privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்சோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா ?

சோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா ?

-

ச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவருமான கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

மே முதல் வாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் குழு, மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், ரோகிந்தன் நாரிமன் மற்றும் ஒடிசா மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்திருந்தது. அந்தக் நீதிபதிகள் குழுவில் நீதிபதிகள் எச் எல் தத்து, ஏ கே பட்னாயக், பல்பீர் சிங் சவுகான், தீரத் சிங் தாக்கூர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறைப்படி மத்திய உளவுத் துறை இந்நீதிபதிகளின் கடந்த காலம் குறித்து விசாரணை நடத்தி மே 15-ம் தேதி இவர்கள் மீதும் எந்த களங்கமும் இல்லை என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. பொதுவாக நீதித்துறையும், போலீசுத் துறையும் தங்களது எல்லைகளை அறிந்து கொண்டுதான் மோதிக் கொள்வார்கள். பெரிய முரண்பாடு வந்தால் விட்டும் கொடுப்பார்கள். மற்றவர்கள் யாரும் இந்த இரண்டு துறைகளை கேள்வி கேட்டால் இவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் உளவுத் துறை இந்த கிளீயரன்சை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் நீதிபதி நியமனத்துக்கான சடங்குகள் முடித்து வைக்கப்பட்டு கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் மத்திய அரசின் இறுதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மோடி தலைமையில் ஆட்சி அமையப் போவது உறுதியானதும், மோடி சி.பி.ஐ இயக்குனரிடம் கோபால் சுப்பிரமணியம் மீது ஏதாவது பிரச்சனையை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில் பாஜகவுக்கு கோபால் சுப்பிரமணியமோடு பெரும் பகை இருக்கிறது.

கோபால் சுப்பிரமணியன் 2
கோபால் சுப்பிரமணியம்

சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் குஜராத் அரசை குற்றவாளிக் குண்டில் ஏற்றியதில், உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற நண்பராக செயல்பட்ட கோபால் சுப்பிரமணியத்தின் பங்கு முக்கியமானது. அவ்வழக்கில் குஜராத் அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியமான துளசிராம் பிரஜாபதி குஜராத் போலீசால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மோடியின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சி.பி.ஐஆல் கைது செய்யப்பட்டார். தற்போது பிணையில் வெளிவந்து உத்திரபிரதேச பா.ஜ.க பொறுப்பாளராக மதக் கலவரங்களை நடத்திக் கொண்டிருக்கும் அவர் மீதான வழக்கு இன்றும் நடந்து வருகிறது, இனிமேல் அதுவும் விரைவில் நீர்த்துப் போக வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதுதான் மோடி அரசு இவர் மீது கொண்டிருக்கும் ஜன்மப்பகைக்கு காரணம்.

கோபால் சுப்பிரமணியம் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ ராசாவுக்கு சாதகமாக சி.பி.ஐ-யிடம் பேசியதாகவும், நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அவர் தாஜ் ஹோட்டல் நீச்சல் குளத்தை பயன்படுத்த நீரா ராடியா மூலம் அனுமதி வாங்கியதாகவும், சி.பி.ஐ அறிக்கை சமர்ப்பித்ததாக ஊடகங்களில் செய்தி கசிய விடப்பட்டது. இந்த அடிப்படையில் மோடி அரசு, கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிபதிகள் குழுவை கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த ‘குற்றங்கள்’ எதுவும் இவர்களே சொல்லிக்கொள்ளுமளவு முக்கியத்துவம் உடையவை அல்ல.

தன்னுடைய பெயர் ஊடகங்களில் அடிபடுவதை பார்த்த கோபால் சுப்பிரமணியம் தன்னை வேண்டுமென்றே அரசு பழிவாங்குவதாகவும், நீதிபதி நியமன பட்டியலில் தன் பெயரை சேர்க்க வேண்டாம் என்று அதை தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கிடையே கோபால் சுப்பிரமணியத்தை தவிர மற்ற மூன்று பேர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு அதற்கான உத்தரவையும் வெளியிட்டது.

மோடியின் குஜராத் ஆட்சியை அம்பலப்படுத்தும்படி செயல்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்குவது என்ற நடவடிக்கையின் அடுத்த இலக்குதான் கோபால் சுப்பிரமணியம்.

ஆனால், கோபால் சுப்பிரமணியமோ மோடியையோ அமித் ஷாவையோ நேரடியாக குற்றம் சாட்டாமல் பின்வாங்குகிறார். சோராபுதீன் வழக்கில் தான் தற்செயலாகத்தான் நீதிமன்ற நண்பராக பொறுப்பேற்க நேர்ந்தது என்றும், மோடிக்கு எதிராகவோ, அமித் ஷாவுக்கு எதிராகவோ தனக்கு எந்தவித விரோதமும் இல்லை என்றும் உண்மையில் அமித் ஷாவுக்கு பிணை வழங்குவதை தான் ஆதரித்ததாகவும என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை நீரா ராடியா ஒரு வழக்கில் வாதம் செய்ய அமர்த்தி அதற்கான கட்டணத்தை கொடுத்தாகவும் அதைத் தவிர வேறு தொடர்பு இல்லை என்று அவர் கூறுகிறார். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முனபு அதிகரித்து வரும் தனது உடல் எடையை குறைக்க விரும்பிய போது தாஜ் மான்சிங் ஹோட்டல் (டாடா குழுமத்துக்கு சொந்தமானது) நீச்சல் குள உறுப்பினராக்க முன் வந்ததாகவும் அந்த கட்டத்தில் நீரா ராடியா அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாகவும் கூறுகிறார்.

உண்மையில், தாஜ் நீச்சல் குளமோ, நீரா ராடியாவோ, டாடாவோ மோடிக்கோ, பா.ஜ.கவுக்கோ பிரச்சனை இல்லை. டாடாவின் நானோ கார் திட்டத்துக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை வாரி இறைத்தவர் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி. அந்த டீலுக்கு தரகு வேலை பார்த்தவர் கார்ப்பரேட் தரகர் நீரா ராடியா.

என்.டி.டி.வி விவாதத்தில் கலந்து கொண்ட பா.ஜ.கவின் பேச்சாளர் சுப்பிரமணியன் சாமி, கோபால் சுப்பிரமணியம் திறமையான வழக்கறிஞராக இருக்கலாம், தனிப்பட்ட முறையில் நேர்மையானவராக இருக்கலாம், ஆனால் ராமர் சேது வழக்கில், ராமன் ஒரு கற்பனை பாத்திரம்தான் என்று நீதிமன்ற பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அடிப்படையிலேயே அவரது நியமனத்தை நிராகரிக்கலாம் என்று கூறுகிறார். ஒருவரது திறமை, நேர்மை இவற்றுக்கு அப்பாற்பட்டு எங்கள் அரசின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் அவரை எப்படி நீதிபதியாக நாங்கள் அனுமதிப்போம். இது எங்கள் அரசு, நாங்கள் இப்படித்தான் நடந்து கொள்வோம் என்று மோடி அரசின் ஆதிக்கத்தை வெளிப்படையாக முன் வைக்கிறார்.

விவாதத்தில் கலந்து கொண்ட பிற மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களோ இந்த அரசியல் அடாவடியை கண்டிக்காமல், விவகாரம் ஊடகங்களில் கசிய விடப்பட்டிருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் நியமனத்துக்கான நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்றம் என்ற அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்றும் புலம்புகின்றனர்.

மோடியும், அமித் ஷாவும், சுப்பிரமணியன் சாமியும் வைப்பதுதான் சட்டம். அவர்கள் சொல்வதுதான் உண்மை. இதை ஏற்காதவர்கள் சோராபுதீன் ஷேக் சந்தித்த முடிவை சந்திக்க நேரிடும். சோராபுதீன் ஷேக் வழக்கில் நேரடி சாட்சியமான துளசிராம் பிரஜாபதி குஜராத் கொலை அரசால் போட்டுத் தள்ளப்பட்டதை அணுக்கமாக பார்த்த கோபால் சுப்பிரமணியத்துக்கு தான் நீதிபதியாக நியமனம் ஆவதற்கு மட்டுமில்லை, வழக்கறிஞராக தொடர்வதற்கே இந்த அரசு உலை வைத்து விடும் என்ற பயம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

இனி இந்தியாவின் நீதிபதிகள் பாஜக அரசுக்கு பயந்து கொண்டே தமது தீர்ப்புகளை எழுத முடியும். மோடியின் விருப்பத்திற்கு மாறாக எந்த நீதிமன்றமும் பேசமுடியாது. பாசிசம் ஆட்சிக்கு வந்தால் போலி ஜனநாயகம் கூட அமலில் இருக்காது.

___________________________

பார்க்க:

Watch: Gopal Subramanium to NDTV – CBI asked to ‘Dig Up Dirt’ on Me