privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 09/06/2014

ஒரு வரிச் செய்திகள் – 09/06/2014

-

vinavu news 4செய்தி: மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பொன்.ராதா கிருஷ்ணன் தமிழக பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்து தொண்டர்களிடம் உரையாற்றும் போது, ஆளுயர மாலை, மலர் கீரிடம் அணிவிப்பதை தான் விரும்பவில்லை என்றார். அப்போது வந்த தொண்டர் ஒருவர் ஆளுயர மாலை, கீரிடம் அணிவித்தார். பொன்.ராதா கிருஷ்ணனும் தான் சொன்னதை மறந்து அதை ஏற்றார். கூடியிருந்தவர்கள் சிரித்தனர்.

நீதி:  ஆளுயர மாலை போட்ட போது சிரித்த தொண்டர்கள், அந்த ஆள் பேசும் போதே சிரிக்கவில்லை என்பதால் இந்த தாமதச் சிரிப்பு ஒரு போங்காட்டமே!

____________

செய்தி: “ஐசிசி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக போட்டியாக ஒரு ஐசிசி அமைப்பை தொடங்குவோம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் சஞ்சய் படேல் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

நீதி: ஐசிசியின் வருவாயில் 70% இந்தியாவில் இருந்து வரும் போது பிசிசிஐ மிரட்டுவதும், அதை ஐசிசி ஏற்பதும் ஆச்சரியமல்ல. ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் கிரிக்கெட் வாரியங்களின் பிரதிநிதிகள் இருக்கும் ஐசிசியில் ஒழுக்கம் கறாராக ஓம்பப்படும் என்று ஓதிய ராயல் ஃபேன்ஸ் கனவான்கள் ஏன் இன்னும் அதிர்ச்சியடைவில்லை?

____________

செய்தி:  லார்சன் அண்ட் டியூப்ரோ ஃபைனான்ஸ் நிறுவன பங்குகள் கைமாறியதில் நடைபெற்ற உள்பேர வர்த்தகம் குறித்து விசாரிக்க வெளிநாடுகளின் உதவியை நாட பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது.

நீதி: அன்னிய முதலீடு எப்படி, எப்போது, எவ்வளவு வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்று மூலதன முறைகேடுகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட வெளிநாடுகளில் இருந்துதான் அன்னிய நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன. படைத்தவன் பங்காளியை எப்படி விட்டுக் கொடுப்பான் என்பது செபிக்கும் தெரியும். அதனால் இது ஜூஜூபி விசாரணைதான்.

_____________

செய்தி: சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி நிறுவனத்தில் ஏ8எல் மற்றும் ஆர்.எஸ்.7 ரகக் கார்களின் விலை முறையே ரூ.1.35 கோடி மற்றும் 1.42 கோடியாகும்.

நீதி: இதே சென்னையில் ஒரு ரூபாய் இட்லி புகழ் அம்மா உணவகங்கள், மேலும் 300 கிளைகள் திறக்கப்பட உள்ளன. தமிழனின் நாடி இட்லியா, ஆடியா?

____________

செய்தி: கங்கை தசரா பண்டிகையையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை நதிக்கரையில் மக்கள் வழிபாடு செய்தனர்.

நீதி: கங்கையை சுத்தப்படுத்தும் மோடியின் நாடகத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று செய்தியை மாற்றிப் படிக்க!

___________

செய்தி: “வேண்டுமென்றே யாரும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதில்லை. அது தவறுதலாக நடக்கும் விசயம்” என்று சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் ராம்சேவக் பைக்ரா கூறியுள்ளார்.

நீதி: சீதையைக் கொன்ற ராமனை தேசிய நாயகனாக வழிபடும் கட்சிக்காரரும், சட்டசபையிலேயே பிட்டுப் படம் பார்த்த மகான்களின் குருகுலத்தைச் சேர்ந்தவருமான ராம் சேவக் கூறியதில் என்ன ‘தவறு’?

____________

செய்தி: மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் நிர்ணயித்தலில் தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அரசு எந்தவித விதிமுறைகளையும் விதிக்காமல் தாராளமாக விட வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறினார்.

நிதி: பேருந்தில் தாங்கள் பணியாற்றுவதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்று பிக்பாக்கெட்டுகள் கூட இப்படி வெளிப்படையாக கோரியதில்லை.

__________

செய்தி: “ராணுவத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளதை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.

நீதி: சரி, ஐய்யா, பதிலுக்கு நீங்கள் கால், அரை சீட்டுக்காக தாபாவோடு இனி போயஸ் தோட்டம் போய் அவமானப்படுவதில்லை என்று பரிசீலனை செய்வீர்களா என்று யாராவது கேட்டால்? போயஸ் தோட்டத்தை துறப்பது உங்களுக்கு எவ்வளவு சிரமமோ அந்த சிரமம் அன்னிய முதலீட்டை துறப்பதற்கு பாஜகவிடம் இருக்காதா?

______________

செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமே மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் கூறியிருக்கிறார்.

நீதி: இதற்காக எந்த ஊரில் ரூம் போட்டு அழுவது என்று வைகோவும், தமிழருவி மணியனும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!

_______________

செய்தி: தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் திடீரென சந்தித்தார். அப்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக ரஜினி நிருபர்களிடம் தெரிவித்தார்.

நீதி: பிரதமர் ஆகும் வாய்ப்புள்ள தருணத்தில் கூட மோடிதான் ரஜினி வீட்டிற்கு வந்தார். தேர்தலில் படுதோல்வி அடைந்தும் கூட கருணாநிதி வீட்டிற்குத்தான் ரஜினி வந்தார். ஏன் ?

________________

செய்தி: 2009-ம் ஆண்டு உத்தர்கண்ட் மாநிலத்தில், 22 வயது எம்பிஏ பட்டதாரி இளைஞனை, போலி மோதலில் கொன்ற 17 போலீசுகாரர்களுக்கு, 8.6.2014 திங்கட் கிழமை அன்று டெல்லி நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தது.

நீதி: இது போன்றதொரு போலி மோதலில், இர்ஷத் ஜஹானை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க ஏதாவது ஒரு நீதிபதிக்கு தைரியம் உண்டா?

____________

செய்தி: புதிய அரசின் முதல் பாராளுமன்ற கூட்டு அமர்வில் பேசிய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, “புதிய அரசு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகள் உருவாக்கும்” என்று குறிப்பிட்டார்.

நீதி: ஐஐடியில் படித்து, அமெரிக்காவில் செட்டிலானாலும், அங்கேயே பாஜகவிற்கு தேர்தல் வேலை செய்த என்ஆர்ஐ வாலாக்களுக்கு இந்த அறிவிப்பு உண்மையில் ஒரு நன்றிக்கடன்! அரசு செலவில் படித்து அமெரிக்காவிற்கு சேவையாற்றும் அவர்களை இன்னும் அதிகமாய் அனுப்புவோம் என்பது அமெரிக்க அரசுக்கு தெரிவிக்கப்படும் அடிமைக் கடன்!

_____________

செய்தி: ஈரானுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு திரும்பிய ஷியா பிரிவைச் சேர்ந்த 23 இசுலாமிய மக்கள், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஜெய்ஷ் அல் இசுலாம் எனும் இயக்கம் இந்த கொலைக்கு பொறுப்பேற்றது.

நீதி: பாகிஸ்தானில் ஷியா பிரிவு மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை அல்லாவால் ஏன் நிறுத்த முடியவில்லை?

_____________

செய்தி: நாற்பது சதவீத அமெரிக்க மக்கள் பரிணாம வளர்ச்சி கொள்கையை மறுத்துவிட்டு, 10,000 வருடங்களுக்கு முன்னர்தான் கடவுள் பூமியை உருவாக்கினார் என்று நம்புகிறார்கள்.

நீதி: சில பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னமே இராமயாணத்தில் புஷ்பக விமானம் பறந்தது என்று நம்பும் ‘இந்தியர்களை’ விட பத்தாயிரத்திலிருந்து ஆரம்பிக்கும் அமெரிக்கர்கள் பரவாயில்லையோ? முட்டாள்தனத்தில் நியூடெல்லிக்கும், நியூயார்க்கிற்கும் போட்டி வைத்தால் என்ன?

 

  1. // பிரதமர் ஆகும் வாய்ப்புள்ள தருணத்தில் கூட மோடிதான் ரஜினி வீட்டிற்கு வந்தார். தேர்தலில் படுதோல்வி அடைந்தும் கூட கருணாநிதி வீட்டிற்குத்தான் ரஜினி வந்தார். ஏன் ? //

    என்ன இருந்தாலும் வினவு எதிர்க்கிற ஒருத்தர்னா தைரியமா, “என் ஏரியாவுக்கு வாடான்னு” கூப்பிடலாம். வினவு ஆதரிக்கிற ஒருத்தர்னா, நாமதானே அவரு ஏரியாவுக்கு போவனும்!

    • அது சரி வெங்கடேசன் நீங்க எப்புடி ஆதரிக்குறீங்களா எதிர்க்குறீங்களா?

    • சரி, வெங்கடேசன், ரஜினி வீட்டுக்கு போன அழகிரியும் நீங்க சொன்ன கணக்கா?

  2. ஒரு சின்ன கருத்து… ஒரு வரிச்செய்திகளில் வரும் நீதி, தற்பொழுது வரும் பதிவுகளில், செய்திக்கு கருத்துக்களுடன் பதில் என்பதை விட செய்தியில் இடம்பெறுபவர் மேல் தான் கருத்துக்கள் அதிகம் வைக்கப்படுவது போல தெரிகிறது…

    “”எனக்கு மட்டும் தான் இப்படி தெரியுதா””

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க