privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு !!

காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு !!

-

காங்கிரசின் ஆதரவோடு தில்லியில் அமைந்த ஆம்-ஆத்மி அரசு பதவி விலகிய பின், காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆட்சியமைக்க உரிமை கோர மறுத்துவிட்ட நிலையில் உச்ச நீதி மன்ற நீதிபதி ஒருவர், “காங்கிரசும் பா.ஜ.க.வும் கூட்டாகச் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க முடியுமென்றால், இருவரும் ஏன் கூட்டுச் சேர்ந்து ஓர் அரசை அமைக்க முடியாது?” என்றொரு கேள்வியை எழுப்பினார். இக்கேள்வி வெளிப்பார்வைக்கு விசித்திரமானதாக, வியப்பை ஏற்படுத்துவதாகத் தோன்றினாலும், அதனுள்ளே உண்மை பொதிந்தேயிருக்கிறது. கூட்டுச் சேர இயலாத அளவிற்கு அவ்விரு கட்சிகளின் கொள்கை, நடைமுறைகளில் வேறுபாடு உள்ளதா என்ற கோணத்திலிருந்து இந்தக் கேள்வியைப் பரிசீலித்தால், அவ்விரு கட்சிகளும் இயற்கையான கூட்டாளிகள்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஜஸ்வந்த் சிங்-ஸ்ட்ரோப் டால்போட்
அணு ஆயுத பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (வலது); அமெரிக்காவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட் (கோப்புப் படம்)

பொருளாதாரச் சீர்திருத்தம்; அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்டு நாடுகளுடனான உறவு; உள்நாட்டில் தீவிரவாதத்தையும், மதவாதத்தையும் அணுகும்முறை; மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவு; ஈழப் பிரச்சினை; காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை; தமிழக மீனவர் பிரச்சினை – என எந்தவொரு பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும், அதில் இவ்விரு கட்சிகளின் நிலைப்பாடு, அணுகுமுறை, நடைமுறை ஆகியவற்றில் கடுகளவுகூட வேறுபாடு இருப்பதைக் காணமுடியாது.

1990-களின் தொடக்கத்தில் காங்கிரசு கட்சி தனியார்மயம்-தாராளமயத்தை வரித்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தொடங்கியபொழுது, “தனது கட்சியின் கொள்கையை காங்கிரசு திருடிக் கொண்டுவிட்டதாக”ப் புலம்பியது, பா.ஜ.க. அந்தச் சமயத்தில் லேவா தேவிக்காரர்கள், வியாபாரிகள், பதவி பறிக்கப்பட்ட சமஸ்தான ராஜாக்கள் ஆகியோரின் கட்சியாக அறியப்பட்டிருந்த பா.ஜ.க.விடமிருந்து இதனைத் தவிர வேறு புலம்பல் வந்திருக்க முடியாது. எனினும், 1990-களில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு சுதேசி சவடால் அடித்துவந்த அக்கட்சி, 1998-ல் ஆட்சியில் அமர்ந்தவுடன் தனியார்மயம்-தாராளமயத்தை காங்கிரசைவிட மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு காங்கிரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என மேடைதோறும் முழங்கி வருகிறாரே மோடி, அவரிடமும் மருந்துக்குக்கூட வேறு மாற்றுப் பொருளாதாரக் கொள்கை கிடையாது.

காங்கிரசு அரசு படுத்துக்கிட்டு போத்திக்கலாம் என்றால், மோடி போத்திக்கிட்டு படுத்துக்கலாம் என்கிறார். இதுதான் இவர்களுக்கிடையேயான கொள்கை வேறுபாடு! “தனியார் மயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் நாட்டை வல்லரசாக்கிவிடலாம்” என்ற பழைய பாட்டைத்தான் புது மெட்டு போட்டுப் பாடி வருகிறார், மோடி. காங்கிரசை ஊழல் மலிந்த அரசு எனக் குற்றஞ்சுமத்தி வரும் அவர், மன்மோகன் சிங் அரசால் முகேஷ் அம்பானிக்குக் குத்தகைக்கு விடப்பட்ட கே.ஜி. எண்ணெய் வயல் ஊழல் குறித்துப் பேச மறுக்கிறார். காங்கிரசோ குஜராத்தில் மோடி அரசால் அடானி குழுமத்திற்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத சலுகைகள் குறித்துப் பேச மறுக்கிறது. காங்கிரசிற்கும் பா.ஜ.க.விற்கும் இடையேயுள்ள பிணைப்பு இது தான். இவ்விரு கட்சிகளிடையே பொருளாதாரக் கொள்கையில் இப்படிபட்ட ஒற்றுமை காணப்படுவது மட்டுமின்றி, அதனை நடைமுறைப்படுத்துவதில்கூட இவை “தூக்கிடவிடப்பா, ஏத்திவிடப்பா” என்ற பாணியில் இரட்டைக் குழல் துப்பாக்கி போலவே செயல்பட்டு வருகின்றன.

தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியார்மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய ஓய்வூதிய நிதி மசோதாவை கடந்த மார்ச் 2011-ல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குக் கொண்டு வந்தது, காங்கிரசு அரசு. அன்று அவைக்கு வந்திருந்த 159 உறுப்பினர்களுள் பெரும்பாலோர் பா.ஜ.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள். எனினும், அம்மசோதா பா.ஜ.க. உறுப்பினர்களின் ஆதரவோடு, 115 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று நிறை வேற்றப்பட்டது.

இம்மசோதா நிறைவேற்றப்பட்டதில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. இம்மசோதா மன்மோகன் சிங் அரசால் தயாரிக்கப்பட்டதல்ல. அதற்கு முன்பு வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தயாரித்த சரக்கு இது. அம்மசோதா காங்கிரசு கூட்டணி ஆட்சியில், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தனியார்மயம் என்ற சரடு ‘எதிரெதிர்’ கட்சிகளான காங்கிரசையும் பா.ஜ.க.வையும் ஒன்றாகக் கட்டிப் போட்டிருப் பதற்கு இன்னும் பல உதாரணங்கள் உள்ளன.

பிரணாப் முகர்ஜி - கண்டலீசா ரைஸ்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அறிவிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி (இடது), அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ். (கோப்புப்படம்).

சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை பா.ஜ.க. எதிர்த்து வருகிறது. ஆனால், அக்கட்சி இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தின் கீழ் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டபொழுது, தனது தேர்தல் அறிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்கும் நோக்கத்தோடு சில்லறை வர்த்தகத் தில் அந்நிய முதலீடை அனுமதிக்கத் தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருந்தது. இது மட்டுமல்ல, வாஜ்பாயி ஆட்சியில்தான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடை அனுமதிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அன்று வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மூலம் விவாதத்திற்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, பா.ஜ.க. தொடங்கி வைத்ததை காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது என்றுதான் இதனைக் கூறமுடியும்.

இப்படி பா.ஜ.க. கூட்டணி அரசு தொடங்கி வைத்ததை அதனை அடுத்துவந்த காங்கிரசு அரசு முடித்து வைத்ததற்கு இன்னொரு உதாரணம் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் போக்ரான்-2 அணுகுண்டு சோதனை நடத்திய கைே யாடு ஐ.நா. மன்றத்திற்கு உரையாற்றச் சென்ற பிரதமர் வாஜ்பாயி, “இனி இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தாது” எனத் தன்னிச்சையாக அறிவித்தார். இதனையடுத்துதான் அணுசக்தி தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையே இரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்பந்த வடிவம் கொடுத்ததோடு, அதனைத் தனது பதவியையே பணயம் வைத்து நிறைவேற்றினார், மன்மோகன் சிங்.

இது போன்று, காங்கிரசு தொடங்கி வைத்ததை பா.ஜ.க. தீவிரமாக நடைமுறைப்படுத்தியதற்கும் அநேக உதாரணங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் கொள்கை நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1998-ல் பதவிக்கு வந்த வாஜ்பாயி அரசும் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்கொள்கையை அச்சுப் பிசகாமல் நடைமுறைப்படுத்தியதோடு, இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் விற்கும் முடிவையும் எடுத்தது. மேலும், அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற் பதற்காகவே ஒரு தனி அமைச்சகத்தையே உருவாக்கிச் சாதனையும் படைத்தது.

நிலக்கரிச் சுரங்கங்களை ஏல முறைகூட இல்லாமல், தன் விருப்பப்படித் தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்கும் கொள்கையை மன்மோகன் சிங் அரசு மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்த வாஜ்பாயி அரசும் செயல்படுத்தியது. தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி 39 சுரங்க வயல்களை விதிமுறைகளை மீறி ஒதுக்கீடு செய்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, சி.பி.ஐ.

தொலைபேசித் துறையில் நுழைந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியத் தரகு முதலாளிகளும் தமது வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்குக் கட்டணமாகச் செலுத்திவந்த நிலையில், வாஜ்பாயி அரசு அதனைக் கைவிட்டுத் தனியார் நிறுவனங்கள் அதிரடி இலாபம் அடையும் வண்ணம் புதிய தொலைதொடர்புக் கொள்கையை அறிவித்தது. அதற்குப் பின் வந்த காங்கிரசு அரசும் அதே கொள்கையைக் கடைப்பிடித்தது மட்டுமல்ல, 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உருவாக்கிய கொள்கைதான் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

மன்மோகன் சிங் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றைகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட கொள்ளை நடந்தது என்றால், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மாடர்ன் பிரட், பால்கோ, வீ.எஸ்.என்.எல். உள்ளிட்டு இலாபத்தில் இயங்கிவந்த பல பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு நிலக்கரிச் சுரங்க ஊழல் என்றால், பா.ஜ.க.விற்கு கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி சகோதரர்கள் நடத்திய இரும்புக் கனிம ஊழல். ஊழல் குற்றச்சாட்டுக்களில் இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருப்பதை எடுத்துக் காட்டும் உதாரணங்கள் இவை.

காங்கிரசின் மதச்சார்பின்மை, இந்துயிசம் என்பது ஈரத்துணியைப் போட்டு சிறு பான்மை மக்களின் கழுத்தறுப்பதுதான் என்பதை அயோத்தி விவகாரம், மும்பய் கலவரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. ராஜீவ் காந்தி தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் தடா சட்டத்தைக் கொண்டு வந்தாரென்றால், பா.ஜ.க. பொடா சட்டத்தைக் கொண்டு வந்த து. இந்த இரண்டு சட்டங்களுமே அப்பாவி முசுலீம்கள் மீதும், புரட்சிகர ஜனநாயக சக்திகள் மீதும் தான் ஏவிவிடப்பட்டன. இதன் காரணமாகவே இந்த இரண்டு சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஆளுங்கும்பலுக்கு ஏற்பட்டது. அதேசமயம், காங்கிரசும், பா.ஜ.க.வும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இப்பாசிச சட்டங்களை வேறு பெயர்களில் உருவாக்கி, சிறுபான்மையினருக்கு எதிராக ஏவிவிடுவதில் ஒரேமாதிரியாக நடந்து வருகின்றன.

இந்தியா அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

காஷ்மீரிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை இராணுவத்தையும் பாசிச கருப்புச் சட்டங்களையும் ஏவி ஒடுக்கு வது; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற மறுப்பது; இந்து தேசியவெறிையத் தூண்டிவிடுவதற்காகவே பாக்.எதிர்ப்பு, சீன எதிர்ப்பு அரசியலைக் கிளறிவிடுவது; முசுலீம் தீவிரவாதமும் மாவோயிஸ்ட் பயங்கரவாதமும்தான் நாட்டை அச்சுறுத்தி வரும் அபாயங்களாக ஊதிப் பெருக்கி பயங்கரவாதப் பீதியூட்டுவது; ஒருபுறம் வல்லரசு, வளர்ச்சி என்ற மயக்கு வார்த்தைகளை முன்வைத்து அமெரிக்காவின் காலை நக்குவதை நியாயப்படுத்துவது; இன்னொருபுறம் தேவயானி விவகாரம் போன்றவற்றை முன்வைத்து அமெரிக்க எதிர்ப்புச் சவடால் அடிப்பது ஆகியவற்றிலெல்லாம் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகவே செயல்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் முற்றுகையில் சிக்கிக் கொண்ட சிங்களப் படையினரைக் காப்பாற்ற வாஜ்பாயி அரசு இலங்கை அரசிற்கு செய்த உதவிகளே, ஈழப் பிரச்சினையில் பா.ஜ.க. இன்னொரு காங்கிரசு என்பதை எடுத்துக் காட்டுவதற்குப் போதுமானது. மோடி பிரதமரானால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிட்டும் என வை.கோ. சவடால் அடித்துவரும் அதேசமயத்தில், பா.ஜ.க.வோ ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வைத் தேட வேண்டும் என காங்கிரசின் குரலை எதிரொலிக்கிறது.

இவையும், இவை போன்று இங்கு சொல்லாமல் விடுபட்டுள்ள ஒற்றுமைகளையும் வைத்துப் பார்க்கும்பொழுது, பா.ஜ.க.வும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமே என உச்சநீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டது விசித்திரமானதாகத் தோன்றாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த சத்ருகன் சின்ஹாவும் அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் கடந்த ஆண்டு நடந்த கூட்டமொன்றில், “காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புத்துறை, பொருளாதார சீர்திருத்தம் போன்றவற்றில் ஒரே கொள்கைதான். இரு கட்சிகளும் பொதுவேலைத் திட்டம் ஒன்றைவைத்துக் கூட்டு அரசாங்கம் அமைக்க வேண்டும். கூட்டணி அரசுகளில் சிறிய, மாநிலக் கட்சிகளின் மிரட்டல் போக்குகளுக்கு முடிவு கட்ட வேண்டும்” எனப் பேசியிருக்கிறார். நாடாளுமன்ற நெருக்கடிகள் முற்றும் வேகத்தைப் பார்க்கும்பொழுது, இவர்களின் ஆசை நிறைவேறும் வாய்ப்பிருப்பதை மறுத்து விடவும் முடியாது தானே!

– அழகு
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________