privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ராஜபக்சே வருகை: வைகோவின் கபடநாடகம்

ராஜபக்சே வருகை: வைகோவின் கபடநாடகம்

-

மோடியின் பதவியேற்பு விழாவின் சிறப்பு விருந்தினராக கொலைகாரன் ராஜபக்சேவை அழைத்திருக்கிறது பாஜக அரசு. இது குஜராத்தின் இனக் கொலைக்குற்றவாளி, ஈழத் தமிழினக் கொலையாளிக்கு அளிக்கும் விருந்துபசாரம். மன்மோகன் அரசு ராஜபக்சேவுக்கு கள்ளத்தனமாக ஆதரவு கொடுத்தது என்றால், சிங்கள் இனவெறி அரசுக்குத் தனது ஆதரவைப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்திருக்கிறார் மோடி.

VAIKO-cartoonஇந்த செய்தி வெளிவந்தவுடனேயே வைகோ நடிக்கத்தொடங்கி விட்டார். மோடி இப்படியொரு முடிவெடுப்பார் என்று வைகோ எதிர்பார்க்கவே இல்லையாம். இந்தச் செய்தி அவரது தலையில் ஒரு இடியைப்போல இறங்கியதாம். அதிகாரிகள் மோடிக்கு தவறாக வழிகாட்டி விட்டார்களாம். பொங்கி வரும் கண்ணீரோடு கும்பிட்ட கரங்களுடன் “ராஜபக்சேவை அழைக்காதீர்கள்” என்று தமிழர்கள் சார்பில் மோடியை வேண்டிக் கேட்டுக் கொள்கிறாராம். மோடி இதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை. “ராஜபக்சே வருவதுதான் தமிழர்களுக்கு நல்லது” என்று பொன் இராதா கிருஷ்ணன் பதில் சொல்லி விட்டார். “ராஜபக்சேவை எதிர்ப்பவர்கள் அரை வேக்காடுகள்” என்று அறிக்கை விட்டிருக்கிறார் பாஜக வின் எச்.ராசா.

ஈழத்தமிழ் மக்களுக்கு சம உரிமை பெற்றுத் தரப்போவதாகவும், தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தப்போவதாகவும் தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி அடித்த சவடால்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவையெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக வைகோ எழுதிக் கொடுத்த வசனங்கள்தான்.

மோடியின் பேச்சு முழுவதும் பொய் என்பதும், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், அது காங்கிரசைக் காட்டிலும் தீவிரமாக ராஜபக்சேவை ஆதரிக்கும் என்பதும் வைகோ, நெடுமாறன், ராமதாசு, விஜயகாந்த், தமிழருவி மணியன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். 2000 ஆண்டில் புலிகள் யாழ் குடாப் பகுதியைக் கைப்பற்றி, சிங்கள இராணுவத்தை முற்றிலுமாகத் தோற்கடித்திருந்த தருணத்தில், வாஜ்பாய் அரசு புலிகளை மிரட்டிப் பின்வாங்க வைத்தபோது, வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த யோக்கியர்தான் வைகோ.

“இலங்கையில் நடந்தது போர்க்குற்றமே அல்ல, சர்வதேச போர்க்குற்ற விசாரணை கூடாது, இனப்படுகொலை என்று சொல்லவே கூடாது, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்ககக் கூடாது” என்பதெல்லாம்தான் பாரதிய ஜனதாவின் கொள்கைகள். இதை அவர்கள் பல முறை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். 2009-ல் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலத்தில், அவர்கள் மன்மோகன் அரசுக்கு பக்கபலமாக நின்றார்களேயொழிய, போரை நிறுத்த வேண்டும் என்று பேச்சுக்கு கூடக் கோரியதில்லை.

சிங்கள இராணுவத்தின் இன அழிப்புக் குற்றங்கள் அம்பலமாகி, சர்வதேச அரங்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பாரதிய ஜனதாவினர்தான். ராஜபக்சே அரசின் பேராதரவுடன்தான் இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ் இலங்கையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மோடியின் குஜராத் அரசுதான் ராஜபக்சே அரசுடன் சிறப்பான வர்த்தக உறவுகளை வைத்திருந்தது. இத்தனை உண்மைகளையும் இருட்டடிப்பு செய்து, காங்கிரசு மீதும் திமுக மீதும் தமிழக மக்கள் கொண்டிருந்த வெறுப்பை தந்திரமாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக திருப்பி விட்டவர்கள்தான் வைகோ, தமிழருவி மணியன், நெடுமாறன் போன்றவர்கள்.

மோடி - வைகோ
முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்கு பொன் ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து, பாரதிய ஜனதாவை ஈழத்தமிழர்களின் நண்பன் என்று தமிழக மக்களை நம்பவைத்தவர்கள் இவர்கள்.

தமிழக மக்களை மட்டும் இவர்கள் ஏமாற்றவில்லை. புலிகளையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள். இறுதிப் போரின் போது, 2009-ம் ஆண்டின் துவக்கத்திலேயே புலிகள் பெரும் பின்னடைவுக்கு ஆளாகத் தொடங்கியிருந்தனர். இருப்பினும் ‘மே 2009 தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறப்போகிறது என்றும், அடுத்த கணமே போர் நிறுத்தம் வந்து விடும்’ என்றும் புலிகளுக்கு இவர்கள் பொய் நம்பிக்கை ஊட்டினார்கள். டெல்லிக்கு காவடி எடுத்துச் சென்று, அத்வானிக்கு மேடை அமைத்துக் கொடுத்தார் வைகோ. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு கேட்டு தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வைத்தார்கள். மொத்தத்தில் புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலின் மரணக்குழியில் சிங்கள இராணுவத்திடம் சிக்கும் வரை அரசியல் ஆலோசனை வழங்கியவர்கள் இவர்கள்தான்.

எந்த பாரதிய ஜனதாவின் மீது நம்பிக்கை வைக்குமாறு இவர்கள் புலிகளுக்கு ஆலோசனை சொன்னார்களோ அந்த பாஜக, ராஜபக்சேவுக்கு எதிராக “போர்க்குற்றம்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதையே எதிர்த்தது. இருப்பினும் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்கு பொன் ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து, பாரதிய ஜனதாவை ஈழத்தமிழர்களின் நண்பன் என்று தமிழக மக்களை நம்பவைத்தவர்கள் இவர்கள்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? 2009 ஈழப்போரைக் காட்டி, காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்தான் தமிழருவி மணியன் என்ற புரோக்கர் தமிழகத்தில் தனது வேலையைத் தொடங்கினார். தமிழகத்தில் அநாமதேயமாக இருந்த பாரதிய ஜனதா கட்சி இன்று 5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-க்கு காலாட்படை வேலை செய்வதும், திமுக எதிர்ப்பு என்ற பெயரில் பார்ப்பனக் கும்பலுக்கு சொம்பு தூக்குவதும்தான் வைகோ, தமிழருவி, நெடுமாறன் ஆகியோர் நடத்தி வரும் அரசியல். தங்கள் நோக்கத்திற்கு ஈழப்பிரச்சினையை இவர்கள் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

modi-rajapakseஇவர்களைத் துரோகிகள் என்று கூறுவதை விட, ஆர்.எஸ்.எஸ்-ன் ஐந்தாம் படையினர் என்று மதிப்பிடுவதே சரியானது. இந்த ஐந்தாம் படைதான், ராஜபக்சே வருகைக்கு கண்டனம் தெரிவிப்பது போல இன்று நடிக்கிறது. விஜயகாந்த், ராமதாசு போன்ற அருவெறுக்கத்தக்க பிராணிகளோ, ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவிக்கக் கூட வாய் திறக்காமல், பதவி எலும்புக்காக எச்சில் ஒழுக காத்திருக்கின்றனர்.

குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளியான மோடியை, இந்தியாவின் இராஜபக்சே என்று அழைப்பதே பொருத்தம் என்று நாங்கள் கூறியிருந்தோம். பசில் ராஜபக்சே அதனை வழிமொழிந்திருக்கிறார். “மோடி குஜராத்தில் சாதித்திருக்கும் வளர்ச்சியைத்தான் மகிந்த இலங்கையில் சாதித்திருக்கிறார் என்றும், எனவே மோடி இந்தியாவின் ராஜபக்சே” என்றும் கூறியிருக்கிறார் பசில். எனவே, வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன், ராமதாசு, விஜயகாந்த், ஈசுவரன், பாரிவேந்தர் உள்ளிட்ட அனைவரும் இந்திய இராஜபக்சேவின் கூட்டாளிகள் மட்டுமல்ல, இலங்கை இராஜபக்சேவின் கூட்டாளிகளும்தான் என்பதில் ஐயமில்லை.

தெற்காசிய விரிவாதிக்கமும் அமெரிக்க கைக்கூலித்தனமும் இணைந்ததுதான் பாஜக வின் இலங்கைக் கொள்கை. இதுவேதான் காங்கிரசின் கொள்கையும். அகண்ட பாரதம் என்பது அந்தக் கனவுக்குப் போடப்பட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் சாம்பிராணி. “பாகிஸ்தான் இராணுவம் நமது சிப்பாயின் தலையைக் கொய்து அனுப்பும்போது, அவர்களுக்கு சிக்கன் பிரியாணி போட்டு விருந்து வைக்கிறார் மன்மோகன் சிங்” என்று பேசிய மோடி, “அது நாற வாய், இது வேற வாய்” என்று கூறி இப்போது நவாஸ் ஷெரிபுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தனது முடிசூட்டு விழாவுக்கு குறுநில மன்னர்களை அழைக்கும் சக்ரவர்த்தியைப் போல எண்ணிக்கொண்டு தெற்காசிய நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் மோடி. இதனைக் காணாததைக் கண்ட அற்பனுக்குரிய நடத்தை என்றும் கூறலாம். இந்தியத் தரகு முதலாளிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் அடிமையின் நடத்தை என்றும் கூறலாம்.

தெற்காசிய நாணயமாக ரூபாயை மாற்றுவது, தெற்காசியா முழுவதற்குமான சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவை இந்தியத் தரகு முதலாளிகளின் நெடுநாளைய கோரிக்கைகள். அதை நிறைவேற்றித் தருவதற்கான துவக்கம்தான் இந்த முடிசூட்டு வைபவம்.