privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ராஜ்குமாருக்கு நீதி கேட்டு புதுச்சேரி அரசு அலுவலகம் முற்றுகை !

ராஜ்குமாருக்கு நீதி கேட்டு புதுச்சேரி அரசு அலுவலகம் முற்றுகை !

-

என்.எல்.சி. தொழிலாளி ராஜ்குமாரை சுட்டுக் கொன்ற சிஐஎஸ்எஃப் ன் கொலை வெறியாட்டத்தைக் கண்டித்து மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை புதுச்சேரி புஜதொமு முற்றுகை – ஆர்ப்பாட்டம்:

நேற்று (17.04.2014) சுரங்கம் 1-ல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளி ராஜா என்ற ராஜ்குமாரை சுட்டுக் கொன்ற மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நோமன் ராஜ்குமாரின் தலையில் மூன்று முறை சுட்டதில், அந்தத் தொழிலாளி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

ஒப்பந்தத் தொழிலாளியாக சுரங்கம் 1-ல் வேலை பார்த்து வந்த ராஜ்குமாரின் தம்பி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது தம்பியின் நட்டஈடு கேட்பதற்காக சுரங்கம் 1-ல் உள்ள நிர்வாக அலுவலகத்திற்கு செல்வதற்காக வந்த ராஜ்குமாருக்கு உள்ளே போக அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. தானும் சுரங்கம் 2-ல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளி என்பதற்கான அடையாள அட்டையைக் காண்பித்த பிறகும் அனுமதி மறுக்கப் படவே அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையை சேர்ந்த நோமனுக்கும் ராஜ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது அதிகாரம் கேள்விக்குள்ளாவதைப் பொறுக்க முடியாமல் தனது துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்துள்ளான் நோமன்.

பாதுகாப்பு என்ற பெயரில் அடியாள் வேலை செய்யும் நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், பாதுகாப்பு என்ற பெயரில் கொலைவெறியாட்டம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அங்குள்ள தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து அரசு பயங்கரவாதம் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் எங்களது புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்டார்கள். முற்றுகையில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தோழர்கள், அலுவலகம் அமைந்துள்ள பகுதியான, புதுச்சேரி ரெட்டியார்பளையத்தில் ஊர்வலமாக சென்று மக்கள் வசிக்கும் பகுதியின் வழியாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய நோமனைக் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், ரவுடித்தனம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை கண்டித்தும், என்.எல்.சி. நிறுவனம் தனியார்மயமாவதை எதிர்த்துப் போராடுகின்ற தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை ஒடுக்கியும், தொழிற்சங்க உரிமையை நசுக்கியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றும் வரை ஒன்றிணைந்து போராட அறை கூவி அழைக்கும் விதமாகவும் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளேயே சென்று அமர்ந்தும் உள்ளேயேயும் முழக்கங்களைத் தொடர்ந்தனர்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பின், அலுவலகத்தின் உள்ளே வந்த காவல்துறை, தனது வழக்கமான முறையில் தோழர்களை சமாதானப் படுத்தி வெளியே அனுப்ப முற்பட்டனர். ஆனால், தோழர்கள் மறுத்து, தனது போராட்டத்தைத் தொடர்ந்தனர். மேலும், “அரசு அலுவலகத்தின் உள்ளே வந்து முழக்கமிடுவது சட்ட விரோதமானது” என்றும், “உங்களது கோரிக்கை நியாமானது தான் என்றாலும், அதை சொல்வதற்கான இடம் இது இல்லை” என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசிடம், “ஒரு தொழிலாளியைச் சுட்டுக் கொன்றது மட்டும் சட்டபூர்வமானதா?” என்றும், “என்.எல்.சி. நிறுவனத்தில் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இங்கு தான் நடக்கும். அது பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அதிகாரிகள் இங்கு தான் உள்ளனர். அதனால், நாங்கள் சரியான இடத்தில் தான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்குள்ள அதிகாரியிடம் சொல்லி மத்திய தொழில் பாதுகாப்புப் படையை வெளியேற்றச் சொல்லுங்கள்” என்று பேசியவுடன் போலிசு அதைப் பற்றி பேச முடியாமல் அமைதியாகி விட்டனர்.

சிறிது நேரம் கழித்து, “நாங்கள் எங்களது மேலதிகாரிகளிடம் தகவல் கூறியுள்ளோம் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று போலிஸ் கெஞ்சியும் தோழர்கள் மசியவில்லை. பிறகு முழக்கமிட்டுக் கொண்டே அலுவலகத்திற்கு வெளியே வந்தும் ஆர்ப்பாட்டமும் முழக்கமும் தொடர்ந்தது.

சிறிது நேரத்திலேயே, “உங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டீர்கள். அதனால், கலைந்து செல்லுங்கள் மீறிப் போராடினால், கைது செய்யப்படுவீர்கள்” என்று போலிசு கூறத் தொடங்கியது.

“எங்கள் போராட்டம் அடையாளப் போராட்டம் அல்ல. நாங்கள் என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை வெளியேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம். நாங்கள் கைதாகமாட்டோம்” என்று சொன்னோம்.

“நீங்கள் கைதாகவில்லை என்று சொன்னால், நாங்களே கைது செய்வோம்” என்று கூறி தள்ளுமுள்ளு ஏற்பட்டு வலுகட்டாயமாக கைது செய்தது போலிசு. ஆனால், கைது செய்த இரண்டு மணிநேரத்தில் விடுவித்தது.

நெய்வேலியில் தொழிலாளி கொல்லப்பட்டதைக் கண்டித்து நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியாகப் போராடிய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் சகட்டுமேனிக்கு அடித்துத் துவைத்துள்ளது CISF மற்றும் போலிஸ் வெறிநாய் கூட்டம்.

இதில், ஒரு விசயத்தை மக்கள் தீரமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறதே தவிர, சிறு துளி கூட குறையவில்லை. இதற்கான காரணம், உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தை நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என்றும், வன்னியர், தலித், முதலியார், ரெட்டியார், கவுண்டர், தேவர், நாடார், முசுலீம், கிறித்தவர் என சாதிரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுபடுத்தி, இவற்றை ஏற்றுக் கொண்ட கட்சிகள் மூலம்தான் உரிமைகளைப் பெற முடியும் என்றும் பிழைப்புவாத கட்சிகள், சங்கங்கள் உழைக்கும் மக்களை ஏமாற்றி தங்களது பொது எதிரியை அடையாளம் தெரிந்துகொள்ளாத வகையில் திசை திருப்பி வருகிறார்கள். இதையொட்டித்தான் நடக்கவிருக்கும் தேர்தல் பிரச்சாரமும் வீச்சாக செய்து வருகிறார்கள். வேட்பாளர்களும் அதையொட்டியே நிறுத்தப்படுகிறார்கள்.

ஆனால், ராஜ்குமார் மரணத்தை தொடர்ந்து தொழிலாளர்கள், மற்றும் பொது மக்களை கொலைவெறித்தனமாக தாக்கிய போலிசு நாய்கள் சாதி பார்த்து, மதம் பார்த்து நிரந்தரத் தொழிலாளியா? ஒப்பந்தத் தொழிலாளியா? என்று பார்த்து தாக்கவில்லை.

பொதுவாகவே, “அரசு என்பது மக்களை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்குமான கருவி என்பது” கம்யூனிச ஆசான்கள் கூறுவதைப் போல மக்களை தங்களது அடிமைகளாத்தான் அரசு பார்க்கிறது. இதைத்தான் நெய்வேலியில் நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியா முழுவதும் இதுதான் நடந்து வருகிறது.

குர்கான் மானேசர் தொழிற்பேட்டையில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் சங்கம் ஆரம்பித்ததற்காகவே ஒரு ஆண்டுக்கு மேலாக பிணை வழங்காமல் 147 தொழிலாளர்கள் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், 3500 தொழிலாளர்கள் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கும் தொழிலாளர்கள் எந்த சாதி, மதம் என்ற வேற்றுமையை இந்த அரசும் முதலாளிகளும் பார்க்கவில்லை. ஒரு கிரிமினல் குற்றத்தை விட மோசமான குற்றமாக சங்கம் ஆரம்பித்ததைப் பார்க்கிறது அரசு.

எனவே, அரசு என்பது, உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதும், உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் கட்சிகள், சங்கங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள், தொழிலாளர் வர்க்கத்தின் குடலை அறுப்பவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிலைமை இவ்வாறு இருக்க பிறகு எதற்கு நமக்குள் சாதி மத வேற்றுமை? ஒப்பந்தத் தொழிலாளி, நிரந்தரத் தொழிலாளி என்ற வேற்றுமை?

தொழிலாளர் வர்க்கமே! உழைக்கும் வர்க்கமே!

  • சாதி மத தொழிலாளர் வேற்றுமையைக் கடந்து, அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக, மக்களை ஏமாற்றும் சட்டமன்ற பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை புறந்தள்ளி புதிய ஜனநாயக மக்கள் அரசை நிறுவ அணிதிரண்டு போராட அறைகூவி அழைக்கிறோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.