை கேட்டுள்ளேன்.இந்துத்துவம் என்றாலே சாதியம் தான் என அறுதியிட்டு சொல்ல முடியாது என்பது கருத்து. ஏனெனில் சாதியம் என்னுடையது ஆனால்நான் இந்து என்று எப்பொழுதில் இருந்து ஆனேன் என்பது தான் புரியாத விடயம். தவறான வழிகாட்டிகள் இன்று எதுவுமே நடவாதது போல் அடுத்தவர்கள் மீது பழி சுமத்துவதை கவனமாக செய்து வருகிறார்கள். இங்கு அனைவருக்குமே இரட்டைவேடம் தான். இவ்வளவு தெளிவாக மனம் திறந்து,வெளிப்படையாக உண்மையை பேசும் உங்கள பற்றி அறியாதிருந்தது…. சமீபத்திய என்னுடைய மாபெறும் இழப்பாக தவறாக கருதுகிறேன். அண்ணா நீவிர் வாழ்க பல்லாண்டு!!!!!!

  10. தமில்நாடு இந்தியாவில் இருந்து பிரியும் வரை நாம் டெல்லிக்கு அடிமையாகதான் இருக்க வேன்டும்
    தனித்தமில்னாடுதான் ஒரெ தேர்வு

  11. ஐயா வணக்கம்,சலாம். தங்கள் கட்டுரை தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றியும் ஈழ தமிழர்களைக் காட்டிகொடுத்தும் ஈழ விடுதலைப் போரின் தோல்விக்கு யார் யார் காரணம் என்பதை ஆதாரத்தோடு அதுவும் சமநிலையோடு நிரூபிக்கும் வரலாற்று பெட்டகமாகும்.இதை ஒவ்வொரு தமிழ் மகனும் இளைஞனும் ஆழ்ந்து படித்தால் சாதிகளை மறந்து தமிழனாக நிமிர்ந்து நிற்பான்.

    ஆனையிறவு முற்றுகையின் போது பாஜக வாஜ்பாய் அரசு சிங்கள அரசுக்கு ஆதரவாக இருந்து கொண்டே தம்பி பிரபாகரனை சந்திக்க ஆர்.எஸ்.எஸ்.சார்பில் முக்கிய் ஓரிருவரை இலங்கைக்கு அனுப்பியதாகவும் தமிழ் ஈழத்திற்கு பதிலாக இந்து ஈழம் என்று பெயர் மாற்றிக் கொண்டு அறிவித்தால் இந்து ஈழ நாடு வாங்கிதருவதாகவும் கூறப்பட்ட ஆலாசனையைஏற்க மறுத்த தம்பி பிரபாகரன் இலங்கை தமிழர்களின் தாய் மண் தமிழ் ஈழம்தான் அதில் மாற்றமில்லை என்று கூறி மறுத்து விடதற்காக ஆனையிறவு முற்றுகையின் போது புலிகள் வெற்றி பெறாதவாறு
    வாஜ்பாயி பாஜக அரசு புலிகளுக்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டதாகவும் கடுங்கோபத்தில் இருந்த அத்வானி பிரபாகரனை எங்களிடம் ஒப்படையுங்கள் தூக்கில் போடுகிறோம் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்ததாகவும் சில ஆண்டுகளுக்கு முன் அகதியாக குவைத்திற்கு வந்து பணியாற்றிக் கொண்டிருந்த புலிகள் படையில் முக்கிய பதவி வகித்த ஈழத்தமிழர் ஒருவர் எனக்கு தந்த தகவல் இது.

    தமிழர் சமுதாய இனமான உணர்வூட்டும் சிறப்பான பணியாற்றி வரும் தங்களுக்கு குவைத் முஸ்லிம் லீக் சம நிலை மையம் சார்பில் நன்றி, நல் வாழ்த்துக்கள்.

  12. சிங்கள இனவெறியைப் பயன்படுத்தி இந்திய அரசின் ஆளுங்கூட்டணி நடத்திய இனப்படுகொலையும் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை இலங்கை அரசைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஆளுங்கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் இன்றைய சூழலில் தமிழர்களின் முழுமுதல் நோக்கமாக இருக்கமுடியும். அப்படியென்றால் இந்தக்கூட்டணி தோற்கவேண்டுமென்றால், பி.ஜே.பி ஆட்சிக்கு வரவேண்டும் அல்லது பி.ஜே.பி ஆட்சிக்கு வரக்கூடிய நிலையில் இருக்கவேண்டும். இந்த வருந்தத் தக்க எதார்த்த சூழலின் பின்னணியில் இன்றைய தமிழ்த்தேசியவாதக் கட்சிகளின் அரசியல் நகர்வு பி.ஜே.பியை நோக்கியிருக்கின்றது. இதனை தமிழ் ஆர்.எஸ்.எஸ் என்று பார்க்கமுடியாது. மோடியும் பி.ஜே.பியும் ஆட்சிக்குவரக்கூடாது என்றால், இன்றைய ஆளுங்கட்சி ஆட்சிக்கு வரும். இது ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தும். இன்றைய ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதைவிட பி.ஜே.பி வருவது ஈழத்தமிழர்களுக்கு வலுசேர்க்காது என்பது எதார்த்தம் என்றாலும் இன்றைய ஆளுங்கட்சி செய்யும் மோசடிக்கு சமமாக இருக்காது. இது இன்னொரு கொடுமையான எதார்த்தம். இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றுபவை என்றாலும் ஈழத்தமிழர்களுக்கு மிகப்பாதகம் இன்று இருக்கும் ஆளுங்கட்சியால் தான். இந்த நிலையில் தமிழ்த்தேசியவாதிகளின் பி.ஜே.பியை நோக்கிய நகர்வு, கடந்த தேர்தலிலேயே பார்த்தாகிவிட்டது, இந்தத் தேர்தலில் அது இன்னும் கொஞ்சம் நெருங்கியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பெரியாரின் உருவம் இல்லை என்பது தமிழ்த்தேசியவாதிகளின் திராவிடர் அரசியல் பற்றிய தவறான புரிதலின்கீழ் நிகழ்ந்துள்ளது. இவர்களால் பி.ஜே.பியை வைத்து ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக ஏதேனும் காரியம் சாதிக்க முடியுமா இல்லையா என்பது வேறு விசயம். இந்நகர்வு, இன்றைய ஆளுங்கட்சிக்கு எதிரான நகர்வே. ம.க.இ.கவைப் பொறுத்தவரை மோடியை எதிர்ப்பதின் பின் திரையில் காங்கிரசை ஆதரிப்பதும், ஈழத்திற்கு பாதகமான சூழலை இரசிப்பதுமே வாடிகையாகிவிட்டது. கடந்ததேர்தலில், 2 ஜி ஊழலை பெரிய ஊழல் இல்லை என்றும் மற்ற ஊழல்களையூம் விமர்சிப்பது என்ற திரைமறைவில் தி.மு.கவிற்கு பிரச்சாரம் செய்தவர்கள் தான் ம.க.இ.க வினர். இது அவர்களின் ஈழ எதிர்ப்பு அரசியலின் நகர்வு. எல்லா கருத்துக்களுமே ஆராயப்படவேண்டியவை, சிந்திக்கவேண்டியவை, விமர்சிக்கப்படவேண்டியவையே.

  13. ஆர்.எஸ்.எஸ்சை சுதந்திரம் பெற்றவுடனேயே தடை செய்திருந்தால் நாடு உருப்பட்டிருக்கும்

  14. பிஜெபி உள்ளே ஈவெரா வெளியே ‘சுயமரியாதை’ தமிழ்தேசத்திர்க்கு தேவையில்லை என்பதே இதன் பொருள்.

Leave a Reply to anwar basha பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க