privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !

கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !

-

கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !

பாகம் 1 – நெஞ்சை உருக்கும் சுரங்க வாழ்க்கை!

வினவின் நேரடிக் கள ஆய்வுக்காக பெங்களூருவுக்கு அருகில் இருக்கும் கோலார் தங்க வயலைத் தெரிவு செய்திருந்தோம். கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நிர்வாகத்தின் நரித் தனத்தினாலும், தொழிற்சங்கங்களின் துரோகத்தனத்தினாலும், அரசின் வஞ்சகமான பொருளாதாரக் கொள்கைகளாலும் மூடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கம் தான் அந்நகரத்தின் ஒட்டு மொத்த அடித்தளமும் ஆன்மாவுமாகும்.

இறந்து போன அந்த நகரத்தின் மாந்தர்களுக்கு நம்மிடம் சொல்ல ஓராயிரம் கதைகள் உள்ளன. தங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றி, தங்கள் வஞ்சிக்கப்பட்டது பற்றி, நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட துரோகத்தனங்கள் பற்றி.. இன்னும் இன்னும் ஏராளமான கதைகள் உள்ளன அவர்களிடம். உண்மையில் அக்கதைகள் நமக்கு தேவை தானா?

ஆம், மிக அவசியமான தேவை. ஏனெனில், கோலார் தங்க வயல் இறந்து போன நகரம் என்று சொல்வதை விட ஈரக் குலையறுத்து துள்ளத் துடிக்க கொல்லப்பட்ட நகரம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஆளும் வர்க்க எதிரிகளாலும், தொழிற்சங்க துரோகிகளாலும் செய்யப் பட்ட பச்சை ரத்தப் படுகொலை அது. நிர்கதியாய் நின்ற அந்த மக்களைத் தோற்கடித்த அதே எதிரிகளோடு தான் நாம் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

நமது எதிரிகளையும் துரோகிகளையும் புரிந்து கொள்ள அவர்களின் முந்தைய ’சாதனைகளைப்’ புரிந்து கொள்வது மிக அவசியமாகிறது. அந்த வகையில் கோலார் தங்க வயலின் மக்களும் அந்தத் தொழிலாளர்களும் நமக்கு ஆசான்களாக இருக்க எந்தத் தயக்கமும் இன்றி முன் வருகிறார்கள்.

இனி கோலார் தங்க வயல் சுரங்க பயணத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.

______________________________________

தொழிலாளர்களைச் சுமந்து கொண்டு பூமியின் மையத்தை நோக்கி மெல்லக் கீழ் இறங்குகிறது அந்த மின்தூக்கி(Lift). அது ஒரு சுரங்கம். துளைபோடுபவர் (Driller), வெடிப்பவர் (Blaster), பொது வேலையாள் (General Labor) என்று கலவையான வேலைப் பிரிவினைகள் கொண்டோர் அந்த மின்தூக்கியில் இருக்கிறார்கள். அவர்கள் முகங்களில் இருப்பதும் அதே போன்ற கலவையான உணர்ச்சிகள் தான். இதில் எத்தனை பேர் உயிரோடு மீண்டு வருவார்கள்? அத்தனை நிச்சயமாக பதிலளிக்க முடியாத கேள்வி இது.

பூமியின் கீழ் செல்லச் செல்ல ஒவ்வொரு 70 அடி ஆழத்திற்கும் ஒரு டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்தின் அளவு உயர்கிறது. தொழிலாளர்களையும் சுரங்கத்தின் உள்ளே வெட்டிச் சேகரிக்கப்பட்ட உலோகப் படிமங்கள் கொண்ட கற்குவியலையும் ஏற்றியிறக்க நேர்மட்டமாக ஒரு நீண்ட குழி – 15 அடி விட்டம் கொண்ட இதை ஷாப்ட் (shaft) என்கிறார்கள். ஒவ்வொரு நூறடிக்கும் கிடைமட்டமாக எதிரெதிர் திசைகளில் வேர்கள் போல சில கிலோமீட்டர்கள் தூரம் குடைந்து செல்கிறார்கள் – இதை டனல் (tunnel) என்கிறார்கள்.

டனலின் உள்ளே உலோகச் சங்கிலிகளால் இணைக்கப்பட்டு ட்ராலிகளை இழுப்பதற்கான இருப்புப் பாதை ஏற்படுத்தப்பட்டிருக்கும். வெட்டியெடுக்கப்பட வேண்டிய உலோகம் எந்த திசையில் இருக்கிறது, அதை அடைய டனல் எந்த திசையில் முன்னேற வேண்டும், இடையில் பாறைகள் எந்தெந்த இடங்களில் எதிர்படும், அவற்றைத் தகர்க்க எத்தனை இடங்களில் வெடி வைக்க வேண்டும் என்பதையெல்லாம் சர்வேயர்கள் வரைபடமாக ஏற்கனவே அளித்திருப்பார்கள். டனல் எங்கே முடிவடைகிறதோ அங்கே துவங்குகிறது வேலை. சில ஆயிரம் அடி ஆழத்தில் சில தொழிலாளர்கள் பூமியைக் கிடை மட்டமாக குடைந்து முன்னேறிச் சென்று கொண்டேயிருக்கிறார்கள். ஏற்கனவே குடையப்பட்ட டனலின் முகப்புப் பகுதியிலிருந்து சில நூறு மீட்டர்களுக்கு மேற்கூரை மரச்சட்டங்களால் தாங்கி நிறுத்தப்பட்டிருக்கும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

உலோகத்தை வெட்டியெடுக்கும் வேலை சற்றேனும் சுணக்கமாகி விடக்கூடாது என்பதை மனதில் கொண்டே சுரங்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கும். நிலத்தின் மேற்பரப்பிலிருந்து ஷாப்டின் வழியே இறங்கி இடையில் எதிர்ப்படும் டனல் கிளைகளுக்குள் நரம்புப் பின்னல் போல் காற்றுக் குழாய்கள் செல்லும். காற்றுக் குழாய்களின் வழியே அழுத்தப்பட்டு குளிரூட்டப்பட்ட காற்று டனலின் பல்வேறு பாகங்களுக்கு சப்ளை ஆகும். இது தவிற டனலின் முகதுவாரத்தில் மின் விளக்குகளும், உடலைக் குளிரூட்டிக் கொள்ள தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கும்.

தரைப்பரப்பில் மிகவும் விசை கூடிய குளிரூட்டி இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்படும் குளிர் காற்று இரும்புக் குழாய்களின் வழியே  சில கிலோமீட்டர்கள் தூரம் பூமியின் கீழ் செங்குத்தாக பயணம் செய்து, மேலும் சில கிலோமீட்டர்களைக் கிடைமட்டமாக கடந்து 160 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவும் டனலின் வால் நுனிப் பகுதிகளில் அழுத்தப்பட்ட காற்றாக வெளியேறும். இந்த நெடும் பயணத்தில் அதன் வெப்பநிலை பலமடங்கு அதிகரித்து ஆவியாகியிருக்கும்.

குழாய்க் காற்றை சுவாசிப்பது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்பதை நீங்கள் உணர விரும்பினால், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நிற்காமல் பயணித்து வந்த பேருந்தின் ரேடியேட்டரில் இருந்து வெளியேறும் நீராவியின் முன் உங்கள் முகத்தை பத்து நிமிடங்களுக்கு வைத்துப் பார்க்கலாம். சுரங்கத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் மின் விளக்குகளும் சோகையான கப்பிய வெளிச்சத்தையே அளித்துக் கொண்டிருக்கும். இயற்கையின் அந்தகார வலிமையின் முன் விஞ்ஞானத்தின் செருக்கு தோற்றுப் போகும் தருணங்களும் உண்டு – மின் தடையின் வடிவில்.

சுதந்திரமான காற்றோ, வெளிச்சமோ இல்லாத அழுத்தப்பட்ட வெளி (space) அது. தலைக்கு மேலே பல லட்சம் கோடி டன்கள் நிலம் சரிந்து விழ தருணம் பார்த்துக் கொண்டிருக்க, பூமியின் உக்கிரம் தன்னைக் குடைந்து சீண்டியவர்கள் மேல் தனது ஆத்திரத்தை வெப்பமாக வெளியேற்றிக் கொண்டிருக்கும். சுரங்கத்தின் கடைக்கோடியில் பூமியோடு நேரடிப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் தங்கள் மானத்தைக் காக்க இடையில் அணிந்திருக்கும் ஜட்டியைத் தவிற வேறெதையும் உடலில் போட்டுக் கொள்ள முடியாது. ஏன் அப்படி என்பதை நீங்கள் அனுபவபூர்வமாக விளங்கிக் கொள்ள விரும்பினால் உடலின் மேல் தொலியை மொத்தமாக உரித்தெடுத்து விட்டு அதன் மேல் ஆடைகளை அணிந்து கொள்ளும் அனுபவத்தைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

தொழிலாளர் நலச்சட்டம் என்கிற வாயில்லாத, கண்ணில்லாத, காதில்லாத பூச்சியை ஏமாற்ற அளிக்கப்பட்ட முகக் கவசம், காலணிகள், தலைக்கவசம் போன்ற போன்ற வஸ்துக்களை பொருத்திக் கொண்டு வேலை பார்க்க முடியாது என்பது ஒரு எதார்த்தம்.

சூழலில் நிலவும் அழுத்தமும், வெப்பமும் உடலின் சமநிலையை எந்த நேரமும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டேயிருக்கும். காதுகளின் உள்ளே இருக்கும் மேலஸ், இன்கஸ், டேபஸ் என்கிற மூன்று  குருத்தெலும்புகளிடம் இருந்து நரம்புகளின் வழியே மூளை பெறும் தகவல்களின் அடிப்படையில் தான் உடலின் சமநிலை பேணப்படுகிறது. சுரங்கத்தின் உள்ளே நிலவும் சூழலுக்கு இந்த எலும்புகள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தவறினால் தவறான தகவல்களைக் கொடுத்து மூளையைக் குழப்பும். முன்னாள் சுரங்கத் தொழிலாளர்களில் சிலர் இன்றும் தங்களது இறுதி நாட்களை வறுமையிலும் சித்தம் கலங்கிய நிலையிலும் மன அழுத்தத்திலும் தான் கழிக்கிறார்கள். இந்த உலகத்தின் நிர்மாணத்திற்காக கனி வளங்களை வெட்டிக் கொடுக்கும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் பரிசு அது.

நாடி நரம்புகள் ஓய்ந்து ரத்தம் சுண்டிப் போன இறுதி நாட்கள் மட்டுமல்ல, இளமையின் முறுக்கும் தினவு மேலோங்கி நிற்கும் இளமைக் காலத்தில், தங்கள் பணிக் காலத்திலேயே நரகத்தின் சுவையை அன்றாடம் அனுபவிப்பவர்கள் அவர்கள்.

பாறைகளைப் பிளப்பதற்காக வெடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் உண்டாக்கிய புகை மண்டலத்தோடு காற்றில் பரவியிருக்கும் வெப்பமும், சூழலில் பரவியிருக்கும் உலோகத் தூசுகளும் ஏற்கனவே வெப்பத்தில் வாட்டப்பட்ட உடலின் மேல் உண்டாக்கும் எரிச்சலை எதனோடு ஒப்பிடுவதென்று தெரியவில்லை. பௌதீக உலகத்தில் அதற்கான ஒப்பீடு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஒருவேளை கற்பனையாகச் சொல்லப்படும் நரகத்தில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பறைகள் உண்டாக்கும் கற்பனையான எரிச்சலை சொல்லலாம் – எனினும் அது வெறும் கற்பனைக் கதை தான்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

டனலில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் நீரை, குடிப்பதற்கும் உடலின் மேல் தெளித்துக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், 12,000 அடி ஆழத்தில் 160 டிகிரி பாரன்ஹீட்டுகளுக்கு மேல் தகித்துக் கொண்டிருக்கும் அனலில் அந்த நீரும் கொப்பளித்துக் கொண்டிருக்கும். எனினும் நீரை உடலின் மேல் தெளித்துக் கொள்வதும், தொண்டைக் குழியை ஈரப்படுத்தி வைப்பதும் தவிர்க்கவியலாத சடங்குகள் மட்டுமல்ல ஷிப்டு நேரம் முடியும் வரை உயிரைத் தக்கவைத்துக் கொள்ள, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள்.

சுரங்கத்தின் உள்ளே டனலின் கரங்கள் எங்கே நிறைவுறுகிறதோ அங்கே தொழிலாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உலோகத்தைத் தேடி கிடைமட்டமாக பூமியைக் குடைந்து முன்னேறிக் கொண்டிருப்பார்கள். எதிர்ப்படும் பாறைகளைத் அந்தத் தொழிலாளர்கள் தங்கள் வழக்கில் நிலத்தடி மலைகள் என்கிறார்கள். அம்மலைகள் டைனமைட்டுகளால் பிளக்கப் படும்போது பூமி குலுங்கும். அந்த அதிர்ச்சியில் டனலின் கூரை சரிந்து விழுந்தால் உடனடி மரணம், விழவில்லை என்றாலும் மரணம் தான். பின்னது மெல்லக் கொல்லும் மரணம்.

தொழிலாளர்கள் டனலின் நுனியில் நிற்கும் போது இடைப்பகுதிகளில் கூரை சரிந்து விட்டால் அந்த இடிபாடுகளை அகற்ற மீண்டும் வெடி வைக்க வேண்டியிருக்கலாம். அது அந்த டனலின் தாங்கு திறனைப் பொருத்தது. ஒருவேளை டன்னல் மீண்டுமொரு வெடியைத் தாங்காது என்றால், அடைத்துக் கொண்ட பகுதியை அப்படியே முத்திரையிட்டு விட்டு உலோகத்தைத் தேடிய அந்தப் பயணம் வேறு திசையில் தொடரும்.

என்றால், இடிபாடுகளுக்கு அந்தப் பக்கம் மாட்டிக் கொண்டவர்களின் கதி?

அவர்களைச் சுற்றிலும் தூசு மண்டலங்கள் சூழ்ந்திருக்கும். காற்றுக் குழாய்கள் கூரை இடிந்ததில் சேதமாகியிருக்கும். எனவே பிராணவாயு சீக்கிரம் தீர்ந்து போய் விடும். வாழ்க்கை இன்னும் சில மணித்துளிகள் இருக்கலாம், ஆனால் மரணம் நிச்சயம். அவர்கள் அழுது அரற்றுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.

உயிருடன் மீண்ட சில தொழிலாளர்களிடம் பேசிய போது அவர்கள் இவ்வாறு சொன்னார்கள் – “சுத்தமா அடச்சிக்கிட்டு இருக்கும் சார். அந்தாண்ட மாட்டிக்கினு இருக்கவங்க போடற சத்தம் கொழப்பமா கேக்கும். பேரு சொல்லி கூப்டுவாங்க. ரெஸ்க்யூ லைன் கிடைச்சதான்னு அவங்க சத்தம் போடறது கசங்கலா கேக்கும். நாம பதிலுக்கு இல்லைன்னு எப்டி சொல்ல முடியும்? ஒரு நாளு போகும், கொரலு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி அப்பால நின்னுடும்…”

ஆம். அவர்கள் தாம் உயிருடன் புதைந்து போனதை தாமே அறிந்து, தமது சாவு மெல்ல மெல்ல தம்மை நெருங்கி வளைப்பதை உணர்ந்து.. அந்த கணத்துக்காக காத்துக் கிடப்பார்கள். பின்னர் செத்துப் போவார்கள். ஆனால், உலோகத்தைத் தேடிய அந்த பயணம் நிற்காது. எஞ்சியவர்கள் தொடர்வார்கள் – தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, தங்கள் மனைவிமார்களைப் பட்டினிக் கொடுமையிலிருந்து காப்பதற்காக, மாதா மாதம் சம்பளமாக கையில் கிடைக்கப் போகும் அந்தச் சொற்பக் காசுகளுக்காக.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சுரங்க விபத்துகளில் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை விட மீட்கப்படாத உடல்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை ஏதாவது உலோகத்தைத் தொடும் போதோ, அல்லது நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தால் சுழலும் மின்விசிறியின் காற்றை அனுபவிக்கும் போதோ உங்கள் வாழ்க்கையின் அந்த மகிழ்ச்சியான தருணங்களை உத்திரவாதப்படுத்திக் கொடுத்த மனிதர்கள் ஒரு வேளை எங்கோ ஒரு சுரங்கத்தினுள் காணாப் பிணமாக இன்னும் உறங்கிக் கொண்டிருப்பார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெடித்துச் சிதறிய பாறைத் துண்டுகளைச் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரது வேலை நேரத்துக்குள் அடைய வேண்டிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். டைனமைட் வெடித்துத் தீர்த்த பின் சிதறலாகக் கிடக்கும் பாறைகளோடு இன்னும் வெடிக்காத வெடிமருந்துக் குச்சிகளும் கிடக்கும். அப்படி தாமதமாக நிகழும் வெடி விபத்துகளில் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தனி கணக்கு.

உலோகத்தின் துணுக்குகள் கலந்த மண்ணையும், பாறைப் படிமங்களையும் சேகரித்து ட்ராலிகளில் அனுப்புவார்கள் தொழிலாளர்கள். மேற்பரப்பில் இவை ஒன்றாகச் சேகரிக்கப்பட்டு கிரஷர் மில்லுக்கு அனுப்பப்படும். கிரஷர் மில்லில் இவை ஒரே சமமான கற்துணுக்குகளாக உடைக்கப்பட்டு அங்கிருந்து கிரைண்டிங் மில் எனப்படும் அரவை மில்லுக்கு அனுப்பப்படும். கிரைண்டிங் மில்லில் உலோகப் படிமங்கள் கலந்த சிறிய கற்துணுக்குகள் மொத்தமாக அரைக்கப்பட்டு அனைத்தும் கலந்த பவுடராக்கப்படும்.

உலோகத் துணுக்கு கலந்த பவுடரோடு தண்ணீர் சேர்க்கப்பட்டு பல்வேறு கண்டெய்னர்களில் பசை போல குழைக்கப்படும். பின்னர் இந்தக் கலவையில் சயனைடு மற்றும் ஆக்சிஜன் ஏற்றப்பட்டு வேறு டாங்குகளில் சேர்த்து மீண்டும் நன்றாக குழைக்கப்படும். சயனைடும் ஆக்சிஜனும் சேர்ந்த இந்தக் கலைவையில் கார்பன் துண்டுகளைச் சேர்ப்பார்கள். வேதியல் மாற்றங்களுக்கு ஆளாகி கலவையில் கலந்துள்ள உலோகம் கார்பன் துண்டுகளோடு போய் ஒட்டிக் கொள்ளும்.

உலோகம் களையப்பட்ட, சயனைடு கலந்த ஆபத்தான அந்தக் கழிவுகள் சுரங்கத்தின் சுற்றுவட்டாரங்களில் மலை போல் குவிக்கப்படுவதற்காக லாரிகளில் அனுப்பப்படும். உலோகம் ஒட்டிக் கொண்டிருக்கும் கார்பன் துண்டுகள் ஸ்ட்ரிப்பிங் வெஸ்ஸல் (Stripping Vessel) என்கிற பெரிய கலனுக்குள் செலுத்தப்பட்டு அங்கே அமிலக் கரைசலால் குளிப்பாட்டப்படும். அமிலக் கரைசல் கார்பனில் இருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும்.

அடுத்து உலோகத்தை சுத்திகரிக்கும் பணி. உலோகம் கலந்திருக்கும் கலவை நேர் மற்றும் எதிர் மின் தகடுகள் கொண்ட பெரிய மின்சார கலனுக்குள் செலுத்தப்படும். அங்கே கலவையின் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சப்படும். சுத்தமான உலோகம் எதிர்மின் தகடுகளோடு ஒட்டிக் கொள்ள எஞ்சிய கழிவுகள் அகற்றப்பட்டு விடும்.

நிலத்தின் கீழ் நடக்கும் சுரங்கப் பணிகள் மட்டுமல்ல,  நிலத்தின் மேல் உள்ள சுரங்க ஆலைகளில் உலோகத்தை மண்ணிலிருந்தும் கல்லில் இருந்தும் பிரித்தெடுக்க செய்யப்படும் தொடர் நிகழ்வுகளும் தொழிலாளர்களின் உயிரை உறிஞ்சியெடுப்பவை தான்.  ஆபத்தான வேதியல் கலவைகள் கிளப்பும் நெடியோடு தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிக்கும் அவர்களின் வாழ்க்கையை பெருகநகர போக்குவரத்து நெருக்கடியில் டீசல் புகைக்கு மூக்கைச் சுளிக்கும் நாம் எப்படித் தான் புரிந்து கொள்வது? அது அத்தனை கடினமும் இல்லை நேரடி அனுபவம் எல்லா நேரங்களிலும் தேவையுமில்லை,

அந்தத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை நம்மோடு பகிர்ந்து கொள்வதை கேட்க கனிவான காதுகளும் பதிவு செய்து வைக்க ஈரமான நெஞ்சமும் இருந்தால் கூட போதும். ஆனால், அது எல்லோருக்கு இருந்து விடுகிறதா என்ன?

நாம் பேசிக் கொண்டிருக்கும் உலோகமானது மண்ணிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு பிற கனிமங்களில் இருந்து பிரிக்கப்பட்டு, தர நிர்ணயம் செய்யப்பட்டு, சுரங்க நிர்வாகத்தால் உலோகத்திற்கான பிரத்யேக  சந்தையில் விற்கப்பட்டு, பின் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குண்டான பட்டறைகளில் முன்கூட்டியே தீர்மானம் செய்து தெரிவு செய்யப்பட்ட வடிவத்தில் வளைக்கப்பட்ட பின் தான் – உங்கள் கையில் மோதிரமாக மின்னிக் கொண்டிருக்கிறது.

உங்களால் மின்னும் அதன் அழகை ரசிக்க முடிகிறதா?
________________________________________

”மாலூர்ல செக்யூரிட்டியா இருக்கேன் சார். பேரு வேலு”

“சுரங்கம் மூடும் போது உங்களுக்கு எத்தனை வருச சர்வீஸ் இருந்தது”

“இருவத்தஞ்சி வருசம் போட்டேன். எங்கப்பாவுக்கு முப்பது வருசம். எங்க தாத்தாவுக்கு முப்பத்தஞ்சி வருசம்…”

”உள்ளே என்ன வேலை செய்திட்டு இருந்தீங்க?”

”எல்லாம் ஜென்ரல் லேபரு தான்”

“வேலை எப்படி இருந்தது?”

“அது என்னா சார்… கீழே போனா பொணம், மேல வந்தா பணம்”

”எவ்ளோ சம்பளம் வாங்கிட்டு இருந்தீங்க?”

“நாலாயிரத்தி முன்நூறு தந்தான்…பிடிச்சதுக்கு அப்புறம் முவாயிரத்தி தொள்ளாயிரம் கையில வந்தது. ரெண்டு பே கமிஷன் ஏமாத்திட்டான் சார்”

”உங்களுக்கு நுரையீரல்ல எத்தனை ஓட்டை இருக்கு”

“ஆஸ்பத்திரி கணக்கு முப்பது… ஆனா எப்படியும் நூறுக்கு மேல இருக்கனும்”

“…….”

“ஹா ஹா ஹா… இன்னா சார் மூஞ்சி சுருங்கிப் போச்சி? இதுக்கே பயந்துட்டியா? இருநூறுக்கு மேல போனா அஞ்சி வருசம் ஆயுசு சார். நமக்கு நூறு துளைக்கு மேல தான் இருக்கனும்… எத்தினி நம்பருன்னு சொல்லத் தெரியல. இன்னும் ஒரு நாலு வருசத்துக்காவது அப்பப்ப கொஞ்சம் மக்கார் பண்ணிகிட்டே வண்டி ஓடிடும்னு தான் நெனைக்கிறேன். அதுக்குள்ள புள்ளைக்கி ஒரு கலியாணத்தை முடிச்சிட்டா போதும்…”

சுரங்கத் தொழிலாளர்கள் அனைவருக்கும் (ஆம், விதிவிலக்கின்றி அனைவருக்கும்) நுரையீரலில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டே தீரும். அதை அவர்கள் தங்கள் பேச்சு வழக்கில் ’துளை’ என்கிறார்கள் அந்நோயின் பெயர் சிலிக்காஸிஸ்…

கட்டுரையின் தொடரும் பகுதிகளில் நாம் சிலிக்காஸிஸ் குறித்து மட்டுமல்ல, தொகுப்பாக கோலாரின் வரலாறு, மூடப்பட்ட தங்கச் சுரங்கத்தின் வரலாறு, மூடப்பட்டதன் உண்மையான பின்னணி, மக்களின் இன்றைய வாழ்க்கை குறித்து அறிந்து கொள்வோம்….

(தொடரும்)
_________________________________________________
–    வினவு செய்தியாளர்கள்
படங்கள் : நன்றி KGF Online

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க