தேர்தல் பரபரப்பில் தமிழகமே மூழ்கடிக்கப்பட்டிருந்த வேளையில், தமது திருபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிரந்தரத் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது நோக்கியா நிறுவனம். இந்த உத்தரவு நோக்கியாவில் பணிபுரியும் 6,600 தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, நோக்கியாவிற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் பாக்ஸ்கான் உள்ளிட்டு அதன் துணைநிறுவனங்களில் பணிபுரிந்துவரும் 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நோக்கியாவின் இம்முடிவைக் கண்டித்து கடந்த ஏப்ரல்-1 அன்று சென்னை – சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர், நோக்கியா தொழிலாளர்கள்.

12பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான நோக்கியா, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்ததை வளர்ச்சியின் அடையாளமாகச் சித்தரித்துக் கொண்டாடினார்கள். அந்த வகையில் நோக்கியாவைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தது நான்தான், இல்லை நான்தான் என்று ஜெயாவும், கருணாநிதியும் போட்டிபோட்டுக் உரிமை பாராட்டிக் கொண்டனர். ஆனால், நோக்கியா தொழிலாளர்கள் தங்களது வேலைக்கும் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் கோரி நடுத்தெருவில் நின்றபோது, இந்த இருவரில் ஒருவர்கூட அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

நோக்கியா தனது தொழிலாளர்களின் கழுத்தில் கத்தியை வைப்பதற்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கடந்த செப்.2013-ல் கையகப்படுத்தியது. இதனையடுத்து நோக்கியா இந்தியாவிலுள்ள தனது ஆலைகள் மற்றும் சொத்துக்களை மைக்ரோசாப்டுக்கு மாற்றிக் கொடுக்க முனைந்திருந்த நேரத்தில்தான், அந்நிறுவனம் இந்திய அரசிற்குச் செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வரியைக் கட்டாமல் ஏத்திருப்பதைக் கண்டுபிடித்த வருமான வரித்துறை, வட்டியோடு சேர்த்து 21,153 கோடி ரூபாயைச் செலுத்திவிட்டுச் சொத்துக்களை மாற்றிக் கொடுக்குமாறு நோட்டீசு அனுப்பியது. ஏய்த்த வரியைக் கட்ட நோக்கியா மறுக்கவே, அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில், “வரியைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்தால், சென்னை ஆலையை மூடிவிட்டு வெளியேறுவோம்” என வாதிட்டுத் தொழிலாளர்களைப் பணயம் வைத்தது, நோக்கியா. இதே சமயத்தில், நோக்கியா தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய 2,400 கோடி ரூபாய் விற்பனை வரியைக் கட்டாமல் தகிடுதத்தம் செய்திருப்பதும் அம்பலமாகி, தமிழக அரசும் வரியைக் கட்ட உத்தரவிட்டு நோட்டீசு அனுப்பியது.

மைக்ரோசாப்டோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தக் கெடு நெருங்குவதால், ஏய்த்த வரியைக் கட்டாமல் ஆலையை மூடிவிட்டு வெளியேறும் குறுக்கு வழியை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது, நோக்கியா. இதன் முதல்கட்டமாக தனது மாதாந்திர கைபேசி உற்பத்தி இலக்கை 1.3 கோடியிலிருந்து 40 இலட்சமாகத் திட்டமிட்டே குறைத்தது. அதனையடுத்து 6,600 தொழிலாளர்களைச் சிறுகச்சிறுக வெளியேற்றும் முடிவை அறிவித்திருக்கிறது. மேலும், சென்னை ஆலை மூடப்பட்டால் ஏற்படும் உற்பத்தி இழப்பை, சீனாவிலும், வியட்நாமிலும் திறக்கப்பட்டுள்ள புதிய ஆலைகள் ஈடு செய்துவிடும் எனத் தெனாவெட்டாக தெரிவித்திருக்கிறது.

வெறும் 600 கோடி ரூபாய் மூலதனத்துடன் தமிழகத்திற்கு நுழைந்த நோக்கியா அதைவிடப் பலமடங்கு இலாபத்தைச் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் சம்பாதித்துவிட்டு வெளியேற நாள் குறித்து விட்டது. ஆனால், எட்டாண்டுகளாகக் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்குக் கிடைத்து என்ன? இருண்ட, நிச்சயமற்ற எதிர்காலம். வளர்ச்சி, வளர்ச்சி என்று ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒரேகுரலில் ராகம் போடுகிறார்களே, அதன் பொருள் இதுதானோ?
_____________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
_____________________________