privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

வள்ளியின் கதை

-

ழகிய முகமும், அருமையான குணமும் கொண்ட பொற்கொடி தீயில் கருகிப் போய் அழுகிப் போன பிணமாகக் கிடந்தாள். அவள் முகம் மட்டும் எப்போதும் போலவே அன்று பூத்தப் பூவாக சிரித்த வண்ணமாய் இருந்தது. மூன்று வயது மகனை விட்டு விட்டு தீக்குளித்து விட்டாள் பொற்கொடி. துக்கத்துக்கு வருபவர்களெல்லாம் பரிதாபப்பட்டு வாங்கிக் கொடுக்கும் பிஸ்கெட் பாக்கெட்டை தின்றவாறு எதுவும் புரியாத நிலையில் இருந்தான் அந்தக் குழந்தை. நிலை தடுமாறும் அளவுக்குக் குடித்துவிட்டு துக்கம் தாங்காதவராக கிடந்தார் அவள் கணவன். மரத்தடியில் சுருண்டு கிடந்தார் அப்பா. சொல்லி அழ ஜீவனற்று குரல் மட்டும் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுக்கும் நிலையில் அம்மா. பொற்கொடியின் குடும்பத்தில், வாழ்க்கையில் நடந்து முடிந்ததையும், இனி நடக்கப் போவதையும் சொல்லி, குலை நடுங்கும் நெடுங்குரலில் அழுது கொண்டிருந்தாள் வள்ளி.

சகோதரிகள்

பொற்கொடியின் தங்கைதான் வள்ளி. அவள் அக்கா பொற்கொடிக்கே மூத்தவளான நான் அவள் அக்காவுக்குத் தான் கூட்டாளி. ஒரே ஊர், அக்காவின் கூட்டாளி என்றுதான் அவளுக்கும், எனக்குமான பழக்கம்.

பொற்கொடி இறந்த பிறகு என்னிடம் மிகவும் நெருக்கமாக பழகினாள் வள்ளி. அவள் அக்காவோடே என்னை அதிகம் நேரம் பார்த்ததால், பொற்கொடியின் ஞாபகம் மிகவும் வேதனை தரும் நேரத்துல என்னை பார்த்தால் அக்காவைப் பார்த்தது போல் இருக்கும் என்பாள். அவளுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த போது என்னைத்தான் பேர் வைக்கச் சொன்னாள். அந்தப் பேரை அவள் அக்கா வைத்ததாக நினைத்து சந்தோசப் பட்டுக்குவா. என்னிடம் மனம் விட்டுப் பேசுவாள். என்னிடம் பேசும் போது அவள் அக்காவிடம் பேசுவது போல் ஒரு மன நிறைவைத் தருது என்பாள் வள்ளி. நாளடைவில் அனபு வளர்ந்ததனால், தோழி பொற்கொடியை விட ஒருபடி மேலே போய் தோழியின் தங்கை என் தங்கையானாள். இந்த வள்ளியின் வலி மிகுந்த வாழ்க்கையை வேதனையோடு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

வள்ளியை கடந்து செல்லும் யாருக்கும் ஒரு நிமிடமாவது திரும்பிப் பார்க்கத் தூண்டும் அளவுக்கு நல்ல அழகு. மகன் வைத்திருக்கும் எந்த அம்மாவும் வள்ளியை பார்த்தால் நமக்கு வரப்போற மருமக இந்த பொண்ணப் போல இருக்கணும் என்று நினைக்கும் அளவுக்கு லட்சணம். அனைவரும் வள்ளியைப் போலத்தான் வேணும் என்று நினைப்பார்களே தவிர வள்ளிதான் வேணும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பொண்ணோடு பொருளையும் எதிர்ப் பார்ப்பவர்கள். வள்ளியோ ஏழ்மைப்பட்டக் குடும்பத்து பெண்.

பொற்கொடி, வள்ளி, அம்மா, அப்பா இவர்கள் நால்வர் அடங்கியதுதான் குடும்பம். வள்ளிக்கும், பொற்கொடிக்கும் ஆறு வயசு வித்தியாசம். வள்ளியின் அம்மாவுக்கு இவர்கள் மூன்று பேரைத் தவிர ஒரு உலகம் கிடையாது. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிய பிறகும் கூட குழந்தையா நெனச்சு கிட்டு தலை சீவறதுலேர்ந்து, சாப்புடறது, நிக்கிறது, நடக்குறது, தூங்கறதுன்னு அனைத்தையும் ரசிப்பாங்க. பஸ்ல ஏர்ற வரைக்கும் பொண்ணுங்களுக்கு ஊட்டி கிட்டே வருவாங்க. பொண்ணுங்கள பார்த்து பார்த்து வளர்த்தாங்க. வள்ளியின் அப்பா பொறுப்பில்லாத குடும்பஸ்தர். ஆனால் பொறுப்பான குடிகாரர். அவர் சம்பாத்தியம் குடிக்க மட்டும்தான் போதுமானதா இருக்கும். போதாக் குறைக்கு இருந்த ஒரு ஏக்கர் நிலத்த்தையும் வித்துட்டார். ஒரு பால் மாடும், வள்ளியின் அம்மா கூலி வேலையும் தான் அன்றாட குடும்ப செலவை தீர்த்தது.

இருந்த அரை ஏக்கர் நிலத்தை வித்து பொற்கொடிக்கு 17 வயசுலயே சொந்தக்கார மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். அப்பா மொடாக் குடிகாரன்னா, புருசன் படாக் குடிகாரனா இருந்தான். ஒரு ஆம்புள புள்ளையும் பொறந்துச்சு. காதுல மூக்குல இருக்குற நகைகள வாங்கி வித்து குடிச்சது போக வீட்டுல உள்ள பாத்திரத்த வித்து குடிக்கிற அளவுக்கு நெலைம போய்ட்டே இருந்துச்சு. எந்த வகையிலயும் திருத்த முடியல.

தன் வீட்டுத் தேவைகளுக்காக வேலைக்கு போக ஆரம்பித்த வள்ளி, அக்கா குடும்பத்துக்கும் சேர்த்து உழைக்க வேண்டியிருந்தது. வாரத்துக்கு ஒருமுறை வள்ளியைப் பார்த்து தனக்கும், குழந்தைக்கும் தேவையான அனைத்தையும் கேட்டு வாங்கி வருவாள் பொற்கொடி. தன் பங்குக்கு வள்ளி வேலை பார்க்கும் கடைக்குச் சென்று குடிக்க காசு கேட்பதும், இல்லை என்றால் அசிங்கமாக திட்டுவதும், கூட வேலை பார்ப்பவர்கள் கேலியாக பேசுவதுமாக வள்ளிக்கு அவமானத்தை ஏற்படுத்தினான் அக்கா கணவன்.

ஒரு நாள் பிள்ளைக்குத் தேவையானதை வாங்கக் கொடுத்தக் காசில் குடித்து விட்டு வந்தானென்று ஆத்திரம் அடைந்தப் பொற்கொடி, அவனை உதறி கிராமத்துப் பெண்விட்டு தன் வாழ்க்கையைப் பார்த்துக்க நினைக்காமல், மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாள். 28 நாள் ராப்பகலாக வள்ளிதான் பொற்கொடியைக் கவனித்தாள். அவர் அம்மா ஒரு பரதேசி போல ஒரு மூலையில் சுருண்டு கிடந்தார். ஆறுதல் சொல்லக் கூட ஒரு நல்ல மனிதரில்லை. “சாக வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யவில்லை. பயமுறுத்தி வைக்கத்தான் செய்தேன். இப்ப என் பிள்ளைகளை விட்டுட்டு போயிடுவேனோ என்று பயமா இருக்கு” என்று வள்ளியையும் உள்ளடக்கி நிலை தடுமாறிய மனநிலையில் பொற்கொடி கூறியதும், வள்ளி செய்வதறியாது நின்றதும் இன்றளவும் என் மனதை வதைக்கும் ஒரு நிஜம்.

பொற்கொடி சாவதற்கு முன் வள்ளிக்கு திருமணம் நிச்சயம் செய்து ஒரு மாதம் முடிந்திருந்தது. வரும் மாதத்தில் திருமணம் முடிவு செய்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் துக்கத்துக்கு வந்த அனைவர் மனதிலும் ஓடிய எண்ணமும், பேசிய வார்த்தையும், “இரண்டாம் தாரமாக வள்ளியையே கட்டி வச்சுட்டா நல்லா இருக்கும். பிள்ளைக்கு அம்மா வேணும், வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா பிள்ளையை சரியா பாத்துக்க மாட்டாங்க” என்று நியாயம் பேசினார்கள். நடந்த தவறைப் பற்றிய கோபமே இல்லாமல் மீண்டும் ஒரு தவறு செய்வதை சரி என்று பேசினார்கள்.

மனைவி செத்து ஒரு வாரத்துக்குள், “பிள்ளைக்காகவாவது என்னை கல்யாணம் பண்ணிக்க” என்றான் குடிகாரன். காறி மூஞ்சிலேயே துப்பினாள் வள்ளி. “உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்டிப்பட்டவரோ, பாக்கவும் அவ்வளவா பொருத்தமா இருக்க மாட்டாரு, அதுக்கு அக்கா புருசணையே கல்யாணம் பண்ணிகிட்டா ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கலாம்” என்றார்கள் சொந்தக்காரர்கள். “தெரிந்தே குழிக்குள்ள விழறதுக்கு தெரியாம விழறது மேல்” என்று பிடிவாதமாகக் கூறி விட்டாள் வள்ளி.

வள்ளிக்கு பார்த்த மாப்பிள்ளை அவளை விட 20 வயசு அதிகம். வயசுலயும், தோற்றத்திலயும் பொருந்தாத உருவம். இவளின் ஏழ்மை நிலைக்கு இந்த அளவுக்குத்தான் மாப்பிள்ளை கிடைக்கும் சமூகத்தில். குடிக்காதவரா, மூணு வேலையும் சாப்பாடு போடுபவரா இருந்தா போதும் என்ற அடிப்படையிலும் சரியென்று நினைக்க வைத்தது சூழ்நிலை.

அக்கா கணவனுக்கு கட்டி வைத்து விடுவார்கள் என்ற பயத்திலே மாப்பிள்ளை வீட்டார் பத்தே நாட்களில் திருமணத்தை முடித்தார்கள். வள்ளி கணவன் வீட்டில் இருந்தாள். அக்கா குழந்தை, அம்மாவிடம் இருந்தது. திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து ஒரு வாரமாக பையனைப் பார்க்க அந்த ஆள் வரவே இல்லையே என்று தேட ஆரம்பித்த போதுதான் தெரிய வந்தது இறந்து விட்டார் என்று. பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த போது குடிபோதையில் வம்பு செய்ததனால், பாதி வழியில் இறக்கி விடவும், குடிபோதையில் ஆத்துக் கரையில் அமைந்த ரோட்டில் ஆத்தில் தவறி விழுந்து ஒரு வாரத்துக்குப் பிறகு ஆத்து மதகில் சிக்கிக் கொண்ட பிணத்தைக் கண்டு பிடித்தார்கள்.

உழைக்கும் பெண்அப்பா வழியில் அந்தப் பையனை வளர்க்க யாரும் முன்வரவில்லை. வள்ளி அம்மாதான் வளர்த்தார். அக்கா பையனைத் தன்னோடு வைத்துக் கொள்ள கணவனின் கூட்டுக் குடும்பச் சூழ்நிலையில் முடியவில்லை. அக்கா பையனை நினைத்து வேதனைப்பட்டாள், வள்ளி. தேவையானதை வாங்கிக் கொடுத்து வேதனையை குறைத்துக் கொள்ள நினைத்தாலும் வருமானம் போதாதக் குறையால் செய்வதறியாது தாய் வீட்டுக்கும், கணவன் வீட்டுக்குமாக அலைந்தாள் வள்ளி. இரண்டு வருடம் கழித்து அவளுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை வேண்டாம், அக்கா பையன் போதும் என்ற முடிவுடன் இருந்தாள் வள்ளி.

குழந்தை பிறந்து ஒரு வருசம் கழிச்சுப் பிழைப்பு தேடி கணவன் மனைவி இருவரும் குழந்தையுடன் சென்னைக்கு வந்தனர். ஒரு பணக்கார குடும்பத்துக்கு வீட்டோடு தங்கி இருவருமே வேலை செய்துவந்தார்கள். சென்னைக்கு பொழைப்புத் தேடி வந்து நாலு வருசமாச்சு. இதற்கிடையில் வள்ளியின் அம்மா, பொண்ணு செத்தக் கவலையில தன் நிலை மறந்து மனநோயாளியா ஆயிட்டாங்க. கண்டதையும் பேசிக்கிட்டு, துணியொரு கோலமா அலைய ஆரம்பிச்சுட்டாங்க. அம்மாவ பாத்துக்குறதே அப்பாவுக்கு பெரிய வேல அக்கா பையனையும் எப்படி சமாளிப்பாரு, தன்னோட வச்சுக்கலாம்னா மொதலாளி ஒத்துக்க மாட்டாரு, மனச கல்லாக்கிட்டு தாய் தகப்பன் இல்லாத அனாதையின்னு சொல்லி ஒரு ஆசிரமப் பள்ளியில சேத்து விட்டுட்டா. அப்பப்ப போய் பாத்துக்குவா, தேவையானத வாங்கிக் கொடுப்பா. ஒரு வருசம் கடந்து ஒரு நாள் அம்மாவும் இறந்துட்டாங்க.

அம்மா இறந்த பிறகு, அக்கா பையன் திருச்சி ஆஸ்டலிலும், இவள் சென்னையிலுமாக இரண்டு வருசம் வாழ்க்கை ஓடி விட்டது. சமீபத்தில் ஒரு நாள் அவளை பார்க்கப் போயிருந்தேன். இவ்வளவு வலி மிகுந்த வாழ்க்கைக்கிடையிலும் சிரித்த முகத்துடனும் உற்சாகத்துடனும் என்னிடம் பேசினாள்

“இந்த வீட்லதான் வேல பாக்குறியா? இவ்ளோ பெரிய வீடா இருக்கு, நீ தங்குற எடமோ மாடியில இருக்கு. எப்புடி ஒவ்வொரு வேலைக்கும் ரெண்டு மாடி ஏறி ஏறி எறங்குவ. என்னன்ன வேலையெல்லாம் பார்ப்பே’’ என்றேன்.

வள்ளி வேலையை ஒரு பட்டியலாவே சொன்னா. சமையலுக்குக் காய் நறுக்கிக் கொடுப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு துடைப்பது, எல்லா படுக்கை விரிப்பையும் சரி செய்வது, கையால துணி துவைப்பது, வீடு கூட்டி பெருக்குவது, பூஜைக்காக 5 மணி நேரத்துக்கு மேல பூ கட்டுவது, விடியக் காலை எழுந்து எல்லா வாசலுக்கும் கோலம் போடுவது என்று நீண்டு கொண்டே போனது.

வள்ளியின் கணவரின் வேலை ஆபீஸ், கார், கார் பார்க்கிங், வீட்டு வளாகம், தோட்டக் கொல்லை, விலை உயர்ந்த நாய்கள், இதெல்லாம் சுத்தம் செய்வது, பராமரிப்பது. இது போக, வீட்டோடு சேர்ந்தாப் போல இருக்கும் அலுவலக ஊழியர்கள், கார் ஓட்டுனர்கள், என்று பத்து பேருக்கு சமைத்துப் போடுவது.

இருவரும் சேர்ந்து பொதிமாடு போல மாங்கு மாங்குன்னு உழைச்சாலும், எங்க முதலாளி கொடுக்கும் சம்பளமோ இருவருக்கும் சேர்ந்து வெறும் ரூ 6,000 மட்டும்தான்.

“மனசுல இவ்வளவு வலியையும், கவலையையும் வச்சுகிட்டு எப்படீடி ஒன்னால இப்படி பேசி சிரித்த முகத்துடன் இருக்க முடியுது?” என்றேன்.

“அப்புடி பாத்தா நாட்டுல முக்காவாசிப் பேருக்கும் மேல சிரிக்கவே முடியாது. எங்க அக்கா சொல்லுவா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்றதுக்கு செத்தர்லாம்னு தோணும். ஆனா என் ப்ரண்டு பட்ற வேதனைய பாத்தா நாம மேலுன்னு மனச தேத்திக்குவேன்னுவா’. சாவறப்ப படுக்கையில கூட இதையேதான் சொன்னா. எனக்கு வாழ்க்கை மேல ஒரு சலிப்புத் தோணுனப்ப, அக்கா சொல்லிட்டு இருந்தாளேன்னு, அக்கா ஃப்ரண்டு வீட்டுக்கு கிளம்பி போனேன். ஒரு பகலும் இரவும் சேந்தாப் போல இருந்தேன். அறுபது வயதில் வாழவேண்டிய வாழ்க்கையை இருவத்தி அஞ்சு வயசுல வாழ்ந்துட்டு இருந்தா அந்த அக்கா. அக்கா சொன்னது உண்மைதாங்கறத புரிஞ்சுகிட்டேன்.

எல்லாருமே நம்மள போலத்தான் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம அரைகுறை அவல வாழ்க்கைதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஏழையா பொறந்துட்டா ஊர் ஒலகத்துல இந்த நிலைதான் விதிக்கப்பட்டதா இருக்கு. என்ன செய்யறது. மத்தவங்க படற கஷ்டத்துக்கு நாம எவ்வளவோ மேலுன்னு நெனச்சுகிட்டு ஒருத்தர ஒருத்தர் பாத்து மனச தேத்திக்கிட்டு வாழ வேண்டியதுதான். இப்படித்தான் பல பேரோட பொழப்பு இருக்கு. இந்த மாதிரி கஷ்டமெல்லாம் நம்மள போல சாதாரண மக்களுக்கு இருக்குங்கறதும், அதோடு போராடிதான் வாழ்றாங்கங்கறது தான் உண்மை.

கைக்கொழந்தைய வச்சிருந்ததால ஒரு வீட்டோட தங்கி வேலை பாக்க வேண்டியதாப் போச்சு. அக்கா பையனையும் கூட வச்சுப் பாத்துக்க முடியாம இருந்துச்சு. இப்ப எம்பொண்ணுக்கு 5 வயசாச்சு கொஞ்சம் புரிஞ்சுக்குவா. அக்கா பையனையும் அழைச்சுட்டு வந்துட்டா ஒண்ணுக்கொண்ணு தொணையா இருக்கும். எங்க போனாலும் நம்ம கைய ஊணித்தான் கர்ணம் போடணும்ங்கறதுதான் நெலைமென்னு முடிவாகிப் போச்சு. இனிமே ஒருத்தருக்கு அடிமையா வேலை செய்றத விட்டு ஒரு ரோட்டோர கடை வச்சுகிட்டு அக்கா பையனையும் அழைச்சுகிட்டு வந்தரலாம்ன் இருக்கேன்” என்றாள்.

உன்கிட்ட பேசிக்கிட்டே போன் பண்ண மறந்துட்டேன்னு சொல்லிக் கொண்டு அக்கா பையனிடம் பேசுவதற்காக ஆசிரியருக்குப் போன் போட்டு அவனிடம் பேசினாள்.

***

நல்லா இருக்கியாடா முத்து?

நல்லாருக்கேன் சித்தி.

ஏண்டா சரியா சாப்புட மாட்டேங்கிறியா?

புடிக்கல சித்தி.

என்னடா பண்ணுது?

ஒண்ணும் பண்ணல சித்தி.

ஏண்டா வயிறு பசிக்கலயா?

சாப்புட புடிக்கல சித்தி.

கறி, மீனு ஏதும் வேணுமா?

அதெல்லாம் வேண்டாம் சித்தி.

வேறதாச்சும் வேணுமா?

(அழுது கொண்டே), நீ வந்துரு சித்தி. என்னை கூட்டிட்டுப் போ சித்தி.

***

அவள் போனில் மேலும் பேசிக் கொண்டே இருந்தாள். நான், அதற்கு மேல் பொறுக்க முடியாதவளாய் அழுது கொண்டிருந்தேன்.

– வேணி

(உண்மைச் சம்பவம் – பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

வடிவமைப்பிற்காக எடுக்கப்பட்ட ஓவியங்கள் : நன்றி A L Raja