privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநிடோ டானியம் படுகொலை : இந்து - இந்திய தேசியத்தின் இனவெறி !

நிடோ டானியம் படுகொலை : இந்து – இந்திய தேசியத்தின் இனவெறி !

-

ருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் மகனும், கல்லூரி மாணவருமான நிடோ டானியம் தலைநகர் டெல்லியில் இனவெறிபிடித்த பெட்டிக்கடைக்காரர்களால் கடந்த ஜனவரியில் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். டானியத்தின் தலைமுடியலங்காரத்தை ஏளனம் செய்து வம்புக்கு இழுத்து அவர்கள் தாக்கியதில், மறுநாள் அவர் மரணமடைந்துள்ளார்.

    நிடோ டானியம்
நிடோ டானியம்

நிடோ டானியம் கொல்லப்பட்டதை எதிர்த்து அருணாச்சலப் பிரதேச மாணவர்களும் பிற ஜனநாயக சக்திகளும் போராட்டங்களை நடத்திய பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் தானே முன்வந்து இப்படுகொலையை வழக்காகப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன் பின்னரே போலீசார் கொலைக் குற்றவழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

பெட்டிக்கடைக்காரர்களின் கிண்டல்-கேலிக்கு அடிப்படையாக இருந்தது, அம்மாணவரின் மங்கோலிய வர்ண இனத் தோற்றம். திபெத்திய-மங்கோலிய வர்ண இனத்தைச் சேர்ந்த வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களை “சிங்க்கி” (சீன வம்சாவளியினர்), “மோமோ”, சப்பை மூக்கன் என்றெல்லாம் ஏளனம் செய்வது டெல்லியில் சர்வசாதாரணமாக உள்ளது. இம்மக்களது உடை மற்றும் உணவுப் பழக்கங்களை வைத்து வெளிப்படையாகவே கேலி செய்வதும், சீனாவின் கூட்டாளிகள், கைக்கூலிகள், அந்நியர்கள் என்று அவதூறு செய்வதும், போலீசார் கண்டும் காணாமல் இருப்பதும் டெல்லியில் பொதுப்போக்காக உள்ளது.

கடந்த ஜனவரி 29 அன்று டெல்லியில் நடந்த நிடோடானியம் மீதான தாக்குதலை விதிவிலக்கானதாக ஒதுக்கிவிட முடியாது. அதே டெல்லியில், கடந்த பிப்ரவரியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். மணிப்பூரைச் சேர்ந்த சுசப்சிகரண் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மணிப்பூர் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு முன், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ரிச்சர்டு லோயிதம் பெங்களூரிலும், தனா சங்மா குர்கானிலும் கொல்லப்பட்டனர். வடகிழக்கிந்திய மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும் அந்நியர்களாகவும் அவதூறு செய்வதோடு, அவர்கள் மீது இனவெறி, சமூகப் புறக்கணிப்பு, பாலியல் வன்முறைத் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

மாணவர் போராட்டம்
இனவெறித் தாக்குதலை எதிர்த்து, நீதிகேட்டு டெல்லியில் போராடும் வடகிழக்கிந்திய மாணவர்கள்.

ஏற்கெனவே வடகிழக்கு மாநில மக்கள் மீது இந்திய இராணுவத்தின் காட்டுமிராண்டித் தாக்குதல்கள், வன்புணர்ச்சி, குற்றமிழைத்த இராணுவத்தினரைக் காப்பாற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஆகியன தொடர்கின்றன. இந்நிலையில் அடுத்தடுத்து நடக்கும் இத்தகைய தாக்குதல்கள் அவர்களை மேலும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளன. “நாங்கள் இந்தியக் குடிமக்கள், நாட்டுப்பற்று கொண்டவர்கள். ஆனாலும் நாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகிறோம்” என்கிறார், அருணாச்சலப் பிரதேச மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், வடகிழக்கு மாநிலங்களில் சமூக சேவையாற்றியதற்காக பத்மசிறீ விருது பெற்றவருமான பின்னி யங்கா.

உ.பி, பீகார் மாநிலக் கூலித் தொழிலாளர்கள் மீது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கடந்த 2008-ஆம் ஆண்டில் நடத்திய கொலைவெறித் தாக்குதலால் வட இந்திய உழைக்கும் மக்கள் அங்கிருந்து தப்பியோடியதைப் போலவே, கடந்த ஆண்டில் வடகிழக்கிந்திய மாணவர்களும் தொழிலாளர்களும் தாக்கப்படுவோம் என்ற பீதியால் தென் மாநிலங்களிலிருந்து வெளியேறிய அவலம் நடந்தது. தாராளமயத்தாலும், உலகமயத்தாலும் வடகிழக்கிந்தியர்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் பிழைப்புக்காகக் குடியேறுவது அதிகரித்துவரும் நிலையில், மறுகாலனியாதிக்கத்தால் தீவிரமாகும் வேலையின்மை, விலையேற்றம் முதலான அனைத்துக்கும் வெளிமாநிலத்தவர்தான் காரணம் என்று குறுகிய இனவெறியை தேவைப்படும்போதெல்லாம்விசிறிவிட்டு ஓட்டுக்கட்சிகளும் இனவெறியர்களும் ஆதாயமடைந்து வருகின்றனர். இனவெறியையும் பாகுபாடுகளையும் தடைசெய்வதாகச் சட்டம் அறிவித்தாலும், நடைமுறையில் தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களும், முஸ்லிம்களும், வடகிழக்கிந்திய மக்களும் அவமதிப்பையும், தாக்குதலையும்தான் அன்றாடம் எதிர்கொள்கிறார்கள். ஆளும் வர்க்கம் தேசிய ஒருமைப்பாட்டையும் சமத்துவத்தையும் பற்றி வாய்கிழியப் பேசினாலும், சமூகத்தில் அது கந்தலாகிக் கிடப்பதையே இவையனைத்தும் நிரூபிக்கின்றன.
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________