privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 28/02/2014

ஒரு வரிச் செய்திகள் – 28/02/2014

-

news-23செய்தி: சத்தியமூர்த்தி பவனை தாக்கிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தினார்.

நீதி: தமிழக மக்களால் ‘தடை’ செய்யப்பட்டு ஆவிகளாகச் சுற்றும் காங்கிரஸ் கட்சி, ‘எமதர்மனது நரகத்தில்’ கதறி அழுவதற்கு பதில் சென்னை மாநகரத்தில் புலம்புவது எங்கனம்?
_______

செய்தி: வடகாஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர், சக வீரர்கள் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீதி: காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவம், ஒரு போதும் நிம்மதியாக இருக்க முடியாது.
_______

செய்தி: ”காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டை இருண்ட காலத்திற்கு தள்ளிவிட்டது,” என பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தில் கூறியுள்ளார்.

நீதி: ஆகவே அந்த இருண்ட காலத்திற்கு போட்டியாக காட்டுமிராண்டி காலத்திற்கு கொண்டு செல்ல மோடி உறுதி ஏற்கிறார்.
________

செய்தி: “விளையாட்டு அமைப்புகளில், அரசியல்வாதிகள் பொறுப்பு வகிக்கக் கூடாது” என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “இது முட்டாள்தனமான கருத்து. அரசியல்வாதிகளை கீழானவர்கள் போல் சித்தரிப்பது எந்த விதத்தில் நியாயம்?” – பிரபுல் படேல், மத்திய அமைச்சர், தேசியவாத காங்கிரஸ்.

நீதி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வேலை செய்தது போக ஓய்வு நேரத்தில் மட்டும் விவசாயத் துறை அமைச்சராக வலம் வந்த சரத்பவாரின் கட்சிக்காரர் இப்படித்தானே கேட்பார்?
________

செய்தி: “பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். இதனால் என் மதச்சார்பின்மை தன்மை மறைந்து விடாது. மதச்சார்பின்மை பேசும் கட்சிகளுடன் இணைந்து நான் இது வரை அனுபவித்த சிரமங்கள் போதும்,” என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

நீதி: சொந்த பிழைப்பிற்கு, மதச்சார்பின்மையின் பலனின்மையை விட மதவெறியின் பலன் அதிகம் என்கிறார் இந்த தலித்தியப் போராளி!
_______

செய்தி: லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட டில்லியில் தற்போது எம்.எல்.ஏ.-க்களாக இருக்கும் யாருக்கும் சீட் தரப் போதில்லை என அக்கட்சி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும், இருப்பினும் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதி: எனில் கேஜ்ரிவால் தில்லி எம்.எல்.ஏ இல்லையா? இல்லை மற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சியினர் வற்புறுத்தவில்லையா? இல்லை கட்சிக்கு ஒரு நீதி, தலைவனுக்கு ஒரு நீதியா?
_______

செய்தி: தேமுதிக திருத்தணி எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன், பாமக அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசு ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

நீதி: சொல்லாமல், கொள்ளாமல் சொந்தக் கட்சி எம்.எல்.ஏக்கள் அதிமுகவிற்கு அணிமாறும் சோகத்தை கொண்டாட இனி ‘கேப்டனுக்கு’ டாக்டரைய்யா கம்பெனி கொடுப்பார். ஆனால் அந்த துக்க சந்திப்பில் ‘கேப்டன்’ பீருடனும், டாக்டர் மோருடனும் மட்டுமே கொண்டாடுவார்கள்.
________

செய்தி: வெனிசூலாவில் நிகழ்ந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மறுத்தார்.

நீதி: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, அமெரிக்கா கொழிப்பதற்கு ஆக்கிரமிப்பை விடாது என்பது ஊரறிந்த விசயமாயிற்றே! ஒத்துக் கொண்டதற்கு நன்றி கெர்ரி.
_______

செய்தி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை “ஆண்மையில்லாதவர்” என விமர்சித்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு பா.ஜ. தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நீதி: மதவெறி கொலைகளை வீரமாக கருதும் கோழைகளுக்கு சிட்டுக்குருவி லேகியம் அவமானமாக இருப்பது பொருத்தமானதே!
_______

செய்தி: இந்தியாவில் சவுதி முதலீடுகளை அதிகரிக்கச் செய்ய, இங்கு நிறுவன வரி விதிப்பு விதிமுறைகளைத் தளத்த வேண்டும் என்று சவுதி வர்த்தகம் மற்றும் தொழிலக அமைச்சர் தௌஃபிக் அல் ரபியா, புதுதில்லி – ஃபிக்கி கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

நீதி: உள்ளூரில் ஜனநாயகத்தை மறுக்க ஷரியத்தை இறுக்கும் சவுதி, இந்தியாவில் பணத்தை அள்ள முதலாளித்துவ தாராளமயத்தை கோருகிறது. ஒடுக்குவதற்கு மதம், சுரண்டுவதற்கு முதலாளித்துவம் – இதுதான் சவுதி அரச குடும்பத்தின் மந்திரம்.
______

செய்தி:  2002-ல் மோடி முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரத்தை ஒட்டி, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பஸ்வான் இப்போது 12 ஆண்டுகள் கழித்து மோடியை பிரதமராக்க மீண்டும் சேர்கிறார்.

நீதி: குஜராத்தில் மட்டும் நடந்த கலவரம் போதாது, மோடியின் தலைமையில் இந்தியா முழுவதும் கலவரம் நடக்க வேண்டும் என்பதே பாஸ்வானின் விலகல் – சேரல் தெரிவிக்கும் உண்மை.
______

செய்தி: தில்லியில், துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து மேலும் ஓராண்டிற்கு வசிக்க ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நீதி: கடந்த ஆண்டு, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு மீதான குற்றம் உறுதிபடுத்தப்பட்டு, சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம் இதை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்து கொண்டு விசாரிக்கும் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம்.
_______

செய்தி: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி முன் உள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மறைக்க உத்திரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதி: பதிலுக்கு ஓ.பி போன்ற ரத்தத்தின் ரத்தங்கள் கிழக்கு திசையில் உதிக்கும் உதய சூரியனை மறைக்க சொல்லி வழக்கு போட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தின் கதி என்ன?
_______

செய்தி:  “பாஜக அகில பாரத தலைவர் திரு.ராஜ்நாத்சிங் அவர்கள் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கோருவதாக கூறியிருப்பது வெட்கக் கேடானது. இந்தக் கருத்தை பாஜக தொண்டர்களே கடுமையாக விமர்சிக்கிறார்கள். இப்படியெல்லாம் தாஜா செய்து வெற்றி பெற்று என்ன செய்ய போகிறார்கள்? இது போன்ற கருத்துக்களால் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படுத்த வேண்டாம் என்பது மக்களின் கருத்து”. – இந்து முன்னணி ராமகோபாலன்.

நீதி: ராஜநாத் சிங்கின் மன்னிப்பை யாரும் நம்பவில்லை என்பதை இராம கோபாலன் நம்பவில்லை. போணியாகாத இந்த வசிஷ்டரின் ஆத்திரம்தான், பார்ப்பனிய இந்து தர்மத்தின் மனசாட்சியான மனு சாஸ்திரம்.
_______

செய்தி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டம் தெரிவித்துள்ளார்.

நீதி: தேவதாசி தடைச் சட்டத்தை எதிர்த்து, பார்ப்பனிய தருமத்திற்கு குரல் கொடுத்த சத்தியமூர்த்தி அய்யர் பெயரிலான பவன் தாக்கப்பட்டால், பார்ப்பனிய இந்து தர்ம காவலர்களுக்கு கோபம் வராமலா போகும்?
_______

செய்தி: பொதுக்கூட்டம், கட்சி நிகழ்ச்சிகளில் தன்னுடைய கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்று தொண்டர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதி: ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், மோடி, விஜயகாந்த், கார்த்திக், பச்சமுத்து போன்ற தலைவர்களுக்கெல்லாம், ஆயிரக்கணக்கில் கட்அவுட் வைக்கப்படும் நாட்டில், காலிஞ்சி உயரத்தில் நாலஞ்சு எண்ணிக்கையில் வைகோவின் கட்அவுட் வைக்கப்பட்டால், புரட்சிப் புயலுக்கு கோபம் வருமா, வேதனை வருமா?
_______

செய்தி: ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் கையெழுத்து மேம்பாட்டுத் திட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

நீதி: கல்வியில் தனியார் மயம், வேலையின்மையில் இரட்டை இலக்கம் என்று மாணவர்களின் தலையெழுத்து தலைகீழான பிறகு கையெழுத்தை மேம்படுத்தி என்ன பயன்?
_______

செய்தி: மகளுக்கு திருமணம் செய்யமுடியாததால், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற குடிநீர் வாரிய ஊழியர் துரை, தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

நீதி: ஓய்வுபெற்ற அரசு ஊழியரே கூட தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடியவில்லை என்பதைத்தான் இந்த நாட்டின் சமூக அமைப்பு சாதித்திருக்கிறது என்றால் சாக வேண்டியது இந்த மக்களா, இந்த சமூக அமைப்பா?
_______