privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்உசிலையில் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம்

உசிலையில் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம்

-

பாராளுமன்றத்தில் நாட்டாமைத்தனம் அந்நியனுக்காம்! அதில் தலையாரித்தனம் இந்தியனுக்காம்!
இதற்கு வாக்களிப்பது கடமையா? அல்லது மடமையா?
பணத்திற்கும், மதுவுக்கும், சாதி, மத, உணர்வுக்கும் வாக்களிப்பது நாட்டுக்கும் நமது வாழ்வுக்கும் செய்யும் துரோகம்!

என்ற அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முருகன் கோவில் அருகில் 12.04.2014 அன்று மாலை 6.30 மணியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வி.வி.மு. தோழர் ரவி தலைமையில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் உசிலைவட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி, உசிலை வட்டார வி.வி.மு செயற்குழு உறுப்பினர் தோழர் சந்திரபோஸ் இருவரும் துவக்க உரையும், பு.ஜ.தொ.மு மாநில அமைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சிறப்புரையும் வழங்கினார்கள். இந்தப் பொதுக்கூட்டம் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தோழர் ரவி தனது தலைமை உரையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் வந்தால் மூன்று மாதத்திற்கு நாடு முழுவதும் திருவிழா கோலம் போல் காட்சி அளிக்கும். ஆனால், இன்று இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள் சுதந்திரமாக தாம் விரும்பியபடி மக்களை சந்தித்து ஓட்டு கேட்கக் கூட அனுமதி இல்லை. வேட்பாளர்களுக்கே ஜனநாயகம் மறுக்கப்படும் சூழ்நிலையில் ஓட்டு போடுவது மக்களின் ஜனநாயகக் கடமை, எனவே ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள் என்று தேர்தல் கமிஷன் கூறுவது பம்மாத்து வேலை, ஓட்டு போடுவதால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் தீரப் போவதில்லை. தனியார்மயக் கொள்கையை ஒழித்து புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்” என்று பேசினார்.

தோழர் சந்திரபோஸ் தனது உரையில், “நேற்று வரை லஞ்சத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்த மாவட்ட ஆட்சியர் முதல் உள்ளூர் தலையாரி வரை அனைவரும் இன்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள். இவர்கள் தேர்தலை நேர்மையாக நடத்த புதிய வடிவங்களில் கேமராவுடன் இறங்கியுள்ளார்கள். லஞ்சத்தைப் பற்றியும், ஊழலைப் பற்றியும் பேசுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது” என்று பேசினார்.

தோழர் குருசாமி தனது உரையில், “இன்றைய ஓட்டுக் கட்சிகள் மக்களை சாதிரீதியாக பிளவுபடுத்தி ஒவ்வொரு சாதியின் தலைவரும் நாம்தான் ஆண்ட பரம்பரை என்று கூறி மக்களிடம் ஓட்டு வாங்கிச் சென்று ஆளும் வர்க்கத்திற்கு அடிமையாக வேலை செய்கிறார்கள். நாம் ஆண்ட பரம்பரையினர் இல்லை, இன்று வரை அடிமை பரம்பரையாகத்தான் இருக்கிறோம். எனவே, நாம் விடுதலை அடைய வேண்டுமென்றால் வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தினால்தான் விடுதலை அடைய முடியும்” என்று உழைக்கும் மக்களாகிய நாம் வர்க்கமாக ஒன்று சேருவதன் அவசியத்தை உணர்த்தி பேசினார்.

தோழர் வெற்றிவேல்செழியன் தனது சிறப்புரையில்,”மக்களுக்கு தேர்தலின்மேல் நம்பிக்கை குறைந்து விட்டது என்பதை புரிந்துகொண்டு ஓட்டு சதவீதத்தை உயர்த்தி செத்துப் போன ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க இந்த அரசுபொன்னான வாக்குகளை போடுங்கள் என்கிறது. ஆனால், பொன்னுக்கு மதிப்பு அதிகம் என்றும் தேர்தலில் எவன் அதிக மதிப்பு (பணம்) கொடுக்கிறானோ அவனுக்கு ஓட்டுப் போடுவோம் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர். தேர்தலில் சரத்குமார் போன்றவர்கள் அம்மாவிற்கு ஓட்டுப் போடுங்கள், அவர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே வறுமையை ஒழித்து விடுவார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். போன சட்டமன்ற தேர்தலில் இப்படித்தான் ஜெயாவிற்கு ஓட்டு கேட்டார்கள். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணம் இரண்டு மடங்கு அதிகமாகியது. மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளானார்கள்.

மக்கள் காசு வாங்கி ஐநூறுக்கும் ஆயிரத்திற்கு ஒருமுறை ஓட்டு போடுவதன் விளைவு ஒரு வருடத்தில் 5 மடங்கு விலைவாசி அதிகமாகி சராசரியாக ஒரு குடும்பம் வருடத்திற்கு ஒரு லட்சம் வரை செலவாகிறது. ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டுவரும் கட்சிகளாகிய அ.தி.மு.கவில் ஜெ எடுப்பதுதான் முடிவு. தி.மு.க.வில் கருணாநிதி எடுப்பதுதான் முடிவு. அவர்கள் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டினாலும் அது ஒரு சடங்குதான், மாறாக உறுப்பினர்கள் முடிவு எடுப்பதில்லை. எனவே ஜனநாயகத்தை காப்பாற்றப் போவதாகக் கூறும் இன்றைய எந்த ஓட்டுக்கட்சிகளுக்குள்ளும் ஜனநாயகம் இல்லை, செத்து விட்டது. சர்வாதிகார, எதேச்சதிகார முடிவுதான் எடுக்கப்படுகிறது. ஓட்டு கேட்கும் தகுதிகளாக தற்போது பணபலம், சாதிபலம், அடியாள் (பொறுக்கியாக இருக்க வேண்டும்) பலம், இருந்தால்தான் அவர் வேட்பாளராக இருக்க தகுதியானவராக பார்க்கப்படுகிறது. இந்த தகுதி உடையவர் எந்த கட்சியில் நின்றால் ஜெயிக்கலாம் என்ற பிராண்டு வகையாகத்தான் அரசியல் கட்சியை பார்க்கிறார். இப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் இருக்கிறதா என்றால் இல்லை. ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்காத அரசு அதிகாரிகளிடமே அதிகாரம் அனைத்தும் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை (சட்டமன்றம், பாராளுமன்றம்) அரசு அதிகாரிகள் நினைத்தால் கலைத்து விடலாம். ஆனால், நாம் தேர்ந்தெடுத்த இந்த அரசியல்வாதிகளால் இந்த அரசு அதிகார அமைப்பை கலைக்க முடியாது. இந்த பாராளுமன்ற முறையே வெள்ளைக்காரன் தன்னை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட முறை. இதில் அரசு அதிகாரிகளுக்குத்தான் அதிகாரம் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

1990-க்கு முன்பு (புதிய பொருளாதார கொள்ளை அமுல்படுத்துவதற்கு முன்பு) மக்கள் நலன் என்றும், அரசியல்வாதிகளுக்கு சற்று அதிகாரம் என்றும் பெயரளவில் இருந்தது. ஆனால், 1990-க்குப் பின்பு உலக வர்த்தகக் கழகம் சொல்வது எதுவோ அதுதான் நடைமுறையாகி விட்டது. இதன்மூலம் கொஞ்சம் இருந்த பெயரளவிலான அதிகாரமும் பறிக்கப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு கைமாறும்படியான சட்டம் இயற்றப்பட்டது, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முறையும் போதாது என்று அதிகாரம் அனைத்தும் ஆணையம் என்ற மூன்றாவது பிரிவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய அரசு உலகவர்த்தகக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து விட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கட்டுப்பாட்டு வாரியம் என்று அனைத்துக்கும் கட்டுப்பாடு போடப்பட்டது. இந்த கட்டுப்பாடு ஆணையம் நேரடியாக உ.வ.கழகத்தின் உலக வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும். இந்த குழுவில் பன்னாட்டு கம்பெனி உறுப்பினர்கள் உள்பட அரசு அலுவலர்களும் சேர்ந்து அமைக்கப்பட்டிருக்கும். இதில் எடுக்கும் முடிவில் இந்திய அரசோ, அரசாங்கமோ தலையிடமுடியாது. உதாரணமாக, மின்கட்டண உயர்வை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால்அது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எடுத்த முடிவு என்று சட்டமன்றத்தில் ஜெயா கூறினார். இனி அனைத்து துறைக்கும் ஆணையம் வரும்! இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளும் நாட்டின் இறையாண்மையும் பறிபோவதோடு, நாடும் மறுகாலனியாகி வருகிறது.

இந்திய நாட்டின் நிலைமை இப்படி மறுகாலனியாக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க மறுபுறம் வளர்ச்சி என்று கூறி ஓட்டு கேட்டு வருகிறார்கள். செல்போன், டி.வி, மிக்ஸி,மின்விசிறி, நூறுநாள் வேலை போன்றவைகள் அனைத்தும் வழங்கி வளர்ச்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி வருகிறார்கள். கடன் வாங்கி விவசாயம் செய்த விளைபொருளுக்கு விலையில்லை. விவசாயிகளின் வாழ்க்கையும்,சிறுதொழில்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. டெல்டா-மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் யாருடைய வளர்ச்சிக்கு? சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய மூலதனம்,நான்கு ரோடு, மெட்ரோ ரயில் திட்டம், ரியல் எஸ்டேட், விவசாயத்தை அழித்த தொழிற்சாலை, சிறப்பு பொருளாதார மண்டலம், தண்ணீர் தனியார்மயம், கனிமவளங்கள் சூறையாடல், நோக்கியாவிற்கு வரிவிலக்கு போன்றவைகள் எல்லாம் யாருடைய வளர்ச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அனைத்தும் பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்காகவும், தரகு முதலாளிகளின் கொள்ளைக்காகவும்தான் என்பதையும், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகிள்ல 90 சதவீதம் நிரந்தரமற்ற தொழிலாளிகளும், ஒரு தொழிலாளிக்கு ரூ 3,000 முதல் ரூ 4000 வரை கூலி கொடுத்து உழைப்பு சுரண்டப்படுவதும் மக்களின் வளர்ச்சிக்கா?

இந்தியநாடு பன்னாட்டு கம்பெனிகள் முதலீடு செய்வதற்கான ஒரு கம்பெனியாக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் இறையாண்மை அழிக்கப்பட்டு அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபத்திற்கு சட்டபூர்வமாக தாரை வார்க்கப்பட்டுள்ளதுதான் இந்த தேர்தல் செய்த சாதனை என்று விளக்கினார். இந்த திருப்பணிக்கு நீதிமன்றம், பத்திரிகை, போலீஸ், ராணுவம், போன்ற அனைத்தும் முதலாளிகளுக்கு சேவகம் செய்யத்தான் உள்ளது. இதற்கு மாற்றாக உண்மையான தேர்தல் வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்பதை தோழர் லெனின் அவர்களின் பார்வையிலிருந்து கூறலாம். அதாவது மக்களுக்கு இரண்டு அதிகாரம் இருக்க வேண்டும்.

  1. மக்களின் தேவைக்காக கோரிக்கை வைப்பது!
  2. கோரிக்கை நிறைவேறவில்லையெனில் தண்டிப்பது அல்லது திருப்பி அழைப்பது.

அதாவது மக்கள் தேர்ந்தெடுக்கும் மக்கள் கமிட்டிக்கே அதிகாரம் இருக்க வேண்டும். கமிட்டியிடம் வைக்கும் கோரிக்கை நிறைவேற வேண்டும். இல்லையெனில் திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தேர்தல் முறைதான் நமக்கு வேண்டும். தற்போது இந்தியாவில் இருக்கும் இரட்டை ஆட்சிமுறையை அகற்றி மக்கள் கமிட்டிக்கே அதிகாரம் இருக்கும்படியான அரசு அமைக்க வேண்டும். இதில், கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும். இது முடியுமா? என்று மக்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்தியாவில் ஜனநாயகம் செத்து அழுகி வருகிறது. முதலாளித்துவ அரசும் ஆளத் தகுதி இழந்து விட்டது. இதனை அடக்கம் செய்ய ஆள் இல்லாததால் அது அரியணையில் நீடித்து இருந்து வருகிறது. எனவே, செத்து அழுகி நாறும் ஜனநாயகத்தை நீங்களும் நாங்களும் சேர்ந்து அடக்கம் செய்வோம், வாருங்கள்”

என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இறுதியாக ம.க.இ.கவின் புரட்சிக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுக்கூட்டம் ஆரம்பிக்கும் போது தேர்தல் அதிகாரி என்று இருவர் கேமராவுடன் வந்து பொதுக்கூட்டத்தில் அமர்ந்திருந்த பொதுமக்களை ஒவ்வொருவராக படம் எடுத்தார். உடனே நமது தோழர்கள்,  “மேடையில் இருக்கும் எங்களைத்தான் நீங்கள் படம் எடுக்க வேண்டும். பொதுமக்களை படம் எடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்” என்று கேட்டார்கள். உடனே அருகிலிருந்து உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் அருகில் வந்து அந்த தேர்தல் அதிகாரியிடம், “இந்த பொதுக்கூட்டம் நடத்தும் தோழர்கள் நேர்மையானவர்கள், இது போல இவர்களிடம் நடக்க தேவையில்லை. எனவே, பொதுகூட்டத்திற்கு இடையூறு செய்யாமல் தூரத்திலிருந்து வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அந்தத் தேர்தல் அதிகாரி வந்த வழியே திரும்பி சென்று விட்டார்.

பார்வையாளர்களில் ஒருவர், பொதுக்கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து, “மதுவும் பணமும் வாங்காமல் இவ்வளவு தன்னடக்கத்தோடு அமர்ந்திருக்காங்களே, இவர்கள்தான் கம்யூனிஸ்டுகள்” என்று கூறினார். ஒரு வியாபாரி பொதுகூட்டத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பார்த்து உற்சாகம் அடைந்து, “இந்த கட்சியில்தான் சேர வேண்டும், இதுதான் பாட்டாளி வர்க்க கட்சி, இதில் என்னை இணைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும், யாரை பார்க்க வேண்டும்” என்று ஆவலாக கேட்டார். ஒரு அரசு போக்குவரத்து நடத்துனர் பொதுக்கூட்டத்தில் தோழர் வெற்றிவேல் செழியன் உரையை தூரத்தில் கேட்டு வந்ததாக கூறி கூட்டத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பார்த்து விட்டு சென்றார்.

பொதுக்கூட்டத்திற்கு வழக்கமாய் வருபவர்களை விட அனைத்து பிரிவினரும் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், அரசுத் துறையினர் கூட்டத்திற்கு தள்ளி நின்று அதிகநேரம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பு.ஜ செய்தியாளர்
உசிலம்பட்டி