privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்கோச்சடையான் படையுடன் அண்ணாச்சி படைவீச்சு !

கோச்சடையான் படையுடன் அண்ணாச்சி படைவீச்சு !

-

மசாலா: “உலகம் முழுவதும் 3000-த்திற்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி இருக்கும் ‘கோச்சடையான்’ திரைப்படம் 42 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 30 கோடியும், இதர நாடுகளில் 12 கோடியும் வசூல் செய்திருக்கிறது” – படத்தினை வெளியீட்டு இருக்கும் ஈராஸ் நிறுவனத்தின் பத்திரிகை செய்தி!

மருந்து: சரிடே, 3000 தியேட்டரை 42 கோடியால வகுத்தா ஒரு தியேட்டருக்கு ரூ 1,40,000 வருது. இதை மூணு நாளால வகுத்தா ஒரு நாள் வசூலுன்னு 46,666 ரூபா வருது. ஒரு நாளைக்கு ஐஞ்சு காட்சி மேனிக்கு வகுத்தா ஒரு காட்சி வசூல் 9,333 ரூபா வருது. ஒரு டிக்கெட் தோராயமா 200 ரூபா வைச்சு வகுத்தா ஒரு ஷோவ 46 அறிவாளிங்கதான் பாத்தாங்கன்னு வருது! இந்த படத்த ஒரு ஷோவுக்கு 46 கூமுட்டைங்கதான் பாத்தாங்கிறத மறைக்கதுக்கு ஏம்டே இப்படி, “பட்டையக் கிளப்பும் வசூல் 42 கோடி, பாரதப் பிரதமர் நம்ம மோடி”ன்னு ஒப்பாரி வைக்கீக!
____________

மசாலா: பெங்களூரில் ஊர்வசி, பாலாஜி, முகுந்தா உள்ளிட்ட பல திரையரங்கங்களில், ‘கோச்சடையான்’ படத்திற்கு ரூ 200 முதல் ரூ 1000-வரை செலவிட்டு லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தனர். பிறகு படத்தின் ரிலீஸ் திடீரென தள்ளிப்போனதால் முன் பதிவு பணம் வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்டவர்கள் திரையரங்கங்களை வியாழக் கிழமை மாலை முற்றுகையிட்டனர்.இதனால் தியேட்டர் உரிமையாளர் களுக்கும்,முன்பதிவு செய்தவர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மருந்து: இதான் சேதின்னா நானு மொதல்ல போட்ட கணக்க மாத்தணும் போலயே! 1000 ரூபாய் டிக்கெட்ட இலட்சக்கணக்கானோர் எடுத்து, மூணு நாளா பாத்து, அத 42 கோடியில வகுத்தா ஒரு காட்சிய பத்துப் பதினைஞ்சு ஈ காக்காங்கதான் பாத்துருக்கும்ணு தோணுது!
_______________

கோச்சடையான் - ரசிகர் பாலாபிஷேகம்
எலே நீ பீச்சறது பாலா இல்லை பீராடே

மசாலா: இதுவரை பாப்கார்ன் போடுவதற்கு மட்டும்தான் இந்த திரையரங்கினுள் பார்வையாளர்கள் வாய் திறந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அதற்கு அப்படியே மாறுபட்ட சூழல். இங்கு எத்தனையோ படம் பார்த்ததுண்டு. மயான அமைதி கொடுக்கும் அதே திரையரங்கம் இன்று திருவிழா கோலம் பூண்டதென்ன!? காரணம் சொல்லவா வேண்டும்? நீங்க வந்தா மட்டும் போதும் என்று காத்திருக்கும் ரசிகருக்கு ‘உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு வந்துவிட்டேன், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை தந்து விட்டேன்’ என்று எஸ்.பி.பியின் கர்ஜனைக் குரலுடன் வீரனாக ரணதீரனாக சூப்பர் ஸ்டார். அவ்வளவு தான் பாப்காரன்களை எல்லாம் கார்னர் செய்து விட்டு, ஆக்ரோஷம், அதிமகிழ்ச்சி நிறைந்த தலைவா எனும் கோஷங்கள், விசில் பாய்ச்சல்கள் அரங்கத்தையே அலங்கரித்தது. – பேஸ்புக்கில் சினிமா பித்தன்.

மருந்து: ஏலே பித்து தம்பி, வாய தொறக்கதுக்கு நெறய சமாச்சாரம் இருக்குடே! பல்லு கழுவ, வாய கொப்பளிக்க, சொத்தப் பல்ல புடுங்க, சாப்பிட, குடிக்க, சாமிக்கு அலகு குத்த, மிட்டாய் கடையை வாய் பாக்க, கொட்டாவி விட, கடைசியில செத்தா வாய்க்கரிசி வாங்கறதுக்கும் வாய தொறக்கணும்லா! வாயக் கட்டி வயித்த சுருக்கி சனமான சனம் பொழக்கதுக்கே அல்லாடுத நாட்டுல கோச்சடையானுக்கு வாய தொறந்தான்னு ஒருத்தன் எழுதி, அதை தமிழ்இந்துக்காரன் வெளியிடுறான்னா, இந்த நாடு நாசமா போவட்டுமுடே!
________________

மசாலா: ‘கோச்சடையான்’ திரைப்படத்தைப் பார்க்க செல்லும் பொதுமக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருந்து: ஜட்ஜ் ஐயா, அந்த கருமத்தை தருமமா நெனச்சு நம்ம அப்பராணி கோயிந்து தம்பிக பாக்கானுகளே, அவனுக தியாகத்துக்கு என்ன தருவீக! படத்த தயாரிச்ச பணக்காரன், பாக்க வந்த பரதேசிங்களுக்கு தலைக்கு 1000 ரூபா அபராதம் கட்டச் சொல்லி ஆர்டர் போடுவீகளா?
_____________________

மசாலா: ரஜினிகாந்த் நடித்து வெள்ளிக்கிழமை வெளியான கோச்சடையான் திரைப்பட போஸ்டரில், ‘2016-ல் கோட்டையில் எங்கள் கோச்சடையான் ஆட்சி உறுதி’ என்ற போஸ்டரை சேலம் மாநகரம் முழுவதும் ரசிகர்கள் ஒட்டி, அவரை அரசியலுக்கு இழுக்க அச்சாரம் போட்டுள்ளனர்.

மருந்து: ஆமப்பா, மோடிக்கு தேத்தண்ணி கொடுத்தாரு உங்க சூப்பர் ஸ்டார்ன்னு,  படத்தோட ரிலீஸ் தேதிக்கு உன்னைய லபோலபோன்னு அலைய வச்சு தண்ணி காட்டுனது யாருலே? முடியில்லாத அழகு ராஜாங்கெல்லாம் விக்கு போடுத மாறி , வழியில்லாத ரசிகனுங்கோ போஸ்டர்தான் ஒட்ட முடியும்!
____________________

மசாலா: சேலம் 5 ரோடு கௌரி தியேட்டரில் கோச்சடையான் படம் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து ஊர்வலமாக வந்தனர். ரசிகர்கள் பால், சந்தனம், மஞ்சள் குடம் எடுத்து கொண்டு வந்தனர். தியேட்டர் முன்பு ரஜினியின் கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று கிடா வெட்டி 101 தேங்காய், 5 பூசணிக்காய் உடைக்கப்பட்டது.

மருந்து: நம்மூரு சுடலைக்கு கிடா வெட்டையில, இதே மாதிரி பால்குடம், அபிஷேகம், ஊர்வலம், மஞ்ச டிரஸ் எல்லாம் உண்டுடே. சரிப்பா, இங்கன யாரை வெட்டப் போறிக? ‘பாவிகளா’ ரஜினி ‘பாவம்’டே!
_______________________

மசாலா: வீரத்தாலும் ராஜ தந்திரத்தாலும் ராஜ்ஜியங்களைக் கவிழ்க்கும் ஒரு படைத்தளபதியின் பழிவாங்கும் படலம்தான் ‘கோச்சடையான்’. இந்தியாவின் முதல் சலனப் பதிவாக்கத் தொழில்நுட்பம் (மோஷன் / பெர்ஃபார்மென்ஸ் கேப்சர்) என்கிற பெருமையுடன் வெளிவந்திருக்கிறது. – தமிழ் இந்து விமரிசனம்.

மருந்து: செவ்வாய் கெரகத்துல குந்திக்கிணுதான்,  ஊசிப்போன உன்னியப்பத்த துன்ன, பிளான் பண்ணி  ராக்கெட் வுட்டோம்னு பீலா வுட்டா உதப்பியா, வாழ்த்துவியா?
____________________

மசாலா: இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரஜினியைப் பார்த்ததும் ரசிகர்கள் எந்த மனநிலைக்குச் செல்லப் போகிறார்களோ என்கிற ஆவல் படம் தொடங்கியதும் இருக்கவே செய்கிறது. – தமிழ் இந்து விமரிசனம்.

மருந்து: இருக்கும்டே, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் லட்ட பாத்த மார்வாடி சேட்டுக்கும், நல்லி எலும்ப பாத்த அடையாறுவில்லா பங்களா நாயுக்கும் ஜொள்ளு ஊத்தும்ணு, அல்லா பயபுள்ளகைளுக்கும் தெரியுமிலே! இதுல என்னடே த்ரில் வேண்டி கிடக்கு!
________________________

மசாலா:  “ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவற்றை 3டி அனிமேஷன் மூலமாக விரிவடையச் செய்ய அவர் ஏன் முன்வந்தார் என்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கோச்சடையானில் எனக்கு சிக்கல் தரும் அம்சமே இதுதான்.” என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

மருந்து: செக்க சுத்துற மாடு சிங்கிள் பேக்கோடு சுத்துனா என்ன, சிக்ஸ் பேக்கோடு சுத்துனா என்ன? இதுதான் வர்மா சாஃப்பின் கலை பார்வையின்னா, அதுக்குப் பேரு கலையில்ல ராசா, கொலை!
____________________

மசாலா: வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் பிரச் சினை ஏற்பட்டதாலேயே கோச்சடையான் படத்தை வெளியிட காலதாமதமானதாக கூறப் படுகிறது. படத்தை தயாரிக்க ஒரு தனியார் வங்கியிலிருந்து ரூ 41 கோடி வாங்கியதாகவும், அந்தக் கடனை வரும் 16-ம் தேதிக்குள் திரும்ப செலுத்த வேண்டிய நெருக்கடி தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மருந்து: உசிலம்பட்டி சுந்தரி தங்கச்சி, எம்.ஏ. தமிழ் படிக்க கடன் கொடுக்காத அந்த தனியாரு வங்கிக்காரன், பொம்ம படம் எடுக்க, சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு 41 கோடி கொடுத்துருக்கான்னா, என்னடே நாயம்?
_______________

மசாலா:  “ரசிகர்களுக்கும், தனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்க வேண்டும் என்று அப்பா (ரஜினிகாந்த்) சொல்லிக் கொண்டே இருப்பார். சமூக தளங்களில் இணையும்படி பல நாட்களாகவே நிறைய பேர் அப்பாவிடம் வலியுறுத்தி வந்தனர். அது தற்போது நிறைவேறியுள்ளது. எல்லோருக்கும் இது மகிழ்ச்சி. தற்போது வெளி யாகும் ‘கோச்சடையான்’ படம் வெளியாகும் நேரத்தில் ட்விட்டரில் இணைந்திருப்பது இயல்பாக நடந்த ஒன்றுதான்.” –சௌந்தர்யா ரஜினிகாந்த்.

மருந்து: பூச்சி கடிச்ச மொச்சக்கொட்டை மாதிரி, மொக்கையான ஒரு காலி டப்பா பொம்ம படத்தை, நம்ம தலையில கட்ட இந்த பொண்ணு எப்டில்லாம் டிரைபண்ணுது! இது தெரியாம நம்ம டிவிட்டரு தம்பி மாறு எத்தன பேரு கோச்சடையானுக்கு மொய் எழுதுனாய்ங்களோ, தெரியல!
______________

மசாலா: லதா ரஜினிகாந்தின் பின்னணி குரலில், படத்தின் டைட்டில் கார்டு திரையில் ஓடும் போதே ஒரு பெப் தொற்றிக் கொள்கிறது. அது இந்தி நடிகர் அமிதாப்பின் முன்னோட்டம், கதை, களம் என தொடர்ந்து அது க்ளைமாக்ஸ் வரை நீங்காது இருப்பதில் கோச்சடையான் ஜெயித்திருக்கிறான்! சிறியவர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்., பெரியவர்களுக்கும் பிடிக்கும்… எனும் அளவில் இருக்கிறது கோச்சடையான்! ஆகமொத்தத்தில், கோச்சடையான் – கோலோச்சுகிறான் – இன்னும் கோலோச்சுவான்!! – தினமலர் விமரிசனம்.

மருந்து: ஜால்ராவல்லாம் ஏம்லே விமரிசனம்னு கொல்லுதீக! மயிலாப்பூர் மாமி லதா ஃபேமிலி புராஜக்ட்ட, தினமலர் ராமசுப்பய்யர் ஃபேமிலி என்னைக்குடே வுட்டுக் கொடுக்கும்? சரி, அண்ணாச்சி மத்த மீடியாகாரன் ஆதரிக்கதுக்கு என்ன காரணமுன்னு கேக்கியளா? தினமலர் ஆதரிக்கது நம்மாளுன்னு பெருமையில, மத்தவன் ஆதரிக்கது நம்ம ஆண்டைய ஆதரிச்சா நமக்கு பெருமைல்லான்னு!
_______________

மசாலா: கோச்சடையான் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்கள் டிரைலரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம் என்று கூறினார்கள். அவரச ‌கோலத்தில் சரியாக செய்யாமல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக, அற்புதமாக செய்யலாம் என்று ரஜினி கூறியதால் கடைசி நேரத்தில் கேன்ஸ் படவிழாவை ரத்து செய்து விட்டோம். இன்னும் சில தினங்களில் கோச்சடையான் படத்தின் மெருகூட்டப்பட்ட டிரைலர் வெளியாகிவிடும். கேன்ஸ் தவிர இன்னும் எத்தனையோ சர்வதேச பட விழாக்கள் இருக்கின்றனர். அதில் டிரைலரை வெளியிடுவோம் என்று  படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகரன் கூறியுள்ளார்.

மருந்து: கோச்சடையானே ஒரு காலி டப்பாங்கிறப்போ அந்த டப்பாவோட டிரைலரை மட்டும் ஈஃபிள் டவராவா காட்ட முடியும்? பொண்டாட்டி உழைப்புல சொகுசா முறுக்கை கடிச்சுக்கிட்டும், டிகாஷன் காஃபிய குடிச்சிக்கிட்டும் வேலை வெட்டியில்லாத இலக்கிய பாய்ஸ்தான் கேன்ஸ் விழாவை உலக சினிமா விழான்னு கொண்டாடுதான். கோச்சடையான் டிரைலரெல்லாம் கேன்ஸில் வெளியாகும்னா, அது கேன்ஸ் திரைப்பட விழவா இல்ல, கேன்சர் விழிப்புணர்வு முகாமா?
________________

மசாலா:  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் இசை பற்றி ரசிகர்கள் அதிகமாகவே பேசி வருகிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது என அனைவருமே பாராட்டுகிறார்கள். ஆனால், கோச்சடையான் படத்திற்கு இசையமைப்பது தனக்கு சவாலாக இருந்தது என்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

மருந்து: ஒத்துக்குறோம். சரக்கே இல்லாத பார்ட்டிக்கு சைட்டிஷ் செய்யுறதுன்னா சும்மாவா?
________________

மசாலா: செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் என்ற பெயரில் அப்பா மற்றும் கணவன் பெயர் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த செளந்தர்யா, “ஏன்? ஐஸ்வர்யா ராய் பச்சன் இல்லையா? அவரை கேட்டீர்களா இப்படி? எல்லோருக்கும் பிடித்த என் அப்பாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும். பிறந்ததில் இருந்து என் பெயருடன் இருக்கிறது அப்பாவின் பெயரும், இருந்துவிட்டு போகட்டுமே” என்றார்.

மருந்து: இயக்குநர் சௌந்தர்யா அஸ்வின், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த அஸ்வின்னு ரெண்டு பேருல விநியோகஸ்தரு, தியேட்டர் ஓனரு, மீடியாக்கமாறு, தயாரிப்பாளரு அல்லாரும் எதப்பாத்து டீல் பேச வருவான்? சௌந்தர்யா அக்காவுக்கு அப்பா சென்டிமெண்ட விட அப்பாவோட பிராண்டுதானே உதவியா இருக்கு?
_____________________

மசாலா: “எனது மகள்கள் சவுந்தர்யா அஸ்வின், ஐஸ்வர்யா தனுஷ் இருவருமே அவர்கள் கணவரின் அனுமதியுடனேயே படம் இயக்கி வருகிறார்கள். என் மகள்கள் இயக்குனர்களாக வெற்றி பெற்றுள்ளதில் பெருமை அடைகிறேன். ஆனால் அவர்கள் ஆளுக்கு இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு குடும்ப தலைவியாக, சிறந்த குடும்ப தலைவிகள் என அனைவருக்கும் உதாரணமாக வாழ வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். கோச்சடையான் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தாலும் அதில் மயங்கி விடாமல், பட வாய்ப்புக்களை ஒத்திவைத்து விட்டு சவுந்தர்யா தனது குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் பெண்கள் மிக முக்கியமானவர்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளை குறைந்தது 12 வயது வரை அவர்களுடனேயே இருந்து, அவர்களை நல்ல சிட்டிசன்களாக வளர்க்க வேண்டும். எனது மகள்களும் இது போல் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. பட வாய்ப்புக்களை விட குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.” – கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு.

மருந்து: பொம்பளைங்கன்னா குடும்பம், குழந்தைங்கன்னு மட்டும் இருக்கணும்னு சூப்பர் ஸ்டார் சொல்றாரு. செக்க சுத்ற மாட்டுக்கு சிக்ஸ் பேக்கு ஒரு கேடான்னு நான் கேட்ட கேள்வி இப்பவாச்சும் புரியுதாலே?

_____________________

மசாலா: “படத்தை விட படத்தின் மேக்கிங்-ஐ தான் பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. குழந்தைகளைக் காட்டி படத்தை ஓட்டிவிடுவார்கள். திரையரங்கில் அதிகம் குழந்தை ரசிகர்கள் தான்.. மொக்க அனிமேஷனை தவிர்த்துவிட்டு பார்த்தால் கோச்சடையான் நல்ல முயற்சி தான். ஆனால் என்னதான் சமாதானம் சொன்னாலும்.. தீபிகாவை இவ்வளவு மொக்கையான ஒரு பொம்மையாக பார்க்க நேர்ந்ததுதான் ஜீரணிக்க முடியவில்லை.. அடுத்த பார்ட்லயாவது அந்த புள்ளையை நல்லபடியா காட்டுங்கப்பா..சவுந்தர்யா ரஜினி அஸ்வின் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. “ – பேஸ்புக்கில் கார்ட்டூனிஸ்ட்  பாலா

மருந்து: பாலா தம்பி, அனிமேஷன் படத்துல அனிமேஷனையே மொக்கைண்ணு மொத்துண கையோட, கோச்சடையான் நல்ல முயற்சின்னு எழுதியிருக்கீகளே, இது நாயமா மக்கா? பெறவு தீபிகாவை பொம்மையாக காட்டிட்டாணேன்னு வருத்தப்படுதீரு! அந்த அக்கா நடிக்கிற பூரா பாலிவுட் படத்துலயும் ஒரே மாதிரி சேட்டு வூட்டு பொம்மையத்தாம்வே வருது! பொம்மைய பொம்மையாத்தான் காட்டோணும், கிளியா காட்டுணா கிலிதாம்வே வரும்

– காளமேகம் அண்ணாச்சி

அடிக் குறிப்பு: தலைப்பில் வரும் “படை வீச்சு” – சிலம்பாட்டத்தில் வரும் ஒரு வீச்சின் பெயர். கம்பை நாற்புறங்களிலும் சுழட்டியவாறு சண்டையிடும் அல்லது திறமை காட்டும் ஒரு முறை.