privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 03/04/2014

தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 03/04/2014

-

செய்தி: பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு தேர்தலில் சீட் வழங்காததைக் கண்டித்து சென்னை – புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நீதி: தொலைக்காட்சிகளில் ‘இந்து’க்களுக்காக காட்டுக்கத்தல் கத்தி என்ன பயன்? தமிழிசை ஒரு நாடார்தான், இந்து இல்லை!
_______

செய்தி: மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் மறைத்து விடுவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

நீதி: விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, விவசாயிகள் தற்கொலை, துறைக்கொரு ஊழல் இவைதான் மத்திய அரசின்  திட்டங்களின் விளைவுகள் என்றால் அவை மறைக்கப்படுவதை பீருடன் கொண்டாடுவதற்கு பதில் உர்ரென சோகம் ஏன்?
______

செய்தி: மார்க்சிஸ்ட் கட்சியின் வட சென்னை தொகுதி வேட்பாளர் உ.வாசுகி, புதன்கிழமை மனு தாக்கல் செய்த போது, தனக்கு 26 இலட்சம் ரூபாயும், கணவர் விஸ்வநாதனுக்கு 1 கோடியே 75 இலட்சம் சொத்துக்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நீதி: பரவாயில்லையே, மார்க்சிஸ்ட் கட்சி தரும் சம்பளத்தை வைத்து முழுநேர ஊழியர்கள் இலட்சங்களிலும், கோடிகளிலும் சேமிக்க முடிகிறதே! இதுதான் தோழர்களே ‘வளர்ச்சி’!
______

செய்தி: சட்டவிரோதமாக இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆளும் கட்சியையும் மற்ற அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கப் போவதாக சென்னை பெருநகர அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதி: சட்டவிரோதமாக மட்டுமல்ல சட்டபூர்வமாகவே இயங்கும் முதலாளிகளை பாதுகாக்கும் இந்த அரசியல் அமைப்பை, ஒட்டு மொத்தமாக புறக்கணித்தால்தான் ஆட்டோ ஒட்டுநர் மட்டுமல்ல, நாட்டு மக்களும் நலமுடன் வாழமுடியும்!
_______

செய்தி: ஒரு வேளை தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக பாஜக-வை ஆதரிக்க வேண்டிய சூழல் வந்தால் என்ற கேள்விக்கு பதிலளித்த திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, “யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஒரு தேர்தலில் பாஜக-வுடன் சேர்ந்து நாங்கள் செயல்பட்டது உண்மைதான். அப்போதும் எங்கள் கொள்கைகளை இழக்கவில்லை” என்று கூறினார்.

நீதி: பாஜக-வை எதிர்ப்பது கொள்கைக்காக என்றால், கூட்டணி சேரும் போது அந்த கொள்கை குளியல் விடுமுறைக்காக குற்றாலம் போய்விடுமா?
______

smiling-pigசெய்தி: கடலூரில் மாற்றுத் திறனாளி வேட்பாளர், மாடி ஏறி மனு தாக்கல் செய்ய முடியாத நிலையில், ஒரு மணிநேரம் போராடி மாவட்ட ஆட்சியரை மாடியிலிருந்து இறங்கி வரவழைத்து மனு தாக்கல் செய்தார்.

நீதி: ஒரு மாற்றுத் திறனாளியிடம் மனு பெறுவதற்கே இறங்கி வரத் தயாரில்லாத அதிகார வரக்கம் சேவை செய்வது முதலாளிகளுக்கே, மக்களுக்கல்ல!
______

செய்தி: நடிகர் ரஜினிகாந்த் போன்ற நடுநிலையாளர்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டார்.

நீதி: மோடிக்காக குத்தாட்டம் போட்ட கவர்ச்சி நடிகை மேக்னா பட்டேல் போன்ற நடுநிலையாளர்களை புறக்கணித்து விட்டு கவர்ச்சி இழந்த ரஜினிக்கு அக்கா அழைப்பு விடுப்பது ஏன்?
_______

செய்தி: முன்னாள் அமைச்சரும் திமுக பிரமுகருமான மருங்காபுரி பொன்னுச்சாமி மீண்டும் அதிமுக-வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நீதி: அம்மாவிடமிருந்து உதிர்ந்தாலும் பறந்தாலும் அறுந்தாலும் வெட்டப்பட்டாலும் ரோமங்கள் மீண்டும் அம்மாவிடம்தானே வரவேண்டும்? ஆனால் இந்த முறை இடம் தலையல்ல, பாதம்!
_______

செய்தி: விஜயகாந்த் – வைகோ சந்திப்பின் போது வைகோ வீடு முன் திரண்டிருந்த அனைவருக்கும் அல்வா வழங்கப்பட்டது.

நீதி: சில சந்தர்ப்பங்களில் நாம் அல்வா சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கலாம். ஆனால் பல சந்தர்ப்பவாதங்கள் அல்வா கொடுத்தே ஏமாற்றி வருகின்றன.
_______

செய்தி: “மோடி எனக்கு நண்பர். அவர் ஆசியுடன் பாஜக-வில் சேர்ந்தேன். பாஜக பிரச்சார அணிக் குழுத் தலைவர் பதவி தருவதாக, மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உறுதியளித்தார். இது இல.கணேசனுக்கும் தெரியும். இதுவரை தரவில்லை. சிறு குழந்தை போல் தினமும் சென்று, பதவி கொடுங்கள் என்று கேட்க முடியாது.” – நடிகர் எஸ்.வி.சேகர்.

நீதி: ஆரம்பத்தில் அதிமுக, இடையில் திமுக, இப்போது பாஜக என்று பாவ யாத்திரை வந்தாலும் ஒரு பார்ப்பனருக்குரிய வறட்டு கௌரவமும், திருட்டு திமிரும் போய்விடவில்லை! வெல்டன் மிஸ்டர் சேகர்!
______

செய்தி: திமுக-விலிருந்து நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு கடிதம் இன்னும் எனக்கு வரவில்லை என்றார் மு.க.அழகிரி.

நீதி: குடும்பத்தில் பிரச்சினை என்பதற்காக ஒரு குடும்ப உறுப்பினரை சேர்ப்பது, நீக்குவதெல்லாம் அலுவலக முறைப்படி கடிதம் வைத்துக் கொண்டு நடக்காது, அழகிரி அண்ணே!
_______

செய்தி: முசுலீம்களின் வாக்குகள் சிதறக்கூடாது என்று முசுலீம் அமைப்புக் குழுக்களிடம் பேசிய சோனியா காந்தி, மதவாத அரசியல் நடத்துவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதி: மதவாதமும், மதவெறியும் “எங்க ஏரியா, உள்ள வராதே” என்ற தொழில் போட்டி கோபம்தான் பாஜகவின் கண்டனத்திற்கு காரணம்.
______

செய்தி: மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரப் பிரதேச  காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை அனுப்பியுள்ளது.

நீதி: நடிகை நக்மா பாதுகாக்கத் துடிக்கும் காங்கிரசுதான், சட்டீஸ்கர் சுக்மாவில் பழங்குடி மக்களை நிராதரவாய் கொல்லுகிறது.
_______

செய்தி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள லாலு பிரசாத் யாதவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது என, ராகுல் காந்தியை கண்டித்து பேசினார், பாஜகவின் நரேந்திர மோடி.

நீதி:  இதனால் நிதீன் கட்காரி, பங்காரு இலட்சுமணன், எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள், ஜெயலலிதா, முதலிய ஊழல் திலகங்களையெல்லாம் என்கவுண்டரில் சுட்டுவிடுவாரா மோடி!
_______

செய்தி: “குஜராத் கலவரத்தின்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யின் குடும்பத்தினரை சந்தித்து நரேந்திர மோடி ஆறுதல் தெரிவிக்கவில்லை. அப்படிப்பட்டவரா நாட்டின் நலனை பாதுகாக்கப் போகிறார்?”, சரத் பவார், மத்திய வேளாண் அமைச்சர்.

நீதி: விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீடுகளுக்கு போகாத கிரிக்கெட் சீமானான உங்களை, விவசாய நலனை பாதுகாக்கும் அமைச்சராக நியமித்தார்களே, ஏன் ஐயா?
________

செய்தி: தலைநகரான டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் 150 வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கோடீஸ்வரர்களாகவுள்ளனர். இதில் காங், பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் என அனைவரும் உண்டு.

நீதி: முதலாளிகளுக்கான அரசு இருக்கும் தலைநகரத்தில் கோடிஸ்வரர்களை விடுத்து பாமரர்களா போட்டியிட முடியும்?
_______