privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தடை தகர்த்த தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டங்கள்

தடை தகர்த்த தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டங்கள்

-

1. தருமபுரி

“மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத்தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!”

என்ற தலைப்பின்கீழ் தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள சந்தைப்பேட்டையில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம் 18.04.2014 மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. அவ்வமைப்பின் வட்டச் செயலர் தோழர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த மூத்த தோழர் ஆம்பள்ளி முனிராஜ், வி.வி.மு-வின் வட்டக்குழு உறுப்பினர் தோழர் குபேந்திரன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் ராஜா,  மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜானகிராமன் ஆகிய தோழர்களின் உரையின் முடிவில் மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தை சேர்ந்த மையக்கலைக்குழுவினரின் எழுச்சிமிகு புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. போலீசு மற்றும் உளவுத்துறையினர்களின் பீதியூட்டல் நடவடிக்கைகளை முறியடித்து நடத்தப்பட்ட இப்பொதுக்கூட்டம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பைப் பெற்றது.

தோழர் கோபிநாத் தனது தலைமை உரையில் இந்த பொதுக்கூட்டத்தினை நடத்த உயர்நீதிமன்றம் வரை சென்று செலவு செய்து அனுமதிவாங்கி நடத்தப்படுவதை எடுத்துச் சொல்லி இந்த நாட்டின் பேச்சுரிமை, கருத்துரிமை என்று சொல்லப்படுவைகளின் கேலிக்கூத்துகளை பட்டியலிட்டு தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சாதிய கட்சிகளின் சந்தர்ப்பவாத தகிடுதத்தங்களை தோலுரித்து காட்டினார்.

அடுத்து பேசிய தோழர் ஆம்பள்ளி முனிராஜ், சாதாரண கூலி ஏழை உழைக்கும் மக்களின் மொழியில் எளிமையாக நையாண்டிமுறையில் இந்த போலீசு மற்றும் அதிகாரவர்க்க தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திப்பேசி தேர்தலை மக்கள் புறக்கணிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

தோழர் குபேந்திரன் பேசுகையில், மோடி மற்றும் தமிழகத்தின் லேடிமோடியான ஜெயலலிதாவின் பார்ப்பன கூட்டரசியலை சாடி பேசினார்.

தோழர் ராஜா பேசுகையில் இந்த தேர்தல் காசு இருந்தால்தான் கல்வி எனும் இன்றைய மாணவர்களின் நிலைமையை மாற்றி விடப் போகிறதா? என கேள்வி எழுப்பி தனியார்மய கல்விமுறைக்கு வேட்டுவைத்திடும் வகையில் மாணவர்கள் பகத்சிங் வழியில் போராட முன்வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப்பேசினார்.

தோழர் ஜானகிராமன் தனது உரையில் இந்த போலிஜனநாயகத் தேர்தலை வாராது வந்த மாமணியாக சித்தரிக்கும் தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்களின் சித்து வேலைகளை அம்பலப்படுத்தியும் , புதிய ஜனநாயகப்புரட்சிக்கு அணிதிரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.

தோழர் காளியப்பன் தனது சிறப்புரையில், “1990-க்கு முன்பு மக்கள் நலன் என்றும், அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் அதிகாரம் என்றும் பெயரளவில் இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு உலக வர்த்தகக் கழகம் சொல்வது எதுவோ அதுதான் நடைமுறையாகி விட்டது. இதன்மூலம் கொஞ்சம் நஞ்சம் இருந்த பெயரளவிலான அதிகாரமும் பறிக்கப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு கைமாறும்படியான சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவும் போதாது என்று அதிகாரம் அனைத்தும் ஆணையம் என்ற மூன்றாவது பிரிவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய அரசு உலகவர்த்தகக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து விட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கட்டுப்பாட்டு வாரியம் என்று அனைத்துக்கும் கட்டுப்பாடு போடப்பட்டது. இதில் எடுக்கும் முடிவில் இந்திய அரசோ, அரசாங்கமோ தலையிடமுடியாது. உதாரணமாக, மின்கட்டண உயர்வை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால்அது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எடுத்த முடிவு என்று சட்டமன்றத்தில் ஜெயா கூறினார். இனி அனைத்து துறைக்கும் ஆணையம்தான் வரும்! இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளும் நாட்டின் இறையாண்மையும் பறிபோவதோடு, நாடும் மறுகாலனியாகி வருகிறது.

அடுத்து, உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக சித்தரிக்கப்படும் நமது நாட்டின் ஜனநாகத்தின் நான்கு தூண்களாக சொல்லப்படும் அரசாங்கம், அதிகாரவர்க்கம், நீதித்துறை, பத்திரிக்கைத்துறை ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களை வாழ்விழக்க செய்து கொழுத்த லாபவெறியோடு அலைந்து திரிகின்ற தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளை சேர்ந்த கம்பெனிகளின் வாலாகிபோய்விட்டதை ஒவ்வொன்றாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி ஆளும் வர்க்கங்களின் இந்த அமைப்புமுறைகளை அடியோடு தகர்த்து ஒரு புதிய ஜனநாயக குடியரசை அமைக்க போராடுவதே நம்முன் உள்ள கடமையாகும். அதன் முதல் நடவடிக்கையாக மறுகாலனியாக்கத்துக்கான இந்த தேர்தலை புறக்கணிப்போம்!” என்று அறைகூவி அழைக்கும் வகையில் சிறப்புரையாற்றியது நல்லவரவேற்பை பெற்றது.

கூட்ட தொடக்கத்திலிருந்து இறுதிவரை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் வீடியோ எடுப்பதாக சொல்லி மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்ட அதிகாரவர்க்கத்தின் திமிரை பொருட்படுத்தாது மக்கள் உணர்வோடு இறுதிவரை பொதுக்கூட்டத்தை கவனித்துச் சென்றது புதுரத்தம் பாய்ச்சுவதாக இருந்தது.

இவண்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு : செல்- 9443312467

2. கரூர்

21.04.2014 அன்று நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காக நடத்தப்படும் தேர்தலை விளக்கி கரூரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கரூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயலர் இரா பாக்கியராஜ் தலைமையேற்க பேச்சாளராக தோழர் இராமசாமியும், சிறப்புரையாக மனித உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூவும் பேசினர். இதனைத் தொடர்ந்து புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக தோழர் பாலமுருகன் நன்றியுரையாற்றினார்.

பொதுக்கூட்டம் நடத்துவதாக திட்டமிட்ட நாள் முதல்,  பகுதி தேர்தல் கமிசன் அலுவலர்கள் தொடர்ந்து பலமுறை அலைக்கழித்து அனுமதி மறுத்தனர். தனிநபர்களை மற்றும் கார்ப்பரேட் கம்பெனியை விமர்சித்து பேச வாய்ப்பிருக்கிறது என்று காரணம் கூறினர்.  “இந்நாட்டில் அனைவருக்கும் தனிநபராகவோ அல்லது அமைப்பாகவோ பேசவும், மாற்றுக் கருத்து கூறவும் உரிமையுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி வரை போராடி அனுமதி பெற்று கூட்டம் நடத்தப்பட்டது.

தோழர் இராமசாமி தனது உரையில், ஆண்டு முழுவதும் இலஞ்சம், ஊழல் குற்றங்களில் ஊறித் திளைக்கும் இக்கும்பல் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் யோக்கியர்கள் போல நடிப்பதும், அவ்வாறு நடிக்க முயன்றதில் தன்னுடைய புத்தியை அவர்கள் பல இடங்களில் வெளிப்படுத்தி மாட்டிக் கொண்டு மானம் போனதும் குறித்து பேசி அம்பலப்படுத்தினார். இவர்கள் உன்னதமான இந்த அமைப்பை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருப்பதாக நாடகமாடுவதுடன் இறந்த பிணத்தை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்று தேர்தல் அலுவலர்களின் முகத்திரையைக் கிழித்தார். மேலும், கார்ப்பரேட் கம்பெனியின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு இந்த அரசியல் கட்சிகள் நடத்தும் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பேசினார்.

பிறகு சிறப்புரையாற்றிய தோழர் ராஜூ, இந்த அரசியல் கட்சிகளின் யோக்கியதை என்ன? இவர்கள் நடத்தும் தேர்தல் ஜனநாயக நாடகத்தில் மக்களை வெறுமனே ஓட்டுப் போடும் கதாபாத்திரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேறு எதற்கும் மக்களுக்கு உரிமை இல்லை. ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகள் தங்களது நலனை மட்டுமே முன்நிறுத்துகிறார்கள். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், விவசாயிகளுக்கு விலை நிர்ணயிப்பது பற்றியோ, கல்வி இலவசமாக வழங்குவதை தனது இலட்சியமாகவோ அல்லது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றியோ பேசுவதில்லை. மாறாக, தனிநபர்களின் நடத்தை பற்றி பேசி, பண பலத்தால் வென்று எவ்வாறு மக்களை ஏய்த்து கொள்ளை அடிக்கலாம் என்றுதான் சிந்திக்கிறார்கள். தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் ஜனநாயகக் கட்சி என்று எதுவும் இல்லை. எல்லாமே தங்களின் குடும்ப அரசியலை நடத்துகின்றார்கள். கட்சிகளே இவ்வாறு முடியாட்சி போல நடத்தப்படும் போது இவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது மடமை. இவர்கள் அனைவரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களுக்காக நாட்டினையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கவும், அதற்கு தடையாக இருக்கும் அனைத்து வகையான சட்டங்களையும் நீக்கவும் செய்து குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையும் பிடுங்கி பாசிச ஆட்சியை கொண்டு வருவதைத்தான் இலக்காக கொண்டுள்ளனர். நாட்டின் நிலை இப்படி இருக்கும் போது வெறுமனே ஓட்டு போடுவதன் மூலம் அனைத்தையும் மாற்றி விடலாம் என்று பிரச்சாரம் செய்வது மக்களை முட்டாளாக்கும் வேலை.

பா.ஜ.க, காங்கிரசு முதல் தற்போது ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வரை அனைவரும் இதையே செய்கின்றவர்கள்தான். இதற்கு தீர்வு காண கட்சியை மாற்ற வேண்டும் என்று சிந்திப்பது தீர்வாகாது. மாறாக, நம்முடைய பிரச்சனையை நாம்தான் தீர்க்க வேண்டும். இதற்கு அனைவரும் புரட்சிகரமான முறையில் புதிய ஜனநாயக அரசு அமைக்க போராட முன் வர வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து இந்த கருத்தினை கலைவடிவத்தில் கலைக்குழுவின் பாடல்கள் மக்களிடம் கொண்டு சென்றன. தோழர் பாலமுருகன் நன்றியுரை கூறிய பின்பு கூட்டம் நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

3. ஆக்சில் இந்தியா

காஞ்சிபுரம் அருகாமையில் உள்ள வெண்பாக்கம் கிராமத்தில், ஆக்சில் இந்தியா கிளை சங்கத்தின் (இணைப்பு – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) சார்பாக “போலி ஜனநாயக தேர்தலை புறக்கணிப்போம், புதிய ஜனநாயக அரசைக் கட்டியெழுப்புவோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில், தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் சரவணன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் தோழர் சிவா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அனைத்து ஓட்டு பொறுக்கிக் கட்சிகளின் சார்பாக நிறுத்தக் கூடிய வேட்பாளர்கள் எல்லோரும் கோடீஸ்வரர்கள் என்பது மட்டுமல்ல எந்த கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லாமல், மகன், மகள், சொந்தக்காரர்கள், பணக்காரர்கள் என்ற தகுதியில் தேர்தல் சீட்டு தரப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு ஜனநாயகம் வழங்குவார்களா? மற்றும் அரசு அதிகார வர்க்கம் மக்களை அடக்கி ஒடுக்குகின்றது. இவர்களை யார் தேர்ந்தெடுப்பது என்றும் ஆணையங்கள், தீர்மானங்கள் போன்ற அதிகார வர்க்க அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அதுமட்டும் இல்லை , அடுத்து மேற்குறிப்பிட்ட சில கட்சிகள் அதன் வேட்பாளர்கள் அரசில் பங்கேற்கும் போது, அரசின் கொள்கை என்பது மறுகாலனியாக்க கொள்கைகளே, இவைகள் நமது வாழ்வுரிமைகள் பறிக்கப்பட காரணமாக இருக்கின்றன. இக் கட்சிகளின் வேட்பாளர்கள் அரசின் அதிகாரவர்க்கம் – பன்னாட்டு கம்பனிகளுக்கு சேவை செய்கின்றன – இக்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம், புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம். உழைக்கும் மக்களுக்கு தேவை விடுதலையே எனக்கூறி போலி ஜனநாயக தேர்தலை புறக்கணிக்க அறைகூவினார்.

அக்கூட்டத்தில் ஆக்சில்ஸ் இந்தியா மற்றும் கிளை சங்க தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பகுதி  உழைக்கும் மக்கள், சிறுகடை வணிகர்கள், பேருந்துக்கு நின்றிருந்தோர் அனைவரும் கூட்டத்தில் பேசிய கருத்துக்களை ஆர்வத்துடன் கேட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்

4. திருப்பெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே 18-04-2014 அன்று மாலை 5 மணியளவில்

மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!
கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!

என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தோழர் நாச்சியப்பன் தலைமையேற்றார். தனது தலைமை உரையில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், ஒரகடம் சிப்காட், திருப்பெரும்புதூர் மற்றும் சுங்குவார்ச்சத்திரம் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய பகுதிகளில் செயல்படும் பிரசித்திபெற்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் அவல நிலையைப் பற்றி பேசி, தொழிலாளர்களின் கோரிக்கையான நிரந்தர வேலை, விலைவாசி உயர்வுக்கேற்ற ஊதிய உயர்வு, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றை பற்றி ஓட்டுக் கட்சிகள்  அக்கறை கொள்வதில்லை என்பதை விளக்கினார்.

“பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் வேலை கொடுக்க வந்தவை, நாட்டை முன்னேற்ற வந்தவை என்று எல்லா ஓட்டுப் பொறுக்கி கட்சிகளாலும், ஆளும் வர்க்கங்களாலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மை நிலைமையில் இந்நிறுவனங்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலையையும் பறித்து வெறியாட்டம் போடுகின்றன. இக்கொடுமைகளுக்கு முடிவுகட்ட மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணித்து வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்பதுடன் புதிய ஜனநாயக புரட்சியை நடத்த வேண்டிய தேவை குறித்து அறைகூவினார்.

பு.ஜ.தொ.மு திருவள்ளுவர் மாவட்ட செயலாளர் தோழர் செல்வகுமார் சிறப்புரை ஆற்றினார்.

“ஓட்டுப்போடு என்பது ஜனநாயகம் என்றால் ஓட்டுப் போடாதே என்று பிரச்சாரம் செய்வதும் ஜனநாயக உரிமைதான். ஆனால், தமிழகம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் நடத்துவதற்கு தேர்தல் அதிகாரியிடன் அனுமதி பெற்றிருந்தும் பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. கீழ்நிலை அதிகாரிகளே மேலதிகாரிகளின் ஆணையினை மதித்து நடக்காத போது நாங்கள் ஏன் இந்த போலி ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும்.

ஓட்டுப் போடாதவன் செத்த பிணத்துக்கு சமம், எனவே வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கூறும் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை என்ன? ஊழலில் ஊறித் திளைக்கும் அதிகார வர்க்கத்தினரே தேர்தல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று பணத்திற்கு ஓட்டை விற்காமல் மனசாட்சிப்படி ஓட்டுப் போடும்படி நமக்கு உபதேசம் செய்கிறார்கள். மக்கள் பல இடங்களில் ஓட்டுக் கட்சிகளை பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தேர்தலின் மீதும் ஓட்டுக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்பதை புரிந்து கொண்டுதான் புழுத்துப் போன இந்த போலி ஜனநாயகத்தை காப்பாற்ற ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் தேர்தலுக்காக பல கோடி ரூபாய் வாரி இறைக்கிறது. கட்டுப்பாடுகள் பல விதித்து பம்மாத்து காண்பிக்கிறது. பள்ளி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஓட்டு போடும்படி பாடம் எடுக்கிறார்கள்.

இன்று இந்தியாவில் 1627 ஓட்டுக் கட்சிகள் உள்ளன, எந்த ஓட்டுக் கட்சிக்கும் கொள்கை ஏதும் இல்லை. மக்களிடம் ஓட்டுப் பிச்சை வாங்கி பதவிக்கு சென்று முதலாளிகளுக்கு சேவை செய்வதும், நாட்டின் வளங்களை கூறுபோட்டு விற்று கொள்ளை அடிபடும்தான் இவர்களின் கொள்கை, தேசியக் கட்சியான பா.ஜ.க மக்களிடம் அம்பலப்பட்டு செல்வாக்கை இழந்து விட்ட நிலையில் மோடி என்ற தனிநபரை முன்நிறுத்துகிறது. மோடி பிரதமராக வேண்டும் என்பது இவர்களது விருப்பமல்ல, அது முதலாளிகளின் விருப்பம். இவர்கள் அனைவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதுதான் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என  ஒருமித்த குரலில் ஊளையிடுகிறார்கள்.

இன்று உலகம் முழுவதும் ஒட்டுமொத்த முதலாளித்துவ கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உழைக்கும் மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அமைதியாக அடிமைத்தனத்தை ஏற்க வேண்டும். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது, இதை மறுப்பவர்கள் தேசத் துரோகிகள் என்பதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. எனவே இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையில் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியாது. ஏதாவது ஒரு கிரிமினலை தேர்ந்தெடுத்து அவர்கள் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் உரிமை மட்டுமே நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுத்தவர்களை திரும்ப அழைக்கும் உரிமையோ, அவர்கள் கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யும் உரிமையோ இந்த போலி ஜனநாயக அரசமைப்பில் இல்லை. அது உழைக்கின்ற மக்களுக்கு அதிகாரமுள்ள ஒரு புதிய ஜனநாயக அமைப்பில்தான் சாத்தியம். நம்மை ஆள்பவர்களிடம் எங்கள் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியாது, எனவே விலகி எங்களுக்கு வழிவிடுங்கள். நாங்கள் ஆள்கிறோம் என்றால் அவர்கள் அகிம்சா மூர்த்திகளாகவா இருப்பார்கள். போலீசு, இராணுவம், குண்டாந்தடி, துப்பாக்கி கொண்டு நம்மை ஒடுக்குவார்கள். எனவே உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் வேண்டுமானால் அது ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதன் மூலம்தான் சாத்தியமாகும். ”

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்
தொடர்புக்கு – 8807532589

5. ஓசூர் கமாஸ் வெக்ட்ரா

ப்ரல்–22 உலக பாட்டாளி வர்க்கத் தலைவர் தோழர் லெனின் 145–வது பிறந்த நாள் விழாவை அன்று காலை 8.00 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக கிளைகளில் கொடியேற்றி, இந்தியா போன்ற வளரும் நாட்டில் இன்றைய காலக்கட்டத்தில் தொழிலாளர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு லெனினுடைய தேவையை பற்றி விளக்கினர்.

கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் கிளையின் சார்பாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து தலைமை தாங்கினார். சிறப்புரை ஆற்றிய மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தோழர் லெனின் சாதித்த வரலாற்று பாத்திரத்தை தொழிலாளர் வர்க்கம் முன்னுதாரணமாக எடுத்து செயல்பட வேண்டுமென்றும், இந்த நன்நாளில் தோழர் லெனின் வழியில் உறுதியேற்று செயல்பட வேண்டுமென்றும் விளக்கினார்.

அடுத்து வெக் இந்தியா ஆலையில் காலை 11.00 மணியளவில் நடந்த கூட்டத்துக்கு அச்சங்கத்தின் கிளைச் செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமைத் தாங்கினார்.  மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் உரையாற்றினார். இறுதியாக தோழர் சாது சுந்தர்சிங் கிளையின் துணைத் தலைவர் நன்றியுரையாற்றினார்.

முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிராக போராடக்கூடிய புரட்சிகர சங்க உறுப்பினர்களான நாம் லெனினுடைய வரலாற்றையும், அவருடைய தத்துவங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கலந்து கொண்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவித்தனர். மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர் இரா.சங்கர், தோழர் சின்னசாமி, தோழர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தர்மபுரி-கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு 9788011784, ஓசூர்.

6. திருவள்ளூர் மாவட்டம்

ஆசான் லெனின் பிறந்தநாளையொட்டி தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் லெனின் பிறந்த நாளை தொழிலாளிகளுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில் புஜதொமு இயங்கி வருகின்ற ஆலைவாயில்களில் ஆசான் லெனின் படத்தை வைத்து தொழிலாளிகளுக்கு இனிப்பு வழங்கி, ஆசான் லெனின் குறித்து முன்னணியாளர்கள் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் கும்முடிப்பூண்டி பாண்டியன் ஹோட்டல் அருகில் 08.30 மணிக்கு துவங்கி கும்முடிப்பூண்டி பேருந்து நிலையம் வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் தலைமையில் சைக்கிள் பேரணியும் நடத்தப்பட்டது. செஞ்சட்டைகள் நிறைந்திருக்க சைக்கிளில் புஜதொமு கொடி கட்டிக்கொண்டு முழக்கமிட்டபடியே 3 கிலோமீட்டர் தூரத்துக்கு தொடர்ந்தது பேரணி.

இந்த சைக்கிள் பேரணியில்,

  • ஆசான் லெனின் பிறந்த நாளில் உறுதியேற்போம்.
  • பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்
  • ஓட்டுப் போடாதே புரட்சி செய்
  • போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்
  • புதிய ஜனநாயக அரசமைப்பை கட்டியெழுப்புவோம்.
  • மக்கள் சர்வாதிகார மன்றங்களை கட்டியமைப்போம்

என்று விண்ணதிர முழக்கங்களிட்டபடியே இந்த 16-வது நாடாளுமன்ற போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிக்கக் கோரி மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. தட்டுகளில் இனிப்புகளை கொண்டு பேரணியின் இருபுறமும் தோழர்கள் மக்களிடம் வழங்கி வர, மற்றும் இரு தோழர்கள் லெனின் குறித்த விளக்க பிரசுரத்தை வழங்கினர்.

தேர்தல் வந்தது, திருநாள் வந்தது, கொள்கைக் கூட்டணி ஒவ்வொன்னுக்கும் என்ன பின்னணி? ஓட்டுப் போடாதே போடாதே புரட்சி செய்! ஆகிய பாடல்களை திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரக் குழு தோழர்கள் மக்கள் கூடுமிடங்களில் பாடினர்.

கடைத்தெருவில் பிரச்சாரம் செய்து வந்த போது, அதிமுக, திமுக, பாஜக, போலி கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் அன அனைத்து ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் பணிமனைகளின் வழியாக பேரணி கடந்து வந்தது. பணிமனைகளில் இருந்தவர்களுக்கு பிரசுரமும் இனிப்பும் வழங்கப்பட்டது. ”ஓட்டு போடாதே புரட்சி செய்”, ”பாராளுமன்றம் பன்றித் தொழுவம்” என்று பிரச்சாரம் செய்யும் போது செய்வதெறியாமல் பிரச்சாரத்தை வாய்பிளந்து பார்த்தவாறே இருந்தனர். ஓட்டு போடச்சொல்லி ஊர் ஊராக பிரச்சாரம் செய்தும், வாய்ப்புள்ள இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தும் ஓட்டுக்கட்சிகள் வாக்கு சேகரித்து வரும் நிலையில் ஆசான் லெனின் பிறந்த நாளில் நடத்தப்பட்டுள்ள இந்த சைக்கிள் பேரணி உழைக்கும் மக்களிடையே ஒரு புத்தெழுச்சியையும், ஓட்டுக்கட்சிகள் மத்தியில் கலக்கத்தையும் உண்டாக்கியுள்ளது.

குடியிருப்பு பகுதிகளின் வழியே பிரச்சாரம் செய்த போது, ஓட்டுப் போடாதே என்று சொல்லக்கூடிய கட்சியா, நீங்க தாம்பா எங்க கட்சி, என்று ஒரு பெண்மணி கூறினார். மற்றொரு பெண்ணிடம் பேசும் போது, ”நான் ஓட்டு போடமாட்டேன்பா, இவனுங்களுக்கு ஓட்டு போட்டு போட்டு ஒன்னும் நடக்காது” என்றார். ”அதெப்படி உங்களை நம்புவது இப்படிதான் சொல்வீங்க அப்புறம் ஓட்டு போட்டுடுவீங்க” என்று நாம் வேண்டுமென்றே பேசியதும், என்னயயாப்பா சந்தேகப்படுற, ”வியாலக்கெலம வந்து என் வெரலப் பாரு, ஓட்டு போட்ட மை இருந்த இந்த தெருவுலேயே வெச்சு செருப்பால அடி” என்று மிகக் கோபமாக பேசினார். பிறகு சமாதானப் படுத்தி விட்டு, நாங்கள் உங்கள நம்புகிறோம். ஓட்டு போடாமலிருப்பதால் மட்டும் நம் பிரச்சனை தீர்ந்து விடாது, போராட வேண்டும் என்று கூறினோம்.

”நானோ, என் குடும்பத்தை சேர்ந்தவர்களோ தேர்தலில் நின்றால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கடி கொடுங்கள்” என்று பேசி, பின்னர் வெட்கமே இல்லாமல் தேர்தலில் நின்றதோடு மட்டுமல்லாமல் சாதி வெறியை தூண்டி ஓட்டுப் பொறுக்கிக் கொண்டிருக்கும் ராமதாசு வகையறாக்களை அப்போதே செருப்பால் அடிக்காமல் விட்டதன் விளைவு தான் இன்று வரை மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் முச்சந்தியில் மக்கள் மத்தியில் செருப்படி படப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை பெருகி வரும் மக்கள் போராட்டங்கள் நிருபித்து வருகிறது.

சைக்கிள் பேரணி

டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் கூட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்

7. மதுரை

துரை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 19.4.14. அன்று மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டம் போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் முழக்கங்களுடன் துவங்கியது. இக்கூட்டத்திற்கு ஒத்தக்கடை பு.ஜ.தொ.மு தோழர் பாண்டியராசன் தலைமை தாங்கினார்.

ஒத்தக்கடை பு.ஜ.தொ.மு தோழர் போஸ் உரையாற்றிய போது மதுரையிலும், ஒத்தக்கடை பகுதியிலும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் தேர்தல் விதிமுறைகள் மீற் எப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் கூட்டங்களுக்கும் ஓட்டுக்கும் பணம் கொடுப்பவர்களையும் வெளிப்படையாக அம்பலப்படுத்தி பேசினார்.

மதுரை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட துணைச்செயலாளர் தோழர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரையாற்றுகையில் அரசும் அதன் போலீஸ் துறையும் எப்படி ஆளும்வர்க்கத்திற்கும் அதன் அடிவருடிகளான ஓட்டுக்கட்சிகளுக்கும் விசுவாசமாக செயல்படுகிறது என்பதையும், புரட்சிகர அமைப்புகளின் மீதான நயவஞ்சகமான அணுகுமுறையை அம்பலப்படுத்தி சாடியும் உரையாற்றினார்.

இறுதியாக பு.ஜ.தொ.மு வின் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன் “நாடு மீண்டும் அடிமையாகி வருகிறது, மறுகாலனியாதிக்கத்திற்கான பாதையை மக்கள் தேர்ந்தெடுத்த‌ அரசாங்கத்தின் துணையோடு திறந்துவிடுவதற்காகத்தான் இத் தேர்தல்” என்றும், மோடி, ஆர்.எஸ்.எஸ், இந்து பாசிசத்தை அம்பலப்படுத்தி எச்சரித்தும் இதற்கு ஒரே தீர்வு புரட்சிதான் என்பதை வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.

இறுதியில் ம.க.இ.க வின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்ட உரையும் கலைநிகழ்ச்சியும் பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஓட்டுக்கட்சிகளின் வயிற்றில் புளியையும் கரைத்தது.

உங்களுடைய பொதுக்கூட்ட நிகழ்ச்சியை பார்த்தால் யாரும் ஓட்டுப்போடமாட்டார்கள் எனவும். வெளிப்படையாக, தைரியமாக உள்ளதை சொன்னீர்கள் எனவும் அப்பகுதிவாழ் மக்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி