privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஒரு லவுட் ஸ்பீக்கர் கல்லுளிமங்கனான கதை !

ஒரு லவுட் ஸ்பீக்கர் கல்லுளிமங்கனான கதை !

-

“நல்ல காலம் வரப் போகுது, நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடியால் நல்ல காலம் வரப் போகுது” என பா.ஜ.க.வும் அக்கட்சியின் கூலிப்படையாக வேலை செய்துவரும் ஊடகங்களும் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே குறி சொல்லி வந்தன. “பேச வாய் திறந்த பிள்ளை எப்பம்மா தாலியறுப்பே” என்று கேட்ட கதையாக அதிர்ச்சியூட்டும் விதத்தில் பிறந்திருக்கிறது அந்த நல்ல காலம். டீசல் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு – என அடுத்தடுத்து மக்களின் தலையில் இடியை இறக்கியிருக்கும் மோடியின் ‘நல்லாட்சியை’ வேறெப்படிக் கூற முடியும்?

காவி கல்லுளிமங்கன்

டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தைப் படிப்படியாக வெட்டி, அதன் விலையை சர்வதேச ‘தரத்திற்கு’ உயர்த்துவது என்ற அடிப்படையில்தான் டீசலின் விலையை மாதமொன்றுக்கு 50 காசு உயர்த்தும் முடிவை முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு எடுத்தது. அதே முடிவின்படிதான் மோடி அரசும், தான் பதவியேற்ற 35 நாட்களுக்குள்ளாக டீசல் விலையை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது.

கசப்பு மருந்துஇயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்கு – நான்கு டாலரிலிருந்து எட்டு டாலராக உயர்த்திக் கொள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும் முடிவை முந்தைய காங்கிரசு அரசு எடுத்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த முடிவை அமலுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை நடத்தியிருக்கிறது, மோடி அரசு.

காங்கிரசு கூட்டணி அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியபொழுது, “நாட்டு மக்கள் மீது பெரிய சுமை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் முடிந்த 24 மணி நேரத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதேயே இது காட்டுகிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பெரிய அவமதிப்பு ஆகும். மக்கள் ஒருபோதும் இதை மன்னிக்க மாட்டார்கள்” என நாக்கைச் சுழற்றி காங்கிரசை விளாசித்தள்ளினார் நரேந்திர மோடி. இப்பொழுது மோடி அரசு அதே காங்கிரசு பாணி கயவாளித்தனத்தோடு, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவும், நாடாளுமன்றத்துக்குத் தெரியாமலும் ரயில் கட்டண உயர்வுகளை அறிவித்திருக்கிறது. மேலும், முந்தைய காங்கிரசு அரசு எடுத்த முடிவின்படிதான் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக ஒரு தன்னிலை விளக்கத்தையும் அளித்திருக்கிறது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு அப்பால், வெங்காயம், உருளைக்கிழங்கு, சர்க்கரை உள்ளிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் தேர்தலுக்கு முந்தைய மாதங்களைக் காட்டிலும் அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயு உருளை மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியங்களையும் படிப்படியாக வெட்டி, அவற்றின் விலைகளையும் மாதந்தோறும் உயர்த்தவும் மோடி அரசு திட்டமிடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

முந்தைய காங்கிரசு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை மாற்றத் துடிக்கும் மோடி அரசு, முந்தைய காங்கிரசு கூட்டணி அரசால் உருவாக்கப்பட்டிருந்த அமைச்சரவைக் குழுக்கள் அனைத்தையும் கலைத்த மோடி அரசு, அதன் மக்கள் விரோதக் கொள்கைகளை மட்டும் காங்கிரசை விடத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபொழுது, அதனை மக்கள் விரோதச் செயல் எனக் கண்டித்த மோடி அண்ட் கம்பெனி இப்பொழுது கட்டண உயர்வுகளை நாட்டின் நலன் கருதிக் கொடுக்கப்படும் கசப்பு மருந்தாக நியாயப்படுத்துகிறது.

கொல்கத்தா ஆர்ப்பாட்டம்
ரயில் கட்டண உயர்வினைக் கண்டித்து கொல்கத்தா நகரில் நடந்த ஆர்ப்பாட்டம்.

நாட்டை மறுகாலனியாக்கிவரும் தனியார்மய-தாராளமயக் கொள்கையை மன்மோகன் சிங்கைக் காட்டிலும் தீவிரமாகவும் வெறித்தனமாகவும் மோடி அமல்படுத்துவார் என்பதை நாம் தொடர்ந்து கூறி வந்திருக்கிறோம். விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பறிமுதல் செய்யப்படும் நிலத்திற்குச் சற்றுக் கூடுதலாக நட்டஈடு வழங்கும்படியான சட்டத்தை முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கொண்டுவந்ததென்றால், கூடுதலாக நட்டஈடு வழங்கத் தேவையில்லை என நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயலுகிறது, மோடி அரசு. முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளை வாரிக் கொடுத்தது என்றால், மோடி அரசோ கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினர் மீது விதிக்கப்படும் வரிகளை ரத்துசெய்ய முயற்சிக்கிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது பின் தேதியிட்டு வரி விதிக்கும் சட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்றும் அறிவிக்கிறது.

மன்மோகன் சிங்கிற்கும் மோடிக்கும் இடையேயான வேறுபாடுகள் இவை போன்றவைதானேயொழிய, விலைவாசியைக் குறைக்கவும், ஊழலை ஒழிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மோடியின் கையில் ஏதோ மந்திரக்கோல் இருப்பதைப்போல கார்ப்பரேட் ஊடகங்களும், பார்ப்பன பாசிஸ்டுகளும் பில்ட்-அப் கொடுத்தவை அனைத்தும் வடிகட்டிய பொய்கள்.

இந்த உண்மை ஓரங்கட்டப்பட்டு, “மோடி காலையில் எட்டு மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிடுகிறார். அதிகாரிகளையும் வர வைத்திருக்கிறார். கேள்வி கேட்டு வேலை வாங்குகிறார். முதல் 100 நாட்களிலேயே சாதிக்க வேண்டியவை குறித்த திட்டமொன்றை வைத்திருக்கிறார். அமைச்சர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் சொத்துக் கணக்குகளைக் காட்ட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார்” என்றவாறான மோடியின் சில்லறைத்தனமான, விளம்பரம் தேடும் நடவடிக்கைகளையே முந்தைய ஆட்சியாளர்களுக்கும் மோடிக்கும் இடையிலான மாபெரும் வேறுபாடாக ஊடகங்களும் பார்ப்பன பாசிச கும்பலும் காட்டி வருகின்றன.

***

“விலைவாசியைக் குறைப்பேன்” என்று மட்டுமா மோடி சவடால் அடித்தார்? அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகத்திற்கு வந்தபோதெல்லாம் தமிழக மீனவர்களின் இரட்சகனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். மோடி பிரதமரானால் ராஜபக்சே வாலைச் சுருட்டிக் கொள்வார் எனத் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்கள்.

01-c-1இந்தச் சவடால்கள் அனைத்தும் மோடி பிரதமரான மறுநிமிடமே பல்லிளித்துவிட்டன. கடந்த ஒன்றரை மாதத்திற்குள்ளாக ஏறத்தாழ 200 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் 38-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி தனது பதவியேற்பு வைபவத்திற்கு ராஜபக்சேயை அழைத்தபொழுது, “நாம் இலங்கையைப் புறக்கணிப்பதாலோ ராஜபக்சேவுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதாலோ யாருக்கென்ன இலாபம்? இலங்கை மீது போர் தொடுக்கவா போகிறோம்? நமது மீனவர்களின் பிரச்சினையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அவர்களது உரிமையைப் பெறுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அதிபர் ராஜபக்சேவைப் புறக்கணிப்பதல்ல” எனத் தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்தி அறிக்கைவிட்டது பா.ஜ.க. இதைத்தானே காங்கிரசும் இத்தனை காலமாக கூறிவந்தது?

மன்மோகன் சிங் – எம்.கே.நாராயணன் – சிவசங்கர் மேனன் இருந்த இடத்தில் இப்பொழுது நரேந்திர மோடி – சுஷ்மா சுவராஜ் – அஜீத் தோவல் என்ற கூட்டணி உள்ளது. ஆட்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது ஒருபுறமிருக்க, இப்புதிய கூட்டணி பழைய கூட்டணியைக் காட்டிலும் தனிப்பட்ட விதத்திலும் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது.

மீனவர் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தீவிரமடைந்து வருவதைக் கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

உண்மை இவ்வாறிருக்க, பொங்கும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு டெல்லிக்குக் காவடி எடுக்கும் நாடகத்தை நடத்தினார் வைகோ. மோடியின் இயற்கையான கூட்டாளியான ஜெயா, ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு காரணம் தவறான ஆலோசனைதான் என்று அறிக்கைவிட்டார்.

அரசு அதிகாரிகள் சமூக வலைத் தளங்களில் இந்தியை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிக்கையை வெளியிட்டுவிட்டு, முந்தைய காங்கிரசு அரசுதான் முதலில் வெளியிட்டதாகக் கைகாட்டி வெட்கங்கெட்ட முறையில் தப்பித்துக் கொள்ள முனைகிறது, பா.ஜ.க. காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களிலோ காங்கிரசைப் போலவே பா.ஜ.க.வும் கபட வேடதாரி என்பது ஏற்கெனவே அம்பலமான உண்மை. இருந்தபோதிலும், மோடி வந்து விட்டால் அவர் கர்நாடக, கேரள அரசுகளைப் பணிய வைத்து விடுவார் என்பது போலச் சவடால் அடித்தார்களே, இந்த முழு மூடர்களுக்கு தங்களை ஒரு கட்சித் தலைவன் என்று அழைத்துக் கொள்ளும் தகுதி இருக்கிறதா?

தமிழகத்தில் நரேந்திர மோடியைச் சொக்கத் தங்கமாக அறிமுகப்படுத்தியவர்களுள் முதன்மையானவர் தமிழருவி மணியன். “இந்தியர் என்றுதான் மோடி பேசி வருகிறார். இந்து என்று அவர் பேசினால் நாங்கள் அவரது பக்கத்தில் இருக்க மாட்டோம்” எனச் சூளுரைத்து வந்தார், அவர். ஆனால், பா.ஜ.க.வோ தனது தேர்தல் அறிக்கையிலேயே, அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதையும்; காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்குவதையும்; பொது சிவில் சட்டம் கொண்டுவருவதையும் தனது திட்டங்களாக அறிவித்து, அவரின் மூக்கை மட்டுமில்லாமல், மோடியை வளர்ச்சியின் நாயகனாக நம்பிக் கொண்டிருந்தவர்களின் மூக்கையும் சேர்த்து உடைத்தது.

ராமர் கோவில் கட்டுவதற்கான தூண்கள், கதவுகளை வடிவமைக்கும் பணிகள் அயோத்தியில் நடந்துவந்ததை நிறுத்தி வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ்., மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்தவுடனேயே மீண்டும் அதனைத் தொடங்கிவிட்டது. “கோவில் கட்டுவதைவிட கக்கூஸ் கட்டுவதுதான் முக்கியமானது” எனச் சவடால் அடித்துவந்த மோடி அயோத்தியில் கக்கூசைத்தான் கட்டப்போகிறாரா? “அரசியல் சாசனப் பிரிவு 370 குறித்தும், பொது சிவில் சட்டம் குறித்தும் பொது விவாதத்திற்கு வரத் தயாரா?” எனக் கேட்டு முண்டா தட்டுகிறார்கள் மோடியின் அமைச்சர்கள்.

நீதித்துறை நியமனங்கள்
மோடி அரசு, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியத்தை (இடது) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மறுத்துள்ளதற்கும், முகுல் ரோத்தகியை அரசு தலைமை வழக்குரைஞராக நியமித்துள்ளதற்கும் பின்னணியில் அதன் இந்துத்துவா திட்டம் உள்ளது.

பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனாலோ, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் அளவிற்கு நாடாளுமன்ற பலம் பா.ஜ.க.விற்கு இல்லை என்பதனாலோ பார்ப்பன பாசிச அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமது இந்துத்துவா திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள மோடி கும்பல் எந்த எல்லைக்கும் செல்லக்கூடும் என்பதற்கு இப்பொழுதே சில அறிகுறிகள் கிடைத்துள்ளன.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் வழக்குரைஞராக இருந்தவருமான கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்ட நால்வரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மோடி அரசிடம் அளித்திருந்தது. இந்தப் பரிந்துரையில் கோபால் சுப்பிரமணியத்தைத் தவிர, மற்ற மூவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது, மோடி அரசு. குஜராத்தில் நடந்த சோராபுதீன், பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளில் உச்ச நீதிமன்ற நண்பனாக நியமிக்கப்பட்டிருந்த கோபால் சுப்பிரமணியம், இப்போலி மோதல் படுகொலையில் குஜராத் அரசு மற்றும் அதன் துணை உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் பங்கைப் பல்வேறு ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி, அவ்வழக்கில் அமித் ஷாவைக் குற்றவாளியாகச் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார். இதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் முகமாவே கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை நிராகரித்திருக்கிறது, மோடி அரசு.

அதே சமயம், தனது நோக்கத்தை மூடிமறைத்துக் கொள்வதற்காக, 2ஜி ஊழல் வழக்கில் அரசு சார்பில் வழக்காடி வந்த கோபால் சுப்பிரமணியம், சி.பி.ஐ. அதிகாரிகளைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்ததாக ஒரு வதந்தியை உளவுத்துறை மூலம் திட்டமிட்டே கசியவிட்டிருக்கிறது, மோடி அரசு. இதற்கு சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்த அவதூறைத் திட்டவட்டமாக மறுத்துள்ள கோபால் சுப்பிரமணியம், தனது பெயரை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினையில் மோடி அரசின் கயமைத்தனத்தை எதிர்த்து நிற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோபால் சுப்பிரமணியத்தைப் பழிதீர்த்துக் கொண்ட மோடி-அமித் ஷா கும்பல், குஜராத்தில் நடந்த போலி மோதல் கொலை வழக்குகளில் குஜராத் அரசு சார்பாக வாதாடி வந்த முகுல் ரோத்தகியை மைய அரசின் தலைமை வழக்குரைஞராக நியமித்திருக்கிறது. முகுல் ரோத்தகி 2ஜி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பாகவும், இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்தும் வழக்கில் ரிலையன்ஸ் சார்பாகவும், இத்தாலி நாட்டு கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்களைக் கொன்ற வழக்கில் இத்தாலியின் சார்பாகவும் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி - கசப்பு மருந்து

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, சோராபுதீன், பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளை விசாரித்துவரும் சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜே.டி.உத்பத், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சாக்குபோக்குச் சொல்லி தப்பித்து வந்ததைக் கண்டித்ததோடு, ஜூலை 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு வெளிவந்த மறுவாரமே நீதிபதி உத்பத் மர்மமான முறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

குஜராத்தில் நடந்துள்ள பல்வேறு போலி போலிமோதல் கொலைகளில் அமித் ஷாவிற்குப் பங்குண்டு என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மோடிக்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்ணை போலீசாரைக் கொண்டு உளவு பார்த்த விவகாரத்திலும் அமித் ஷாவிற்குப் பங்குண்டு. இப்படிபட்ட கிரிமினல் பின்னணி கொண்டவரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் வளர்ப்புப் பிராணியுமான அமித் ஷா-வை பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இவற்றையெல்லாம் மோடி-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி மேலெழுந்தவாரியாகச் செய்யவில்லை. இவை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பார்ப்பன பாசிசத் திட்டங்கள். மோடி அரசு அளிக்கும் கசப்பு மருந்துகளால் ஆத்திரம் கொள்ளும் மக்களின் வெறுப்பை, இந்து-முசுலீம் மோதலாக மடை மாற்றி விடுவதற்கும் இது பயன்படும்.

தேர்தலுக்கு முன்பாக மழைக்காலத் தவளையைப் போல நிறுத்தாமல் கத்திக் கொணடிருந்த மோடி, இப்பொழுது தனது அரசின் சர்ச்சைக்குரிய எந்த நடவடிக்கை குறித்தும் பேசமறுக்கிறார். மற்றவர்களும் பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். மன்மோகன் சிங்கை மவுனமோகன் சிங் என்று முன்னர் கேலி செய்த மோடி, மன்மோகனை விஞ்சும் விதத்தில் அதேபாணியில் காவி கல்லுளிமங்கனாக வலம் வருகிறார்.

மோடி பிரதமரானால், அவரது தலைமையின் கீழ் அமையும் அரசு மன்மோகன் சிங்கைவிடத் தீவிரமான ஏகாதிபத்தியங்களின் எடுபிடியாக, ராஜபக்சேயைப் பாதுகாப்பதில் காங்கிரசின் மறுஅவதாரமாக, ஆர்.எஸ்.எஸ். – இன் இந்துத்துவா திட்டங்களைப் பையப்பைய நகர்த்திச் செல்லும் தொண்டனாகத்தான் நடந்துகொள்ளும் என்பது எதிர்பாராத ஒன்றல்ல. இது எதிர்பாராதது என்று கூறுபவர்கள், அடிமுட்டாளாக இருக்க வேண்டும்; அல்லது தேர்ந்த பிழைப்புவாதிகளாக இருக்க வேண்டும்.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________