privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருதை கல்வியுரிமை மாநாடு – சாதித்தது என்ன ?

விருதை கல்வியுரிமை மாநாடு – சாதித்தது என்ன ?

-

விருதை கல்வி மாநாடு 5விருத்தாசலத்தில் 7-6-14 அன்று, மக்கள் மன்றத்தில், காலை 10 -30 மணிக்கு கம்மாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் கிருத்திகா, சரண்யா நினைவு அரங்கத்தில், கட்டணக் கொள்ளையால் உயிர்நீத்த மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் துவங்கியது மாநாடு. குழந்தைகள், பெற்றோர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் திரளாக மாநாட்டில் இறுதி வரை கலந்து கொண்டனர். கிருத்திகா, சரண்யாவின் பெற்றோர்கள் நமது அழைப்பை ஏற்று மாநாட்டிற்கு வந்திருந்தனர். அரங்கத்தினுள் வரும்போதும், இருக்கையில் அமர்ந்திருந்த போதும் கண்களில் நீர்வடிய அவர்கள் விசும்பி அழுதது அனைவரின் கண்களையும் பனிக்கச் செய்தது.

கடந்த மாதம் +2 தேர்வில், கம்மாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற சகோதரிகள் மகிழ்ச்சியை ஆசிரியர்களோடு பகிர்ந்து கொண்ட பிறகு வீட்டிற்கு சென்றனர். தந்தை தினக்கூலி வேலை செய்பவர்.  இருவரையும் படிக்க வைக்க முடியாது பணத்திற்கு எங்கே போவேன், ஒருவரை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்று தந்தை பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட கிருத்திகா–சரண்யா சகோதரிகள் ஒரே உத்திரத்தில் இருவரும் ஒன்றாக தூக்கில் தொங்கி உயிர் விட்டனர். இலவச கல்வி உரிமைகள் அரசால் உத்திரவாதம் செய்யப்படும் போதுதான் இத்தகைய தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.

மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தாமரைக்கந்தன் ஒன்றரை மாத காலம் மாவட்டம் முழுவதும் செய்த பிரச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ”பிரசுரம், சுவரெழுத்து , சுவரொட்டி, தெருமுனைப் பிரச்சாரம், வீடுவீடாக அழைப்பிதழ் கொடுத்து அரும்பாடுபட்டு ஏற்பாடு செய்த இம்மாநாட்டை சிறப்பிக்க வந்த அனைவரையும் நன்றியுடன் வரவேற்கிறேன்” எனக் கூறி அமர்ந்தார்.

தலைமையுரை ஆற்றிய மாவட்ட தலைவர் அய்யா வை.வெங்கடேசன் சமச்சீர் கல்வி முதல் இன்று கட்டணக் கொள்ளை வரை பெற்றோர் சங்கங்களின் போராட்ட அனுபவங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.

விருதை கல்வி மாநாடு 4”சட்டம் இருக்கலாம் அதை நடைமுறைப்படுத்த பெற்றோர்கள் சங்கமாகத் திரண்டு போராட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நாம் போராடாமல் யார் போராடுவார்கள். அரசுப் பள்ளிகளைப் பெற்றோர்கள் கண்காணித்தால் நாம் தரமான கல்வி பெற முடியும். ஆயிரக்கணக்கில் நம் பணத்தை தனியார் பள்ளிகளிடம் பறிகொடுக்க வேண்டியதில்லை. தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும். அனைவரும் பெற்றோர்கள் சங்கத்தில் சேருங்கள். உங்கள் ஊரில் எங்கள் சங்கத்தின் கிளையைத் துவங்குங்கள். நாங்கள் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறோம்” எனப் பேசி முடித்தார்.

ஓய்வு பெற்றவர்கள் நினைத்தால் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும். தங்கள் கடந்தகால அனுபவங்களை மக்களுக்காக எதிர்காலத் தலைமுறைக்காகப் பயன்படுத்த முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். வயது வித்தியாசம் இன்றி இளைஞர்களோடு இணைந்து செயலாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகப் பேசி அமர்ந்தார், அய்யா வெங்கடேசன்.

அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது என்பதை பேராசிரியர் சந்திரசேகரன், (ஓய்வு பெற்ற முதல்வர், கந்தசாமி கண்டர் கல்லூரி, நாமக்கல்) பல்வேறு ஆதாரங்களுடன் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் புள்ளிவிபரங்களை அடுக்கி விரிவாகப் பேசினார்.

இலவசக் கல்வியின் கழுத்தை நெறிக்கும் தீர்ப்புகள் என்பதை நீதிபதிகள் எப்படி தங்கள் வாயாலே நிரூபிக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக ஆதங்கத்துடன் பேசி, பெற்றோர்கள் போராடுவதுதான் தீர்வு எனப் பேசினார். மேலும் கல்விக் கொள்ளையர்களாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எப்படி மக்கள விரோதிகளாக செயல்படுகிறார்கள். இன்றைக்கு இணைவேந்தராக இருப்பவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள் தான் என்பதை அம்பலப்படுத்தினார். கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இத்தகைய கல்விக் கொள்ளையர்கள் இருக்கிறார்கள். மக்கள் கருணை காட்டக் கூடாது.நேரடியாக எதிர்த்துப் போராட வேண்டும். நீதிமன்றம் தண்டிக்காது. மக்கள் மன்றத்தில் தண்டனை பெற வேண்டும். அப்போது தான் கல்விக் கொள்ளையைத் தடுக்க முடியும் என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

விருத்தாசலம் நகரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அதிக தேர்ச்சி கொடுத்த 10, 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் சட்ட மன்றம் செய்யாததை ஆசிரியர் மன்றத்தில் செய்ய முடியும். எனவே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்ற ஆசிரியர்களைப் பெற்றோர் சங்கம் கௌரவிப்பதை தனது கடமையாகக் கருதுகிறது.

விருதை கல்வி மாநாடு 3பெற்றோர் சங்கத்தைச் சார்ந்த ரேவதி, ஓய்வுபெற்ற பத்திரப் பதிவு அதிகாரி அன்பழகன் ஆகியோர் மாநாட்டில் 14 தீர்மானங்களை வாசித்தனர். அனைவரின் கரவொலிகளுடன்  தீர்மானங்கள் நிறைவேறின.

மதிய உணவு அனைவருக்கும் வழங்கபட்டது. மதிய அமர்வு 3-00 மணிக்கு தொடங்கியது. பள்ளிக் கூடங்களுக்காக மாணவர்களா? மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களா? என்ற தலைப்பில் அரசுப்பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் விவாதம் செய்தனர். HRPC மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். கொள்ளிடம் பெற்றோர் சங்கத்தை சேர்ந்த ரவிக்குமார் விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். எழுத்தாளர் இமையம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அரங்கேற்றினார். அருள் செல்வன் என்ற மாணவன் சமச்சீர் கல்விக்கான போராட்டத்தின் போது HRPC மறியலில் கலந்து கொண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் , (நமது நிகழ்ச்சி நிரல் பிரசுரத்தில் உள்ள புகைப்படத்தில்,பேருந்தை மறித்த முன்வரிசை மாணவன், அப்போது 7 –ம் வகுப்பு படித்து வந்தார்.) தானாகவே முன்வந்து பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டு சிறப்பாக உரையாற்றினார். இது வெயிலின் தாக்கத்தைக் குறைத்து மிகவும் உற்சாகமாக மாலை அரங்கத்தை கலகலப்பாக மாற்றியது எனலாம்.

மாநாட்டை ஒட்டி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி,பேச்சுப் போட்டி,திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தபட்டன்.அதில் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாநாட்டில் அவ்வப்போது தாகம் தீர்ப்பது போல் ம.க.இ.க.வின் மையக் கலைக்குழுதோழர்கள் பாடிய பாடல்கள் பார்வையாளர்களின் களைப்பை நீக்கி உற்சாகத்தடன் மாநாட்டைக் கவனிக்க வைத்தது.

மாலை 4-30 மணிக்கு  மக்கள் மன்றத்திலிருந்து வானொலித் திடல் வரை பேரணி சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது. 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருதை மக்கள் சாலையின் இரு புறங்களிலும் ஆர்வமுடன் ஊர்வலத்தைப் பார்த்தனர்.

பேரணிக்கு காவல்துறை தடைவிதித்த உத்திரவுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்று தான் பேரணி நடத்தப்பட்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் போலீசார் வந்திருந்தனர். கடலூர் மாவட்டத்தில் காவல்துறை யாருக்கும் பேரணி நடத்த அனுமதி கிடையாது என்ற நடைமுறையை அமல்படுத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு கடலூரில் நடந்த கல்வி உரிமை மாநாட்டிற்கு காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக சந்தித்து HRPC வழக்கறிஞர்கள் பேசினார்கள். எஸ்.பி.”யாருக்கும் தருவதில்லை. அதனால் உங்களுக்கும் தர முடியாது. நமது மாவட்டத்திற்கு வேண்டாம்” எனப் பதிலளித்தார். சிதம்பரத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு பேரணிக்கு அனுமதி தர மறுத்து விட்டார். இந்த முறை நேரடியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்றோம். அதில் ஒருவர் பின் ஒருவராக இரண்டு வரிசையாக செல்லவேண்டும்.மாலை 4முதல் 5 மணிக்குள் செல்ல வேண்டும் என்ற வழிகாட்டுதல்களுடன் உத்திரவு வழங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்புடன் எழுச்சியாக நடந்த பேரணி விருதை நகரின் கல்வி மூடநம்பிக்கையை சேதப்படுத்தியது.

மாலை 6-00 மணிக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் HRPC மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன் தலைமை தாங்கினார். சிதம்பரம் பகுதி பெற்றோர் சங்க செயலாளர் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தாங்கள் நடத்திவரும் போராட்டங்கள் பற்றி விளக்கினார். சேத்தியாதோப்பு பகுதி அமைப்பாளரும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியருமான தமிழரசன் அவர்கள் ”அரசுப்பள்ளி தான் சிறந்தது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை, அதனால் ஏற்படும் பிரச்சினையை நம்மால் தீர்க்க முடியாது. அதிகாரிகள் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” எனப் பேசினார்.

HRPC மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் ”நீதிமன்றங்கள், அதிகாரிகளை நம்பிப் பயனில்லை.பெற்றோர்கள் களத்தில் இறங்கிப் போராடினால்தான் ஏதாவது நடக்கும். சட்டம் சரியில்லை. அதில் இருக்கும் ஒன்று இரண்டு நல்லதும் நடக்கவில்லை. சங்கமாக அணிதிரள வேண்டும்” என்று பேசினார்.

விருதை கல்வி மாநாடு 2பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 8-ம் வகுப்பு நகராட்சிப் பள்ளி மாணவன் கவிராஜ் கட்டபொம்மன் பற்றி பொதுக்கூட்டத்தில் பேசியது பார்ப்பவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.10,12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்துப் பாராட்டியது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் பெரும்திரளாகக் கலந்து கொண்டனர்.

சேரன் என்பவர் மாநாட்டை முன்னிட்டு நமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களுடன் கிராமத்தில் வீடு வீடாக பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது

”வெளி நாட்டில் நான் ஆடு மேய்த்தவன். அதனால் யாரும் வெளிநாட்டுக்கு போகாதீர்கள். சேரனின் வெற்றிக்கொடி கட்டு படத்தை நானும் பாத்தேன். டெய்லர் வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று துபாய் போனேன். அங்கு சென்றவுடன் வெள்ளை ஜிப்பா கொடுத்து ஆடு மேய்க்கச் சொன்னார்கள். வருத்தம் இருந்தாலும் ஒரு பக்கம் சந்தோசம். ஆடு மேய்க்க வெள்ளை ஜிப்பாவா?. மாலை வரும்போது முதலாளி சவுக்கால் என்னை அடித்தான். காரணம் என் ஜிப்பாவில் மண் ஒட்டியிருந்தது. கீழே உட்கார்ந்தால், படுத்தால் ஜிப்பா காட்டிக் கொடுத்து விடும். நான் அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்தேன். மாணவர்களிடம் வெளிநாடு செல்ல வேண்டாம் என அறிவுரை சொன்னேன். அடுத்த நாள் ஆடு வருது எனக் கிண்டல் செய்தார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை.கேட்பவர்கள் கேட்கட்டும். என்னுடைய திருப்திக்காக நான் விமான நிலையம்,பேருந்து நிலையம், இரயில் நிலையம் எனப் பிரச்சாரம் செய்கிறேன். மூன்று வேளை சோத்துக்காக தான் தமிழர்கள் வெளிநாடு செல்கிறார்கள். வடிவேல் போல் செண்ட் அடித்துக் கொண்டு இங்கு வறட்டுக் கௌரவாமாக வாழ்கிறார்கள். எனக்கு நேர்ந்த அனுபவம் யாருக்கும் நேரக் கூடாது. அதனால் பெற்றொர்களே உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து இங்கேயே வேலை பார்க்கச் சொல்லுங்கள்”

– என எதார்த்தமாக பறை ஓசைக்கு ஏற்ப உழைப்பவன் உடல் மொழி பேசுவது போல் மக்களிடம் உணர்ச்சியாக சேரனின் மொழி அனுபவம் சென்றடைந்தது.

தொடர்ந்து தலைமை ஆசிரியர் பாக்கியராஜ், எழுத்தாளர் இமையம், ம.க.இ.க. துரை.சண்முகம், வழக்கறிஞர் ராஜு ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக நடைபெற்ற ம.க.இ.கவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியை விருதை நகர மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தனர். இரவு 10-20 க்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. வெளியூர் தோழர்களுக்கும்,நண்பர்களுக்கும் பார்சல் மூலம் உணவு வழங்கப்பட்டது.

ஒலிபெருக்கி நகரத்தின் நாலாபக்கமும் கேட்கும் அளவிற்கு நீண்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியின் உரையை இருந்த இடத்திலேயே கேட்க முடிந்தது. துணை ஆய்வாளர்கள் மட்டத்தில் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

ஒன்றரை மாத மாநாட்டுப் பிரச்சாரத்தில், பெற்றோர் சங்கம்,மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீட்டில் கணவன்-மனைவிக்கிடையே அரசுப் பள்ளியா?தனியார் பள்ளியா? எனத் தொடர்ந்து நடந்த வாதப் பிரதிவாதங்கள், அரசுப் பள்ளியில்தான் படிப்பேன், தனியார் பள்ளியில் நிறைய ஹோம்வொர்க் கொடுக்கிறார்கள் என 2-ம் வகுப்பு குழந்தை தந்தையிடம் வாதம் புரிந்து வருவதும் நடந்தது. இறுதியில் இந்த ஆண்டு சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு,2-ம் வகுப்பு,6-ம் வகுப்பு,7-ம் வகுப்பு,9-ம் வகுப்பு,11-ம் வகுப்பு என அரசுப் பள்ளியில், அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனை மாநாட்டுக்கு கிடைத்த வெற்றியாக குறிப்பிடலாம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் மாநாடு நடத்தியது போல் உணர்ந்து தேடி வந்து நிதிகொடுத்ததும்,மாணவர்களை மாநாட்டில் அவசியம் கலந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதும் மாநாட்டின் சிறப்பு. தேக்கு மர வளர்ப்பு, காந்தப் படுக்கை,வி.கே.என். ஃபைனான்ஸ் கம்பெனி போன்ற வியாபாரங்கள் மக்களை ஏமாற்றி ஓடிப் போனதைப் போல் தனியார் பள்ளி ஆங்கிலவழிக் கல்வி மக்களிடம் பணம் பறிக்கவே என்பதை மாநாட்டுக்கு வந்தவர்கள் உணர்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல.

நம்பிக்கையூட்டும் மாநாட்டின் புகைப்படப் பதிவுகள் – பெரிதாக பார்க்க படம் மீது சொடுக்கவும்.

______________________________________________________________

தகவல் – மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க