privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாமார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

-

‘’தனிச் சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச் சொத்து ஒழிக்கப்பட்டு விட்டது; ஒரு சிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம், இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான். ஆக சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்… ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம். ‘’

– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பிரபலமான மேற்கோள் ஒன்று.

‘’ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும், ஜார் ஆரசனும்… ஜெர்மன் உளவாளிகளும், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.’’

கம்யூனிஸ்ட் அறிக்கை – என்று துவங்குகிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. 1848 பிப்ரவரியில் லண்டனில் உள்ள ஒரு சிறிய அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட இந்தச் சிறிய வெளியீடு, ஐரோப்பாவை மட்டுமல்ல, உலகத்தையே பிடித்து ஆட்டத் தொடங்கியது.

அறிக்கை வெளிவந்து இன்று 150 (தற்போது 166) ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் உலகைப் பிடித்து ஆட்டிக் கொண்டுதானிருக்கிறது.

இத்தகையதோர் வரலாற்று ஆவணம் உருவான 19-ம் நூற்றாண்டு ஒரு கொந்தளிப்பான காலம். 1831 நவம்பரில் பிரான்சின் நெசவாளர்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கினர். அவர்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டனர். எனினும் பாட்டாளிகளுக்கும் முதலாளிகளுக்குமிடையிலான இந்த மோதல் ஐரோப்பா முழுவதிலுமிருந்த மன்னர்களையும் முதலாளிகளையும் நடுங்கச் செய்தது.

நெசவாளர்களின் ஆயுத எழுச்சியை நேரில் கண்ட ஒரு ஆளும் வர்க்க சித்தாந்தவாதி கீழ்க்கண்டவாறு அபாயச்சங்கு ஊதினார்:

‘’செல்வந்தர்களின் ஆதாயத்திற்காக மட்டுமே நீங்கள் வியர்வை சிந்துகிறீர்கள். ஆலை முதலாளிகள்தான் உங்கள் இயற்கையான எதிரிகள்.. ஆனால் நீங்கள்தான் எண்ணிக்கையில் மிகவும் பெரியவர்கள்; மிக வலிமையானவர்கள். ஒன்று சேருங்கள்! என்று தொழிலாளர்களை நோக்கிச் சொல்பவர்கள் தோன்றுவார்கள்.’’

ஆம்! ஆனால் அவர்கள் ஏற்கெனவே தோன்றியிருந்தார்கள். அவர்கள் தேவ தூதர்கள் அல்ல; வரலாறு ஈன்றெடுத்த பிள்ளைகள். அவர்கள் தங்கள் வசனத்துக்கு மரியாதை சேர்க்க எந்தத் தேவனையும் துணைக்கு அழைக்கவில்லை.

‘’முந்தைய உலகக் கண்ணோட்டம் மற்றும் முந்தைய வரலாற்றின் தர்க்க ரீதியான, வரலாற்று ரீதியான, அவசியமான தொடர்ச்சி என்ற வகையில் நமது கோட்பாடுகளை வளர்த்து ஒரு சில படைப்புகளில் வடிக்காத வரை உண்மையான தெளிவு மக்களுக்கு இருக்காது. பெரும்பான்மையினர் இருளில் குழம்பித் திரிவார்கள்’’ – என்று 1844 அக்டோபரில் எங்கெல்சிற்குக் கடிதம் எழுதினார் மார்க்ஸ்.

ஆம்! பலர் குழம்பித்தான் திரிந்தார்கள். டஜன் கணக்கிலான சோசலிசக் கோட்பாடுகள் தோன்றின. ‘’எல்லோரையும் பேரரசர்களாகவும் போப்பாண்டவர்களாகவும் மாற்ற விழையும்’’ இந்தப் போக்குகளை ஏளனம் செய்து சாடினர் மார்க்சும் எங்கெல்சும்.

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்

மன்னர்களையும், முதலாளிகளையும் அவர்களுடைய கொள்ளையையும் இரட்டை வேடத்தையும் தனது குத்தீட்டி போன்ற சொற்களால் மார்க்ஸ் கிழித்துக் காட்டியவுடன் ‘’உன்னுடைய தொழிலாளி வர்க்கம் மட்டுமென்ன, கலப்பற்ற சொக்கத் தங்கமோ?’’ என்ற கேள்வியை எழுப்பினார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். ‘’சாதி, மதம், சுயநலம், குடி, சூது, ஆடம்பர மோகம் – என்று இவை அனைத்திலும் ஊறிக்கிடக்கும் உன்னுடைய தொழிலாளிகளா புரட்சி செய்யப் போகிறார்கள்?’’ என்பதுதானே புரட்சியாளர்களை நோக்கி மார்க்சிய எதிர்ப்பாளர்கள் அனைவரும் எழுப்பும் கேள்வி.

‘’தூக்கியெறியும் (பாட்டாளி) வர்க்கத்தால் புரட்சியின் போது மட்டுமே தன்னிடமிருந்து பழைய ஆபாசம் முழுவதையும் விட்டொழித்து சமுதாயத்தின் புதிய அடிப்படையை தோற்றுவிக்க வல்லதாக மாற முடியும்’’…

‘’உழைக்கும் வர்க்கங்கள் இயற்கையை வென்று விட்டன. இனி அவர்கள் மனிதர்களை வெல்ல வேண்டும். இந்த முயற்சியில் வெற்றி காண அவர்களுக்கு வலிமை தேவையில்லை. ஆனால் அவர்களது பொதுவான வலிமையை ஸ்தாபனப்படுத்துவதுதான் தேவைப்படுகிறது’’ என விடையளித்தார் மார்க்ஸ்.

பிரெடரிக் எங்கெல்ஸ்
பிரெடரிக் ஏங்கெல்ஸ்

தொழிலாளி வர்க்கத்தை அமைப்பாக்கும் வேலையை மார்க்சும், எங்கெல்சும் முன் நின்று செய்தார்கள். அனைத்துலகக் கம்யூனிஸ்டு கழகத்தை ஏற்படுத்தினார்கள். பல்வேறு விதமான கற்பனைச் சோசலிசப் போக்குகளுக்கு எதிராகத் தங்களது விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகளை முன் வைத்து அக்கழகத்தின் இரண்டாவது காங்கிரசில் வாதாடினார்கள். அறிக்கை எழுதும் பொறுப்பை கழகம் அவர்களிடம் ஒப்படைத்தது. பிறகு அறிக்கை அக்கழகத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

“இந்தச் சிறு பிரசுரம் மிகப் பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது’’ என்று பின்னாளில் குறிப்பிட்டார் லெனின். மார்க்சியத்தின் அரசியல் பொருளாதார, தத்துவ ஆயுதமாக விளங்கிய கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளி வந்தவுடனே விற்றுத் தீர்ந்து விடவும் இல்லை. உலகைக் கவர்ந்து விடவும் இல்லை. ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் வெற்றியையும் பின்னடைவையும் ஒட்டி அறிக்கை மீதான ஆர்வம் கூடிக் கொண்டும் குறைந்து கொண்டும் இருந்தது.

அறிக்கை வெளியிடப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் 1887-இல் எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார்:

‘’ஒரு உலகப் போரைத் தவிர, அதுவும் இதுவரை கனவு கண்டிராத விரிவும் வன்முறையும் கொண்ட ஒரு உலகப் போரைத் தவிர வேறெந்தப் போரும் முடிவில் ஜெர்மனிக்குச் சாத்தியமில்லை… இளவரசர்களே, ராஜதந்திரிகளே உங்களுடைய ஞானத்தால் இன்று நீங்கள் ஐரோப்பாவை இங்குதான் கொண்டு வந்துள்ளீர்கள்… போர் தற்போதைக்கு எங்களைப் பின்னணிக்குத் தள்ளலாம். நாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள சில சாதகங்களை அது எங்களிடமிருந்து பறித்துக் கொள்ளலாம். ஆனால் உங்களால் மீண்டும் என்றுமே கட்டுப்படுத்த முடியாத சக்திகளை நீங்கள் கட்டவிழ்த்து விடும்போது, நிகழ்ச்சிகள் அவற்றின் போக்கிலேயே நடைபெறட்டும். இந்த யுத்தத்தின் முடிவில் நீங்கள் நாசமாக்கப்படுவீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி அடையப்படிருக்கும் அல்லது தவிர்க்க முடியாததாகியிருக்கும்.’’

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்
காரல் மார்க்ஸ் – பிரெடரிக் எங்கெல்ஸ்

உண்மைதான்! பாட்டளி வர்க்கத்தின் வெற்றி அடையப்பட்டு விட்டது ரசியாவில். முதல் உலகப் போரின் முடிவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தோற்றுவிக்கப்பட்டது. மார்க்சியமும், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையும் எட்டுத் திக்கும் பரவத் தொடங்கின.

சமூக உறவுகளின் இயக்கத்தைப் பற்றியும் அதன் உள் உறவுகளைப் பற்றியும் துல்லியமாகப் புரிந்து கொண்டு விட்டால் நிலவுகின்ற சமூக அமைப்புதான் நீடித்திருக்க முடியும் என்ற மாயை அகன்று விடும் என்றார் மார்க்ஸ். அத்தகைய புரிதல் இருந்தால் இயற்கை விஞ்ஞானத்தையொத்த துல்லியத்தை சமூக விஞ்ஞானமும் பெற முடியும் என்றார் எங்கெல்ஸ்.

தொழிலாளி வர்க்கம் அவ்வாறு புரிந்து கொள்வதன் அபாயத்தை பாரிஸ் கம்யூனிலும், ரசியப் புரட்சியிலும் முதலாளி வர்க்கம் பட்டுத் தெரிந்து கொண்டது. தத்துவத் துறையில் விஞ்ஞானத்தைத் திட்டமிட்டே புறக்கணிக்கத் தொடங்கியது. அறியொணாவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது; ‘’வல்லாண்மைக்கான விருப்புறுதி’’ எனக் கூறி காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தியது.

கீனிசியப் பொருளாதாரமும் போலி சோசலிசமும் வீழ்ச்சியடைந்ததை கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகச் சித்தரித்தது. தான் உருவாக்கிய, தனது சொந்த மதிப்பீடுகளைத் தானே நொறுக்க நேர்ந்த போது, தன்னுடைய முடிவு நெருங்கும் போது, ஏகாதிபத்தியம் இன்று அதை ‘சித்தாந்தத்தின் முடிவு’ என்று பிரகடனம் செய்கிறது.

லட்சிய வீடு, லட்சியக் கார், லட்சிய வேலை, லட்சியத் தொலைக்காட்சி… எல்லாவற்றையும் அடைய முடியும். லட்சிய சமூகம் ஒன்றை மட்டும் அடைய முடியாது என்கிறார்கள் ஏகாதிபத்தியத்தின் தத்துவ ஞானிகள். ‘’கம்யூனிசம் பற்றிக் கனவு காண்பவர்கள் இன்றைய சமூக சூழ்நிலையை உணராதவர்கள்’’ என்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள் சில ஆய்வறிஞர்கள்.

‘’நாம் உயிர்வாழும் வாயு மண்டலம் நம் ஒவ்வொருவர் மீதும் 20,000 பவுண்டு சக்தியுடன் அழுத்திய போதிலும் நீங்கள் அதை உணர்கிறீர்களா என்ன? அது போலவே ஐரோப்பிய சமூகம் தன்னைச் சூழ்ந்து எல்லாப் பக்கங்களிலும் அழுத்திக் கொண்டிருந்த புரட்சிகர வாயு மண்டலத்தை 1848-க்கு முன் உணரவில்லை’’ என்று கூறினார் மார்க்ஸ்.

1998-லும் (தற்போது 2014-லிலும்) அப்படித்தான். தனது நலனுக்காக உலகப் பொருளாதாரத்தை ஒன்று சேர்க்கும் வல்லரசுகள், உலகத் தொழிலாளி வர்க்கம் மட்டும் ஒன்று சேரக் கூடாது என விரும்புகின்றன. ஆனால் விருப்பங்கள் மட்டும் வரலாற்றை இயக்கிச் செல்வதில்லை.

கம்யூனிசம் எனும் பூதம் மீண்டும் உலகை ஆட்டத் தொடங்கும். தனது உதடுகள் உச்சரித்த ‘’உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’’ என்ற முழக்கம் செயல் வடிவம் பெற்றதைக் காண அந்த ஆசான்கள் இல்லையே எனத் தொழிலாளி வர்க்கம் கண் கலங்கும்.

– சூரியன்
______________________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 1998
______________________________________

  1. கடல்புறா பொன்னியின் செல்வன் போன்ற கற்பனை கலந்த சரித்திர நாவல்களை ஆர்வமாகவும் விறுவிறுப்பாக படித்தவர்கள் பலபேர் இந்த நுறுபக்க (பலமுகவுரைகளும்சேர்த்து)மனித-வர்க்கப் போராட்டத்தை சொல்லும் கம்யூனிஸ்கட்சி அறிக்கை பற்றி அபிப்பிராயம் கேட்டால்…தற்காலநடமுறைக்கு ஒவ்வாது. இந்த நவீனங்களில்லுள்ள ஆர்வம் அதில் இல்லை போன்றது மாதிரி கதைத்து இறுதியில் நழுவியே விடுவார்கள்.

    இன்று கம்யூனிஸ்கட்சி அறிக்கை தோன்றி நுற்றிஅறுபத்தைந்து வருடங்கள் கழிந்துவிட்ட கழிந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ போராட்டங்கள் மாக்ஸியத்தின் பெயரில் நடத்தப்பட்டாலும் 1870-பாரீஸ்கம்யூன் 1917-போல்சேவிக் புரட்சி பல வரலாற்று தடயங்களை விட்டு சென்றுள்ளது.

    இன்னும் மாக்ஸின்(தொழிலாளவர்கத்தின்)இறுதி லட்சியம் நிறைவேற்றுப் படவில்லை என்பதை மிகஆழ்ந்த துயரத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.உற்பத்தியின் கட்டுபாடு தொழிலாளவர்கத்தின் கைக்கு வந்துசேர முடியவில்லை. தேவைக்காக உற்பத்தி செய்வதும் நிறைவேற்றுப் படவில்லை.

    முதலாம் அகிலத்தை ஸ்தாபித்தவர்கள் மாக்ஸ்சும் எங்கல்சும் என்பதை நாம் மறக்கக்கூடாது.ஆனபடியால் தான் உலகத்தில்லுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிலாளவர்க்கத்தின் முன்னேறிய பகுதியினரை கொண்டு சர்வதேச தொழிலாளவர்கத்தை இணைத்து சரித்திரம் படைக்க கூடியதாகயிருந்து. ஆகையினால் மட்டுமே சமூகமாற்றம் சமூகபுரட்சியை பற்றி தொழிலாளவர்க்கம் அறியக்கூடியதாக இருந்தது.இதன் நீட்சியே அக்டோபர் புரட்சி.

    இன்றுவெகுவாகவே மனிதகுலம் முன்னேறி வந்துள்ளது.

    சந்தியில் நடந்த செய்தி வீட்டிற்கு வருவதற்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த செய்தி வீட்டுக்கு வந்துவிடுகிறது.ஆகவே உலகம் உள்ளம் கையில். தொழிலாளவர்கத்தின் போர்குணமும் உள்ளங்கையில் தான்.

    “தொழிலாளருக்கு தாய்நாடில்லை.அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடம் இருந்து பிடுங்குவது முடியாத காரியம்.பாட்டாளிவர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலான்மை பெற்றாக வேண்டும்.தேசத்தின் தலைமையான வர்க்கமாய் உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கி கொண்டாக வேண்டும்”-இது அறிக்கையில் உள்ள ஒரு முத்து.

    முதலாம் உலகயுத்தம் முடிவடைந்து நுறுவருடங்கள் ஆகிறது.
    இதன் பின்பும் உலகத்தின் நாலாபக்திலும் யுத்தமுனைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. முதாலித்துவத்திற்கு தன் மந்தை நிலையில் திரும்பவும் வீறுகொண்டெழுவதற்கு பெரும் தொகையான உற்பத்திசக்திகளையும் உற்பத்திகருவிகளையும் காவு கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கு எந்த நாட்டு தேசிய முதாலித்துவமும் மறுப்பு சொல்லப் போவதில்லை.

    இதற்கு ஒவ்வொருநாட்டு தொழிலாளவர்க்கமும் தன்னைதானே பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. அந்த வகையில் கம்யூனிஸ்கட்சி அறிக்கை இருளை போக்கிற அகல்விளக்காக உழைப்பாளர் கையில் இருந்து ஒளி கொடுக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க