privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கரும்பு விவசாயிக்குத் தூக்கு ! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு!!

கரும்பு விவசாயிக்குத் தூக்கு ! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு!!

-

றுபது வயதான வித்தல் அராபவி, கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி. ஐந்து ஏக்கர் குத்தகை நிலத்தில் கரும்பு பயிரிட்டு, 120 டன் கரும்பை நிரானி சர்க்கரை ஆலை என்ற தனியார் ஆலைக்கு விற்றார். சென்ற ஆண்டு விற்ற கரும்புக்கு ஆலை முதலாளி இதுவரை பணம் தராத காரணத்தால், குத்தகைப் பணம் கொடுக்க முடியவில்லை. சோற்றுக்கும் வழியில்லை. ஆலை முதலாளிகளின் கையாளாகச் செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அவர், உணர்ச்சி வேகத்தில் முதலமைச்சரை ‘கெட்ட வார்த்தைகளால்’ ஏசத்தொடங்கினார். உடனே அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கிச் சமாதானப் படுத்தினார்கள் சக விவசாயிகள். ஆத்திரத்தில் குமுறியபடியே அமர்ந்திருந்த அந்த விவசாயி, கையில் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

வித்தல் அராபவி
120 டன் கரும்புக்குப் பணம் தராமல் நிரானி சர்க்கரை ஆலை ஏய்த்து வந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷமருந்திய விவசாயி வித்தல் அராபவி (வட்டத்துக்குள்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் இறந்து போனார்.

உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சத்பால் சிங் என்ற கரும்பு விவசாயிக்கு குலாரியா சர்க்கரை ஆலை என்ற தனியார் ஆலை, சென்ற ஆண்டு விற்ற கரும்புக்கு இதுவரை பணம் தரவில்லை. வங்கிகளுக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கும் 2.5 இலட்சம் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத காரணத்தால் தூக்கிலிட்டுக் கொண்டார் அந்த விவசாயி. ஆத்திரம் கொண்ட விவசாயிகள் அந்தக் கரும்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தினர்.

நவம்பர் மாதம் நடைபெற்ற இத்தகைய தற்கொலைகள் கரும்பு விவசாயிகளின் துயரத்தைக் கூறுவதற்கான சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. 2012-ஆம் ஆண்டு நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு இதுவரை தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் கொடுக்காமல் வைத்திருக்கும் நிலுவை 12,700 கோடி ரூபாய். கரும்பு என்பது நெல், கோதுமை போன்ற தானியங்களைப் போலன்றி, ஒரு ஆண்டுப் பயிர். கந்து வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்து, ஓராண்டு முழுவதும் உழைத்து உருவாக்கிய கரும்பை வாங்கி உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொண்டு, பணத்தை மட்டும் கொடுக்க மறுக்கும் ஆலை முதலாளிகளை மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை.

பாக்கி வைத்தது மட்டுமல்ல, இந்த ஆண்டு கரும்புக்கு மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள விலை தங்களுக்குக் கட்டுபடியாகாதென்றும் டன்னுக்கு 2250 ரூபாய்க்கு மேல் தரமுடியாதென்றும் கூறி உ.பி., மகாராட்டிரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கதவடைப்பு செய்தன. விளைந்து நிற்கும் கரும்பை வெட்டத் தாமதமானால், ஒவ்வொரு நாளும் கரும்பின் எடையும் சர்க்கரையின் அளவும் குறையுமென்பதால் விவசாயிகள் தங்களிடம் பணிந்துதான் ஆகவேண்டும் என்பது முதலாளிகளின் கணக்கு. இப்படி விவசாயிகளின் கழுத்தில் கத்தியை வைத்து ‘பிளாக்மெயில்’ செய்யும் முதலாளிகளுக்கு 7200 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் அளித்து தாஜா செய்திருக்கிறது மத்திய அரசு.

போலீஸ் தாக்குதல்
கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் – சங்கிலி பகுதி விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயியை மிருகத்தனமாகத் தாக்கும் போலீசு.

வாங்கிய கரும்புக்கு கொள்முதல் தொகையைக் கொடுக்க வேண்டியது முதலாளிகளின் பொறுப்பு. இல்லையென்றால், அரசு அவர்களது சொத்துகளை ஜப்தி செய்து விவசாயிகளின் கடனை அடைத்திருக்க வேண்டும். அல்லது விவசாயிகளுக்குரிய தொகையை அரசு கொடுத்துவிட்டு, முதலாளிகளிடம் அதனை வசூலிக்கத் திட்டமிட்டிருக்க வேண்டும். மாறாக, பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் மக்களின் சேமிப்பை முதலாளிகளுக்கு வாரிக் கொடுத்து, அதற்குரிய 12 சதவீத வட்டியை மக்கள் வரிப்பணத்திலிருந்து கட்டுவதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது அரசு. ஐந்து ஆண்டுகளுக்குள் முதலாளிகள் கடனைத் திருப்பித் தரவேண்டும் என்றும், முதல் இரண்டாண்டுகள் கொடுக்கா விட்டால் பரவாயில்லை என்றும் சலுகை வேறு.

இது மட்டுமின்றி, பெட்ரோல் பயன்பாட்டில் எத்தனால் அளவை 5% லிருந்து 10% வீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற கரும்பாலை முதலாளிகளின் நீண்டநாள் கோரிக்கையையும் தற்போது அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. புவி வெப்பமடைதலைக் காரணங்காட்டி நாட்டின் உணவு மற்றும் நன்னீர் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டையும், கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றுவது என்ற பெயரில் அரசு திணித்து விட்டது. ஒரு ஏக்கர் கரும்பு விளைச்சலுக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால், பெட்ரோல் பயன்பாட்டில் எத்தனால் அளவை அதிகரித்தன் மூலம் தண்ணீரை எரிபொருளாக்கும் ஏகாதிபத்திய சதியையையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது அரசு.

“கொள்முதல் பாக்கி வரவில்லை, கரும்புக்கு நியாய விலை கிடைக்கவில்லை” என்று போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இந்த மத்திய-மாநில அரசுகள்தான், கரும்பு விவசாயிகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஒரு “பலநோக்கு சதித் திட்டத்தை” நிறைவேற்றியுள்ளன.

தாங்கள் நட்டத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதாக சர்க்கரை ஆலை முதலாளிகள் கூறுவது உண்மையா? கரும்பில் உள்ள சர்க்கரைச் சத்தின் அளவை மட்டும் கணக்கிட்டுத்தான் கரும்பின் விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால், ஒரு டன் கரும்பிலிருந்து 100 கிலோ சர்க்கரை, 150 யூனிட் மின்சாரம், 35 லிட்டர் எரிசாராயம் மற்றும் மொலாசஸ், எத்தனால் உள்ளிட்ட பல உப பொருட்களை உற்பத்தி செய்வதுடன், கடைசியாக எஞ்சியிருக்கும் கரும்புச்சக்கை காகிதத் தயாரிப்புக்கும் விற்கப்படுகிறது. ஒருடன் கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்கிறார் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டி.என்.பிரகாஷ்.

ரயில் மறியல் போராட்டம்
கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் – சங்கிலி பகுதி விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டம்.

ஒரு டன் கரும்புக்கு 3000 ரூபாய் வேண்டும் என்பதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை. இந்தத் தொகையில் 15% மட்டுமே விவசாயிக்கு மிஞ்சும் என்பதையும் எல்லா ஆய்வாளர்களும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், டன்னுக்கு 30,000 ரூபாய் ஈட்டும் முதலாளிகள், விவசாயிக்கு 2250 ரூபாய்க்கு மேல் தரமுடியாது என்கிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் ஆதார விலையோ 2100 ரூபாய்தான். இதற்கு மேல், முதலாளிகளின் சார்பாக மாநில அரசுகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து டன்னுக்கு 400, 500 என்று விவசாயிகளுக்கு “போட்டு”க் கொடுக்கின்றன. “டன்னுக்கு 2500 ரூபாய் கொடு! இல்லையேல் ராஜினாமா செய்!” என்று 2011-இல் கருணாநிதியை மிரட்டிய ஜெயலலிதா, உரவிலை 2,3 மடங்கு உயர்ந்துவிட்ட சூழலில் டன்னுக்கு 450 ரூபாயும் வண்டிக்கூலி 100 ரூபாயும் சேர்த்துக் கொடுத்ததையே சாதனையாகப் பீற்றுகிறார்.

ஒரு டன் கரும்பிலிருந்து முதலாளிகள் ஈட்டும் வருவாய் என்ன என்பது அரசுக்குத் தெரியும். ஒரு டன் கரும்பிலிருந்து முதலாளிகள் அடையும் வருவாயைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் கரும்பிற்கான ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையைத் திட்டமிட்டே புறக்கணிக்கும் அரசு, சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ஏற்றுமதிக்கான மானியம் வழங்குகிறது. வாங்குகின்ற கரும்பின் மீது விதிக்கப்படும் 5% வரியை கர்நாடக அரசு ரத்து செய்திருக்கிறது. வட்டியில்லாக் கடன் வழங்குகிறது. உற்பத்தி செய்யும் சர்க்கரையில் 10 விழுக்காட்டை லெவி சர்க்கரையாக (ரேசன் விநியோகத்துக்காக) அரசுக்குத் தருவதை ஈடு செய்வதற்காக ஆலை முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தொகையை 2600 கோடியிலிருந்து 5200 கோடி ரூபாயாக அரசு உயர்த்தியிருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் முதலாளிகள் திருப்தியடைவதில்லை. டன்னுக்கு 2000 ரூபாய் கொடுத்து விட்டு, 2400 ரூபாய் பெற்றுக் கொண்டதாகக் கையெழுத்து வாங்கிக் கொள்வதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கர்நாடக விவசாயிகள். ஒப்புக்கொள்ள மறுத்தால், கட்டிங் ஆர்டர் கொடுக்காமல் கரும்பைக் காயவிடுகிறார்கள். எடை மேடையில் 15% வரைக் குறைத்து தில்லுமுல்லு செய்கிறார்கள் என்பதெல்லாம் விவசாயிகள் கூறும் குற்றச்சாட்டுகள்.

தஞ்சை ஆர்ப்பாட்டம்
கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தவும் நிலுவையை உடனே வழங்கவும் கோரி தஞ்சையில் கரும்பு விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நட்டம் என்று சொல்லி விவசாயிகளுக்குக் கொள்முதல் பாக்கியைத் தராமல் தற்கொலைக்குத் தள்ளும் ஆலைகளின் ஆண்டுக்கணக்கு இலாபத்தைக் காட்டுகிறது. பங்கு விலைகள் உயர்கின்றன. ஆலை முதலாளிகளின் சொத்தும் பெருகிய வண்ணம் இருக்கிறது.

ஆனால், சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்து விட்டதாகவும், உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்க சர்க்கரை இறக்குமதியைத் தடைசெய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள் சர்க்கரை முதலாளிகள். இங்கே உற்பத்தியாகும் சர்க்கரையில் பெரும்பகுதி உள்நாட்டில்தான் நுகரப்படுகிறது என்பதால் இது பொய். மேலும், வெளிநாட்டிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்பவர்கள் கோக், பெப்சி, காட்பரீஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள். இறக்குமதிகள் மீது தடை விதிக்கக் கூடாதென்று காட் ஒப்பந்தம் கூறுவதால், இறக்குமதியின் மீது அரசு சிறிய அளவு வரி விதிக்கலாமேயன்றி, அதனைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை.

எனவே, முதலாளிகள் தங்களுடைய இலாபவிகிதத்தை அதிகரிக்க கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைக்கிறார்கள். உள்நாட்டில் ரேசன் கடையில் சர்க்கரை விநியோகிப்பதற்காக ஆலைகளிடம் லெவி சர்க்கரை கொள்முதல் செய்வது ‘உள்நாட்டு சுதந்திரச் சந்தையில்’ தலையிடும் நடவடிக்கை என்பதால், அதனை அரசு நிறுத்த வேண்டும். காட் ஒப்பந்தம் உருவாக்கியிருக்கும் ‘சர்வதேச சுதந்திரச் சந்தையில்’ சர்க்கரை விலை அதிகமாக இருக்கும்போது தடையின்றி ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். குறைவாக இருக்கும்போது மானியம் கொடுத்து தங்களைக் காப்பாற்ற வேண்டும்” – இதுதான் சர்க்கரை முதலாளிகளின் கோரிக்கை.

“ரொட்டியின் இருபுறமும் வெண்ணெயைத் தடவச் சொல்லும் பேர்வழிகள்” என்று பேராசைக்காரர்களைக் கேலி செய்யும் ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. சர்க்கரை ஆலை முதலாளிகளோ தங்கள் ரொட்டியை வெண்ணையில் முக்கி எடுக்கச் சோல்கிறார்கள். அப்படி முக்கி எடுப்பதற்கான பரிந்துரைகளால் நிரம்பி வழிவதுதான், சர்க்கரை தொழில் தொடர்பான ரங்கராஜன் கமிட்டி அறிக்கை.

இப்படி ஒரு அப்பட்டமான பகற்கொள்ளை சர்வகட்சி ஆதரவுடன் தொடர்வதற்குத் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் மட்டுமின்றி வேறொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. மகாராட்டிரா, உ.பி., கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சர்க்கரை ஆலை முதலாளிகள் பலரும் சர்வகட்சி அரசியல் பிரமுகர்களாக இருப்பதுதான். சரத் பவார், நிதின் கட்கரி, அஜித் சிங் போன்றோரிலிருந்து முன்னாள் அரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் வரை அனைவரும் இந்த சர்க்கரை மாஃபியாவின் அங்கத்தினர்கள். இவர்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைவர்களாக இருந்து, அவற்றைத் திட்டமிட்டே நட்டத்தில் ஆழ்த்தி, பின்னர் அவற்றைத் தனியார்மயமாக்கித் தாங்களே விழுங்கிக் கொண்டவர்கள். சரத்பவாருக்குச் சொந்தமான 10 ஆலைகளில் 7 ஆலைகள் நட்டக்கணக்குக் காட்டி கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவை.

இந்தியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளில் பெரும்பாலானவை சுமார் 50 முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மகாராஷ்டிரா, உ.பி., போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு சர்க்கரை ஆலையும் தனது பிரதிதியாக ஒரு எம்.எல்.ஏ. வை வைத்திருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்குத்தான் சர்வகட்சி அரசாங்கங்களும் சேவை செய்கின்றன என்ற போதிலும், சர்க்கரை ஆலை முதலாளிகளைப் பொருத்தவரை, அவர்கள் காங்கிரசு, பா.ஜ.க., தேசியவாத காங்கிரசு, சிவசேனா உள்ளிட்ட எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இக்கட்சிகளைச் சேர்ந்த இந்த மாஃபியாவின் கையில்தான் மத்திய-மாநில அரசாங்கங்களே இருக்கின்றன.

தனியார்மயம் – தாராளமயம் என்றழைக்கப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள் விவசாயிகளின் ரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றன என்பதற்கும், இந்தக் கொள்கையின் மூலம் ஓட்டுப்பொறுக்கிகள் நேரடியாகவே எப்படி ஆதாயமடைகின்றனர் என்பதற்கும் கரும்பு விவசாயிகளின் துயரம் நேரடிச் சான்று. ஓட்டுச்சீட்டு அரசியல் மூலம் தங்களுக்குரிய நியாயத்தை விவசாயிகள் ஒருபோதும் பெற முடியாது என்பதற்கும் இது இன்னொரு சிறந்த நிரூபணம்.

– கதிர்
__________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

__________________________________