privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேர்தலை புறக்கணிக்கும் நெய்வேலி தாண்டவன் குப்பம் மக்கள் !

தேர்தலை புறக்கணிக்கும் நெய்வேலி தாண்டவன் குப்பம் மக்கள் !

-

டலூர் மாவட்டம் நெய்வேலி நகரப்பகுதியில் என்.எல்.சி. ஆளுகைக்கு உட்பட்ட தாண்டவன் குப்பம், ஒர்க் ஷாப் கேட், ஆட்டோ கேட், அண்ணா ஸ்டாப் ஆகிய பகுதிகளில் தற்போது சுமார் 5,000 மக்கள் வசிக்கிறார்கள். நெய்வேலி முதல் சுரங்கம் 1954-ல் உருவாக்கபட்டபோது கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே இருக்கிறார்கள்.

கனரக வாகனங்கள் வருவதற்கு முன் மண் வெட்டி, கொந்தலம் ஆகியவற்றை வைத்து சுரங்கம் வெட்டியவர்கள், தலையில் வெடிமருந்து சுமந்து சுரங்கத்தில் இறங்கியவர்கள், என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளிகளாகவும், சொசைட்டி தொழிலாளிகளாகவும் இருப்பவர்கள் இவர்கள். என்.எல்.சி.நிர்வாகம், “புல்டோசர் வைத்து குடிசைகளை இடிக்கபோகிறேன் எங்காவது ஓடிவிடுங்கள்” என மூன்று தலைமுறைகளாக இருக்கும் இம்மக்களை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தமிழக அரசு அதிகாரிகளோ, “என்.எல்.சி இடம் நாங்கள் என்ன செய்ய முடியும்” என கைவிரிப்பதுடன் போராடும் போது எல்லாம் பேச்சு வார்த்தை நடத்தி கபட நாடகம் ஆடுகின்றனர்.

என்.எல்.சியின் இரண்டு அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி, வெளி மாநிலங்களுக்கு போகிறது, நிரந்தர தொழிலாளிகள், என்.எல்சி. அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள் வீட்டில் நாய் ஷெட்டுக்கும் மின் விளக்கு, தடையற்ற தண்ணீர் விநியோகம் என உத்திரவாதமான சொகுசு வாழக்கைக்கு நடுவில், இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடையாது. மின்விளக்கு கிடையாது. நம்பமுடிகிறதா? ஆனால் 50 ஆண்டுகளாக இப்படித்தான் வாழ்கிறார்கள்.

“தெருவிளக்கு கொடு, ஏரியாவுக்கு குடிநீர் கொடு, ஏன் நிறுத்தினாய்” என்பதற்கான போராட்டம்தான் இத்தனை நாள் இந்த பகுதி மக்கள் நடத்தியது.

தற்போது, “எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும். மாற்று குடியிருப்பு கொடு” என 2014 தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களை தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்க என் .எல்.சி நிர்வாகம் திடீரென்று தெருவிளக்கு, குடிநீர் நிறுத்திவிடும், “அனைவரும் காலி செய்யுங்கள்” என மிரட்டும். மக்கள் சாலை மறியல் செய்வார்கள், தற்காலிகமாக மின்சாரம் வரும். மக்கள் கொக்கி போட்டு வீட்டுக்கு இழுத்து விடுகிறார்கள் என காரணம் சொல்லும். குழந்தைகள் மாணவர்கள் எப்படி வெளிச்சம் இல்லாமல் வாழ்வார்கள் என்று அதிகாரிகள் யோசிப்பதில்லை. பாம்பு விசப்பூச்சிகளுக்கு நடுவில் கட்டாயமாக வாழ வேண்டும் என மக்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள். செல்வம் என்ற மாணவன் தெருவிளக்கில் படித்து நான்கு பாடங்களில் நூறுசதவீத தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்கிறார்.

ஆகஸ்டு 15, 2013  அன்று தாண்டவன் குப்பம் பகுதி மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் அறிவித்தார்கள். குடிநீர் வேண்டும். மின்சாரம் வேண்டும் என்பதுதான் கோரிக்கை. விருத்தாசலம் வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பள்ளி மாணவர்கள் தேர்வு வந்து விட்டது தெருவிளக்கை அணைக்காதீர்கள் என பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கரண்ட் வரவில்லை. கஞசி காய்ச்சி நடத்தும் போராட்டத்துடன் மறியலிலும் ஈடுபட்டார்கள். மண்டபத்தில் சிறை வைக்கபட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் அனைவரும், “குடிநீரும்,மின்சாரம் வந்தால் நாங்கள் வீட்டுக்கு போகிறோம், இல்லை யென்றால் ஜெயிலுக்கு போகிறோம். கொலை குற்றவாளிகளுக்கு கூட இவைகள் மறுக்கப்படுவதில்லை. உழைத்து வாழும் எங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது” என காவல்துறை விடுதலை செய்த போதும் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்தனர். தற்காலிகமாக தெருவிளக்கு பொது குடிநீர் நாள் ஒன்றுக்கு அரைமணி நேரம் வரும்.  தெர்மலுக்கு ஒரு கி.மீ.மந்தாரக்குப்பம் இரண்டு கி.மீ.என சைக்கிளில், இருசக்கர வாகனத்தில் குடத்தில் தண்ணீர் எடுப்பது தினம்தோறும் நடக்கும் நிகழ்வுகள்.

1317 பேர் ரேசன் அட்டையுடன் இருப்பவர்கள். 1000 பேர் என்எல்.சியில் பணிபுரிகிறார்கள். சொசைட்டியிலும், டோசர், ஹிட்டாச்சு போன்ற கனரக வாகனங்களை இயக்குவதிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். கன்வேயர் பெல்டில் இருந்து கீழே விழும் நிலக்கரிகளை மீண்டும் சவுலால் எடுத்து போடுவது இவர்கள் தான். ஆனால் எந்தவித பாது காப்பு கவசங்களும் கிடையாது. தானே புயல் பாதிக்கபட்டபோது நுற்றுக்கணக்கான மரங்களை அப்புறப் படுத்தியவர்கள் இவர்கள் தான். சுரங்கத்தில் தண்ணீர் நிரம்பினால், கான்கிரீட் போடுவது போன்ற ஆபத்தான வேலைகளில் உயிரை பணயம் வைத்து ஈடுபடும் இந்த மக்கள் இன்று சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கிறார்கள்.

என்.எல்சி.அதிகாரிகளின் வீட்டில் பணிபுரிவது, காய்கறி, பழங்கள் தினக்கூலி என என்.எல்.சியிலேயே வாழும் பெண்கள். என்.எல்.சி நீரை தேக்கி வைக்க 40 ஏக்கர் பரப்பளவில் தோண்டப்பட்ட இரண்டு ஏரிகளும், கரியின் சாம்பலை தேக்கி வைக்க சாம்பல் ஏரி 40 ஏக்கரில் மூன்றும் வெட்டியதில் இந்த பகுதி மக்கள்தான். 1990-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு செட்டில் மெண்ட் ஓரிரு லட்சங்கள்தான், பென்சன் கிடையாது, அது போல் சொசைட்டியில் ஒப்பந்த தொழிலாளியாகவே பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இவர்களின் வாரிசுகள் தான் தாண்டவன்குப்பம் பகுதி மக்கள். இங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படித்தவர்கள் இன்று 60 வயதை தாண்டி வேலை செய்து வருகிறார்கள். தற்போது அந்த பள்ளி கூடத்தை என்.எல்சி. அகற்றி விட்டது.

என்.எல்.சியின் அங்கீகரிக்கபட்ட தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஆண்டகுருநாதன், கலியன், வீரன், அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த பண்டரிநாதன், அந்தோணி சாமி, ஏழுமலை, சுந்தரமூர்த்தி, ஜனதாதளம் செங்கால்,சி.ஜ.டி.யு சங்கிலி பாண்டியன், வேல்முருகளன் என பலர் தாண்டவன் குப்பம் பகுதியில் வாழ்ந்தவர்கள். சி.பி.எம்.தலைவர் ராமகிருஷ்ணன் இங்கு பல நாட்கள் தங்கி இருந்து கட்சி பணிகள் செய்திருக்கிறார். ஆனால் எந்த கட்சியும் இந்த மக்களுக்கு குரல் கொடுப்பதில்லை.

மாறாக என்.எல்.சி. அதிகாரிகள் குடிநீர் கேட்டு, மின்சாரம் கேட்டு போராடினால் சொசைட்டி தொழிலாளிகளை திடீரென்று பணியிலிருந்து நீக்கி மிரட்டுகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்வி ராம ஜெயம் கோரிக்கை பற்றி பேசாமல், “வாக்களியுங்கள் பிறகு பார்க்கலாம்” என மிரட்டுகிறார். அதிகாரிகள், “தெருவிளக்கு குடிநீர் தருகிறோம், தேர்தல் புறக்கணிப்பை கைவிடுங்கள்” என பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

ஆனால் அந்த மக்களின் மாற்று குடியிருப்பு கொடுங்கள் என்ற கோரிக்கை பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள். மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, பல ஆண்டுகளாக வாழ்ந்த குடிசையை இடிப்பது எப்படி என என்.எல்சி. அதிகாரிகள் இரவு பகலாக திட்டம் தீட்டுகிறார்கள். தமிழக அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர், தொழிற் சங்க தலைவர்கள், ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகள் என்.எல்.சிக்கு ஆதரவாக உள்ளார்கள்.

“எங்கள் வாழ்வுரிமைகளை பற்றி பேசாத அரசியல் கட்சிகள் வாக்கு கேட்டு எங்கள் பகுதிக்கு வரக்கூடாது. தேர்தலை புறக்கணிக்கிறோம்” என தாண்டவன் குப்பம் பகுதி மக்கள் தினம்தோறும் போராடுகிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு பீர், பிரியாணி காசு என செல்லும் இந்த நிலையில் தம் மக்களுக்காக இரவு பகலாக போராடுகின்ற இந்த பகுதி இளைஞர்களின் செயல்பாடுகள் என்.எல்சியை எதிர்த்து போராட தயங்கும் தொழிற்சங்கங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் போராட்டமாக இருக்கிறது.

தமிழர்களை உரிமைகள் அற்ற அகதிகளாக ராஜபக்சே ஈழத்தில் நடத்துகிறான். நெய்வேலியில் வாழும் இந்த மக்களுக்கு என்ன பெயர்?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம்.

  1. “குடிநீர் வேண்டும். மின்சாரம் வேண்டும்” இது மக்களின் கோரிக்கை! 66 ஆண்டு கால ‘சுதந்திர’ இந்தியாவின் சாதனை இதுதான். காவிரிக்கரையில் வாழ்பவனுக்கே குடிக்கத் தண்ணீர் இல்லை; மின்சாரம் தயாரிக்கும் வளாகத்திற்குள் வாழ்பவனுக்கு மின்சாரம் இல்லை; ஏன் என்று கேட்க வாக்குச்சீட்டு அரசியல்வாதி எவனுக்கும் திராணி இல்லை; பிறகு எதற்கு இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

    வாக்கு உன் வாழ்வைப் பறிக்கும். போராடு! போராட்டம் ஒன்றுதான் உன்னை வாழ வைக்குக்கும்!

    • ஊரான் அவர்களே,

      குடிநீர் இருப்பு, மின் உற்பத்தி திறன், உணவு உற்பத்தி இவை அனைத்தும் நாட்டின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இருக்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் மின் பற்றாகுறை உள்ளது. ஒட்டு வாங்கி ஜெயிப்பவர்கள் மக்களுக்கு இந்த அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றால் அவர்களை மக்கள் தூக்கி எரியும் வகையில் சட்டம் கொண்டு வரலாம். அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தேர்தலையே புறக்கணித்தால் நாட்டில் அமைதியின்மை, சர்வாதிகாரம், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது போல ஆகி விடும்.

      இலவசங்களில் ஏமாறாமல் நாட்டின் குடிநீர், மின்சாரம் போன்ற முக்கிய விடயங்களுக்கு அரசியல் கட்சிகள் என்ன விதமான தீர்வை சொல்கிறார்கள் என்று மக்கள் யோசித்து வோட்டு போட்டால் நாடு நன்றாக இருக்கும்.

      மழை அதிகப்படியாக பெய்யும்போது வெள்ளம் ஏற்படுவதும்,
      குறைவாக பெய்யும்போது பற்றாகுறை ஏற்படுவதும்,
      சரியாக திட்டமிடாமல் இருப்பதை தான் காட்டுகிறது.
      அந்த கால அரசர்கள் ஏன் அத்தனை ஏரிகளை குளங்களை அமைத்தார்கள்? இது போல மழைநீர் வீணாகாமல் இருப்பதற்காக தான்.
      ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
      ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்டி கொள்கிறோம். காடுகளை அழிக்கிறோம், விளைநிலங்களிலும் வீடு கட்டி கொள்கிறோம். எல்லாவற்றிகும் அரசாங்கத்தை மட்டும் குறை கூற முடியாது. பொதுமக்களான நாமும் தவறுகளை செய்கிறோம்.

      வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
      ஏறி நிலங்களையும் விலை நிலங்களையும் ஆக்கிரமித்து வீடு கட்டுபவன் குடிதண்ணீர் இல்லை, உணவு விலை ஏறிவிட்டது என்று குறை கூறுவதில் என்ன இலாபம்?

      மாற்றத்தை அரசாங்க அளவில் அல்ல, பொதுமக்கள் அளவிலும் கொண்டு வர வேண்டும்.

    • தற்போதைய நிலவரப்படி மத்தியில் அடுத்து பாஜக ஆட்சி தான் அமையும் என்று தெரிகிறது.
      ஐந்து வருடம் கழித்து நண்பர் நெய்வேலிவாசி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
      ஒரு முறை மோடி ஆண்ட பின்னர் உங்களுக்கு தெரியும். தற்போது மோடியின் ஆன்லைன் ஆர்மியின் கைங்கரியத்தில் வலைத்தளங்கள் எங்கும் மோடி அலை, நமோ அலை என்று பின்னூட்டம் இட்டு கொண்டே இருக்கிறார்கள். பார்த்துக்கொண்டே இருங்கள், தற்போதைய முகமூடியை தாண்டி மோடியின் உண்மை முகம் தெரியும் காலத்தில் இந்த ஆன்லைன் ஆர்மிகள் எங்கே இருக்கிறார்கள் என்று.

  2. புரட்ச்கி போராட்டாம் என்பது முட்டாள் தனம். ஒட்டு போடாமல் ஜனனாயகம் இல்லை. குஜராத் பார்து தெரிது கொல்லுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க