அதிமுகதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும் அவரது உடன்பிறவாத் தோழி சசிகலா நடராசன் மீதும் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக, வருமான வரித்துறை 1997-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது நினைவிருக்கலாம். இவ்வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்த வாரம் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்காக வந்தது. ஆனால் குற்றச்சாட்டப்பட்ட இருவரும் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை. பதிலாக இரண்டு மனுக்கள் ஆஜராகின.

“இவ்வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையிடம் நான் ஒரு மனு கொடுத்திருகிறேன், அது அவர்களின் பரிசீலனையில் உள்ளது. என்னுடைய கோரிக்கைக்கு வருமான வரித்துறை பதிலளிக்கும் வரை இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று இந்த நீதி மன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதையே சசிகலாவும் தனது மனுவில் வழிமொழிந்திருக்கிறார். வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராமசாமி குற்றவாளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டார். எனவே இரு மனுக்களையும் ஏற்று வழக்கு விசாரணைனையை நீதிபதி தட்சிணாமூர்த்தி ஜூலை 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

வாய்தா ராணி எனும் அடைமொழி பெற்றிருக்கும் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு போல இந்த வழக்கையும் தள்ளி வைக்கும் வழக்கமான தந்திரம் மட்டுமல்ல இது. எந்த வழக்கை எப்படி நினைவு கொள்வது என்று தவிப்பவர்களுக்காக வழக்கு குறித்த ஒரு நினைவூட்டல்.

சசி எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனம் 1989-ம் ஆண்டு சசிகலாவையும் டி.வி. தினகரனையும் பங்குதாரர்களாகக் கொண்டு பதிவு செய்யப்படுகிறது. பிறகு  1990-ல் ஜெயலலிதாவையும் சசிகலாவையும் பங்குதாரர்களாகக் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. 1991-ல் ஜெயா ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தை மொட்டையடித்த பணத்தில் ஒரு பகுதி சசி எண்டர்பிரைசசில் போடப்படுகிறது. சசி எண்டர்பிரைசஸ் என்கிற இந்த நிறுவனம் என்ன நிறுவனம்? கார்கள் தொடர்பான வணிகம் செய்யும் நிறுவனமாம். அப்படி தான் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது சுருட்டப்பட்ட பணத்தை மறைப்பதற்க்காக துவங்கப்பட்ட ஒரு டுபாக்கூர் கம்பெனி. 1991 முதல் 1996 வரை முழுமையாக ஐந்து ஆண்டுகள் நடந்த பகற்கொள்ளை முடிவுற்ற பிறகு தான் ‘வருமான’ வரி ஏய்ப்பு என்கிற பெயரில் 1997 இல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

1997-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அதன்பிறகு ஒன்றும் நடக்கவில்லை. ஜெயா, சசி இருவரும் 2006-ல் வழக்கிலிருந்தே தங்களை விடுவிக்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அப்படியானால் இடைப்பட்ட ஒன்பதாண்டுகளில் என்ன நடந்தது. நீதி மன்றம் தூங்கிக்கொண்டிருந்ததா? என்கிற கேள்வியை எழுப்பினால் அது நீதி மன்ற அவமதிப்பு என்பார்கள்.  எனவே இந்த இடைப்பட்ட இருண்ட காலத்தில் என்னமோ நடந்தது என்று ஒதுக்கிவிட்டு அதற்கடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

மோடி ஜெயலலிதா

அரசியல் கொள்கை அனைத்திலும் ஒன்றுபட்டாலும் சென்ற தேர்தலில் ஒருத்தருக்கொருத்தர் எதிர்ப்பது போல எப்படியெல்லாம் நடித்தார்கள்?

வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று குற்றம சாட்டப்பட்டோர் மனுத்தாக்கல் செய்தாலும் உயர்நீதி மன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அடுத்ததாக இருவரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றனர். உச்சநீதி மன்றமும் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இப்படியாக டெல்லிக்குச் சென்ற வழக்கு இறுதியில் எழும்பூருக்கே உச்சநீதி மன்றத்தின் உத்தரவுடன் திரும்பி வந்தது. இதற்கே 17 வருடங்கள் ஆகிவிட்டன.

கடந்த திங்கள்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் ஜெயலலிதாவும், சசிகலாவும் ‘வருமான வரித்துறைக்கு நாங்கள் அபராதம் செலுத்தி வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக இருக்கிறோம்’ என்று தமது மனுவில் கூறியுள்ளனர். இதன் மூலம் அம்பலமாகியிருப்பது என்ன என்றால். ‘நாங்கள் குற்றம் செய்தது உண்மை தான்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். குற்றவாளிகளே விலங்கை மாட்ட இவ்வாறு கைகளை நீட்டி வாய்ப்பளித்த போதிலும், வழக்கு தொடுத்த வருமான வரித்துறையின் வழக்குரைஞர் ராமசாமி அதற்கு மாறாக எப்படி தப்பிப்பது என்றும் அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

“முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள மனுவின் மூலம் வருமான வரித்துறை சட்டப்பிரிவு 279-பிரிவு 2-ன் கீழ் சமரசம் செய்து கொள்ள முடியும். அவர்களின் மனுக்கள் வருமான வரித்துறை, இயக்குனர் ஜெனரலிடம் கொடுக்கப்பட்டுள்ளது, காம்பவுண்டிங் முறையில் (வருமானவரி பாக்கி உள்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்துவது) வருமானவரி பிரச்சினையை தீர்க்கத் தயார் என்றும், வருமான வரித்துறையின் பதில் வரும் வரை வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

வருமான வரித்துறை வழக்கறிஞர் இதை தனது தனிப்பட்ட கருத்தாக கூற முடியாது. மத்திய அரசின் அல்லது மோடியின் முடிவைத்தான் அமல்படுத்த முடியும். பா.ஜ.க.வும் அ.தி.மு.க வும் வெவ்வேறு கட்சிகளாக இருப்பினும், மோடியும் ஜெயலலிதாவையு இணைக்கின்ற கொள்கையும் சித்தாந்தமும் வர்க்க நலனும் ஒன்று தான். பார்ப்பன பாசிசமும், மறுகாலனியாக்கமும் தான் இவர்களின் கொள்கை மற்றும் ஒற்றுமைக்கான காரணம். எனவே தான் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவை குற்ற வழக்குகளிலிருந்து தப்பிக்க பா.ஜ.க உதவி செய்கிறது. அதில் ஒன்று தான் வருமான வரித்துறையால் போடப்பட்டுள்ள இவ்வழக்கில் எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ அதை வட்டியும் முதலுமாக கட்டிவிடுகிறோம் என்று ஜெயா கூறியுள்ளதை வருமான வரித்துறை வழக்கறிஞர் அனுமதித்துள்ளார்.

இதை ஆரம்பத்திலேயே ஜெயலலிதா ஏன் செய்யவில்லை? செய்திருந்தால் வருமான வரி ஏய்ப்பை ஒத்துக் கொண்டதாக ஆகிவிடும். வழக்கை தள்ளி வைப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இறுதியில் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் ஜெயா. அதுவும் மத்திய அரசு ஆதரவின்றி சாத்தியமில்லை என்பதுதான் இதன் சூட்சுமம்.

ஜெயாவை விடுங்கள், ஆனால் ஊழலை சகித்துக் கொள்ளமாட்டேன் என்று சண்டமாருதம் செய்த மோடி இப்போது பகிரங்கமாக ஊழல் குற்றவாளிகளை காப்பாற்றும் வேலையை செய்து வருகிறார். இது ஏதோ ஜெயாவுக்கு மட்டும் தரப்படும் தனிச்சலுகை அல்ல. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாகளுக்கு நிறுவன ரீதியாக தரப்படும் சட்டபூர்வ ஓட்டைகளே இப்போது ஜெயலலதாவுக்கும் தரப்படுகிறது.

தமிழகம் கண்ட முதல்வர்களிலேயே ஜெயலலிதான் ஒரே இந்து முதல்வர் என்று இந்து முன்னணி ராமகோபாலன் அன்றே சொல்லியிருந்தார். அந்த இந்து பாரம்பரிய நட்பு இன்றும் தொடர்கிறது. அநீதிகள் கூட்டணியாக சேருவதில் எந்த ஆச்சரியமில்லை. ஆனால் இவர்கள் தேர்தலின் போது எதிரெதிர் முகாம் போல காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்து நடித்தார்கள்!