privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !

போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !

-

புல்டோசரை வைத்து தகர்த்ததைப் போல, கார்ப்பரேட் முதலாளிகள் தொடங்கப்போகும் பெரும் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் விதிக்கப்பட்டிருந்த பெயரளவிலான தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு, தாராள அனுமதியளித்துள்ளார் மைய அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த டிசம்பரில் சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சரான ஜெயந்தி நடராசன் பதவி விலகிய பின்னர் அத்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள பெட்ரோலியத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி, பதவியேற்ற 20 நாட்களில் ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான 73 பெரும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அடுத்தடுத்து ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு ஒரிசா மக்களின் கடும் எதிர்ப்பால் கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய முதலீட்டுத் திட்டமான போஸ்கோ இரும்பு-எஃகு ஆலைத் திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜெகத்சிங்பூர் ஆர்ப்பாட்டம்
தென்கொரிய அதிபரின் வருகையையொட்டி, அவசரமாக போஸ்கோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்ததை எதிர்த்து, “தென்கொரிய அதிபரே வெளியேறு!” என்ற முழக்கத்துடன் வாழ்வுரிமை பறிக்கப்பட்ட ஜெகத்சிங்பூர் மாவட்ட மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜனவரியில் தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை-யின் வருகையையொட்டி, அதற்கு முன்னதாகவே தென்கொரியாவின் போஸ்கோ திட்டத்துக்கு அவசரமாக ஒப்புதல் அளித்துள்ள அமைச்சரின் இந்த முடிவானது, கார்ப்பரேட் முதலாளிகளையே பிரமிக்க வைத்துள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சுற்றுச்சூழல், வனப் பாதுகாப்பு, இத்திட்டங்களால் வெளியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வுரிமையளித்தல் முதலான எதைப்பற்றியும் கவலைப்படாமல், கண்ணை மூடிக்கொண்டு அவசரஅவசரமாக அமைச்சர் வீரப்ப மொய்லி ஒப்புதல் அளித்திருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், வீரப்ப மொய்லியின் அதிர்ச்சியூட்டும் இந்த அறிவிப்பு திடீரென உருவானதல்ல. மைய அரசின் சுற்றுச்சூழல் துறையும் பிரதமர் அலுவலகமும், கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ப ஏற்கெனவே நிலவி வந்த பெயரளவிலான சட்டங்களையும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் அடுத்தடுத்து நீர்த்துப்போகும் வகையில்தான் இயங்கி வந்துள்ளன. மேலும், அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் நோக்கங்களை உடனுக்குடன் நிறைவேற்றும் விசுவாசி என்பதை பெட்ரோலியத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி நிரூபித்துக் காட்டியுள்ளதாலேயே, அவரைச் சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகத்துக்கும் பொறுப்பேற்குமாறு மைய அரசு பணித்தது.

  • கடந்த டிசம்பர் 2012-இல் முதலீட்டுக்கான அமைச்சரவை கமிட்டியை பிரதமர் மன்மோகன் தலைமையில் மைய அரசு உருவாக்கியது. ரூ 1000 கோடிக்கும் மேலான முதலீட்டுத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும், இதற்குத் தடையாக உள்ள சட்டங்களை, குறிப்பாகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பாதுகாப்பு, குடிமக்களை இப்பகுதியிலிருந்து வெளியேற்றுவது தொடர்பான சட்டங்களில் உள்ள விதிகளை அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இக்கமிட்டியில் சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சரோ, பழங்குடியினர் நலத்துறை அமைச்சரோ சேர்க்கப்படாமல் திட்டமிட்டே ஒதுக்கப்பட்டனர். கடந்த மார்ச் 2013-ல் பல்வேறு பெரும் திட்டங்களுக்குப் பல அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைக் குறிப்பிட்ட மைய அமைச்சரவை, இவற்றை விரைந்து நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது.
  • ஜனவரி 2012-ல் கார்ப்பரேட் முதலாளிகளின் பெரும் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்னதாக இப்பகுதியிலுள்ள பழங்குடியின கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு, மாநில அரசின் ஒப்புதலும் வனத்துறையின் ஒப்புதலும் இருந்தால் போதும் என்று மாற்றப்பட்டது. ஜனநாயகத்தில் பொதுமக்களின் பங்கேற்பு என்பது அவசியமானது என்று ஏற்கப்பட்டாலும், போஸ்கோ விவகாரத்தில் அது வெளிப்படையாகவே முறியடிக்கப்பட்டது.
  • பிப்ரவரி 2013-ல் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம், சிறிய திட்டங்களுக்கு – அதாவது, சாலை போடுதல், ரயில்பாதை அமைத்தல், மின்சாரக் கோபுரங்கள் அமைத்தல், மின்கம்பித் தடங்களை அமைத்தல் முதலானவற்றுக்குப் பழங்குடியின கிராமப் பஞ்சாயத்துகளின் ஒப்புதல் அவசியமில்லை என்று அறிவித்தது. மாவோயிஸ்டுகளின் செல்வாக்கிலுள்ள 82 மாவட்டங்களில் 13 வகையான அடிக்கட்டுமானத் திட்டங்களுக்கு வனத்துறையின் ஒப்புதல் அவசியமில்லை என்று அறிவித்தது. இதன் மூலம் இப்பகுதிகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • ஒரே அமைச்சகத்தின் கீழ் இருந்தாலும், வனத்துறையின் ஒப்புதலிலிருந்து சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தனியே பிரிக்கப்பட்டது. இதன் மூலம் வனத்துறையின் ஒப்புதல் கிடைக்காத போதிலும், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலைக் கொண்டு தமது பெரும் திட்டங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த அநீதிக்குத் துணை நின்றது.
  • ஒரிசாவின் நியாம்கிரி மலையில் பாக்சைட் கனிமத்தைக் கொள்ளையிடத் துடித்த வேதாந்தா நிறுவனம், வன உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறிய போதிலும், பின்னர் நீதிமன்றத்தில் வாதிட்டபோது சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகம், பல்டியடித்தது. காடுகளைச் சார்ந்துள்ள மக்களின் உரிமை மதிக்கப்பட்ட போதிலும், வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகளை அழிப்பது தவிர்க்க வியலாதது என்றும், தனிநபரின் உரிமையைவிட அரசின் சமுதாயத் தலைமைப் பாத்திரம் முக்கியமானது என்றும் வாதிட்டது. இதன் மூலம் காடுகளைச் சார்ந்துள்ள பழங்குடியின மக்களின் உரிமையை ‘வளர்ச்சி’யின் பெயரால் அரசே நசுக்கியது. இருப்பினும், வேதாந்தாவின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்களுக்கு ராகுல் காந்தி ஆதரவாக நிற்பதாக வேடம் போட்டுள்ளதால், தற்போதைக்கு கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டுமென்ற விதியை வலுயுறுத்தி அத்திட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒத்திப் போட்டுள்ளது.
போஸ்கோ கட்டுமான அலுவலகம்
கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான உழைக்கும் மக்களின் போர் : தமது வாழ்வுரிமையைப் பறிக்க வந்துள்ள போஸ்கோ நிறுவனத்தின் கட்டுமான அலுவலகச் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அதனைத் தீயிட்டு கொளுத்திய ஒரிசா மக்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 2012-ல் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராசன், “நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் எமது அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒருபோதும் இருக்காது” என்று அறிவித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தனது அமைச்சகம், 828 திட்டங்களில் 754-க்கு ஒப்புதல் அளித்துள்ளதையும், 18,200 ஹெக்டேர் காட்டுப்பகுதி நிலங்கள் கையளிக்கப்பட்டுள்ளதையும், இன்னும் 57,469 ஹெக்டேர் நிலங்களைக் கையளிப்பதற்கான பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் பெருமையுடன் கூறினார்.

தொழிற்துறை விரிவாக்கத்தால் ஏற்படும் பேரழிவுகளுக்கு எதிராக “உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்பின் மதிப்பீடு’’-(EIA) என்பதை அடிப்படையாக வைத்து பரிசீலனையும் ஒப்புதல் அளிப்பதும், நிராகரிப்பதும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவில், இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்க வேண்டிய காவலனாக இருக்க வேண்டிய சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சகம், கார்ப்பரேட் முதலாளிகளின் அப்பட்டமான தரகனாக மாறிவிட்டது.

ஒரிசாவில் போஸ்கோ அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை ஆண்டொன்றுக்கு 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால் இத்திட்டம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வறிக்கையோ, ஆலையின் முதல்கட்ட உற்பத்தி இலக்கான 40 லட்சம் டன் இரும்பு உற்பத்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டது. அதாவது 1.2 கோடிடன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றி ஆவு செய்யாமல், அதில் மூன்றிலொரு பங்கான 40 லட்சம் டன் இரும்பு உற்பத்தியால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே பரிசீலித்து அதன்படி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், போஸ்கோ அமைக்கவுள்ள இரும்பு உருக்காலை, மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராயாமல், அவற்றைத் தனித்தனி விவகாரமாகப் பிரித்து ஆய்வறிக்கையை அளித்தது.

போஸ்கோ ஆலை அமையவுள்ள பகுதியின் கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டுமென்ற போதிலும், ஒரிசா மாநில அரசு இப்பகுதியில் பழங்குடியினர் வாழ்ந்து வருவதையே மறைத்துள்ளதோடு, கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் பதிலாக ஜெகத்சிங்பூர் மாவட்ட நீதிபதியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்று மோசடி செய்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்னமும் போஸ்கோவுக்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், அத்தீர்ப்பாயம் 2012-இல் அளித்த இடைக்காலத் தடையை இப்போது வீரப்ப மொய்லி நீக்கியுள்ளார். போஸ்கோவின் இரும்பு – எஃகு ஆலைத் திட்டம் என்பது வேறு, துறைமுகம் அமைக்கும் திட்டம் என்பது வேறு என்று இரண்டையும் வேறானதாகக் காட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

வீரப்ப மொய்லி
கார்ப்பரேட் முதலாளிகளின் நம்பகமான விசுவாசி : சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகத்துக்குப் பொறுப்பேற்றுள்ள பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

இது மட்டுமின்றி, கடந்த ஜனவரி 14 அன்று வீரப்ப மொய்லியின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம், தற்போதைய நிலக்கரிச் சுரங்கங்கள், மேலும் 50 சதவீத அளவுக்கு விரிவுபடுத்திக் கொள்வதற்கு தாராள அனுமதி அளித்துள்ளது. இத்தகைய விரிவாக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, கனிமவள இழப்பு, பொதுமக்களுக்குஏற்படும் பாதிப்பு பற்றிய எந்த மதிப்பீடும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மய – தாராளமய-உலகமயக் கொள்கைகளைத் திணித்தபோது, அரசுத்துறை நிறுவனங்களும் அவற்றின் அடிப்படைக் கட்டமைப்புகளும் அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் காடுகள், விளைநிலங்கள், கனிம வளங்கள், ஆறுகள் – நீர்நிலைகள், மின்சாரம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் தாரைவார்க்கப்பட்டன. இப்போது இன்னும் மூர்க்கமாகவும் திமிராகவும் அவரச அவசரமாகவும் கார்ப்பரேட் கொள்ளைக்குக் கதவுகள் அகலமாகத் திறந்துவிடப்படுகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகளில் ஒரு பிரிவினர், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியை ஆதரிப்பதாலும், முதலீட்டாளர்களின் நண்பனாக பா.ஜ.க. தன்னைக் காட்டிக் கொள்வதாலும், கார்ப்பரேட் முதலாளிகளிடம் நம்பிக்கையைப் பெற்று வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்துடனேயே காங்கிரசு அரசு இத்தகைய அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளது. மொத்தத்தில், நாட்டின் – மக்களின் பொதுச்ணொத்துக்களான நீரும் நிலமும் கனிம வளமும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்குத் திறந்து விடப்படுவதும், வாழ்வுரிமை பறிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவதும்தான் இந்த அறிவிப்பின் சாரமாகும்.

வீரப்ப மொய்லியின் அறிவிப்பைத் தொடர்ந்து போஸ்கோ நிறுவனம் கட்டுமானப் பணிகளில் இறங்கத் தொடங்கியதும், ஒரிசாவின் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தின் நுவாகோன், கோவிந்தபூர், தின்கியா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த கிராம மக்கள், தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் போஸ்கோ கட்டுமான அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதோடு, அதன் 300 மீட்டர் நீள தடுப்புச் சுவரையும் இடித்துத் தள்ளியுள்ளனர். போராடும் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்திய அம்மாநில போலீசு, அவர்கள் மீது பொய்வழக்குகளைச் சோடித்து சிறையிலடைத்துள்ளது. நாட்டில் பெயரளவுக்கு இருந்த சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் முதலான ஜனநாயகப் பம்மாத்துகள் அனைத்தும் கலைந்து, மூர்க்கமான கார்ப்பரேட் கொள்ளையும் அரசின் அப்பட்டமான பாசிசமும் அரங்கேற்றப்படுவதையே இவை நிரூபித்துக் காட்டுகின்றன.

– மனோகரன்
______________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க