privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் - திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்

ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் – திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்

-

1. திருச்சி

  • முதல் நாளே கழன்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி!
  • ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
  • தமிழின விரோத பா.ஜ.க-வை தமிழர்களின் காவலனாக சித்தரித்த வைகோ, நெடுமாறன் கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
  • விஜயகாந்த், ராமதாசு, பாரிவேந்தர், உள்ளிட்ட பிழைப்புவாதிகள் தமிழ் மக்களின் விரோதிகளே!

என்ற தலைப்பில் தமிழகம் முழுக்க இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் இன்று, (26.05.2014) ஆர்ப்பாட்டமும், இராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பும் நடத்தப்பட்டது. இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள மோடி, தனது முடி சூட்டு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் தலைவர் என்ற வகையில் தமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்ததன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்களுக்குத் தான் அளித்த நாடகத்தை கலைத்து விட்டு உண்மை முகத்தை காட்டியுள்ளார். வைகோ, நெடுமாறன், இராமதாசு போன்றோர் தேர்தலின் போது இவருக்கு மாட்டி விட்ட முகமூடி பதவியேற்புக்கு முன்பே கிழிந்து தொங்குகிறது.

பா.ஜ.க-வைப் பற்றி ஒன்றுமே தெரியாதவரைப் போல வைகோ உள்ளிட்டோர் இன்று நாடகமாடுகின்றனர். ஆனால், 2000-ம் ஆண்டில் புலிகள் யாழ்குடா நாட்டில் சிங்கள இராணுவத்தினர் 40,000 பேரை சிறை பிடித்து சிங்கள அரசு பணிய நிர்ப்பந்திக்கப் பட்டிருந்த நிலையில்,… கடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு சிங்களர்கள் இராணுவ வீரர்களை மீட்க வேண்டும் என்ற நிலைக்கு வந்த நிலையில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் புலிகளை மிரட்டி சிங்கள இராணுவ வீரர்களை விடுவித்தார் என்பதை அறியாதவரல்ல. அப்போதும் வாஜ்பாய் அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இந்த வைகோ.

வைகோ, நெடுமாறன்ஆகியோர் தாங்கள் என்னதான் பெரியாரின் பேரன் என்றும் தமிழினத்தின் காவலன் என்றும் சவடால் அடித்தாலும் இவர்கள் ஆர்.எஸ், எஸ்-ன் அய்ந்தாம் படையினரே என்பது அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இவர்களை அம்பலப்படுத்தியும் தமிழ் மக்கள் இந்த விபீடணர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் தோழர் சுந்தரராசு தலைமை வகித்தார். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் தர்மராசு சிறப்புரையாற்றினார்.

காவல் துறை அனுமதியுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் சிங்கள இன வெறியன் இராஜபக்சேவின் கொடும்பாவியைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி தோழர்கள் கைதாயினர். இந்த போராட்டத்திற்கு சட்டக்கல்லூரி மாணவரும் பு.மா.இ.மு மாவட்ட செயலருமான தோழர் சேக் தலைமை தாங்கினார்.

இராஜபக்சே கொடும்பாவியை எரித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த  ஊனமுற்ற நண்பர் ஒருவர் தானும் தன்னார்வத்துடன் இணைந்து முழக்கமிட்டார்.  போராட்டம் முடிந்து தோழர்களைக் கைது செய்யும் போது நீங்கள் ம.க.இ.க-வா,  கைது செய்யப் போகிறோம். என்ற போது, “ நான் ம.க.இ.க இல்லை. ஆனால், கைது செய்வதென்றால் கைது செய்து கொள்ளுங்கள். சரியான விசயத்திற்காக கைதாவில் தவறில்லை” என்று கூறினார். எனினும் காவல் துறை அவரைக் கைது செய்யாமல் தவிர்த்தனர்.

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்!
சிங்கள இனவெறி பாசிஸ்டு
ராஜபக்சேவை விரட்டியடிப்போம்!

கழண்டு போச்சு, கழண்டு போச்சு
முதல் நாளே கழண்டு போச்சு
இந்துத்துவ மோடியின் முகமூடி!
கழண்டு போச்சு, கழண்டு போச்சு!

கூட்டா..ளிதான் கூட்டா..ளிதான்
மத வெறியன் நரேந்திர மோடியும்
இனவெறியன் ராஜபக்சேவும்
கூட்டாளிதான் கூட்டாளிதான்!

வேறல்ல வேறல்ல
ஈழத் தழிழரை கொன்றொழித்து
இரத்தம் குடித்த இராஜபக்சேவும்
சிறு..பான்மை முசுலிம் மக்களை
கொலை செய்த மோடியும்
வேறல்ல வேறல்ல

வை.கோ, இராமதாசு, நெடுமாறன்
ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
இந்த கும்பலின் எதிர்ப்பெல்லாம்
நாடகமே, நாடகமே!

பா.ஜ.க-வின் இராதாகிருஷ்ணனை
பார்ப்பன-பாசிஸ்டு இராதாகிருஷ்ணனை
முள்ளி வாய்க்கால் முற்றத்துக்கு
வரவைத்து…. நம்ப வைத்து
ஈழத்தமிழரின் நண்ப..னென்று
தமிழக மக்களை நம்ப வைத்தது
வை.கோ, நெடுமா கும்பலே!

தமிழக மக்களை மட்டுமல்ல
புலிகளை..யும் நம்ப வைத்து
கழுத்தறுத்தது அய்ந்தாம் படையே
வை.கோ நெடுமா அய்ந்தாம் படையே!

காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்
ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை செய்ய
தி.மு.க எதிர்ப்பு என்ற பெயரில்
பார்ப்பன கும்பலுக்கு சொம்பு தூக்கும்
வை.கோ, நெடுமா, – வோடு
தமிழருவி என்ற பெயரில்
கூவம் ஒன்று அலையுது!

கூடி நாம விரட்டாம
அசிங்கம் என்றும் அகலாது!

விஜயகாந்து, இராமதாசு
பாரி வேந்தர் உட்பட
பிழைப்புவாதிகளை இனம் காண்போம்!
தமிழின விரோதிகளை விரட்டியடிப்போம்!

வேறல்ல வேறல்ல
கய..வாளி காங்கிரசும்
மதவெறி கும்பல் பா.ஜ.க-வும்
வேறல்ல வேறல்ல!
காங்கிரசும் பா.ஜ.க-வும் வேறல்ல

இந்திய முதலாளிகள் கொள்ளைக்காக
தெற்… காசிய பிராந்தி…யத்தில்
மேலா…திக்கம் பெறுவதற்..காக
ஈழத் தமிழரை அழிக்கிறான்
தமிழக மீனவரக் கொல்லுறான்

கூட்டாளிதான் கூட்டாளிதான்
காங்கிரசும் பா.ஜ.க-வும்
டாடா அம்பானி நலனுக்காக
தமிழனக் கொல்வதில் கூட்டாளிதான்

நம்பாதீங்க, நம்பாதீங்க
காங்கிரசுக்கு மாற்றுன்னு
பா.ஜ.க-வை நம்பாதீங்க!
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்
கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளை
காங்கிரசை, பா.ஜ.க-வை
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள்
திருச்சி

_______________

2. சென்னை

ந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள பா.ஜ.கவின் மோடி தனது பதவி ஏற்பு விழாவிற்கு தமிழின அழிப்பு போர் குற்றவாளி இலங்கை அதிபர் இராஜபட்சேவை  அழைத்ததைக் கண்டித்து 26.5.2014 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில்

  • முதல் நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி!
  • ஈழத்தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல. வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்!
  • தமிழின விரோத பா.ஜ.க.வை தமிழர்களின் காவலனாக சித்தரித்த வைகோ, நெடுமாறன் கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ன் ஐந்தாம் படையே!
  • விஜயகாந்த், ராமதாசு, பாரிவேந்தர் உள்ளிட்ட பிழைப்புவாதிகள் தமிழ்மக்களின் விரோதிகளே!

தமிழ்மக்களே

  • பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !

என்ற முழக்கங்களின் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் தலைமை ஏற்று நடத்தினார். பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை செயலாளர் தோழர் உஷா மற்றும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மாநிலக் குழு தோழர் சரவணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி.

3. திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மையம்

ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவிடமிருந்து காப்பதாக நாடகமாடியது உண்மைதான் என்று நிரூபிக்கும் விதமாக, தற்போது பதவியேற்பு நிகழ்ச்சிக்கே தமிழின அழிப்பாளன் சிங்கள இராஜபக்சேவை அழைத்துள்ள பா.ஜ.க-வின் பிரதமர் மோடியை கண்டித்து நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்.

னித உரிமைப் பாதுகாப்பு மையம், திருச்சி கிளை அமைப்பின் சார்பில் இன்று 26.05.2014 காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்ற வாயிலில் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டு வருகை தரும் ஈழத்தமிழின கொலையாளி இராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது இதே மோடிதான் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் நலன் காக்க நான் பாடுபடுவேன் என பச்சையாக பொய் பேசி வாக்குறுதியளித்தார். இது பொய்தான் என்பதை பதவியேற்பு விழாவுக்கே தமிழினக் கொலைகாரனை அழைத்ததன் மூலம், தான் தமிழர்களின் விரோதி என்பதை நிரூபித்துக்கொண்டார். பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர்களும் இதை நியாயப்படுத்தி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பா.ஜ.க-வால்தான் தமிழர் பிரச்சினையை முற்றாகத் தீர்க்க முடியும் என்று கூறி காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து வாக்களிக்கக் கூறிய தமிழக கட்சிகளின் தலைவர்களான வைகோ, இராமதாசு, விஜயகாந்த், பாரிவேந்தர், கொங்கு ஈஸ்வரன் மற்றும் தமிழருவி மணியன், நெடுமாறன் போன்றோர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. இவர்கள் தமிழின துரோகிகளே என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தமிழக மீனவர் மற்றும் ஈழத் தமிழர் நலன் காக்க தமிழ் மக்கள் ஒன்று பட்டு போராட வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிளர்ச்சியாளன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காவேரிநாடன் சிறப்புரையாற்றினார்.  பல மூத்த வழக்கறிஞர்கள் நமது தோழர்களை கைகுலுக்கி பாராட்டினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப்பாதுகாப்பு மையம்,
திருச்சிக் கிளை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க