privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தூத்துக்குடி வல்லநாட்டில் தேவர் சாதி வெறியாட்டம்

தூத்துக்குடி வல்லநாட்டில் தேவர் சாதி வெறியாட்டம்

-

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் சாதி ஆதிக்க வெறியாட்டம்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிவாள் வெட்டு,

சொத்துக்கள் சூறை, உடைமைகள் கொள்ளை !

சாதி வெறியர்களுடன் காவல்துறை கூட்டணி !

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள தெற்கு மணக்கரை ஊரில் தேவர் சாதி ஆதிக்க வெறியர்களால் தாழ்த்தப்பட்ட (பள்ளர்) சமூகத்தினரின் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் 8-க்கும் மேற்பட்ட இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்ப்பட்டுள்ளன.  நகை, பணம் கொள்ளையடித்து மூன்று நபர்களை வெட்டி தமது சாதி ஆதிக்க வெறியினை நிலைநாட்டியுள்ளனர்.

தேவர் சாதிவெறிதெற்கு மணக்கரை தாமிரபரணி படுகையில் உள்ளது. இரு சமூகத்தினருமே நெல் விவசாயம் செய்து வருகின்றனர். தேவர் சாதியினர் வயல்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வேலைக்கு செல்வது வழக்கம். சொந்தமாகவும் வயல்கள் வைத்துள்ளார்கள். இதனை ஏற்க மனமில்லாத தேவர் சாதி வெறியர்கள் வயலுக்கு நீர் பாய்ச்சும் போது முதல் வயல் தாழ்த்தப்பட்டவர் வயலாக இருந்தால், முறைப்படி நீரினை பாய்ச்சவிடாமல் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டும் பொருட்டு வாய்க்கால் மடையில் அரிவாள் மற்றும் செருப்பை வைப்பதும் அதை எடுத்து விட்டு நீர் பாய்ச்சினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைத் தாக்குவதின் மூலம் பல ஆண்டுகளாக அடாவடி செய்து வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஆடு, மாடுகள் தேவர் சாதியினரின் வயல்களில் மேய்ந்தால் மாடுகளை வெட்டி விடுவதும் தண்டம் (அபராதம்) விதிப்பதையும் இன்று வரை வாடிக்கையாகச் செய்து வருகின்றனர். அதற்கு நேர் எதிராக இவர்கள் மாடுகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரது வயலில் மேய்ந்தால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடம், “எங்ககிட்டயே அபராதம் கேட்பியா” என்று மிரட்டுவதும், தாழ்த்தப்ட்ட சமூகத்துப் பெரியோர்களைப் பேர் சொல்லி போடா வாடா என்று அழைப்பதும் ஆடு மாடுகளைக் களவாடிச் சொல்வதும் காவல் துறையில் புகார் கொடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்களைக் காவல்துறையை வைத்தே மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் திருவிழாவின் போது தமது சமூகத் தலைவர்களின் பாடலை மேளத்தில் வாசிப்பதையோ, கச்சேரியில் பாடுவதையோ தடைசெய்தே வந்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த திருவிழாவில் சில இளைஞர்களின் முயற்சியினால் தமது சமூகத் தலைவர்களின் பாடல்களை பாடச் செய்துள்ளார்கள். இதனால் தேவர் சாதியினர் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்கள்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேவர் சாதியினர் பகுதியில் உள்ள பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். அப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அடிப்பதும் மிரட்டுவதும் தொடர்கிறது. ரேசன் கடை தேவர் சாதியினர் பகுதியில் உள்ளதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரேசன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. ஊரில் ஏதும் பிரச்சனை என்றால் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் நடந்து வருகிறது.

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக தேவர் சாதியைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடையைத் தாழ்த்தப்பட்ட மக்களின் பகுதியில் திறந்துள்ளார். இதனால் தேவர் சாதியினர் குடித்து விட்டு ஊருக்குள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வருவதும் கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை வாங்குவதுமாக அட்டூழியம் செய்து வந்துள்ளார்கள்.

கடந்த 03.06.2014 -ம் தேதி இரவு பொது தண்ணீர் தொட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த தேவர் சாதியினர் மது அருந்த தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தேவர் சாதியினர் மீது தண்ணீர் தெறித்துள்ளது. இதனால் அவர்கள் வம்புச் சண்டை இழுத்துள்ளனர். சாதியைச் சொல்லித் திட்டி அடித்துள்ளனர்.

இது சம்பந்தமாக முறப்பநாடு காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் புகார் கொடுத்துள்ளார்கள். அன்று தேவர் சமூகத்தினர் கோவில் திருவிழா என்பதால் காலையில் இரு சமூகத்தினரையும் வரச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்து மறுநாள் வரச்சொல்லி அனுப்பி வைத்துள்ளது காவல்துறை. காவல்துறையில் தமக்கு நியாயமான விசாரணையும் நடவடிக்கையும் இருக்காது என்று கருதிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 04-06-2014 அன்று காலை காவல் நிலையத்திற்கு செல்லவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தேவர் சாதியினர், மாலை 5 மணி அளவில் 40-க்கும் மேற்பட்டோர் கத்தி, கம்பு, அரிவாள் ஆகியவற்றுடன் வந்து தாழ்த்தப்பட்டவரின் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கியும் நகை மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்தும் ரூ 20 லட்சத்திற்கும் மேலாகப் பொருளாதார இழப்பு ஏற்படுத்தியும் கண்ணில் பட்ட மற்றும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் வெட்டியுள்ளார்கள். காவல்துறை எப்போதும் போல் கண்துடைப்புக்காக சில நபர்களை மட்டும் கைது செய்து ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணை போகின்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இதைக் கண்டித்து ‘தேவர்சாதி ஆதிக்க வெறியர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடு’ என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நெல்லை அமைப்புக் குழுவின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த சுவரொட்டி ஆதிக்கசாதி வெறியர்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. சுவரொட்டியில் கொடுத்திருந்த செல்பேசி எண்ணுக்கு நள்ளிரவில் கம்ப்யூட்டர் மூலமாகவும் வெளிநாடுகளிலிருந்தும், பொதுத் தொலைபேசி மூலமாகவும் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.

“நாங்கள் எங்களுடைய செல்போன் எண்களை வெளியிட்டுள்ளோம். துணிவு இல்லாத நீங்கள் கோழைத்தனமாக ஏதேதோ எண்களில் இருந்து பேசுகிறீர்கள். எங்களுடைய முகவரி வெளிப்படையாக உள்ளது. உங்களுக்குத் துணிவு இருந்தால் நீங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லுங்கள் அல்லது எங்கள் முகவரிக்கு வாருங்கள், பேசுவோம். சாதி என்பது நம்மீது சுமத்தப்பட்டுள்ள இழிவு – நீயே சூத்திரனுக்குப் பிறந்தவன் என்று இழிவுபடுத்தப்படுகிறாய். அப்படியிருக்கும் போது நீ மற்றவர்களை இழிவுபடுத்துவது கேவலம் இல்லையா” என்று கடுமையாகக் கேட்டபின் அவர்களது தொல்லை அடங்கியது.

இப்படிப்பட்ட சாதி ஆதிக்க வெறியர்களின் அஸ்திவாரத்தில் தான் தென் மாவட்டங்களில் அதிமுக ஆட்சி கட்டி எழுப்பப்பட்டுள்ளது. வடக்கே ராமதாசு இந்த வெறியர்களைக் கூட்டணி சேர்த்துக் கொண்டுதான் வன்னிய சாதி வெறி அரசியல் செய்து ஆட்சியைப் பிடிக்க கனவு காண்கிறார்.

கொடியன்குளம், மாஞ்சோலை, பரமக்குடி, வாச்சாத்தி, நத்தம் காலனி என்று இவர்களது வெறியாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரால் கட்சி நடத்தும் தலைவர்கள் இவர்களுடன் மாற்றி மாற்றிக் கூட்டணி வைத்து ஆட்சியை, அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறி வருகின்றனர். தென் கோடி மாவட்டங்களில் தேவர் சாதி ஆதிக்க வெறியை எதித்துப் போராடி தங்களது உரிமைகளை நிலைநாட்ட தலித் மக்கள் புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து போராட முன்வர வேண்டும். சாதித் தலைவர்களை நம்பிப் போவதில் பயன் எதுவும் இல்லை என்பதை உணர வேண்டும்.

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
நெல்லை அமைப்புக்குழு