privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபா.ஜ.க.விடம் பம்மும் தமிழினவாதிகள் !

பா.ஜ.க.விடம் பம்மும் தமிழினவாதிகள் !

-

தேர்தல் நெருங்க, நெருங்க காங்கிரசுக்கு எதிரான எதிர்குரல்களும், போராட்டங்களும் அதிகரிக்கின்றன. நேற்று (26.02.2014) கூட சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராடியிருக்கிறது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் எனும் இயக்கம். அவர்கள்  மட்டுமில்லை… ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து பலரும் காங்கிரஸை அம்பலப்படுத்தி வருகின்றனர். இவை அரசியல் ரீதியாக இல்லை என்றாலும் அப்பாவிகள் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கயவாளிகள் மீதான வெறுப்பில் நடைபெறுகின்றனது.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராடிய நாம் தமிழர் கட்சி கமலாலயத்திற்கு செல்லாத காரணம் என்ன?

இந்த எதிர்ப்பு சரி என்றாலும் இது காங்கிரசு மட்டுமே தொடர்பான ஒன்றல்ல. ஒட்டு மொத்தமாக இந்திய ஆளும் வர்க்கம், அதற்கு உட்பட்ட ஊடகங்கள், ஆம் ஆத்மி வரை ராஜீவ் கொலை வழக்கில் அநீதியாக தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என்ற கருத்தைத்தான் கொண்டிருக்கின்றனர்.

காங்கிரசுக்கு நிகராக ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எல்லா எதிர்ப்பு வேலைகள் செய்திருந்தாலும் ஜெயலலிதாவை தமிழ் அமைப்புகள் எதிர்ப்பதில்லை. பண்ருட்டி வேல்முருகன் நடத்திய சேலம் மாநாட்டில் பிரபாகரன் படம் வைத்து பின்னர் போலீசு மிரட்டியதும் எடுத்து விட்டார்கள். அதிமுக கூட்டணிதானே அம்மா கண்டு கொள்ளமாட்டார் என்று நினைத்து பின்னர் கண்டு கொண்டாலும் அதை கண்டிக்காமல் மேடையில் புரட்சித் தலைவி என்று புகழ்பாடினார் வேல் முருகன். இது சீமான், நெடுமாறன், வைகோ முதலான தமிழினவாதிகளுக்கும் பொருந்தும்.

ஜெயலலிதாவின் விடுதலை நாடகத்தின் கடிவாளம் மத்தியில் காங்கிரசு வசம் இருப்பது தெரிந்தும் அவர் நடத்திய நாடகத்திற்கு கைதட்டாதார் யாருமில்லை. இப்போது காங்கிரசு அரசு இதை கவுரவப் பிரச்சினையாக கருதிக் கொண்டு கொலை வெறியுடன் நீதிமன்றத்தில் பேசுகிறது. ஜெயாவின் தமிழ் உணர்வு உண்மையென்றால் இதையெல்லாம் எதிர்த்து பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டுமென்று எந்த தமிழின அமைப்புகளும் கோரவில்லை.

அப்சல் குருவை தூக்கில் போட துடித்த பாஜக இதில் ஏன் உடன் பேசவில்லை என்று கபில் சிபில் போட்டு வாங்க களத்தில் குதித்த பாஜக, தீவிரவாதி ஈவிகேஸ் இளங்கோவனை விட கடுமையாக டெல்லி ஊடகங்களில் பேசுகிறது. ஏனெனில் நிரபராதியான அப்சல் குருவை தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்று பாஜக சாமியாடியதைத் தொடர்ந்து அதன் இந்துமதவெறி வாக்கு வங்கியை குறிவைத்து காங்கிரசு அரசு இதை சதித்தனமாகவும், அவசரமாகவும் நிறைவேற்றியது. பதிலுக்கு ராஜிவ் கொலை வழக்கில் தனது பிராயச்சித்தத்தை நிறைவேற்றி காங்கிரசின் இந்தி பேசும் தேசபக்தி வங்கியை பாஜக கவர நினைக்கிறது.

நிலைமை இப்படி இருக்க ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர தமிழினவாதிகள் மறந்தும் பா.ஜ.க.வை கண்டிப்பது இல்லை. அதுகுறித்துப் பேசுவது கூட இல்லை. ஆனால் மூன்று பேரை தூக்கிலிடுவதில் காங்கிரஸ் காட்டும் அதே அளவுக்கான முனைப்பை பாரதிய ஜனதாவும் காட்டி வருகிறது என்பதை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. அதனால் இரண்டு குற்றவாளிகளில் ஒன்றான காங்கிரசை மட்டும் கண்டித்து விட்டு பாரதிய ஜனதாவை தப்பிக்க விடுகின்றனர்.

“ஈழ இனப் படுகொலையில் நேரடியாக ஈடுபட்டது காங்கிரஸ் அரசு. ஆகவே காங்கிரஸ்தான் நமது முதன்மை இலக்கு. எதிர்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா அதைக் கண்டிக்கவில்லை என்றாலும், அந்தக் குற்றத்தில் பா.ஜ.க.வின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவு” என்று இதற்கு இழுத்துப் பிடித்துக் காரணம் சொல்கின்றனர். ‘2009 தேர்தலின் போதுதான் முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்தது; அதனால் அப்போது அவ்வாறு பேசினார்கள்’ என்றில்லை. வாஜ்பாய் காலத்திலிருந்தே தமிழினவாதிகள் அந்தப் புள்ளியில் இருந்து இம்மியும் விலகவில்லை. காங்கிரஸ் பேரை சொன்ன உடனேயே ‘வைப்ரேட் மோடு’க்கு போகும் இவர்கள், அந்தக் குற்றத்தின் கூட்டுப் பங்காளியான பா.ஜ.க.வின் பேரைச் சொன்னால் ‘சைலண்ட் மோடு’க்கு மாறுவது ஏன்?

இந்தியாவின் மேலாதிக்க அரசியலிலேயே ஈழத்தின் வாழ்வு சிக்குண்டிருக்கிறது என்பதை இவர்கள் எந்தக் காலத்திலும் உணருவதில்லை. தங்களைப் புரிந்து கொண்ட அதிகாரிகள், கட்சி, அரசு இருந்தால் ஈழத்தை சாதித்து விடலாம் என்ற பிரமையிலேயே எப்போதும் இருக்கின்றனர். புலிகளும் அப்படித்தான் இருந்தனர் என்பது தமிழினவாதிகளின் புரிதலோடு தொடர்புடைய ஒன்று. இதுதான் இவர்கள் பாஜக-வை சந்தர்ப்பவாதமாக பார்ப்பதன் பின்னணி.

இத்தனைக்கும் காங்கிரஸ் இன்று தமிழகத்தில் செத்த பாம்பு. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க, ஓய்வு நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி கூட தயாரில்லை. இந்த நேரம் பார்த்து, எழுவர் விடுதலை விஷயம் தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளாக உள்ளதால், அதை வைத்து அயோக்கியத்தனமான முறையில், ராஜீவ் கொலையோடு இறந்தவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா என்று இழிவாக அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி தன்னை செய்தியில் அடிபடும்படி பார்த்துக் கொள்கிறது. மேலும் சோனியா, ராகுல் காந்தி முன்னே தமது அடிமைத்தனத்தை காட்டவேண்டும் என்றும் இந்த கதர் அடிமைகள் துடிக்கிறார்கள்.

சத்தியமூர்த்தி பவன் வாசலில் சவுண்ட் கொடுக்கும் சீமானுக்கு கமலாலயம் முகவரி தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருக்கும் வைகோவிற்கு அவர்கள் எழுவர் விடுதலையை வன்மம் கொண்டு எதிர்ப்பது தெரியவில்லை. பொன்.இராதா கிருஷ்ணனை அழைத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அழகு பார்த்த பழ.நெடுமாறனுக்கு பாஜகவின் இரட்டை வேடம் தெரியவில்லை.

ஆனால் இந்துத்துவக் கும்பல் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது. அவர்களின் டெல்லி தலைமை மூவர் தூக்கை ஆதரித்தும் ஏழு பேர் விடுதலையை எதிர்த்தும் தொலைக்காட்சிகளில் அர்னாப்பிற்கும், காங்கிரசுக்கும் போட்டியாக கருத்துச் சொல்லி வருகின்றனர். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனோ, ‘மூன்று பேரைத் தூக்கிலிடக் கூடாது’ என்று அப்பட்டமான பொய்யை வெட்கமின்றி சொல்கிறார், நடிக்கிறார்.

யாராவது பாஜக குறித்து கேட்டால், ‘அதான் பொன்னார் சொல்லி விட்டாரே’ என்று சொல்லிவிடலாம் இல்லையா… இப்படிப் பா.ஜ.க.வினர் தமது பாசிசக் கருத்துக்களை தேவைக்கேற்ப மேடைக்கேற்ப உரக்கப் பேசியோ, அமைதி காத்தோ நடிக்கின்றனர். நெருக்கிப் பிடித்தால் மத்தியில் பேசப்படும் கருத்துதான் தங்களது கருத்து என்றும் அதை வெளிப்படுத்தும் விதம் வேறாக இருக்கலாம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இந்துமதவெறி போல தமிழின வெறுப்பை அப்பட்டமாக காட்ட முடியவில்லையே என்பது இந்த பார்ப்பன பாசிச கட்சியின் சிக்கல்.

மோடி
பாரதிய ஜனதா என்ற இந்துவெறிக் கட்சி இந்தியாவின் எந்த தேசிய இனங்களையும், மொழிகளையும் அங்கீகரிப்பது இல்லை.

பாரதிய ஜனதா என்ற இந்துவெறிக் கட்சி இந்தியாவின் எந்த தேசிய இனங்களையும், மொழிகளையும் அங்கீகரிப்பது இல்லை. அவர்கள் தெற்கே இலங்கையையும், வடக்கே ஆப்கானிஸ்தானையும் அகண்ட பாரதத்தின் வரைபடத்திற்குள் கொண்டு வருகிறார்கள். திருச்சி பொதுக்கூட்டத்தில் இதை வெளிப்படையாக சொன்ன மோடி மொழிவாரி மாநிலங்களையே அடியோடு எதிர்த்தார். மொழிப்போர் மரபு கொண்ட வைகோவுக்கு அது பரவாயில்லை போலும். தோற்றாலும் நாலைந்து தொகுதிகளில் நிற்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை விட மொழிப் போர் உரிமை ஒன்றும் அவருக்கு மதிப்பு வாய்ந்த ஒன்றல்ல.

ஆனாலும் மோடி மேலும் பல வாய்ப்புகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறார். கோவாவுக்குப் போனால் கொங்கணியில் சில நிமிடங்கள் பேசுவது, ஆந்திராவில் தெலுங்கில், மேற்கு வங்கத்தில் பெங்காலியில் என்று எந்த ஊருக்குப் போகிறாரோ அந்த ஊரின் மொழியில் ஓரிரு நிமிடங்கள் பேசி கைத் தட்டல் வாங்குகிறார் மோடி. அது மட்டுமல்ல… அந்தந்த தேசிய இனங்களின் கலாச்சார உடையையும் அணிந்துகொண்டு போஸ் கொடுக்கிறார். தேசிய இனங்களின் இருப்பையே ஏற்றுக்கொள்ளாத இந்துதேசியத்தின் முகத்தை அப்படியே உயிருடன் வைத்துக்கொண்டே, தேசிய இனங்களின் அடையாளங்களை வைத்து ஆதாயம் தேடவும் பார்க்கிறார்.

அதாவது அடையாளம் என்ற முறையில் தேசிய இனங்களை ஆதரிப்பது, அரசியல் என்ற முறையில் தேசிய இனங்களை ஒடுக்குவது இதுதான் இந்துமதவெறி பாஜக மட்டுமல்ல, காங்கிரசின் தந்திரமும் கூட.

பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகின்றனர். அம்மா மெஸ், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர் போன்றவைத் தமிழ்நாட்டில் பிக்&அப் ஆவதைப் பார்த்து ஆசைப்பட்டோ என்னவோ… நாடு முழுவதும் நமோ டீ கடை, நமோ மீன் கடை என்று கிளம்பிவிட்டனர். அசைவ உணவுகளின் வாசனையைக் கூட ஏற்றுக்கொள்ளாத இந்த பார்ப்பனக் கூட்டம் மீன் கடையில் நின்றபடி போஸ் கொடுக்கிறது. இல.கணேசன் என்ற தஞ்சாவூர் பார்ப்பான், கையில் மீன் பையை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கும் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்தேன். நிச்சயம் கணேசனின் அன்றைய இரவுத் தூக்கம் மீன் கவுச்சியால் நிறைந்திருக்கும். ‘குஜராத் எங்கும் சைவம்தான்’ என்று அதை ஒரு பெருமை போல பீற்றிக்கொள்கிறார்கள். வாக்கு வேண்டும் என்றதும் நமோ மீன்கடை அமைக்கின்றனர்.

அதேபோல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார ஏடான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரிய தருண் விஜய் சில மாதங்களுக்கு முன்பு திடீர் தமிழ்ப் பற்றாளராக மாறினார். ‘‘தமிழின் மேன்மைகளை இத்தனை ஆண்டுகளாக அறியாமல் இருந்து விட்டோமே என்று வெட்கப்படுகிறேன். தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். இதையும் சில அப்பாவி தமிழார்வலர்கள் விவரம் தெரியாமல் கொண்டாடினார்கள்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவக் கும்பலின் தமிழ் வெறுப்பும், பகையும் மிகவும் வெளிப்படையானது. பெரியார் உருவாக்கிய அரசியல் மரபு அவர்களை எளிதில் ஊடுருவ விடாமல் தடுத்து நிற்பதால் உருவான வன்மம் அது. அதனால்தான் கோயிலில் தமிழில் பாடுவதை எதிர்க்கிறார்கள். அதனால்தான் சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதை எதிர்க்கின்றனர். அதனால்தான் பா.ஜ.க.வில் இருக்கும் சுப்பிரமணியன்சாமி, ‘தமிழ் பொறுக்கீஸ்’ என்று வார்த்தைக்கு வார்த்தை வன்மத்துடன் எழுதுகிறார். இப்படி முற்றுமுழுதாக அவர்கள் கரையின் அந்தப் பக்கம் இருந்தாலும் கூட இக்கரையின் மீது அக்கறை கொண்டோராக நடிக்கிறார்கள். தமிழின உணர்வின் வழியாக இந்துத்துவத்தை ஊடுருவ வைக்க முடியுமா என்றுப் பார்க்கின்றனர்.

ராஜ்நாத் சிங்
எழுவர் விடுதலையை ஆதரிக்கும் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தவறானது, நான் அதைப் பற்றி விசாரிக்கிறேன் – ராஜ்நாத்சிங்

இது இத்தோடு முடியவில்லை. கடந்த இரண்டு மூன்று நாட்களில் ராஜ்நாத் சிங்கின் இரண்டு பேட்டிகளை நீங்கள் படித்திருக்கக்கூடும். ஒன்று, ‘குஜராத் வன்முறையில் எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயார்’ என்று ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார். ஆனால் இப்போது வரை மோடியின் வாயில் இருந்து இப்படிப்பட்ட சொற்கள் வரவில்லை. அவர் முஸ்லிம் படுகொலைகளை எதிர்விளைவு என்றுதான் இப்போதும் சொல்கிறார். பெரும்பான்மை இந்து வாக்குகளை ஈர்ப்பதற்கு மோடியை ‘கடப்பாரை இந்து’வாக உலவவிடும் இவர்கள், ராஜ்நாத் சிங்கை மன்னிப்பு கோர வைத்து ‘பெருந்தன்மை இந்து’வாக சித்தரித்து சிறுபான்மை வாக்குகளை கவர முயற்சிக்கின்றனர். இது வாஜ்பாயி சாஃப்ட்டானவர், அத்வானி வயலன்டானவர் எனும் முகமூடி மோசடிக்கு நிகரானது. அடிப்படையில் இந்துமதவெறி ஒன்றுதான் எனும் போது தேவை கருதி அது தனது முகங்களை பல முகமூடிகளாக அலையவிட்டு திசை திருப்புகிறது.

ராஜ்நாத் சிங்கின் மற்றொரு பேட்டி தமிழ் இந்துவில் வெளியானது. “மூவர் தூக்குப் பிரச்னையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அவர்களை தூக்கில் போடக்கூடாது” என்று சொல்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘அவர் அப்படி சொல்லியது எங்களுக்குத் தெரியாது. ஒரு தேசியக் கட்சிக்கு மத்தியில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு இருக்க முடியாது. நான் இதைப்பற்றி விசாரிக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் ராஜ்நாத். அது மட்டுமல்ல… அந்தப் பேட்டியில் மேலும் பல அரியக் கருத்துக்களை உதிர்த்துள்ளார் ராஜ்நாத். கீழ்கண்ட மூன்று கேள்வி பதில்களை கவனியுங்கள்.

இறுதிப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலையைக் கண்டிக்காத நீங்கள், இப்போது காங்கிரஸ் மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏன்?

2009-ல் பா.ஜ.க. என்ன செய்தது என்பதுபற்றி எனக்கு நினைவில்லை. ஆனால், மிகவும் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தை, இலங்கை அரசு இன்னும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அங்கு நடந்த படுகொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பல குறைபாடான உத்திகள் கையாளப்பட்டுள்ளன. இருநாட்டுப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து அவசியம். ஆனால், ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு இதைச் செய்யவில்லை.

இதற்கும் முன்பாக இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என நினைவுக்கு வரவில்லை!

தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?

நோ கமென்ட்ஸ்!

– மிகவும் பச்சையாக பசப்புகிறார் ராஜ்நாத். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமர் பாலம் நினைவிருக்கிறது, 2009 நினைவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்ற பொய்யை நினைவில் வைத்திருக்கும் இவர்கள், உண்மைகளை மட்டும் வசதியாக மறந்துவிடுவது எதனால்? சுஸ்மா சுவராஜிடம் கேட்டால் 2009-ல் என்ன நடந்தது என்பது பற்றி, ராஜபக்சேவிடம் பரிசாக வாங்கிய நெக்லஸை தடவியபடியே பதில் சொல்லக்கூடும்.

2009-ல் நடந்தது நினைவில்லை என்று ராஜ்நாத் சொல்வதன் உண்மையான பொருள், 2002-ல் நடந்ததை நினைவில் கொள்ளாதீர்கள் என்பதுதான். இலங்கை ராஜபக்சே பற்றிப் பேசினால், இந்திய ராஜபக்சேக் குறித்தும் பேச வேண்டியிருக்கும் என்பதால் அவர் கவனமாக ஞாபக மறதியை தேர்வு செய்கிறார். மேலும் காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவும்தான் ராஜபக்சேவின் நண்பர்கள் என்பதை மறுக்க முடியாது அல்லவா!

மீண்டும், மீண்டும் கேட்கப்படும்போது ‘எதுக்குப் பழசை எல்லாம் பேசிக்கிட்டு. இப்போ உள்ளதைப் பேசுங்க’ என்கிறார். வரலாற்றின் நெடியப் பக்கங்களில் குருதி தோய்ந்த காவி வரலாற்றில் அவர்களால் மறக்கப்படிக்கப்பட்ட மறைக்கப்பட்ட படுகொலைகள் எண்ணிலடங்கா. ராஜ்நாத் சிங் இப்படி ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று பச்சையாக பொய் சொல்லி ஏமாற்றுவது கூட பிரச்சினை இல்லை. ஏனெனில் பாசிசமே இத்தகைய ஏமாற்று வேலைகளில்தான் பலம் பெறுகிறது. ஆனால் அதை பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுக் கூட்டணியில் இருக்கும் வைகோ போன்ற தமிழினவாதிகள் அங்கீகரிக்கின்றனர் என்பதுதான் நாம் கவனப்படுத்தி எதிர்க்க வேண்டிய துரோகம்.

போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று இந்த நிமிடம் வரை கேட்கிறார் வைகோ. ஆனால் ராஜ்நாத் ‘நோ கமெண்ட்ஸ்’ என்கிறார். பழசை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்கிறார். இந்த எழவைதானே ராஜபக்சேவும் சொல்கிறார்? ராஜபக்சே சொன்னால் ரத்தம் கொதிக்கும்; ராஜ்நாத் சொன்னால் உள்ளம் இனிக்குமா? இத்தனை கீழ்த்தரமான அரசியலை ஏற்றுக்கொண்டு அதை கொள்கை போல பேசித் திரியும் வைகோ போன்ற ஐந்தாம் படை அரசியல்வாதிகளும், அவர்களுக்கு அரசியல் தரகனாக செயல்படும் தமிழருவி மணியன்களும், அர்ஜன் சம்பத், பொன்னாரை தோளில் சுமக்கும் பழ.நெடுமாறனும் தான் தமிழினத்தின் உண்மையான பிரதிநிதிகள் என்றால் நமக்கு கோபம் வரவேண்டாமா?

இவர்கள் தமிழர் நலன், ஈழத் தமிழர் நலன் என்ற கள்ளப்பெயர்களைச் சூடிக்கொண்டு இந்துவெறியர்களுக்கு பல்லக்குத் தூக்குகின்றனர். சோ ராமசாமியும், இந்து ராமும், சுப்ரமணியன் சாமியும், குருமூர்த்தியும், ராமகோபாலனும், இல.கணேசனும், அர்ஜுன் சம்பத்தும் இதைத்தான் செய்கிறார்கள். அவர்களை தமிழின பகைவர்கள் என்று வரையறுக்கிறோம். என்றால் வைகோ, சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களை தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அடிப்பொடிகள் என்றுதான் அழைக்க வேண்டும்!

–    வழுதி