privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதஞ்சை மீத்தேன் அலுவலகம் முற்றுகை - 600 பேர் கைது

தஞ்சை மீத்தேன் அலுவலகம் முற்றுகை – 600 பேர் கைது

-

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆர்ப்பாட்ட தினமான மே நாளில் விவசாயத்தை சூறையாட வந்துள்ள மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கெதிராக தஞ்சையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதற்கான அனுமதி பெற்று வேலையைத் துவங்கியுள்ள கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானிக்கப்பட்டது. தஞ்சை இரயிலடியிலிருந்து புறப்பட்ட பேரணியை GEECL அலுவலகம் அமைந்துள்ள நாஞ்சிக்கோட்டை ரோடுக்கு சிறிது தூரத்தில் காவல் துறை தடுத்து கைது செய்தது. தடையை மீறி முற்றுகையிடச் சென்றதால் போலீசுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேர போக்குவரத்து நெரிசலுக்குப் பின் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக பேரணிக்கு தலைமை தாங்கி பேசிய தோழர் மாரிமுத்து (வி.வி.மு வட்டார அமைப்பாளர், பட்டுக்கோட்டை), “சென்ற மாதத்தில் பட்டுக்கோட்டையில் பேரணி-பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்தோம். தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அனுமதிக்கவில்லை. அப்போது அனுமதித்திருந்தால் கூட இவ்வளவு எழுச்சிகரமாக நடத்தியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. தற்போது இரண்டு மாதங்களாக 8 வட்டங்களிலும் கிராமம் கிராமமாக, வீடு வீடாக சென்று எமது தோழர்கள் பிரச்சாரம் செய்ததன் விளைவாக அந்த பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்களும் மக்களும் இந்த பேரணியில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் காவல் துறைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறினார்.

அடுத்ததாகப் பேசிய வேதாரணியம் பகுதி வி.வி.மு அமைப்பாளர் தோழர் தனியரசு, “மக்களுக்கே தெரியாமல் இந்த திட்டத்தை அமுல்படுத்துகின்றனர். இந்த மக்கள் விரோத திட்டத்தை தேர்தல் பாதையின் மூலம் தடுக்க முடியாது. மக்களை திரட்டி போர்க்குணமிக்க முறையில் நடத்தப்படும் போராட்டத்தின் மூலம்தான் விரட்டியடிக்க முடியும். இதற்கு அனைவரும் அணி திரள வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

திருவாரூர் மாவட்ட வி.வி.மு அமைப்பாளர் தோழர் கு.ம.பொன்னுசாமி பேசும் போது, டெல்டா விவசாயத்தையும் மக்களையும் ஒழித்துக் கட்டுவதற்காகவே இந்த திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக சாடியதுடன் மே நாள் ஒரு போராட்ட நாள் என்பதைக் குறிப்பிட்டு இதை ஒரு விழாவாக கொச்சைப் படுத்தும் போலிகம்யூனிஸ்டுகளையும் மற்ற கட்சிகளையும் குறிப்பிட்டு அம்பலப்படுத்தினார்.

பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றிய தோழர் காளியப்பன் (மாநில இணைச்செயலாளர், ம.க.இ.க), “மே நாள் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். அந்த வகையில் இதை போராட்ட நாளாக அறிவித்து ஆண்டு தோறும் செயல்படுத்தி வருகிறோம். அதே போலத்தான் இந்த ஆண்டும் தஞ்சை டெல்டா விவசாயத்தை ஒழிக்க வரும் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து பேரணி-முற்றுகைப் போராட்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று தஞ்சையில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் ஒன்பது இடங்களில் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டமாக நடத்தி வருகிறோம் என்று விளக்கினார். தமிழக அரசு கூடங்குளத்தில் செய்தது போல, இங்கு ஏதோ ஒரு வகையில் மீத்தேன் எடுத்து விட முடியாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முறியடித்தே தீருவோம். சென்ற மாத்த்தில் அவ்வாறு சீர்காழி வட்டத்தில் மக்களைத் திரட்டி தடுத்து நிறுத்தியிருக்கிறோம்” என்று ஆணித்தரமாக கூறினார்.

பேரணியில் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புத் தோழர்களும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழுவைச் சேர்ந்தோரும் என சுமார் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு சுமார் 600 பேர் கைதாயினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மே நாள் முழக்கங்கள்

விவசாயிகள் தொழிலாளர்கள்
நெசவாளிகள் இளைஞர்கள்
மாணவர்கள் பெண்கள் என…
உழைக்கும் மக்கள் அனைவரையும்
மரணக் குழியில் தள்ளுகின்ற
தனியார் மயத்தை ஒழித்துக் கட்ட
மே நாளில் சூளுரைப்போம்!

வாழ்க, வாழ்க, வாழ்கவே….
மே நாள் வாழ்கவே!
வெல்க, வெல்க, வெல்கவே
தொழிலாளர் ஒற்றுமை வெல்கவே

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
ஊருக்கே சோறு போடும்
காவிரி டெல்டா விவசாயம்
அழியப் போகுது அழியப் போகுது!

கொலை கார முதலாளி
கொள்ளை லாபம் அடிப்பதற்கு
அனுமதியோம் அனுமதியோம்

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனை
ஓட ஓட விரட்டியடிப்போம்!

கொள்ளை போகுது கொள்ளை போகுது
நாடே இன்று கொள்ளை போகுது
தனியார் மயத்தின் பெயராலே
கொள்ளையடிப்பதே சட்டமாச்சுது

இரும்புத் தாது நிலக்கரி
அலுமினியம் அலைக்கற்றை
ஆற்று மணல் தாது மணல்
ஒன்று விடாமல் கொள்ளையடிக்குது
கார்ப்பரேட் முதலாளி கும்பல்

நாட்டு வளங்களை சூரையாடி
உழைப்பாளி ரத்தத்தை உறிஞ்சுகின்ற
டாடா அம்பானி அதானி
மிட்டல் எஸ்ஸார் ஜின்டால்
தேச விரோத முதலாளிகளை
தூக்கிலிடுவோம் தூக்கிலிடுவோம்

உழுபவனுக்கே நிலம் சொந்தம்
உழைப்பவனுக்கே அதிகாரம்
உண்மையான சமூக நீதி
ஜனநாயக சம நீதி

மீத்தேன் திட்டத்தை தடுப்போம் என்று
ஓட்டு வாங்க கூச்சல் போட்ட
ஜெயலலிதா அரசாங்கம்
மாவட்ட ஆட்சியர் மூலம்
கிராம சபையை மிரட்டுது
மீத்தேன் திட்ட எதிர்ப்புகளை
முளையிலேயே கிள்ளுது

கார்ப்பரேட் கொள்ளைக்கு
கங்காணி வேலை பார்க்கும்
ஜெயலலிதாவை முறியடிப்போம்
மத்திய அரசை முறியடிப்போம்

நம்பாதே நம்பாதே
ஓட்டுக்காக சவடால் அடிக்கும்
ஓட்டுக் கட்சிகளை நம்பாதே
போலி ஜன நாயகத்
தேர்தலைப் புறக்கணிப்போம்
உண்மையான ஜனநாயகம்
உருவாக்கப் போராடுவோம்
மாற்று அதிகார அமைப்புகளை
கட்டியெழுப்புவோம் கட்டியெழுப்புவோம் !

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி