privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசந்தர்ப்பவாதத்தில் பாரம்பரிய கட்சிகளை விஞ்சும் உதயகுமாரன்!

சந்தர்ப்பவாதத்தில் பாரம்பரிய கட்சிகளை விஞ்சும் உதயகுமாரன்!

-

பாசிச அடக்குமுறைக்கு எதிராகக் கொந்தளித்து நிற்கும் மக்களை ஜனநாயக – அறவழிமுறைகளைத் தாண்டி போய்விடாதவாறு தடுக்கும் பிரபஞ்சப் பெருங்கடமை முடித்து, ஓட்டுப் பொறுக்கப் புறப்பட்டார் உதயகுமாரன்!

ரேந்திர மோடி, ஜெயலலிதா, பிரகாஷ் காரத் – பரதன் ஆகியோரோடு சுப. உதய குமாரனுக்கும் நமது மக்கள் நன்றி சொல்லவேண்டும். நரேந்திர மோடி – இந்து தேசிய மதவெறி பாசிசம், ஜெயலலிதா – பிழைப்புவாதப் பொறுக்கி அரசியல், பிரகாஷ் காரத், பரதன் – போலிக் கம்யூனிசம், சுப. உதயகுமாரன் – அரசு விதித்துள்ள எல்லையை, தடையை மீறாதவாறு அரசு சாராத தொண்டு நிறுவனங்களின் கீழ் மக்களைத் திரட்டி ஒரு கட்டுக்குள் வைப்பது; இப்படி இவர்களெல்லாம் அறிவிக்காமல் செயல்படுத்திய அவரவர்களுடைய அரசியல் கொள்கை, இலட்சியத்தின் வரம்புகளை மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தையும் கடைக்கோடி எல்லை வரை, நாட்டையும் மக்களையும் இழுத்துக்கொண்டுபோய் அதன் ஓட்டாண்டித்தனத்தையும் நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.

சுப.உதயகுமாரன்
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆம்-ஆத்மி கட்சியின் தொண்டர்கள் புடைசூழச் செல்லும் சுப.உதயகுமாரன்.

இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மக்களுக்குப் புரிய வைத்து, அவர்களைப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டுவதற்கு கம்யூனிசப் புரட்சியாளர்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள். ஆனால், மேற்படி நபர்கள் அதைவிடக் குறுகிய காலத்திலேயே எதிர்மறையில் மக்களுக்குப் புரியவைத்து வருகிறார்கள். இந்த உண்மையை கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார்.

கூடவே, இன்னும் சில உண்மைகளையும் போட்டுடைத்து விட்டார். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலைமையேற்று வழிநடத்திய “அரசுசாரா தொண்டு நிறுவனங்களின்” வரம்புகளையும், அப்போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனி ‘தம் தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்ளவேண்டும், விடைபெறுகிறோம்! தாங்கள் ஓட்டுக்கட்சி அரசியலுக்குப் போகிறோம்!’ என்றும் சொல்லாமல் சொல்லி விட்டார்.

“போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது… இடிந்தகரையில் சில ஆயிரம் மக்களின் போராட்டமாக இருந்த இது, இன்று தமிழகம் முழுக்கப் பரவியிருக்கிறது” என்று நேர்காணலைத் தொடங்கிய உதயகுமாரன், அந்த அடுத்த கட்டம் மீண்டும் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிடப்போவதை நேரடியாகவும், தேர்தல் களத்தில் குதிக்கப்போவதை மறைமுகமாகவும் அறிவித்தார்.

“ஒரு பக்கம், மக்கள் உயிரைக் கடுகளவும் மதிக்காத பொய்களைத் துணிந்து சொல்கிற தரங்கெட்ட பாசிஸ சூழல் இங்கே நிலவுகிறது. இன்னொரு பக்கம், தாதுமணல் கொள்ளையர்கள் இடிந்தகரைக்குள் புகுந்து பணம் கொடுத்தும், சாதிய எண்ணத்தைத் தூண்டிவிட்டும், மிரட்டியும் எங்கள் மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். இந்த இரண்டு பிரச்னைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல நாங்கள் எண்ணுகிறோம். இதனால்தான் இங்கிருந்து வெளியேவரும் முடிவை எடுத்துள்ளோம். ஆனால், இந்த முடிவுக்கு மக்கள் இன்னும் சம்மதிக்கவில்லை. இதனால் வெளியேறும் தேதியும் முடிவு செய்யப்படவில்லை.”

“இரண்டு ஆண்டுகளாக எங்களைப் பாதுகாத்தவர்கள் இந்த மக்கள். ஆகவே, ஊர் கமிட்டியிடமும், பெண்கள் – இளைஞர்களிடமும், நாங்கள் முதல்வரைச் சந்திக்கச் செல்லும்போது, ஒருவேளை கைது செய்யப்படலாம். அப்படி நடந்தால், நீங்கள் உங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருந்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். நாங்கள் சிறைக்குச் செல்வதால், இந்தப் போராட்டம் முடங்கிவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறோம்!” என்று போருக்குப் போகும் வீரனைப் போல சிறைக்குச் செல்லப்போவதாக விடைபெறும் உதயகுமாரன் தேர்தல் களத்தில்தான் குதித்தார்! அதற்குமுன் ஓட்டுக்கட்சித் தலைருக்கே உரிய பாணியில் வீராவேச மாகப் பல கேள்விகளை வீசுகிறார்.

ஜெயலலிதா

“உச்ச நீதிமன்றமே, ‘மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்’ என கூறியிருக்கிறது. உயர் நீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்துகிறது. பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும்கூட இந்தப் பொய் வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று கோருகின்றனர்.

இவர்கள் அத்தனை பேரும் சொல்வதைக் கேட்காமல், வழக்குகளை வாபஸ் வாங்க மாட்டோம் என்றால், எங்கள் மக்கள் அப்படி என்ன தவறு இழைத்தார்கள்? பொதுச் சொத்துகளைக் கொள்ளை அடித்தோமா? சொத்துக் குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறோமா? அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டோமா? இது ஜனநாயக நாடா? அல்லது அதிகாரிகள் தங்கள் மனதின் வன்மங்களைத் தீர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நாடா?”

“இது இடி அமீன் ஆட்சி செய்த உகாண்டா அல்ல; ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனியும் அல்ல. இது ஜனநாயக நாடு. ஊருக்குள் வந்து அடித்துத் துவைத்துப் போட்டுவிட்டுப் போய் விட முடியாது. அப்படிச் செய்தால், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே… அதில் மக்கள் பதில் சொல்வார்கள்!”

இந்த நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உதயகுமாரன் ஒரு தேர்ந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதியைப் போல பேசியுள்ளார். ஆனால், அவர் அளித்துள்ள பதில்கள், எழுப்பியுள்ள கேள்விகள் கபடத்தனங்களை ஒளித்து வைத்துக் கொண்டுள்ளன. உதயகுமாரனே பதில் சொல்ல வேண்டியவையாகவும் உள்ளன.

மக்கள் உயிரைக் கடுகளவும் மதிக்காத, பொய்களைத் துணிந்து சொல்கிற “தரங் கெட்ட பாசிஸ சூழல்” யாரால் உருவாகியது? “தாதுமணல் கொள்ளையர்கள் இடிந்தகரைக்குள் புகுந்து பணம் கொடுத்தும், சாதிய எண்ணத்தைத் தூண்டிவிட்டும், மிரட்டியும் மக்களுக்குள் பிரிவி னையை உருவாக்கி” வருவது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? இந்த இரண்டு பிரச்சினைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு உதயகுமாரன் எடுத்துச்சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

“மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்று உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் கூறியும் அதைக் கேட்காமல், வழக்குகளை விலக்கிக் கொள்ளாமல், உச்ச நீதி மன்றத்தில் வழக்காடுவது யார்? ஜெயலலிதா தானே! அவரிடம் போய் “எங்கள் மக்கள் அப்படி என்ன தவறு இழைத்தார்கள்? பொதுச் சொத்துக்களைக் கொள்ளை அடித்தோமா? சொத்துக் குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறோமா? அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டோமா? இது ஜனநாயக நாடா? அல்லது அதிகாரிகள் தங்கள் மனதின் வன்மங்களைத் தீர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நாடா?” என்று உதயகுமாரன் கேட்கவேண்டியதுதானே?

ஜெயலலிதாவிடம் போய் “இது இடி அமீன் ஆட்சி செய்த உகாண்டா அல்ல; ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனியும் அல்ல. இது ஜனநாயக நாடு. ஊருக்குள் வந்து அடித்துத் துவைத்துப் போட்டுவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் செய்தால், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே… அதில் மக்கள் பதில் சொல்வார்கள்!” என்று சவால்விட வேண்டியதுதானே? அதை விட்டு, காந்தியை விஞ்சும் சாந்தசொரூபியாக ஆட்சியாளர்களிடம் மன்றாடுகிறார்.

இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான். அதையும் அதே நேர்காணலில் உதயகுமாரன் சொல்லிவிட்டார்: “ஆளும்வர்க்கம், சாதாரண மக்களின் குரல்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்பதை இங்குள்ள மக்கள் உணர்ந்துள்ளனர். அதே நேரத்தில் இந்த அரசுடன் மோதி வெற்றிபெறக்கூடிய சூழலும் இங்கு இல்லை.

நான் அடிக்கடி சொல்லும் உதாரணம்… ஒரு கணவன் – மனைவி இருக்கின்றனர். வாட்டசாட்டமான உடல்பலம் கொண்ட கணவன், மனைவியை அடித்து நொறுக்குகிறான் என்றால், அந்த மனைவி தானும் ஜிம்முக்குப் போய் உடலை வலுவாக்கி, அவனை அடிக்க முடியாது. மாறாக, கணவனின் தொந்தரவுகள் குறித்து அக்கம் பக்கத்தாரிடம் குற்றம் சுமத்தி, அவனுக்கு உணவு தர மறுத்து, அவனுடைய இயல்பு வாழ்க்கையைத் தடுத்து நிறுத்தி வழிக்கு வரவைக்க வேண்டும். இது ஓர் ஒழுக்கபூர்வமான அழுத்தம் (a moral pressure). எங்கள் போராட்டமும் இத்தகையதுதான். இது, அறவழிப் போராட்டம். இப்படித்தான் இதைச் செய்ய முடியும். இதற்கு மேல் அரசை எதிர்த்து எங்களால் போராட முடியாது. அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி எங்களிடம் இல்லை!”

இடிந்தகரை போராட்டம்

அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தங்களிடம் இல்லை என்றால் போராட்டக் களத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதுதான் நேர்மையானது. அதற்கு மாறாக, இப்போராட்டத்தில் மக்களுடன் களத்தில் இறங்கிய ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் போராட்டத் தலைமையைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார், உதயகுமாரன்.

“பிரெஞ்சுப் புரட்சியின்போது அவர்கள் வலது தோளில் துப்பாக்கி கனத்தபோது, துப்பாக்கியைக் கீழே போடவில்லை. இடது தோளுக்கு மாற்றினார்கள்” என்று சொல்வார்கள். ஆனால், உதயகுமாரன் என்ன செய்கிறார்? போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு, ஏற்கெனவே மக்களே நம்பிக்கையிழந்துவிட்ட, அழுகிப் புளுத்து நாறும் ஓட்டுக்கட்சி அரசியலுக்குள் குதித்துவிட்டார். ஆனால், சந்தர்ப்பவாத அரசியல்வாதியைப் போல வளைத்து வளைத்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததை நியாயப்படுத்துகிறார்.

ஆனந்த விகடனின் அந்த நேர்காணலின் இறுதியில் “இந்தப் போராட்டத்தில் இப்போதும் நம்பிக்கை அளிக்கிற அம்சங்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?” என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதற்கு ஒரு தேர்ந்த ஆன்மீகத் தத்துவஞானியைப்போல பிரசங்கம் செய்துமுடிக்கிறார்.

“உண்மை, ஒழுக்கம், நேர்மை, நிதானம்… ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும், சொந்த நலன்களை மறந்து முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்காகப் போராடுபவர்கள். ‘தூய்மை, பொறுமை, நிலைத்திருத்தல்’ என விவேகானந்தர் குறிப்பிடும் மூன்று முக்கியமான அம்சங்களைக் கடைப்பிடித்து வருகிறோம். ‘பைய வித்து முளைக்கும் தன்மைபோல்’ என்று பாரதியாரின் வாக்குக்கேற்ப, இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் பெரும் கடமையுடன் எங்கள் பயணம் தொடர்கிறது!”

“இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் பெரும் கடமை” என்று உதயகுமாரன் சொல்லும்போது அது இந்நாட்டையும் மக்களையும் மட்டுமல்ல, இந்த உலகத்தையே அணுஉலை ஆபத்திலிருந்து காப்பதுதான் என்று யாரும், குறிப்பாக கூடங்குளம் அணு உலைக்கெதிராகப் போராடும் மக்கள் கருதிவிடக் கூடாது. அப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எல்லா ஜனநாயக வாசல்களையும் – வழிமுறைகளையும் பாசிச அரசு மூடிவிட்ட பிறகு என்ன செய்வது? கொந்தளித்து நிற்கும் மக்கள் அந்த ஜனநாயக வாசல்களையும் – வழிமுறைகளையும் தடைகளையும் தாண்டிப்போய்விடாதவாறு தடுத்துத் திசைதிருப்பி விடவேண்டும் என்ற புனிதக் கடமையைதான் உதயகுமாரன் சொல்கிறார். ஓர் ஒழுக்கபூர்வமான அழுத்தம் (a moral pressure). அறவழிப் போராட்டம். இப்படித்தான் இதைச் செய்ய முடியும். இதற்கு மேல் அரசை எதிர்த்து மக்களால் போராட முடியாது. அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி மக்களிடம் இல்லை என்று அவர்களை இருத்தி வைப்பது. உதயகுமாரன் போன்றவர்கள் தலைமையேற்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதைத்தான் தமது இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன.

– பச்சையப்பன்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

  1. நரேந்திர மோடி – இந்து தேசிய மதவெறி பாசிசம், ஜெயலலிதா – பிழைப்புவாதப் பொறுக்கி அரசியல், பிரகாஷ் காரத், பரதன் – போலிக் கம்யூனிசம், /////

    வினவு – புரோட்டா மாஸ்டர் (ஸாரி) புரட்சி மாஸ்டர்..

    • வினவு – புரோட்டா மாஸ்டர் (ஸாரி) புரட்சி மாஸ்டர்..
      டமிலன் சாரி தமிழன் உங்களுக்கு டங்க் ஸ்லிப் ஆகவில்லை. சிந்தனையே ஸ்லிப் ஆகியுள்ளது என்ன செய்ய…..?

  2. தமிழ் முகமூடியை அணிந்துகொண்டு பார்ப்பனியம் வருவதைப் போல பார்ப்பனியத்தின் அடிபொடியாக தமிழன் என்கிற பெயரில் இவர் வந்திருக்கிறார். புரோகித கும்பலுக்கு சொம்படிப்பவர்களுக்கு எல்லாம் புரோட்டா மாஸ்டர் என்றால் கேவலமாக தான் இருக்கும். ஆனால் அவரைப்போன்ற உழைக்கும் மக்கள் தான் மோடி போன்ற கொலைகாரர்களை தோசைக்கல்லில் போட்டுப் புரட்டப்போகிறார்கள்.

    எல்லாம் சரி உதயகுமாரனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

  3. மக்கள் வாக்களிக்காது விட்டால் மீண்டும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதோன் வரும். அப்படியென்றால் என்னதான் முடிவு? கட்டாயம் வேண்டாத விருந்தாளிகளை வோட்டுப் போடாமல் வீட்டுக்கே அனுப்ப வேண்டும். புதிதாக வருகிறவன் கொள்ளைக்காரனாக மாறினாலும் மக்களுக்கு நட்டம் ஏதும் கிடையாது. ஊழல் கொள்ளைக் கூட்டத்துக்குத்தான் நட்டம்.

    வந்தால் மலை போனால் … என்பதாக போகட்டுமே

  4. சி.பி.எம் (மா-லெ)கட்சி (அதன் தமிழக பிரிவு) இந்த தேர்ததில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை, சிறிபெரும்புதூர் போன்ற தொகுதிகளில். அவர்களும் உங்களை போன்றவர்கள் தான். சி.பி.எம் / சி.பி.அய் களை போலிகள் என்று நிராகரிப்பவர்கள். அவர்களை போன்றவர்களுக்கும் சொந்த புத்தி கிடையாது, அவர்களும் போலிகள் என்று உடனே சொல்வீர்களே !!

    சமீபத்தில் கிண்டியில் ம.க.இ.க ஒட்டியிருந்த பெரிய போஸ்டர் ஒன்றில் : பாசிச-காவி கும்பலை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அடுத்த வரியில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் சொல்ல்பட்டிருந்தது. பெரிய முரண்பாடாக இருந்ததால், சிரிப்பு வந்துவிட்டது. உங்க பேச்ச கேட்டு, பலரும் இந்த தேர்தலை புறக்கணித்தால், பிறகு மிக எளிதாக (தம்முடைய core voters கள் மூலம்) காவி-கும்பல் ஆட்சியை பிடித்துவிடுமே ?

    கடைசியாக சுப.உதயகுமாரனும் ‘துரோகி’ ஆக்கிவிட்டீர்கள். இப்படி தப்புதப்பாக கணித்து தான் கம்யூனிஸ்டுகள் ஆண்டாண்டு காலமாக உருப்புடாமல் போனார்கள் என்பதே வரலாறு. NGOக்களை 50களில் அமெரிக்கா ‘உருவாக்கிய’ போது கம்யூனிச பரவலை தடுக்கும் நோக்கம் இருந்தது. ஆனால் அன்றே இது எல்லா என்.ஜி.ஓக்களுக்கும் பொருந்தாது. ஆனால் பனிபோர் ஓய்ந்து 25 ஆண்டுகள் ஆகி, இன்று கம்யூனிச பூச்சாண்டி எங்கும் யாரையும் பயமுறுத்தாத காலங்கள். இன்னும் அதே ‘நோக்கத்தை கற்பித்து’ அதே பல்லவியை பாடினால் எப்படி தோழர் ? மாற்றம் என்பதே மாறாத தத்துவம் என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறாரே ? என்.ஜி.ஓக்களுக்கும் இது பொருந்தும் தானே ?
    உங்களுடன் முரண்ப்டுவர்களுக்கும் ஒரு லட்சியவாதம், நன்னோகம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாதவரை உங்களால ground reality அய் சரியாக கணிக்க முடியாமல் இப்படி சகட்டு மேனிக்கு உங்க ‘தோழமை சக்திகளையும்’ துரோகிகளாக்கி, அந்நியப்பட்டு போவீர்கள்.

  5. சுப வீர உதய குமாரனின் சாயம் வெளுத்து ரொம்பநாள் ஆச்சு. அதில் சுபமும் இல்லை, வீரமும் இல்லை, உதயமும் இல்லை, வெறும் மிஷனரி ஊளை தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க