privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 10/03/2014

ஒரு வரிச் செய்திகள் – 10/03/2014

-

செய்தி: “மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்தியஅரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. அதற்கு திமுக உறுதுணையாக இருந்தது” என நாகர்கோவில் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

நீதி: இதே துரோகத்தை செய்யும் பாஜகவிற்கு உறுதுணையாக இருக்கப் போவது அதிமுக எனும் உண்மை இந்த குற்றச்சாட்டை எள்ளி நகையாடுகிறது.
________

செய்திசெய்தி:  இலங்கையில் நடந்த இனப்படு கொலை குறித்து பன்னாட்டு சுதந்திர புலனாய்வு நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று அனைத்திந்திய மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

நீதி: இதே இனப்படுகொலைக்கு தோள் கொடுத்த இந்தியாவை விசாரிக்க வேண்டுமென்று யார் தீர்மானம் கொண்டு வருவது? பாகிஸ்தானா?
_______

செய்தி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

நீதி: மதவெறி, சாதிவெறி, இனவாதம், சினிமா பிரபலம், கல்வி முதலாளிகள்……….என்ன இல்லை இந்தக் கூட்டணியில்? இதுதாண்டா பின்நவீனவத்துவம் எதிர்பார்த்த வானவில் கூட்டணி!
_______

செய்தி: இலங்கையில் தமிழர்கள் மீது மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்த கருத்தரங்கம் சென்னையில் திங்கள்கிழமை நடக்கிறது. இதில் பாஜகவின் மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நீதி: ஆடு அழுகிறதே என்று ஒநாயைக் கூட்டி வந்ததாம் ஒரு பல்லுப் போன நரி!
_______

செய்தி: சென்னை பாரிமுனையில் ஆவணமின்றி காரில் ரூ. 32 லட்சம் பணத்தை எடுத்து சென்ற வியாபாரி பிரவின் குமாரை பிடித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நீதி: கட்சிகள் கமுக்கமாக பணம் விநியோகிப்பதை தடுக்க முடியாத தேர்தல் கமிஷன் இப்படி கணக்கு காட்ட சந்தேக கேஸ்கள் பிடிக்கிறது. எல்லா நாட்களிலும் ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ‘பெரிய மனிதர்களுக்கு’ தேர்தல் காலங்களில் மட்டும் பிரச்சினை வரும் என்பதை முதலாளிகள் சங்கம் சுற்றறிக்கையில் எச்சரிக்கவில்லையா?
_______

செய்தி: பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசிய பின்  செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன்; தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சியின் மேலிடம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும், தேர்தல் பணியை தொடங்க முடியாமல் தொண்டர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என்றும் வாசன் கூறியுள்ளார்.

நீதி: தொண்டர்களே இல்லாத கட்சி. கூட்டணி உதவியுடன் வெற்றி பெரும் பெருச்சாளிகளின் ஏமாற்றம். இதில் கட்சி மேலிட முதலை என்ன செய்ய முடியும்?
________

செய்தி: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்ட காமெடி நடிகர் சவிதா பாத்தி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார். அப்பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி தலைவர்கள் சவிதாவுக்கு முழு ஆதரவு அளிக்க மறுப்பதால் அவர் மிகவும் ‘அப்செட்டாக’ உள்ளதாக அவருடைய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

நீதி: பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதலுக்கும் வேட்டி கிழிப்புக்கும் கம்பெனி கொடுக்கற, முளைத்து மூணு மாசமான குட்டி பெருச்சாளி ஆம் ஆத்மி விரைந்து வருகிறது.
________

செய்தி: வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிடும் விவகாரத்தில், கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்படுவதாக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

நீதி: மோடியை எதிர்த்தவர்களுக்கு கட்சியில் என்ன கதி என்று ஏகப்பட்ட ‘என்கவுண்டர்’ கதைகள் இருக்கும் போது உயிர் வாழும் ஆசை முரளி மனோகர் ஜோஷிக்கு இருக்காதா?
________

செய்தி: ஆதார் அட்டை திட்டத்தின் இயக்குநரும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நந்தன் நிலகேணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

நீதி: நாட்டு மக்களை உளவு பார்க்கும் அனுபவம் இனி நாட்டை விற்கும் காங்கிரசுக்கு கை கொடுக்கும்.
________

செய்தி: மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி பேசிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நீதி: குஜராத் படுகொலைக்கு பாஜக மீது நடவடிக்கை எடுக்காத காங்கிரசு மோடியை தொடர்பு படுத்தி மட்டும் பேசுவது போல, காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் மீது நிரந்தர நடவடிக்கை எடுக்காத காங்கிரசு கட்சி பேச்சுக்கு மட்டும் பயன்படுத்துகிறது. என்றால் பங்காளிச் சண்டையில் இத்தனை பயங்கரவாதம் எதற்கு?
_______

செய்தி: நாடாளுமன்றத்தில் அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது.

நீதி: ஊழல் ஒழிப்பு, தொற்று நோய் தடுப்பு, ஊட்டச்சுத்து, சுகாதார தரம், வேலையில்லாத் திண்டாட்டம் அனைத்திலும் இந்தியா முதலிடத்திலா இருக்கிறது? ஏனய்யா உங்கள் வேதனை?
________

செய்தி: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றி கவலையில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி யுள்ளார்.

நீதி: அமெரிக்கத் தீர்மானம் கழிப்பறை துடைக்கத்தான் பயன்படும் என்பதால்தான் இந்த நாடகத்தில் ராஜபக்சே சவால் விடுகிறார்.
________

செய்தி: இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பேஸ்புக்கில் அதிக லைக்குகளை (அதாவது ஆதரவை) பெறுவதற்காக பணம் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நீதி: கட்டவுட்டில் கின்னஸ் சாதனை படைத்த ‘புரட்சித் தலைவியே’ செய்திராத இந்த கீழ்த்தரமான சாதனையை படைத்ததன் மூலம் ஆங்கிலேயர்களின் ராயல் பெருமிதத்தை காமரூன் நிலைநாட்டிவிட்டார்.
________

செய்தி: முசாபர்நகரில் நடந்த கலவரத்தில் தொடர்புடையவர்கள் நான்கு எம்.எல்.ஏ.க்களின் பெயரை அம்மாநில பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலில் இணைத்துள்ளது.

நீதி: குஜராத் கலவரத்தை நடத்திய மோடியே பிரதமர் ஆகலாம் என்றால் முசாபர் கலவரம் செய்த எம்எல்ஏக்கள் எம்பியாவதில் என்ன தவறு?
________

செய்தி: ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்துவதாக கூறிய தகவல் உரிமை ஆர்வலர்கள் 3 பேர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

நீதி: இதே தகவலை மோடி கூறியிருந்தால், அதை உண்மையாக்குவதற்கு உயிருடன் இருக்கும் மூன்று பேரைக் கொன்றிருந்தாலும் கொன்றிருப்பார்கள்.
_______

செய்தி: மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர்  ராஜ் தாக்கரே, தன் கட்சி லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.தேர்தலில் போட்டியிடவேண் டாம் என பா.ஜ. முன்னாள் தலைவர்  நிதின் கட்காரி கேட்டுக் கொண்ட நிலையில், அவரின் வேண்டுகோளை நிராகரித்து  பரபரப்பை ஏற்படுத் தியுள்ளார்  ராஜ் தாக்கரே.

நீதி: சங்க பரிவாரத்தின் இளைய பங்காளிகளான சிவசேனா மற்றும் நவ நிர்மாண் சேனா இரண்டும் சிறுபான்மை மக்களை தாக்குவதில் காட்டும் ஒற்றுமையை சொத்துப் பங்கீட்டிலும் எதிர்பார்த்தால் எப்படி?
______

செய்தி: ‘வாஸ்து’ சரியில்லை என கருதி லாலு பிரசாத் பீகாரில் உள்ள தன் வீட்டிலிருக்கும் நீச்சல் குளத்தை மூடிவிட்டார்.

நீதி: மனைவி, மகளுக்கு சீட்டு, மாளிகையில் குளம் என்று வாழும் லாலுவைப் போன்ற ‘ஏழைப்பங்காளர்களர்கள்’ இருக்கும் போது இந்நாட்டிற்கு என்ன குறை?
_______

செய்தி: வெள்ளக்கோவிலில்  பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட, 11 கடைகளின் பூட்டை உடைத்து  பணம் திருடப்பட்டது.

நீதி: போலீசெல்லாம் ‘புரட்சித் தலைவி’யின் பிரச்சார பாதுகாப்பிற்கு செல்லும் போது திருடர்களுக்கு திருட்டு பயம் எப்படி வரும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க