privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் !

அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் !

-

ந்தியாவின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த 15 மாதங்களில் ரூ 2.1 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை புதுப்பிக்க உள்ளன. அதாவது, அடுத்த 15 மாதங்களில் இந்நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடன்களின் காலக் கெடு முடிவுக்கு வருகின்றது, அந்தக் கடன்களுக்கு மாற்றாக புதிய கடன்களை வங்கிகள் கொடுக்கப் போகின்றன. காலாவதியாகப் போகின்ற இந்த கடன்களின் மதிப்பு 2013-ம் ஆண்டின் இறுதியில் இந்திய வங்கிகளின் நிகர மதிப்பில் 29 சதவீதம் ஆகும். இந்தத் தகவல்கள் ஃபிட்ச் குழுமத்தைச் சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

கடன்இந்த பட்டியலில் பொதுத் துறை நிறுவனங்களோ, நிதி நிறுவனங்களோ இல்லை. இவை அனைத்தும் உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு துறையில் செயல்படும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள். தாராளவாத ஆதரவாளர்களால் வியந்து போற்றப்படும் தனியார் துறையின் செயல்திறன் என்பது மீண்டும் மீண்டும் வங்கிப் பணத்தை ஆட்டையைப் போடுவதில்தான் அடங்கியிருக்கிறது. இப்படித்தான் இவர்கள் தொழில் செய்து நாட்டையே முன்னேற்றி வருகிறார்களாம்!

மொத்தக் கடன் தொகையில் சுமார் 24% கடன்களை வைத்திருக்கும் 20 கார்ப்பரேட்டு நிறுவனங்கள், மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டிய அளவுக்கு நலிந்து போய் உள்ளன. ஏற்கனவே கடன் கட்டத் தவறியவர்கள் பட்டியலில் உள்ளன. வங்கிகளின் நிகர மதிப்பில் சுமார் 5% கடன்களை வைத்திருக்கும் இந்த நிறுவனங்கள் தமது மறுசீரமைப்பை முடிக்கும் வரையில் அந்தக் கடன் தொகைகளை வங்கிகள் மறந்து விட வேண்டியதுதான்.

இதற்கு மேல், 26% கடன்களை வாங்கியிருக்கும் 20 கார்ப்பரேட்டுகளின் மோசமான நிதி நிலைமையும், குறைவான சொத்து மதிப்பும் இப்போதைய நெருக்கடியான சந்தை நிலைமைகளில் கடன் கொடுக்க தகுதியில்லாதவையாக அவற்றை மாற்றி உள்ளன. இருந்தும் இவற்றிற்கு புதிய கடன் வழங்கா விட்டால் அவை மறுசீரமைப்பு தேவைப்படும் நிலைக்குப் போய் விடலாம். அதனால், இந்த நிறுவனங்களுக்கும் கொடுத்த காசை வர வேண்டியதாக காட்டுவதற்கே கூடுதல் கடன் கொடுத்தே தீர வேண்டிய நிலை வங்கிகளுக்கு.

அதாவது, மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன. அவர்களது நிறுவனங்களை மறுசீரமைக்க, அல்லது மறுகடன் வழங்குவதற்கு வங்கிக் கடன்கள் அல்லது வரிச்சலுகைகள் என்ற பெயரில் மக்கள் மீது இன்னும் சுமை ஏற்றப்படும்.

பணம்முன்னணி 100 கார்ப்பரேட்டுகளில் 26 மட்டுமே வங்கிகளின் விதிமுறைகளின்படி மிதமான வட்டி வீதத்தில் புதிய கடன் வாங்கும் நிலையில் உள்ளன.

இந்த கார்ப்பரேட்டுகளின் நிதிநிலைமை எப்படி இருந்தாலும் வங்கிகளுக்கு வேறு வழியில்லை, இந்திய முதலாளிகளின் பொருளாதாரத்தைக் காப்பாற்றவும், தம்மையே காப்பாற்றிக் கொள்ளவும் எப்படியாவது முயற்சித்து கடன் கொடுத்து இந்த நிறுவனங்களை பாதுகாத்தே தீர வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.

கல்விக் கடன் கட்டாத மாணவர்களின் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியிடப்படுவது போல இந்த முதலாளிகளின் படங்கள் வெளியிடப்படப் போவதில்லை. வாங்கிய கடனை கட்ட முடியாத விவசாயிகளைப் போல இவர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதும் இல்லை.

வங்கிக் கடன்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை ஆட்டையைப் போட்டு தொழில் செய்யும் இம்முதலாளிகள் கடனை திரும்பக் கட்டா விட்டாலும் தாம் ஏற்கனவே குவித்து விட்ட சொத்து, சுகங்களை இழந்து விடப் போவதில்லை. வங்கிகளும் அரசும் முடிந்த அளவு புதிய கடன்களும், வரிச் சலுகைகளும் கொடுத்து அவர்களை காப்பாற்றப் போகின்றன. தொழில் செய்வதன் லாபங்களும் ஆதாயங்களும் தனியாருக்கு, அதில் ஏறபடும் நஷ்டங்களும் இழப்புகளும் பொது மக்களுக்கு என்பதுதான் தனியார் மயத்தின் தாரக மந்திரம்.

மேலும் படிக்க