privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!

அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!

-

டந்த பத்தாண்டு கால காங்கிரசு ஆட்சியில் அலைக்கற்றை, நிலக்கரி, இரும்பு, பாக்சைட், கச்சா எண்ணெய் வயல்கள் உள்ளிட்ட நாட்டின் பொதுச் சொத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக விழுங்கிய இந்தியத் தரகு முதலாளிகளும் அந்நிய ஏகபோக முதலாளிகளும் அப்பகற்கொள்ளையின் தொடர்ச்சியாக பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறி, அவற்றை வளைத்துவிடச் சதித்தனமாக முயலுகிறார்கள். இதற்கான பரிந்துரைகளைக் கொண்ட பி.ஜே.நாயக் கமிட்டியின் அறிக்கை மோடி அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

விவசாயி தற்கொலை
கந்துவட்டிக் கடனிலிருந்து மீள வழியின்றி தற்கொலை செய்து கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது விவசாயி கொண்டம் சீனிவாஸ் (கோப்புப் படம்)

பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடி அபாயத்தில் சிக்கும் நிலையில் இருப்பதற்கு மற்றைய காரணங்களை விட வாராக் கடன்கள்தான் முதன்மையானதாகும். அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் மே மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2008 மார்ச்-இல் 39,000 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2013-ம் ஆண்டு இறுதியில் 5,50,000 கோடி ரூபாயாக அச்சமூட்டக்கூடிய வகையில் அதிகரித்திருப்பதாக”க் குறிப்பிட்டுள்ளது. 2008-13 க்கு இடையிலான 5 ஆண்டுகளில் அரசுடைமை வங்கிகளின் இலாபத்திலிருந்து 1.41 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் ஊழியர் சங்கம் கூறுகிறது.

“பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தற்பொழுதுள்ள நிலையைவிட இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்குமானால், அது வங்கிகளின் தற்போதைய மூலதனத்தில் நாற்பது சதவீதத்தைக் கபளீகரம் செய்துவிடும்” என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்று கூறுகிறது. வாராக் கடன்கள்தான் பொதுத்துறை வங்கிகளின் முதல் வில்லன் என்ற உண்மை அம்பலமாகியிருக்கும் வேளையில் வெளிவந்துள்ள பி.ஜே.நாயக் கமிட்டி அறிக்கையோ இந்த வாராக் கடன்களை வசூலித்து வங்கிகளின் நிதி நிலைமையைச் சீராக்கும் ஆலோசனைகள் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக, “பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதற்கு நிர்வாகத் திறமையின்மையும் அரசின் தலையீடும்தான் காரணமென்று” கண்டுபிடித்து, இதற்குத் தீர்வாகத் தனியார்மயத்தைப் பரிந்துரைத்திருக்கிறது.

“வங்கிகளைத் தேசியமயமாக்கும் சட்டம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சட்டம் ஆகிய இரண்டையும் அறவே நீக்கி, பொதுத்துறை வங்கிகள் அனைத்தையும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். மைய அரசு பொதுத்துறை வங்கிகளில் உள்ள தனது பங்கு மூலதனத்தை 50 சதவீதமாகக் குறைத்துக் கொள்வதோடு, வங்கி முதலீட்டு கம்பெனி என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி அதனிடம் இப்பங்கு மூலதனத்தையும் வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வங்கி முதலீட்டு கம்பெனி தனது பங்கு மூலதனத்தை 50 சதவீதத்திற்கும் கீழாகக் குறைத்துக் கொள்வதோடு, வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பு முழுவதையும் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இவ்வங்கி நிர்வாகக் குழுவிற்கான நிபுணர்கள்/அதிகாரிகளை நியமிப்பதிலும், அவர்களுக்குச் சம்பளம் மற்றும் போனஸ் வழங்குவதிலும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. மேலும், மைய ஊழல் கண்காணிப்புத் துறை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றின் வரம்பிலிருந்தும் வங்கிகளின் நிர்வாகக் குழுக்களை விடுவிக்க வேண்டும்” எனப் பரிந்துரைத்திருக்கிறது நாயக் கமிட்டி.

விஜய் மல்லையா
பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 7,500 கோடி ரூபாய் கடன் பெற்று ஏப்பம் விட்டுள்ள கிரிமினல் பேர்வழி கிங்ஃபிஷர் சாராய ஆலை அதிபர் விஜய் மல்லையா. (கோப்புப் படம்)

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் இந்த அளவிற்கு ஊதிப்போயிருப்பதற்கு நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள்தான் காரணமென்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.ஐ., “இந்த மொத்த வாராக் கடனில் பெரும் பகுதி ஒரு முப்பது நிறுவனங்களிடம் தேங்கியிருக்கிறது” என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. அரசியல் செல்வாக்குமிக்க விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 70,300 கோடி ரூபாயாகும் என அம்பலப்படுத்தியிருக்கிறது, அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம். அதாவது கடனைக் கட்டாமல் வங்கிகளைத் திவாலாக்கும் கயவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளேயன்றி, கஞ்சிக்கில்லாத விவசாயிகளோ, சிறு தொழில் முனைவோரோ அல்ல என்ற உண்மை இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வங்கிகள் முறைப்படுத்தும் சட்டம் 1969-ன்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் பொதுத்துறை வங்கிகள் தமது தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை ரிசர்வ் வங்கிக்கு அளிக்கவில்லை என்றும், இது கடனைக் கட்டாமல் ஏமாற்றும் கார்ப்பரேட் கிரிமினல்களைக் காப்பாற்றுவதற்காக, பொதுத்துறை வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூட்டு சேர்ந்து நடத்தியிருக்கும் சதி என்றும் குற்றம் சாட்டி, வாராக்கடன்கள் என்று கூறப்படுபவை அனைத்தின் மீதும் சி.பி.ஐ. விசாரணை கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் கேதன் திரோட்கர் என்ற பத்திரிகையாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் பெற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும் இது.

வாராக்கடன்கள் தொடர்பாக, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தாலும், சம்பந்தப்பட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதியை அரசு சி.பி.ஐ.க்கு வழங்குவதில்லை. உயிரி எரிபொருள் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் மோடி அரசிடமிருந்து 300 கோடி ஏக்கரைப் பெற்றிருக்கும் பயோதார் இண்டஸ்ட்ஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் அரசுடைமை வங்கிகளிடம் 1100 கோடி ரூபாயை வாராக்கடனாக ஏமாற்றியுள்ளது. 2011-ல் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் உயர் அதிகாரியை விசாரிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல, 2700 கோடி ரூபாய் ஏமாற்றிய மாகுவா மீடியா என்ற தொலைக்காட்சி சானல் மீதான வழக்கில், கடன் கொடுத்த பஞ்சாப் நேசனல் வங்கி அதிகாரிகளை விசாரிப்பதற்கு சி.பி.ஐ.க்கு அரசு இன்ன மும் அனுமதி வழங்கவில்லை. இவை சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே.

இப்படிபட்ட நிலையில் மைய ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புகளிலிருந்து பொதுத்துறை வங்கிகளை விடுவிக்க வேண்டும் என நாயக் கமிட்டி பரிந்துரைத்திருப்பதன் பொருள், பொதுமக்களின் சேமிப்பை ஏப்பம் விடும் கிரிமினல் குற்றத்தை வங்கி நிர்வாகிகளும் முதலாளித்துவக் கும்பலும் கூட்டுச் சேர்ந்து கொண்டு நடத்துவதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அது மக்களுக்குத் தெரியவும் கூடாது என்பதுதான்.

போடி நகர ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
கல்விக் கடனைக் கட்ட முடியாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் புகைப்படங்களை ஃபிளக்ஸ் பேனரில் போட்டு அவமானப்படுத்திய போடி நகர ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகத்தின் திமிர்த்தனம் (கோப்புப் படம்)

நாயக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது போல, திறமை வாயந்த பொருளாதார நிபுணர்களை வங்கிகளின் இயக்குநர்களாக நியமித்து, அவர்களுக்குக் கைநிறைய சம்பளமும் போனசும் கொடுத்து, அவர்கள் சர்வ சுதந்திரமாக இயங்குவதற்கு உரிமைகளும் கொடுத்திருந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில், இத்தகைய நிபுணர்கள்தான் வீட்டுமனை சூதாட்டம் நடத்தி 2008-ல் பல வங்கிகளைத் திவாலாக்கினார்கள். இந்திய பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படாத காரணத்தினாலும், குறிப்பிட்ட அளவிற்கு அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததனாலும்தான் திவாலாகாமல் தப்பின. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த குளோபல் டிரஸ்டு வங்கி என்ற தனியார் வங்கி திவாலானபோது, அரசு அவ்வங்கியை ஓரியண்டல் வர்த்தக வங்கி என்ற பொதுத்துறை வங்கியோடு இணைத்ததன் மூலம்தான் மக்களின் சேமிப்பைக் காப்பாற்றியது.

உண்மை இவ்வாறிருக்க, வல்லுறவு செய்த கிரிமினலுக்கே பெண்ணைத் திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பளிக்கிறார் நாயக். இந்த பி.ஜே. நாயக் யார் தெரியுமா? இவர் ஆக்ஸிஸ் வங்கியின் முன்னாள் தலைவர்; சப் பிரைம் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களில் ஒன்றான மார்கன் ஸ்டான்லியின் முன்னாள் தலைமை அதிகாரி.

அரசுடைமை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது என்பது மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு அங்கம். குறிப்பாக, கடந்த நான்காண்டுகளாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள சில்லறை வர்த்தகம், இராணுவ உற்பத்தி, தொழிலாளர் ஓவூதிய நிதியம், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிதித்துறையின் அனைத்து அரங்குகளையும் தனியாருக்குத் திறந்துவிட வேண்டும் என ஏகாதிபத்தியங்கள் கொடுத்து வரும் நிர்ப்பந்தம்தான் நாயக் கமிட்டியின் பின்புலம்.

****

னியார்மயத்திற்கு முன்பும், 1990-களிலும் இந்திய வங்கிகள் வழங்கிய கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதமாக இருந்தது, 2000-12 காலக்கட்டத்தில் 51.4 சதவீதமாக வீங்கியது எனக் குறிப்பிடுகிறார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பொருளாதார பேராசிரியர் சி.பி. சந்திரசேகர். அதாவது அரசுடைமை வங்கிகளின் கடனை வைத்துத்தான் இந்தியப் பொருளாதாரம் எட்டு சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடித்தது.

குறிப்பாக, அரசு தன்னிடம் மூலதனம் இல்லை என்ற பொய்க்காரணத்தை சொல்லி, 2000-ஆண்டுக்குப் பிறகு விமான நிலையங்கள், விமானச் சேவைகள், தொலைத்தொடர்பு, கனிமச் சுரங்கங்கள், மின்சார உற்பத்தி, சாலைகள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் துறையைத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிட்டது. சலுகை கொடுத்தால்தான் முதலாளிகள் மூலதனம் போடுவார்கள் என்று சொல்லி நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு அள்ளித் தந்தது. ஆனால் எந்த முதலாளியும் தன் கைமுதலைப் போடவில்லை. இந்த காலகட்டத்தில்தான் நீண்ட காலத்திட்டங்களுக்கு கடன் கொடுப்பதில்லை என்ற அரசுடைமை வங்கிகளின் கொள்கையை அரசு சதித்தனமாக மாற்றியமைத்தது. தன்னிடம் மூலதனமில்லை என்று கூறிய அரசு, தன் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் சேமிப்புப் பணத்தை அரசு வங்கிகளி லிருந்து எடுத்து அடிக்கட்டுமானத் தொழில்களில் முதலீடு செய்த தரகு முதலாளிகளுக்குக் கடனாக வாரிக்கொடுத்தது.

இந்திய வங்கிகள் தொழில்துறைக்கு வழங்கிய மொத்தக் கடனில் 35 சதவீதம் அடிக்கட்டுமான துறைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த 35 சதவீத அடிக்கட்டுமானத் துறை கடனில் ஏறத்தாழ 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மின்சாரத் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 53 சதவீதக் கடன்கள் அடிக்கட்டுமானத் துறை, இரும்பு உருக்காலை, விமானச் சேவை, சுரங்கத் தொழில், ஜவுளித் தொழில் ஆகிய ஐந்து துறைகளுக்கு வழங்கப்பட்டவையாகும் எனக் குறிப்பிடுகிறது, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை. இதிலும் குறிப்பாக 36 தனியார் அனல் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட 2,09,000 கோடி ரூபாய் கடன் வசூலிக்க இயலாத சிக்கலில் இருப்பதாக கிரெடிட் சுயிஸ் என்ற பன்னாட்டு தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவிக்கிறது.

கடன்காரர்கள்
பொதுத்துறை வங்கிகளிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று உலகக் கோடீஸ்வரர்களாக வளர்ந்துள்ள இந்தியத் தரகு முதலாளிகள் (இடமிருந்து) அனில் அம்பானி, கௌதம் அதானி, மற்றும் எஸ்ஸார் குழுமத் தலைவர் பிரசாந்த் ரூயா.

இந்த வாராக் கடன்கள் ஒருபுறமிருக்க, கடனைக் கட்டாமல் ஏய்த்துவரும் தரகு முதலாளிகள் வாங்கிய கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்து, கடன் தொகையிலும் ஒரு பகுதியை தள்ளுபடி செய்து, திருப்பிக் கட்டுவதற்கான தவணை முறைகளை நீட்டிப்புச் செய்து தரும் அயோக்கியத்தனத்தை, கடன் மறு சீரமைப்பு என்று அழைக்கின்றன வங்கி நிர்வாகங்கள். இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் (restrctured loans) பட்டியலை எடுத்துக்கொண்டால், அது இன்னொரு கொள்ளையாக விரிகிறது. இந்த மோசடிக்கு நாடெங்கும் தெரிந்த உதாரணமாக விளங்குகிறது விஜய மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம்.

அரசியல் செல்வாக்குமிக்க மிகப்பெரும் தரகு முதலாளியான விஜய் மல்லையா நடத்திவந்த கிங் ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்குப் பொதுத்துறை வங்கிகள் 7,500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்திருந்தன. இந்நிறுவனம் சற்று தள்ளாடத் தொடங்கியவுடனேயே, கடன் கொடுத்திருந்த வங்கிகள் கிங் ஃபிஷர் உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய 1,600 கோடி ரூபாயைப் பணமாகப் பெற்றுக் கொள்ளாமல், அந்நிறுவனத்தின் பங்குகளாகப் பெற்றுக் கொண்டன. அதுவும் அப்பங்குகளின் சந்தை விலையைவிட 62 சதவீதம் அதிகமாக விலை வைத்து, ஒரு பங்கை 60 ரூபாய்க்குப் பெற்றுக் கொண்டன. இதுவன்றி, அந்நிறுவனத்தின் மிச்சமிருக்கும் கடனும் சீரமைக்கப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் இப்படிப் பல்வேறு தகிடுதத்தங்களின் மூலம் வாராக் கடன் பட்டியலுக்குள் கொண்டு வராமல் தந்திரமாக மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை ஐந்து இலட்சம் கோடி ரூபாயாகும் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறது, சி.பி.ஐ. 2009-12 ஆம் ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்களில் 47.9 சதவீதக் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டிருப்பதாகவும் இதில் அடிக்கட்டுமானத் துறைக்கு வழங்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் பங்கு மட்டுமே 17.4 சதவீதம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

07-c-2

தரகு முதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் செய்துவரும் சேவை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்கள் வாங்கிக் குவித்து வைத்துள்ள வெளிநாட்டுக் கடன்களுக்கும் – ஏறத்தாழ 6,28,800 கோடி ரூபாய் – பொதுத்துறை வங்கிகள் உத்தரவாதம் அளித்து சாட்சி கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளன. அவர்கள் அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாதபொழுது, அதை அடைக்க வேண்டிய பொறுப்பு முழுவதும் இந்திய அரசு வங்கிகள் மீது சுமத்தப்படும்.

தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெற்ற கடன்கள், அவ்வங்கிகள் மறுசீரமைத்துள்ள கடன்கள், அவ்வங்கிகளின் வாராக் கடன்கள், அவ்வங்கிகள் உத்தரவாதமளித்துள்ள வெளிநாட்டுக் கடன்கள் – இவைதான் டாடா, அம்பானி உள்ளிட்டு பல இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பை எகிறச் செய்து, அவர்களை உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் தொழிற்துறைக்கு வழங்கிய மொத்தக் கடனில் ஏறத்தாழ 13 சதவீதக் கடன்கள் அதானி, எஸ்ஸார், அனில் திருபா அம்பானி குழுமம், வேதாந்தா, லான்கோ உள்ளிட்ட ஒரு பத்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது கிரெடிட் சுயிஸ். அதாவது, பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை, வாராக்கடன் என்ற பெயரில் விழுங்கி, தங்கள் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்தத் தரகு முதலாளிகள் கும்பல், வாராக்கடனால் வங்கிகள் நொடித்துவிட்டதால், அவற்றைத் தனியார்மயமாக்கி தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருகிறார்கள்.

அவ்வாறு தனியார்மயமாக்கப்பட்டலோ அல்லது அரசுடைமை வங்கிகளில் தரகுமுதலாளிகளின் பங்கை அதிகரித்தாலோ, அதன் பின்னர் விவசாயிகள், சிறுதொழில் முனைவோர், மாணவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்கள் யாரும் வங்கிகளில் கடன் பெறுவதை எண்ணிப் பார்க்கவும் முடியாது. மக்களின் சேமிப்புகள் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கு மட்டுமே பயன்படும். இதுதான் நாயக் கமிட்டி பரிந்துரையின் நோக்கம். வங்கிகளைத் தனியார்மயமாக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது மோடி அரசு. திருடர்கள் கையில் சாவியை ஒப்படைப்பதை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்பதே கேள்வி.

– செல்வம்

***

கடனுக்குப் பதிலாக காகிதத்தை வரவு வைக்கும் கிரிமினல் திட்டம்!

ங்கி இயக்குநர்களுடன் இணைந்து கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தி வரும் இந்தக் கொள்ளையை மறைப்பதற்கும், வங்கியின் வரவு – செலவு அறிக்கையில், வாராக்கடனை இருட்டடிப்பு செய்வதற்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய தந்திரத்தின் பெயர், சொத்து மறுகட்டுமானம். சமீபத்தில் இவ்வாறு 15 சொத்து மறுகட்டுமான கம்பெனிகள் இந்தியாவில் உருவாகியிருக்கின்றன. இவற்றைக் கடன் வசூல் செய்யும் அடியாள் கம்பெனிகள் என்று அழைப்பது பொருத்தம். அரசுடைமை வங்கிகளுக்கு வரவேண்டிய வாராக்கடன் 100 கோடி ரூபாய் என்று வைத்துக்கொண்டால், பேரம் பேசி அதனை 50 கோடிக்கு இந்த நிறுவனங்கள் வாங்குகின்றன. பணத்திற்குப் பதிலாக 50 கோடிக்கு காகிதப் பத்திரத்தைத் தருகின்றன. இந்தப் பத்திரம் கைக்கு வந்தவுடனேயே, இதனை வரவுக் கணக்கில் காட்டுவதன் மூலம், தங்களது வரவு – செலவு அறிக்கையில் வாராக்கடன் தொகையைக் குறைத்துக் காட்டுகின்றன வங்கிகள்.

மேற்படி கடன் வசூல் கம்பெனிகள் 5 முதல் 8 ஆண்டுகளுக்குள் கடனாளியிடமிருந்து பணத்தை வசூலிக்கும் பட்சத்தில் செலவு போக மீதித் தொகையை, வசூல் கம்பெனியும் வங்கியும் தாங்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி பிரித்துக் கொள்வர். வசூல் ஆகாத பட்சத்தில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வாராக்கடனாக அது வங்கியின் தலையில்தான் விடியும். வராத பணத்தை வரவு வைத்து கணக்கு காட்டும் இந்த மோசடி முறையை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம், வாராக்கடன் தொகையை வங்கிகள் குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. 2013-14 இல் மட்டும் அரசுடைமை வங்கிகள், இந்த முறையைப் பின்பற்றி 50,000 கோடி வாராக்கடனை விற்று, காகிதப் பத்திரத்தை வரவு வைத்திருக்கின்றன. இப்படி வாராக்கடன்களை அரசுடைமை வங்கிகளிடமிருந்து வாங்கியிருக்கும் அடியாள் கம்பெனிகளில் முக்கியமானது ரிலையன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

***

வங்கிக் கொள்ளையை ஊழியர் சங்கங்கள் வேடிக்கைப் பார்ப்பதேன்?

வாராக்கடன் வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் யார் என்பதை வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்ட பின்னர்தான் இது குறித்து பரவலாக பொதுமக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் பட்டியலை வெளியிடுவதற்கு மேல் இத்தனை ஆண்டுக்காலமாக இப்பிரச்சினைக்காக வங்கி ஊழியர் சங்கங்கள் செய்தது என்ன?

ஐந்து லட்சம் கோடிக்கு மேல் வாராக்கடன் என்ற பெயரில் மோசடி நடந்திருப்பதாக சி.பி.ஐ. கூறுவதற்கு முன் வங்கி ஊழியர் சங்கங்கள் இதனை கூறியிருக்க முடியாதா? கடன் வாங்கி விட்டு மோசடி செய்யும் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை வங்கி நிர்வாகம் உடனே கையகப்படுத்த வேண்டும் என்று கோரி ஊழியர் சங்கங்கள் ஏன் போராடுவதில்லை? அரசுடைமை வங்கிகளில் ஊழியர்கள் சார்பில் இயக்குநர்களாக (workman director) இருப்பவர்களுக்குத் தெரியாமல் கடன் தள்ளுபடிகளும், மறு சீரமைப்புகளும் நடந்திருக்குமா?

பொதுமக்களின் சேமிப்பு கொள்ளையடிக்கப் படுவதை எதிர்த்து வேலைநிறுத்தம் நடத்துவது வங்கி ஊழியர் சங்கங்களின் கடமையில்லையா? தற்போது ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஊழியர் சங்கம் கோரும் ஊதிய உயர்வைக் கொடுக்க மறுப்பதற்கு அரசு கூறும் முக்கியமான காரணம், வங்கிகளின் வாராக்கடன் (npa). மறுசீரமைப்பு, (restrcturing) சொத்து மறுகட்டுமானம் (asset reconstruction) என்ற கணக்குப் பித்தலாட்டங்கள் மூலம் வாராக்கடனைக் குறைத்துக் காட்டினால்தான் ஊதிய உயர்வு தரமுடியும் என்று ஊழியர் சங்கங்களிடம் வங்கி நிர்வாகம் கூறும். ஊழியர் சங்கங்கள் இதனை எதிர்த்துப் போராடுமா, அல்லது ஊதிய உயர்வுக் கோரிக்கைக்காக இந்த மோசடிக்கு உடன்பட்டுப் போகுமா?
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________