privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய் - ஆர்ப்பாட்டம்

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய் – ஆர்ப்பாட்டம்

-

தமிழக அரசே,

  • மோசடியில் பதவிபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடாதே!

காவல்துறையே,

  • தேடப்படும் குற்றவாளி கல்யாணி மதிவாணனை உடனே கைதுசெய்!

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்

  • துரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட W.P.No..11350/12 மற்றும் W.P.No.3318/13 வழக்குகளி்ல் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்படி வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர் “கல்வித்தகுதி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசை ஏமாற்றி மோசடியாக கல்யாணி மதிவாணன் பதவிபெற்றுள்ளதை விளக்கி உண்மைநிலையை எடுத்துரைக்க வேண்டும்” என்றும்,
  • நாகமலைப் புதுக்கோட்டை காவல்நிலைய குற்ற எண்.216/2014 கொலைமுயற்சி வழக்கில் தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளிட்டோரை உடனே கைது செய்து பதவி நீக்கம் செய்யக்கோரியும்

மனிதஉரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளையின் சார்பில், அதன் மாவட்ட செயலர் ம லயனல் அந்தோணிராஜ் தலைமையில் 12.06.2014. காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு அதன்பின் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கோரிக்கை மனு ஒன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சார்பாக மாவட்ட துணை ஆட்சியர் அம்மனுவினை பெற்றுக்கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக்கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமானவுடன் எழுப்பப்பட்ட உணர்ச்சிகரமான முழக்கங்களை கேட்டதும் ஆங்காங்கே நின்றிருந்த காவல் துறையினர் ஓடிவந்து, “இங்கெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது” எனத்தடுத்தனர்.

ஆனால் ம.உ.பா.மையத் தோழர்கள், “மனு கொடுக்கச் செல்வதற்கு முன்னால் முழக்கம் எழுப்பினால் மட்டுமே எங்கள் கோரிக்கை மக்களைச் சென்றடையும்” எனக்கூறி தொடர்ந்து முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.

அதன்பின்னரும் காவல்துறையினர், “ஆட்சியர் அலுவலகத்திற்குள் முழக்கங்கள் எழுப்ப யாரையும் அனுமதிக்க முடியாது. மீறினால் உங்களை கைதுசெய்ய வேண்டியிருக்கும்” என மிரட்டிப்பார்த்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாமல், “கைதாவதற்கு நாங்கள் தயார், ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் மனுஅளிக்க மாட்டோம்” எனச்சொல்லி தோழர்கள் தொடர்ந்து துணிவுடன் முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தவுடன், வேறுவழியின்றி பின்வாங்கிய காவல்துறையினர், “சிறிதுநேரம் மட்டும் முழக்கம் எழுப்பிக் கொள்ளுங்கள்” எனத்தெரிவித்தனர்.

அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு மனு நகல் வழங்கப்பட்டு, பேட்டியளிக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இறுதியாக ”W.P.No..11350/12 மற்றும் W.P.No.3318/13 வழக்குகளி்ல் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உண்மைநிலையை எடுத்துரைக்க வலியுறுத்தக்கோரியும், நாகமலைப் புதுக்கோட்டை காவல்நிலைய குற்ற எண்.216/2014 வழக்கில் தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளிட்டோரை உடனே கைது செய்யக்கோரியும்” தமிழக அரசின் தலைமைச் செயலர் அவர்களுக்கான மனு, மாவட்டத் துணை ஆட்சியரை சந்தித்து விளக்கிப் பேசி வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட மனு

அனுப்புநர்

மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை சார்பாக
மாவட்ட செயலாளர் ம.லயோனல் அந்தோணிராஜ் & நிர்வாகிகள்,
150-இ, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-20.

பெறுநர்

உயர்திரு தலைமைச்செயலர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை.

வழியாக

உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை.

அய்யா,

பொருள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் தகுதி தொடர்பான உயர்நீதிமன்ற W.P.No..11350/12 மற்றும் W.P.No.3318/13 வழக்குகளில் அரசு தரப்பு துணைவேந்தருக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என வலியுறுத்தி மனு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போது பணியாற்றிவரும் கல்யாணி மதிவாணன் அவர்கள் உரிய கல்வித்தகுதி இல்லாமல் அரசியல் செல்வாக்கால் மேற்படி துணைவேந்தர் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவர். மேற்கண்டவாறு துணைவேந்தர் பதவிக்கு கல்யாணி மதிவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரை அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட W.P.No..11350/12 மற்றும் W.P.No.3318/13 வழக்குகளானது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது.

மேற்படி வழக்கு விசாரணையின் போது, UGC விதிமுறைகளின்படி 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர்கள் மட்டுமே துணைவேந்தராக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும், ஆனால் தற்போதைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரியவில்லை என்பதுடன், தனது கல்வித்தகுதியை மோசடியாக குறிப்பிட்டு அரசை ஏமாற்றி துணைவேந்தர் பதவியைப் பெற்றுள்ளார் என்பது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்களால் ஆதாரத்துடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைவேந்தர் தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வரும் வெள்ளிக்கிழமை (13.06.2014) அவர்கள் தரப்பு வாதத்தினை முன்வைக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் வரும் 13.06.2014 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழக அரசு சார்பில் ஆஜராகவிருக்கும் அரசு தரப்பு வழக்கறிஞர் மேற்படி கல்யாணி மதிவாணனுக்கு ஆதரவாக வாதிடாமல் உயர் கல்வி நிறுவனமான மதுரை காமராஜர் பல்கலையின் மாண்பினை காப்பாற்றும் பொருட்டு, நியாயத்தின் பக்கம் நின்று உண்மை நிலையினை நீதிமன்றத்தில் எடுத்தியம்புவதற்கு ஆவண செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மேலும் தற்போது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பேராசிரியர் – அலுவலகப் பணியாளர் என அனைத்துப் பணிகளும் ஏலம் விடப்படுகிறது. தற்போது பதிவாளர் பதவியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தட்டிக் கேட்டால் பேராசியர்கள், மாணவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். உயர்கல்வி நிலையம் ஊழல் வாதிகளின் கூடாரமாய், மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 16.05.2014 அன்று, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் ஊழலுக்கு எதிராகப் போராடி வந்த மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீது கூலிப்படை ஏவி விடப்பட்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் சீனிவாசனின் இரண்டு கைகளும் உடைக்கப்பட்டு தற்போது வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருந்து வருகிறார். பேராசிரியர் சீனிவாசனை கொலை செய்ய கூலிப்படையை ஏவியவர்கள் மீது நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.216/2014-ன் கீழ் பிரிவுகள்: 294(b), 324, 307, 109 I.P.C. –ன் படி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் முதல் குற்றவாளியாக மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளார். குற்ற எண்.216/2014 வழக்கின் இதர குற்றவாளிகள் பதிவாளர் முத்து மாணிக்கம், பி.ஆர்.ஓ.அறிவழகன், செல்லத்துரை, எஸ்.வி.கே.செல்வராஜ் ஆகியோரும் தினமும் பல்கலை கழகத்திற்கு வந்து செல்கின்றனர். மேற்படி நபர்கள் எவரும் சட்டத்தை மதித்து இன்று வரை முன்ஜாமீன்மனு கூடத் தாக்கல் செய்யவில்லை. காவல்துறையும் மேற்படி நபர்களை கைது செய்ய மறுக்கிறது. கூலிப்படையைச் சோ்ந்த தி.மு.க தொண்டரணி சரவணன் என்பவர் கூட இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை.

ஆகவே தமிழக அரசு உடனே இப்பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு மேற்படி W.P.No..11350/12 மற்றும் W.P.No.3318/13 வழக்குகளி்ல் நீதிமன்றத்தில் உண்மைநிலையை எடுத்துரைக்குமாறும், தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளிட்டோரை உடனே கைது செய்து பதவி நீக்கம் செய்ய ஆவண செய்யுமாறும் கோருகிறோம்.
————————————————————–

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை.
தொடர்புக்கு-9443471003