privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்சிபிஐ சிபிஎம் போலிகளே, மானமிழந்த வாழ்க்கை வேண்டுமா?

சிபிஐ சிபிஎம் போலிகளே, மானமிழந்த வாழ்க்கை வேண்டுமா?

-

மத்துப் போன ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் பிரச்சாரம் ‘சூடு’ பிடித்திருக்கிறது. மக்களை ஏமாற்றி எப்படியாவது பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் தங்களது வழக்கமான பொய்களை அள்ளி வீசி தங்களது பிரச்சாரத்தை செய்கின்றன. மக்களை ஏமாற்றுவதிலும், ஓட்டுப் பொறுக்குவதிலும் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக அரசியல் அனாதைகளாகிவிட்ட போலி கம்யூனிஸ்டுகளும் தங்களது ‘கொள்கைகளைப்’ பிரச்சாரம் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் இந்த, சிபிஎம் – சிபிஐ கூட்டுக் களவாணிகளால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஆர்.விசுவநாதன் அவர்களின் சொத்து மதிப்பு 1 கோடியே 32 இலட்சம் என தனது வேட்பு மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த ‘பாட்டாளி’ வர்க்கப் போராளிகள் தான் முதலாளித்துவத்தை ஒழிக்கக் கிளம்பியுள்ள ’காம்ரேடுகள்’. இதில் ஓட்டுக் கட்சிகளுக்குத் தாங்கள் தான் மாற்று என்ற பெருமை வேறு. இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமே இல்லை போலிருக்கிறது.

சி.பி.ஐ - சி.பி.எம்புதுச்சேரியில் மற்ற ஓட்டுக் கட்சிகளை மிஞ்சும் வகையில், ஓட்டுப் பொறுக்குவதில் ஒருபடி மேலே சென்றுவிட்டனர் இந்தப் போலிகள். மற்ற எல்லா கட்சிகளும் தாங்களே சொந்தமாக தயாரித்த பாடல்களை – அவை சினிமா மெட்டை சுட்டது என்றாலும் வசனங்கள் அவர்களுடையது -, ஒலிபரப்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்களோ தங்களது பிரச்சார வாகனத்தில், எங்களது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தயாரித்த பாடல்களில் “நான் உலகம்” பாடல் கேசட்டில் உள்ள “மானத்தை இழந்து வாழ்க்கை வேண்டுமா?” என்ற பாடலை ஒலிபரப்பிக் கொண்டே ஓட்டுப் பிச்சை கேட்டு வலம் வந்தனர். அந்தப் பாடல் தாங்கள் இறங்கியுள்ள ஓட்டுப் பொறுக்கும் போலி ஜனநாயகத்தை விமர்சித்து தங்களையே அம்பலப்படுத்துகிறது என்ற உணர்வின்றி பொதி சுமக்கும் கழுதைகள் போல பாட்டை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட நமது தோழர்கள் அந்த வாகனத்தை நிறுத்தி “இது எங்களது அமைப்பின் பாடல்கள்; எங்கள் அனுமதியின்றி எப்படி நீங்கள் பிரச்சாரத்திற்கு உபயோகிக்கலாம்?” எனக் கேட்டு உடனடியாக நிறுத்தச் செய்தனர்.

அரசியல் நாகரிகமோ நேர்மையோ கொஞ்சமும் இல்லாமல், ”தோழர்களே, நீங்களும் கம்யூனிஸ்டு தான்; நாங்களும் கம்யூனிஸ்டு தான். நம்ம பாட்டு தானே?” என தனது செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்காமல் அதை நியாயப்படுத்தும் விதமாக பேசி நம்மைப் பற்றி ஏதும் தெரியாதவர்கள் போல நடித்தனர்.

“நீங்களும் நாங்களும் அடிப்படையிலேயே வேறானவர்கள். நீங்கள் கம்யூனிசக் கொள்கைகளை கைவிட்டு விட்டு ஓட்டுப் பொறுக்குவதில் குறியாக உள்ளீர்கள், ஆனால், நாங்களோ கம்யூனிசக் கொள்கைகளின் அடிப்படையில், இது போலி ஜனநாயக தேர்தல் என்பதை அம்பலப்படுத்தி, இந்த மக்கள் விரோத அரசமைப்பை தகர்த்து புதிய ஜனநாயக அரசை நிறுவ புரட்சிக்கு மக்களை அணிதிரட்டும் விதமாக தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். எனவே, நீங்களும் நாங்களும் ஒன்றல்ல. அதனால், எங்கள் பாட்டை நீங்கள் உபயோகிக்கக் கூடாது” என எச்சரித்து வந்துள்ளனர். தனது வயிற்றுப் பிழைப்புக்காக உடலை விற்கும் விபச்சாரியிடம் உள்ள நேர்மை கூட கட்சியை வைத்துப் பிழைப்பு நடத்தும் இந்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. தனது பிழைப்புக்காக அடுத்தவர்களுடைய அதுவும் எதிர்ப்பவர்களுடைய உழைப்பைத் திருடும் கேடுகெட்டவர்களாக மாறியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களது 12 மணிநேர பணிநேரத்தைப் 10 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது, அதற்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, “இந்தக் கோரிக்கை வெற்றி பெற வேண்டுமெனில், பணி நிரந்தரம் என்ற கோரிக்கையைப் பிரதானமாக வைத்துப் போராட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு போராடினால், தற்போதைய 12 மணி நேர பணி நேரம் 8 மணிநேரமாக மாறிவிடும்” என சொன்னபோது, நாம் விளக்கியதைப் புரிந்துகொண்டு நாம் சொல்வது தான் சரி என்று அந்தத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தங்களது கட்டுப்பாட்டில் உள்ள சங்கத்தில், தங்கள் தலைமை தங்களது தொழிலாளர்களாலேயே கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிபிஐ-யின் தொழிற்சங்க அமைப்பான ஏஐடியுசி யின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் அபிஷேகம், “தம்பி, உன் வயது என் அனுபவம். நீங்க இப்போ தான் சங்கம் ஆரம்பிச்சுருக்கீங்க. எங்க கட்சிக்கு 40 ஆண்டு கால அனுபவம் இருக்கு. உங்களுக்கு அனுபவம் போதாது” என்று பிரச்சினையின் மைய விசயங்களை விட்டு விட்டு நம்மை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்.

இன்று அத்தொழிலாளர்கள் வேலையை விட்டு தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். பழுத்த அனுபவம் உள்ள போலி கம்யூனிஸ்டு சங்கமோ தனது வழக்கமான சட்டவாத செக்குமாட்டுப் பாதையில் சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததைத் தவிர வேறெந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், இதே போல் தேஜாஸ் நெட்வொர்க் என்ற தொழிற்சாலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களாக 8,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் களத்திலும், சட்டரீதியாகவும் எதிர்கொண்டதால் அத்தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, இன்று 20,000 முதல் 25,000 ரூபாய் சம்பளம் பெறுவதற்கு, அனுபவமே ’இல்லாத’ எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வழிகாட்டுதலில் சாதித்துள்ளனர்.

அதன் பிறகு, கடந்த 4 மாதங்களுக்கு முன், சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களிடம் ஒப்படைத்ததற்கு, உச்சநீதி மன்றத்தில் சுப்ரமணிய சாமியுடன் சேர்ந்து, பார்ப்பன பாசிச ஜெயலலிதா சதி செய்ததை அம்பலப்படுத்தி பகுதியில் பிரச்சாரம் செய்த எங்களது தோழர்கள் மீது அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர், தனது அடியாட்களுடன், தானே களத்தில் இறங்கி ரவுடி போல கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதல் ஜனநாயக சக்திகளுக்கு விடப்பட்ட சவால் என்பதை உணர்ந்து, இந்தத் தாக்குதலை கண்டிக்கின்ற வகையிலே பகுதியில் உள்ள சிபிஐ எம்.எல் கட்சியோடு, பெரியாரிய அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் கூட்டமைப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த சிபிஐ, சிபிஎம் கட்சிகளிடம் சென்று அவர்கள் பேசிய போது, அப்போதும் பிரச்சினையின் தன்மையைப் பற்றி கவலை கொள்ளாமல், “இது போன்ற அமைப்பு பகுதியில் உள்ளதா?” என்றும், “இப்படிப்பட்ட சம்பவம் நடந்ததா” என்றும் கேள்வி கேட்டு நம்மை சிறுமைப் படுத்துவதில் குறியாக இருந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், தங்களது அம்மாவுடனான கூட்டு பஜனைக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடாது என்ற திரு’ஓட்டு’க் கணக்கை எண்ணி அதை வெளியில் சொல்லாமல் சப்பை கட்டு கட்டினர்.

மேலும், இந்தப் பிரச்சினையையொட்டி பகுதியில் சுவரொட்டி பிரச்சாரம் செய்த போது, தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்ட சிபிஎம் கட்சியின் திருபுவனை தொகுதி பொறுப்பாளர், “நாங்க தான் அடிச்சோம்னு அதிமுககாரங்க கேக்குறாங்க. நாளக்கி எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு அவங்க கிட்ட போயி சீட்டு கேட்க முடியும். அதனால நீங்க அருவா சுத்தி போட்டு போஸ்டர் போடாதீங்க, இல்லையின்னா உங்க சின்னத்த மாத்துங்க” என்றவரிடம், “அரிவாள் சுத்தியல் என்பது உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு பொதுவானது. யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது; நாங்க அத மாத்திக்கவும் முடியாது” என்று விளக்கினாலும், “அதெல்லாம் கிடையாது. நீங்க போடக் கூடாதுன்னா போடக்கூடாது” என்று மிரட்டும் தொனியில் பேசியவரிடம், “நாங்கள் போடுவோம். உங்களுக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள் அதை நாங்கள் அங்கு பேசிக் கொள்கிறோம்” என்று சொன்னவுடன், தொலைபேசியில் தன்னுடன் பேசிய தோழரின் முகவரியைக் கேட்டு தான் நேரில் வந்து பேசிக் கொள்வதாக மிரட்டிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். ஒரு தொகுதிப் பொறுப்பாளருக்கு கம்யூனிசத்தைப் பற்றிய அறிவை இந்த அளவில் போதித்த கட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?

இவர்கள் ஏற்கனவே, சந்தர்ப்பவாத, பிழைப்புவாதத்தில் ’மூழ்கி’, கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் ’முத்துக்களைத்’ தொலைத்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தங்களை சீண்ட நாதியில்லாமல், தமிழகத்தில், அம்மாவிடம் ஒரு சீட்டு கூட பெற வக்கற்று, அனாதைகளாகிவிட்ட இந்தப் போலிகள், தங்களது அனுபவங்களை எவ்வாறு பொறுக்கித் தின்பதற்குப் பயன்படுத்தலாம் என்ற யோசனையிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.

இவர்கள் இது போன்று எங்களது பாடல்களைத் திருடுவது இது முதல் முறையல்ல; ஏற்கனவே தங்களது கூட்டங்களில் பல முறை பயன்படுத்தியுள்ளனர். தங்களுக்கு ஏற்றவாறு வெட்டியும் ஒட்டியும் ‘பிளேடு’ போட்டுள்ளனர். ஒவ்வொரு முறை அந்தத் திருட்டைக் கண்டித்தபோதும் அப்போதைக்கு ஏற்றுக் கொள்வது மீண்டும் திருடுவது என்பதை ஏதோ தொழில் முறைத் திருடர்கள் போல கடைபிடிக்கின்றனர். இந்தப் போலிகளை எவ்வளவு முறை கழுவிக் கழுவி ஊற்றினாலும், துடைத்துக் கொண்டு மீண்டும் தங்களை அடுத்த முறை கழுவச் சொல்லத் தயாராகின்றனர்.

இக்கட்சியில் உள்ள புதிய தோழர்கள், எப்போதும் இந்தக் கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்வதாக குறைபட்டுக் கொள்கின்றனர். இவர்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்வதற்கு இவைகள் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இது போன்ற பல விசயங்களை, புத்தகமாக எழுதும் அளவிற்கு ’சிறப்புப்’ பெற்றவர்கள் இவர்கள்.

இன்று, எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்த போலி ஜனநாயகத் தேர்தல் பாதை மக்களிடம் முழுக்க முழுக்க அம்பலப்பட்டுப் போயுள்ளது. இந்த ஓட்டுக்கட்சிகளால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை மக்களே புரிந்தும் வைத்துள்ளனர். மன்மோகனுக்கு மாற்று மோடி என்பதோ போலி கம்யூனிஸ்டுகள் என்பதோ அல்லது ஆம் ஆத்மி என்பதோ இல்லை என்பதை அவர்கள் பேசும் விசயங்களிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

எனவே, உழைக்கும் மக்களே, விவசாயிகளே, தொழிலாளர்களே, மாணவர்களே, வியாபாரிகளே, இன்று நமது தேவை நாட்டையும் மக்களையும் விலைபேசும் இந்த வியாபாரிகளிடமிருந்து காப்பாற்றும் மாற்று சக்திதான். இந்த மாற்று சக்தி வேறொரு தனி கிரகத்தில் இருக்குமோ என நாம் தேடத் தேவையில்லை. அது நமது செயல்களில் உள்ளது. சின்னத்தை மாற்றுவது என்பதில் பயன் இல்லை சிந்தனை முறையை மாற்றுவோம். அதற்கு முதல் படியாக மேலிருந்து உழைக்கும் மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்தும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். கீழிருந்து மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக அரசமைக்க நக்சல்பாரி புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்.

அதற்கு போலிகளை இனம் காணுவோம்! அவர்களைப் புறந்தள்ளுவோம்! உண்மையான புரட்சிகர அமைப்புகளில் அணி திரள்வோம்!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி