privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஏழாம் ஆண்டில் வினவு !

-

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.” – குறள் (647)

2008-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் வினவு தளம் ஒரு தனிநபர் வலைப்பூவாய் துவங்கியது. ஆறாண்டுகளுக்கு பிறகு அந்த பூச்செடி ஒரு பெரும் கூட்டுறவு பூந்தோட்ட பண்ணையாக வளர்ந்து பூத்துக் குலுங்குகிறது. துவங்கிய நாளின் முந்தைய நாள் மாலை என்ன பெயர் வைக்கலாம் என்று சில தோழர்கள் ஆளுக்கொரு தமிழ் இலக்கிய நூல்களை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த குறளை விவாதித்தது நினைவுக்கு வருகிறது. இன்று ஏழாம் ஆண்டு துவக்கத்தில் அந்தக் குறளின் பொருளை இன்னும் விரிவாக விளங்கிக் கொண்டோம் என்று சொல்லலாமா?

டி.பி.ஐ முற்றுகை
சென்னை பள்ளிக் கல்வி இயக்குனரகம், புமாஇமு முற்றுகையில் ஒரு இளம் தோழர்.

தான் கண்டடைந்த முடிவுகளை எதிரியும் ஏற்கும் வண்ணம் அஞ்சாமல் பேராற்றலுடன் எடுத்துரைப்பவனை எவராலும் வெல்ல முடியாது என்பது இந்தக் குறளின் பொருள்.

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளை எமது தோழர்கள் பேருந்து, ரயில்களில் தனியாக நின்று கொண்டு பிரச்சாரம் செய்து விற்பனை செய்யும் போது மக்கள் வரவேற்பதோ, இல்லை ஒரு பிரமிப்புடன் பார்ப்பதோ இந்தக் குறளுக்கு பொருந்தி வரும் என்றார் ஒரு தோழர். உண்மைதான்.

இதழ் விற்பனைக்கு போகும் தோழர்கள் ஓரிருவர் கொண்ட அணியாக தனியாகத்தான் போகின்றனர். வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. அதிமுக, ஆர்.எஸ்.எஸ் அடாவடி துவங்கி பல்வேறு அரசியல் கருத்து மாறுபாடுகள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் எமது பத்திரிகைகளை போராடி விற்பது ஒரு சவால். ஒருக்கால் சண்டை சச்சரவு வரும் போது கூடியிருக்கும் மக்களின் துணை கொண்டே அதை எதிர் கொள்ள வேண்டும். ஃபோனைப் போட்டு ஆளனுப்பு எனும் ‘பாதுகாப்பு’ நடைமுறைகளெல்லாம் இங்கே கிடையாது. அல்லது சாத்தியமில்லை சரியுமில்லை. அநேகமாக எல்லா தோழர்களும் இந்த எதிர் நீச்சலில் போராடி பயிற்சி பெறுவர். குறிப்பிட்ட காலத்தில் மறுகரையை அடையும் ஆற்றல் பெறும் போது அவரால் ஏனைய பணிகள் எதையும் முனைப்புடனும், போராட்ட உறுதியுடனும் செய்ய முடியும்.

எதிரெதிர் அரசியல் கருத்துக்களால் சூழப்பட்ட மக்களிடையே நீந்துவது ஒரு கலை. குறிப்பிட்ட காலத்தில் தனியாக நீந்தும் ஒருவர், தோழமைக் கரங்கள் பலவற்றை பெறும் போது மட்டுமே அந்த நீச்சல், சமூகத்தின் உயிர் காக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை பெறுகிறது. சிலர் இப்படிக் கருதிக் கொள்கிறார்கள் “உங்களுக்கு இருபெரும் பத்திரிகைகள் இருக்கின்றன, தமிழகம் முழுவதும் வரவேற்பு பெற்ற கலைக்குழு உள்ளது, பிரபலமான இணைய தளமெல்லாம் வைத்திருக்கையில் பிரச்சாரம் சுலபம்தானே?”.

ஆனால் இவையெல்லாம் ஏதோ எங்களுக்கு மட்டும் ‘இறைவன்’ அருளியதா என்ன? அல்லது எங்களது முன்னோர்கள் இதற்கான ஏற்பாடுகளை உயில் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்களா? அவ்வளவு வசதியா எங்களுக்கிருக்கிறது?

ரசியப் புரட்சியோ, சீனப்புரட்சியோ இல்லை நக்சல்பாரி எழுச்சியோ நால்வகைப் படைகளுடன், நால்வகை ஜனநாயகத் தூண்களின் ஏற்பாட்டுடன் நடக்கவில்லை. சரியாகச் சொன்னால் பூஜ்ஜியத்திலிருந்தே எதிர்ப்பை ஆரம்பித்தன. அதுதான் விதிக்கப்பட்ட யதார்த்தம். அந்த விதியை உடைத்து பூஜ்ஜியத்தின் முன் மக்களை அணிசேர்த்து எண்ணிக்கையில் விரிந்து ஆரம்பத்தில் படிப்படியாகவும் இடையில் சீறியும் இறுதியில் புரட்சி எனும் அதிகாரம் பறிக்கப்படுகிறது. நிலையான இராணுவத்தை நிலைகுலைய வைக்கவே கொரில்லா யுத்தம். ஆளும் வர்க்க ஊடகங்களை எதிர் கொள்ள துண்டுப் பிரசுரம். கலை விற்பன்னர்களின் வலையிலிருந்து மக்களை மீட்க தெருவோரத்தில் பறை. கார்ப்பரேட் தொலைக்காட்சிகளின் கருத்துருவாக்கத்தை கட்டுடைக்க மக்களிடையே நேரடியாக விற்கப்படும் பத்திரிகைகள். இணையத்தில் வினவு.

appleநவீன ஆர்க்கெஸ்ட்ராவுடன், முதல் வரிசைக் கலைஞர்களுடன், ஆஸ்கார் விருது வாங்கிய ஒரு இசையமைப்பாளரின் ‘வந்தே மாதரத்தை’ எதிர் கொள்ள என்ன செய்வது? ஆதிக்க சாதிகளின் ஊரில் கூட்ட அழைப்பிற்கும், மரண அறிவித்தலுக்கும் தண்டோரா போடும் சேரிமகனின் பறையே போதும்! இனி அது அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் மக்களின் பறை. “வெட்டரிவாளை எடடா, ரத்தம் கொதிக்குதடா, இந்த சட்டமும் சர்க்காரும் தடுத்தால் வெட்டி எறிந்திடடா” என்ற பாடலை கூடியிருக்கும் மக்களிடையே போர்க்குணத்துடன் பாடும் போது எதிர்கால சமூகப் பேரிசையின் நாதத்தை சிறு துளியாவது உணர்த்த முடியாதா என்ன?

ஒரு கம்யூனைப் போன்று எளிய முறையில் கூட்டு வாழ்க்கை வாழும் எமது கலைக்குழுத் தோழர்கள் இப்படித்தான் தமிழகமெங்கும் புரட்சியின் இசையை வெறும் பறையால் பாடி வருகின்றனர். தோழர்களோ, தொடர்புகளோ இல்லாத கிராமங்கள் பலவற்றுக்கும் அவர்கள் செல்கிறார்கள். கையிலிருக்கும் பறை, நெஞ்சிலிருக்கும் கோபத்தை அரசியல் பார்வையுடன் பாடுகிறார்கள், பேசுகிறார்கள். அதுவே அறியாத ஊர்களில் தொடர்புகளை தருகின்றது. தங்குமிடம், உணவு கொடுத்து மக்கள் ஆதரிக்கிறார்கள்.

கன்னியாகுமரி கடலோர கிராமங்களா, ஆர்.எஸ்.எஸ் அச்சுறுத்தும் நாகர்கோவில் பேருந்து நிலையமா, வைகுண்டராஜன் அடியாட்படை நிரம்பிய தூத்துக்குடி மணற்திட்டு கிராமங்களா, ஆதிக்க சாதிவெறி ஆத்திரத்துடன் காத்திருக்கும் ஊர்களா, இல்லை கருத்துரிமைக்கு சமாதி கட்டிவிட்டு அடக்குமுறையுடன் ஆட்டம் போடும் கோவை, தருமபுரி மாவட்டங்களா அனைத்திலும் எண்ணிறந்த தோழர்கள் தங்கி எப்போதும் பிரச்சாரம் செய்கின்றனர்.

அடிதடி, கைது, சிறை இல்லாமல் இந்த போராட்டம் சாத்தியமில்லை. வினவில் ஆண்டு விழாவிற்காக எழுதும் இந்நேரம் மதுரைச் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் தோழர் ஒருவர் காலையில் அளிக்கப்படும் பருப்பில்லா சுத்தமான வெண் பொங்கலை அருந்தி முடித்திருப்பார். வர்க்கப் போராட்டத்தின் உறுதி சிறையிலும் தொடர்கிறது. கரூரிலே ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த ரவுடி கும்பலை எதிர்த்து போராடியதில் தோழர் செல்வராசு உயிரிழந்தார். தஞ்சையிலே சாராய ரவுடியை எதிர்த்து நின்றமைக்காக ஒரு தோழர் உயிரிழந்திருக்கிறார். இன்னும் பல தோழர்கள் அப்படி தியாகம் செய்தும், வாழ்க்கையை இழந்தும் இந்த போராட்டப்பாதையை செந்நீரால் கழுவிக் கொண்டே இருக்கிறார்கள். புரட்சி நிறைவேறும் வரை இது முடிவற்ற பயணம். தொடர் தியாகங்களை கேட்கும் பலிதானம்.

தாது மணல் கொள்ளை
தாது மணல் கொள்ளைக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் மற்றுமொரு இளம் தோழர்.

கடந்த வெள்ளிக்கிழமைதான் கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் ஒரு மாணவனின் மர்மமான மரணத்தை தட்டிக் கேட்ட ‘குற்றத்திற்காக’ காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலென்ன்? இறந்து போன அந்த மாணவனுக்கு நீதி கேட்டு சிறையிலும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சிறையில் வேறு போராட்ட முறைகள் சாத்தியமில்லை.

ஒரு போலீசின் அடாவடியை எதிர்த்த ‘குற்றத்திற்காக’ சென்னை புமாஇமு-வின் இளந் தோழர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். ஜேப்பியார் கல்லூரியில் சங்கம் கட்டி தொழிலாளிகளின் சுயமரியாதைக்காக போராடிய தோழர் வெற்றிவேல் செழியன் வழக்கு போட்டு எதிர்த்தமைக்காக சிறை செல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் பல தோழர்கள் அப்படி நடைமுறை போராட்டத்திற்காக வருடத்தின் சில நாட்களையாவது கம்பிகளுக்கு பின்னே கழிக்க வேண்டியிருக்கிறது. ஆண்டுகள் பலவானாலும் வழக்குகளுக்காக வாய்தாவின் பெயரில் அலைக்கழிய வேண்டியிருக்கிறது.

அரசியல் வாழ்வில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் இதன் பாதிப்பை எதிர் கொள்ள வேண்டும். வேலையிழப்பு, பொருளாதார பிரச்சினைகள், குடும்பத்தினர் எதிர்ப்பு அனைத்தும் ஒரு சேர படையெடுக்கும். எனினும் உழைக்கும் வர்க்கத்தின் இழப்பிற்கு அஞ்சா உறுதியுடன் தோழர்கள் அதை சந்தித்து வெல்கிறார்கள்.

இந்த போராட்டத்தை எப்படி வெல்வது என்பது ஒரு தேர்ந்த உயர்கல்வி படிப்பின் தெளிவான பாடத்திட்டம் போன்றதல்ல. ஆராய்ச்சி மாணவர்களுக்கு முதலாளித்துவ கல்வியின் தேர்ச்சியுடன் வழிகாட்ட முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் இருக்கிறார்கள். மனித குலம் சேகரித்து பாதுகாக்கும் துறைசார் அறிவுத்துறையின் பிரம்மாண்ட நூலகம் அவர்களுக்கிருக்கிறது. அவர்களை முனைப்புடன் இயங்க வைக்க எதிர்கால கார்ப்பரேட் கனவு இல்ல வாழ்க்கை காத்திருக்கிறது.

எங்களுக்கோ மார்க்சியத்தை கற்றுக்கொடுத்து, மக்களிடையே நீந்த பயிற்சி அளித்து வழிகாட்டவும், எப்போதும் துணையோடும் தோழமையோடும் போராட்ட வலியை பகிர்ந்து கொள்ளவும், மருந்து போடவும், தவறுகளை திருத்துவதற்கும் அனுபவமிக்க தோழர்கள் இருக்கிறார்கள், மார்க்சிய லெனினிய தத்துவத்தில் புடம்போடப்பட்ட புரட்சிகர அமைப்பு இருக்கிறது. எனினும் இங்கே இழப்புக்களை எதிர் கொண்டு தொடர்ந்து சாகும் வரை ஒரு கம்யூனிஸ்ட்டாக நீடிப்பது என்பதற்கு ஒரு தனிமனிதனாகவும் இறுதிவரை போரட வேண்டியிருக்கிறது. அது ஒவ்வொரு தோழரும் தனது புரட்சிப் பயணம் குறித்து எழுதிக் கடக்கும் ஒரு கவிதை போலவும் சொல்லலாம். கலைகளில் இசை சூக்குமமானது என்றால் புரட்சியின் இசையோ சூக்குமங்களின் தலைவன்.

சென்னை சேத்துப்பட்டில் ஒரு தோழர், அங்கே ஆதிக்கம் செய்து தற்போது அடங்கியிருக்கும் ரவுடி தங்கையாவை எதிர் கொண்டு போராடிய வழக்கின் வாய்தாவிற்காக பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்று வருகிறார். வாய்தாவுக்காக விடுப்பு எடுத்தாக வேண்டும். அமைப்பு வேலைகளுக்காகவும் அவ்வப்போது விடுப்பு எடுத்தாக வேண்டும். இதற்காக அவரை பணியலமர்த்தியிருக்கும் முதலாளியோடு வரும் பிரச்சினையை எப்படி எதிர் கொள்வது?

மாவோ
குழந்தைகளுடன் மாவோ

ஒரு தோழர் எலக்ட்ரிசியனாக மாத வேலை பார்த்தவர், வேலைகளுக்காக விடுமுறை போடவேண்டி வருகிறது என்று அதைத் துறந்து தினக்கூலியாக சென்று வருகிறார். இயக்க வேலைகள் வந்தால் வேலைக்கு விடுமுறை. வருமானத்திற்கும் விடுமுறை. வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் பணியாற்றும் ஒருதோழர் சுமை தூக்கும் தொழிலாளி. அமைப்பு வேலைகளுக்காக ஒரு ஷிப்ட்டு தூக்கியவர், விடுமுறை எடுத்து கொண்டு இயக்க பணியாற்ற வேண்டும் என்பதற்காக சமயத்தில் இரண்டு ஷிப்ட்டுகளும் தூக்குகிறார். தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் பணியாற்றும் தோழர் ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. அவரது குடும்பம்தான் லாவணிக் கலைஞர் டேப் காதரை பராமரித்து வருகிறது.

அதே நேரம், போராட்டப் பாதையிலே சோர்வுற்று தளர்வுற்று விலகலாமா என்று விரக்தியுறும் தருணங்கள் கண்டிப்பாக வரும். ஒரு வகையில் நாங்களெல்லாம் “வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் வந்த சாவுக்கிராக்கிகள்”தான். ‘தலையில் நாங்களே தண்ணீர் தெளித்துக் கொண்டவர்கள்தான்’. அப்படி ஒரு சிலர் தடுக்கி விழும் போதெல்லாம் கம்யூனிசத்தை கட்டோடு சொந்த லாபம் கருதி வெறுக்கும் இரவல் சிந்தனை அறிஞர் பெருமக்கள் பேருவுகை கொள்கிறார்கள். “நான் அப்பவே சொன்னேன், கேட்டாயா?” என்று ஓடி வருகிறார்கள். எதற்கு? தூக்கிவிடுவதற்கா? இல்லை துரத்தி விடுவதற்கா?

இங்கே தூக்கிவிடுதல் தன்னிலிருக்கும் காரியவாதத்தினை பரப்புவதும், துரத்திவிடுதல் போராடும் சக்திகளின் உயிர்த்துடிப்பை அணைப்பதுமாய் வினையாற்றுகிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் தமது தியாகத்தை கணக்கில் கொள்ளாதது போலவே, தோல்விகளையும் அவை எண்ணிக்கையில் அதிகமிருந்தாலும் கண்டு துவண்டு விடுவதில்லை. விழுந்து கீழே பார்க்கும் போது சுயநலம் காத்திருந்து பழிவாங்குவது போலவே சற்று முயற்சி செய்து கடினமாக இருந்தாலும் கொஞ்சம் மேலே பார்த்தால் தோள் கொடுக்க வரும் தோழமைக் கரங்களைப் பற்றி காயத்தை வடியச் செய்து பயணத்தை தொடரலாம், தொடர்கிறோம். இதற்கு மேல் சூக்குமமான புரட்சியின் பெருங்கவிதையை, மனித குலத்தின் மாபெரும் சிம்பொனி இசையை எப்படி விளக்குவது? தெரியவில்லை.

லெனின்
விவசாயிகளுடன் லெனின்

சொலல்வல்லனுக்கு சோர்வு கிடையாது. சொல் வல்லாண்மை இழக்கும் போது காத்திருக்கும் சோர்வு முதலை வாயாய் இறுக்கமாக கவ்விக் கொள்கிறது. ஆனால் சொல் வலிமை என்பதே இத்தகைய போராட்டத்தினூடாகவே பிறக்கிறதே அன்றி அது குறிப்பிட்ட காலத்தில் பட்டப்படிப்பு முடித்து பெறும் சான்றிதழ் அல்ல. ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது போலவே இறந்தும் கொண்டிருக்கிறான் என்றால் அது உயிரியல் இயக்கத்தின் இயங்கியலை விளக்குவது போலவே கம்யூனிஸ்டு என்ற பதமே எதிர்மறையான புறநிலையை எதிர்கொண்டு அகநிலையை செதுக்கும் ஒரு போராட்டக் கலை. அந்தக் கலையின் விளைவே புரட்சி.

இது நடப்பு நுகர்வு கலாச்சார வாழ்வில் தன்னை பறிகொடுத்த மனங்களுக்கு, ஏதோ வாழ்க்கையில் ஏராளமானவற்றை இழந்து விடுவோமோ என்றொரு பதற்றத்தை தோற்றுவிக்கலாம். இல்லை, இதுதான் இந்த உலகிலேயே மாபெரும் மகிழ்ச்சிக்குரியது. அதனால்தான் “போராட்டமே மகிழ்ச்சி” என்றார் பேராசான் மார்க்ஸ். ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்து பார்க்காத வரை இந்த பெரு மகிழ்ச்சியின் சிறு துளியைக் கூட வேறு எவரும் பருகிவிட முடியாது. இதை ஒரு மதவாதியின் மூடுண்ட, கற்பிக்கப்பட்ட நம்பிக்கையின் மகிழ்ச்சியாகவோ அல்லது ஒரு ஆன்மீகவாதியின் புறத்தை மறுக்கும் சுயத்தின் கற்பிக்கப்பட்ட யோகநிலையாகவோ புரிந்து கொள்ளக் கூடாது. கம்யூனிஸ்டின் மகிழ்ச்சி தன்னை தீர்மானித்து இயக்கும் சமூகத்தை புரிந்து கொண்டு சமூக மனிதனில் தன்னைக் காணும் தனிமனிதனின் பண்பட்ட நிலையோடு தொடர்புடையது. அதன் உணர்ச்சி புரட்சியின் பாதையால் பெருகுகிறது. அதன் உறவை சுட்டும் சொல் தோழமை.

அந்த புரட்சியின் பாதையில் தோழர்களை சேர்ப்பதற்கே நாங்கள் பாடுபடுகிறோம். அவர்களை சூழ்ந்து கொண்டிருக்கும் ஆளும் வர்க்க அமைப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறோம். அதில் எங்கும் எப்போதும் சொல்லிலும் செயலிலும் சமரசம் செய்துகொள்வதில்லை. அதே நேரம் அதை மக்கள் ஏற்க வேண்டுமென்பதையும் மறப்பதில்லை. இரண்டும் வேறு வேறு அல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு நகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் “ஆயுதந் தாங்கிய புரட்சியின் மூலம் இந்த அரசமைப்பு தூக்கி எறியப்படவேண்டும்” என்று பேசியதால் தோழர்கள் மருதையன், காலஞ்சென்ற தோழர் சீனிவாசன் உள்ளிட்டு சில தோழர்கள் மீது தேசத் துரோக சட்டப்பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டது. தோழர்கள் வாய்தா வாய்தாவாக சென்று கொண்டிருந்தனர். “இந்த சமூக அமைப்பை மாற்றி மக்களின் ஆயுதந் தாங்கிய புரட்சி மூலமே அரசு அதிகாரத்தை கைப்பற்ற முடியும்” என்பது கம்யூனிஸ்டுகளின் பாலபாடம். ‘அப்படி பேசவில்லை என்று நீதிமன்றத்தில் கூறுங்கள்’ என்றார் நமது தோழர்களின் வழக்கறிஞர். இவ்வளவுக்கும் அவர் பொதுவுடமை சார்ந்த, இன்றும் ஆதரிக்கும் ஒரு முன்னுதாரணமான சமூகநேயமிக்க வழக்கறிஞர்தான். அப்படி பேசியிருந்தால் வழக்கு விரைவில் முடிந்திருக்கும்தான். ஆனால் அது சரியா? இல்லையென்றால் வேறு வழி? கண் முன்னே உங்களது இளமை, வாழ்வில் துணையேற்று உடன் வரும் துணைவி, கால்களை பாசத்துடன் கட்டிப்பிடிக்கும் மகள்…. என்ன செய்வீர்கள்?

டி.பி.ஐ முற்றுகை
பள்ளிக் கல்வி இயக்குனரக முற்றுகை புமாஇமு போராட்டத்தில் போலீசால் இழுக்கப்படும் தோழர்.

எனினும் தோழர்கள் வழக்கறிஞரிடம் சற்று தயக்கத்துடன், ”அப்படி பேச முடியாது, இது எங்களது அடிப்படைக் கொள்கை, அந்த அடிப்படையிலேயே வழக்கை எதிர்கொள்வோம், வேறு வழியில்லை” என்றார்கள். சட்டத்தை ஆழமாக அறிந்த அந்த வழக்கறிஞர் தோழரும், அதை ஏற்றுக் கொண்டார். காரணம் அந்த விழுமியத்தின் உண்மையை வலிமையை அவரும் அறிந்தவர்தானே! அதே நேரம் தோழர்களை விடுவிக்கவும் வேண்டும். இப்போது சொல் வன்மை தோழர்களிடமிருந்து வழக்கறிஞர் தோழரிடமும் சென்றது.

“துப்பாக்கி குழாயிலிருந்து அதிகாரம் பிறக்கிறது” என்று சொன்ன மாவோ மற்றும் “ஆளும் வர்க்க அரசை தூக்கி எறிய வேண்டும்” என்று சொன்ன மார்க்சிய ஆசான்களின் நூல்கள் இந்த நாட்டில் தடை செய்யப்படாத போது அந்த கொள்கைகளை பேசுவது மட்டும் எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார் வழக்கறிஞர். பிறகென்ன சட்டம் தடுமாறி வேறு வழியின்றி தோழர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதே நேரம் இந்த பேச்சு செயலுக்கு வரும் போது வழக்கு போடவேண்டிய தேவை அரசுக்கு இருக்காது.

அதே போல கருவறை நுழைவு போராட்டத்தில் திருவரங்கம் அரங்கநாதனை தொட்டு எழுப்பிய தோழர்கள் மீதும் சில ஆண்டுகள் வழக்கு நடைபெற்றது. சட்டப்படி கருவறையில் மற்றவர் நுழைவது குற்றமே. இதை பேசியிருந்தால் கூட, கருத்துரிமை என்று வாதிடலாம். மாறாக நடைமுறையில் சட்டமே மீறப்பட்டுவிட்டது. என்றாலும் நீதிமன்ற மேடைகளில் தோழர்கள் அனைவரும், “நுழைவது குற்றம் என்றால் அதை மகிழ்ச்சியுடன் செய்தோம்” என்றே முழங்கினார்கள். தண்டனை நிச்சயம் என்றாலும் இறுதித் தீர்ப்பு வரும் ஒரு மாதத்திற்கு முன்னே திருச்சி மாவட்டம் முழுவதும் தோழர்கள் பிரச்சாரத் தீயை பரப்பினர்.

இந்த சமூக சூழலை நீதிமன்ற நீதியரசர்களும் கவனித்துத்தானே ஆக வேண்டும். உச்சநீதிமன்றம் போல சு சாமிகள் செல்வாக்கு செலுத்த இது ஒன்றும் புதுதில்லியல்லவே. பெரியாரின் சுயமரியாதை மண்ணில் நடக்கும் போராட்டம். இறுதியில் நீதிமன்றம் என்னன்னவோ விளக்கம் கொடுத்து தோழர்களை விடுதலை செய்தது. என்றாலும் சட்டமும், நீதிமன்றமும் ஒரு சில தருணங்கள் தவிர்த்துப் பார்த்தால் நம்மை தண்டிக்கவே காத்து நிற்கும். அதன் வெளிப்பாடுதான் இங்கே எமது தோழர்கள் சிறையில் இருப்பது போலவே இந்தியாவெங்கும் ஒடுக்கப்படும் மக்களும் போராடும் இயக்கங்களின் போராளிகளும் சிறைகளில் முடக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதே நீதிமன்றங்களை வரம்பிற்குட்பட்டாவது மக்கள் போராட்டத்தால் நிர்ப்பந்திக்கவும் முடியும். உங்களுக்கு தேவை சொல் வன்மையும், சோர்வின்மையும்.

வர்க்க போராட்டம்இளவரசன் மரணத்தின் போது, “ஏனய்யா பாமகவை குறிப்பாக அடையாளம் காட்ட பயப்படுகிறீர்கள்” என்று கேட்ட போது “எப்படியும் இளவரசனை நீங்களும் காப்பாற்ற முடியவில்லையே, அதற்கு குற்ற உணர்வு கொள்ளுங்கள்” என்று ஒரு அறிஞர் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு குற்றத்தை எம்மிடம் திருப்பினார். அதாவது இளவரசனுக்கு 24 x7 தனியார் பாதுகாப்போ இல்லை இயக்கங்களின் பாதுகாப்போ கொடுத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமாம். எனில் ஈழத்தின் சிங்களப்படையிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாம் ஒரு தமிழ்ப்படையை அனுப்ப வேண்டும். பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவதற்கு உலகப்படையை அனுப்ப வேண்டும் என்றாகிறது.

அப்படி ஒரு நிலைமை இல்லாத போது, சாத்தியமில்லாத போது என்ன செய்வது என்று முடங்குவதை விட என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்திருக்க வேண்டும் என்பதல்லவா முக்கியம். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தியாவெங்கும் சிறுமான்மையாகத்தான் வாழ்கிறார்கள். பெரும்பான்மை ஆதிக்கசாதி மக்களிடம் தொடர் போராட்டம் நடத்தாமல் நீங்கள் என்னதான் செக்யூரிட்டி போட்டாலும் அது சாத்தியமில்லை. உழைக்கும் வன்னியர்களிடமிருந்து பாமவை, வன்னியர் சங்கத்தை பிரிக்கும் வேலை முழுமையடைந்தால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு பாதுகாப்பு. அதை விடுத்து பாமக என்றால் பயம் பயம் என்று ஓடினால் அதுதான் தலித் மக்களுக்கு ஆபத்து.

தமிழகத்திலேயே ஆதிக்க சாதிவெறி கோலேச்சும் ஊர்களில், மாவட்டங்களில் அதை நேருக்கு நேர் எதிர் கொண்டு பிரச்சாரம் செய்வது எங்களது தோழர்கள் மட்டும்தான். அப்படித்தான் இளவரசன் பிரச்சினையில் வட தமிழகம் முழுவதும் வன்னிய மக்கள் வாழும் ஊர்களில் தோழர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இங்கும் தேன்தடவிய பழத்தை விழுங்கும் நயமாக இது நடக்கவில்லை. பல இடங்களில் மூர்க்கமான கருத்து மோதல். ஆதரவாக இருந்தவர்களில் ஒரு சிலர் கூட கோவித்துக் கொண்டு அமைதியானார்கள். சில இடங்களில் தோழர்களை தாக்க வன்னியர் சங்கம் திட்டம் போட்டது. இறுதியில் எது வென்றது?

பல ஊர்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் வன்னிய மக்களே குறிப்பிட்ட அளவில் கலந்து கொண்டார்கள். இறுதியில் எந்த சாதி மறுப்பு மணத்திற்காக தலித் மக்களின் ஊர்களை எரித்தார்களோ அதே தருமபுரியில் அதே சாதிகளைக் கொண்டு ஊரறிய திருமணத்தை நடத்தி கொண்டாடவில்லையா? பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, பாதுகாப்பான முறைகளில், பாதுகாப்பான வார்த்தைகளில் அரசியல் பேசும் நண்பர்கள் தமது சுயகவுரவத்தை களைந்துவிட்டு இதை பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

‘இந்த உலகை ஒரு சதவீதம் கொண்ட மனிதர்கள்தான் வழிநடத்த வேண்டும்’ என்று முதலாளித்துவ உலகம் சொல்கிறது. ‘அந்த ஒரு சதவீத எண்ணிக்கையைக் கொண்ட அறிஞர்களின் உள்ளொளி சிந்தனை திறத்தால்தான் இந்த உலகம் புரட்டிப் போடப்படுகிறது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். அமெரிக்காவில் “நாங்கள்தான் 99%, 1% நபர்களுக்கான முதலாளித்துவ உலகை தகர்ப்போம்” என்று வால்வீதி போராட்டத்தில் மக்கள் முழங்கினார்கள். இங்கோ “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” என்ற முழக்கத்தைக் கொண்ட மகஇகவில் செருப்பு தைக்கும் தொழிலாளி, சுமை தூக்கும் தொழிலாளி, தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள் அன்றாடம் வீதிகள் தோறும் முழங்கியோ பாடியோ, பேசியோ வருகின்றனர்.

மார்க்ஸ் - எங்கெல்ஸ்ஜெயமோகனது உலகில் கோவை வட்டார கொங்கு தமிழ் கௌரவ சீமான்களும், என்ஆர்ஐ அம்பி கனவான்களும் கொலுப்பொம்மைகளாய் மணம் வீச, இங்கோ அடித்தட்டு மக்களும், தொழிலாளிகளும் நாற்றமெடுக்கும் இந்த சமூக அமைப்பை புதைக்க வேண்டுமென்ற தீரத்துடன் வேர்க்க விறுவிறுக்க, காயம் பரபரக்க துடிக்கின்றனர். ஆனால் இந்த தோழர்களைத்தான் அவர் சீனாவில் காசுபெற்று இயங்கிவரும் கூலிப்படை என்று எழுதி சுய இன்பம் அடைந்து கொள்கிறார். இதை அவருக்கு ஒரு உயர் போலீசு அதிகாரி கூறினாராம். ஆதாரமாய் சீனத்தலைவருடன் மோடி கைகுலுக்கும் புகைப்படத்தையும் கூறலாம்.

மோடி வருகை குறித்து நாங்கள் நடத்திய கூட்டங்கள் முதல் இணைய பிரச்சாரம் வரை பெரும்பான்மையாக கலந்து கொண்ட மக்கள் திரளில் “இந்துக்கள்தான்” அதிகம். இணையத்தில் நாங்கள் கோரிய மோடி எதிர்ப்பு பிரச்சார இயக்கத்திற்கு அதிகம் நன்கொடை வழங்கியவர்களிலும் “இந்துக்களே” அதிகம். இதை இசுலாமிய மதவாதத்தில் சிக்கியிருக்கும் அப்பாவிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

எனினும் டிஎன்டிஜே காமடி டைம் கட்டுரை மூலமாக பல இசுலாமிய நண்பர்கள் உணர்வுப்பூர்வமாகவும், அரசியல் ரீதியிலும் எம்மை ஆதரித்தார்கள். அதை தனியே விரிவாக எழுதுகிறோம். இவர்கள் அனைவரும் ஏதோ நாங்கள் இந்துமதவெறியை எதிர்க்கிறோம் என்பதால் மட்டும் ஆதரிக்கவில்லை. ஒருவேளை அது துவக்கமாக இருக்கலாம். முக்கியமாக முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே என்று பாரிய அளவில் வினவு கட்டுரைகளை படித்து முடிவெடுத்திருக்கிறார்கள். வளைகுடாவில் பணியாற்றும் நண்பர்கள் சிலர் விரைவில் தமிழகம் வந்து எம்முடன் களப்பணியாற்றுகிறோம் என்றே உணர்வு பொங்க உறுதி கூறியிருக்கிறார்கள். இந்த ஏழாம் ஆண்டில் இதை விட மகிழ்ச்சிக்குறியது எது? வினவு படிக்க கூடாது என்று என்னதான் டிஎன்டிஜே உத்திரவு போட்டாலும் அது நிறைவேறாது. மக்கள் விடுதலையையும், மார்க்சியத்தையும் எந்த பிற்போக்கு சக்தியும் வெல்ல முடியாது. இது உணர்வும் உணர்ச்சியும் கலந்த மாபெரும் சமூக அறிவியல்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
– குறள் 645

இந்த சொல்லை வெல்ல வேறு சொல் இல்லை என்பதால் அதை நாங்கள் மார்க்சியம் என்கிறோம். போராட்டமாய் தொடர்கிறோம். வினவாய் உங்களை சந்திக்கிறோம்.

இது வினவின் ஏழாம் ஆண்டு. வாருங்கள் கரம் கோர்ப்போம்!

நன்கொடை தாருங்கள்

வாசகர்கள், பதிவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்!