privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !

இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !

-

சுமார் 80 லட்சம் மக்களைக் கொண்ட இசுரேல் ஆக்கிரமித்திருக்கும்  காசா முனையில் வாழும் 18 லட்சம் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது. மூன்று வார தாக்குதல்களில் 1300-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்திருக்கிறது.

பள்ளி வகுப்பறை
அபு ஹூசைன் ஐ.நா பள்ளியில் உடல் உறுப்புகளை பொறுக்கும் பாலஸ்தீனர் (படம் : நன்றி theguardian.com)

காசா முனையில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்ற இசுரேலின் எச்சரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியுள்ள அகதிகள் முகாம்களுக்கு பல பாலஸ்தீன குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. கடந்த மூன்று வாரங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இவ்வாறு சொந்த ஊரிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே ஏதுமற்ற அவர்களது போர்க்கால வாழ்க்கையை இந்த இடப்பெயர்வு இன்னும் மோசமாக தாக்கியிருக்கிறது.

காசாவில் உள்ள ஜபாலியா பெண்கள் தொடக்கப் பள்ளிக் கட்டிடத்தில் சுமார் 3,300 பேர் தங்கியிருக்கின்றனர். அந்தப் பள்ளியின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வகுப்பறை எண் 1-ல் பெண்கள், குழந்தைகள் அடங்கிய சுமார் 40 பேர் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதிகாலை பிரார்த்தனை அழைப்புக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த வகுப்பறையின் சுவற்றை பிளந்து கொண்டு ஒரு பீரங்கி குண்டு பாய்ந்திருக்கிறது. உள்ளே தூங்கிக்  கொண்டிருந்தவர்கள் மீது குண்டு சிதறல்கள் மழையாய் சிதற, அவர்களது ரத்தம் சுவர்களையும், தரையையும் நனைத்தது.

சில  நிமிடங்களுக்குப் பிறகு இன்னொரு குண்டு அந்த இரண்டு மாடி பள்ளிக் கட்டிடத்தின் கூரையை துளைத்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் 15 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்தப் பள்ளியில் பொதுமக்களை தங்க வைத்து பராமரிக்கும் பொறுப்பில் இருந்த ஐநா அதிகாரி கலீல் அல் ஹலாபி, தாக்குதல் நடந்த வகுப்பறையை பார்த்த பிறகு “எனது உடல் நடுங்குகிறது. ரத்தச் சிதறலை பார்ப்பதும், குழந்தைகளின் கதறலை கேட்பதும் சகிக்க முடியாததாக இருக்கிறது” என்கிறார்.

வகுப்பறையின் இடிபாடுகளின் மத்தியில் அங்கு புகலிடம் தேடிய மக்களின் சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையின் எச்சமாக ஒரு பந்து, ஒரு வாளி, சில போர்வைகள், உணவு டப்பாக்கள், செருப்புகள் சிதறிக் கிடந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன், “இந்தத் தாக்குதல் கண்டனத்துக்குரியது, நியாயப்படுத்த முடியாது” என்று கூறி, இதற்கு, பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்தப் பள்ளி குறித்தும், அங்கு வசிக்கும் அகதிகள் பற்றியும் விபரங்களை இசுரேலுக்கு தொடர்ந்து அளித்து வந்ததாக ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர். எனில் இசுரேலுக்கு கொல்லும் இடங்களை காட்டிக் கொடுத்ததா என்று ஐ.நா பதில் சொல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த கொலைக்கு பொறுப்புடன் பதில் சொல்வது என்பது இசுரேல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்டது. இதுவும் ஐநாவுக்கு தெரியாத ஒன்றல்ல.

வகுப்பறையின் இடிபாடுகள்
தாக்கப்பட்ட வகுப்பறையின் இடிபாடுகளுக்கு மத்தியில் (படம் : நன்றி theguardian.com)

‘இசுரேல் தன்னை காத்துக் கொள்ள காசாவை தாக்குகிறது, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு, ஆயுதங்களை சேமித்து வைக்க காசா முனையில் வீடுகளுக்கு அடியில் சுரங்கங்கள் தோண்டி வைத்திருக்கிறது, பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இசுரேலை தாக்குகிறது.’ என்று ரூபர்ட் முர்டோச்சின் ஃபாக்ஸ் நியூஸ் (நம்ம ஊர் ஸ்டார் விஜய் டிவியின் தாத்தா) போன்ற அமெரிக்க ஆளும் வர்க்க ஊடகங்கள் வெறி கொண்ட முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்தியாவிலும் இந்துத்துவ கும்பல் இணையத்தில் இத்தகைய பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

2007-ம் ஆண்டு காசா மக்கள் தேர்தலில் ஹமாஸ் அமைப்பை தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தது முதல் இசுரேல் காசாவை பொருளாதார ரீதியாக தண்டித்து வருகிறது. அம்மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும், வணிக சாத்தியங்களையும் முழுவதுமாக ஒழித்துக் கட்டி விட்டு, எகிப்துடன் சேர்ந்து காசாவிற்குள் செல்லும் உணவைக் கூட இத்தனை மக்களுக்கு இத்தனை கலோரி போதும் என்று எண்ணி அனுப்புகிறது.

இந்த மூன்று வார தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் (கொல்லப்பட்ட 1,300 பாலஸ்தீனர்களில் 80% பேர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள்) கொல்லப்பட்டுள்ளனர். மாறாக, அமெரிக்காவும், இந்துத்துவ கூட்டமும் பயங்கரமாக சித்தரிக்கும் ஹமாசின் பதிலடி தாக்குதல்களில் இசுரேல் பொதுமக்கள் 3 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். (இசுரேல் பாலஸ்தீனத்தை தாக்கிய உயிரிழப்பில் 0.3%) தாக்குதல் நடத்தும் இசுரேல் ஆக்கிரமிப்புப் படையினர் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் எனும் அமைப்பு மதவாத அமைப்புத்தான் என்றாலும் இசுரேலே தாக்கி சீர்குலைக்கும் அளவு அவர்களுக்கு பலமேதுமில்லை.

இசுரேலின் நோக்கமே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எந்த குரலும் இனி வரக்கூடாது என்ற கொலைவெறிதான். இல்லை ஹமாஸ் பயங்கரவாதி அமைப்புதான் என்று மல்லுக்கட்டி வாதாடும் கனவான்கள் இசுரேல் போன்று ஹமாசும் 1,300 இசுரேலியர்களை கொலை செய்ய குண்டோ, ஆயுதங்களோ வாங்கி கொடுத்து, கொலை செய்த பிறகு நிரூபிக்க வேண்டும். இதன்றி சும்மா பயங்கரவாதம், பயங்கரவாதம் என்று கூக்குரலிடுவது இசுரேலின் பயங்கரவாதத்தை மறைக்கும் பயங்கரவாதமாகும்.

இசுரேல் படைப்பிரிவு
ஜூலை 28 அன்று காசாவின் மீது தாக்குதல் நடத்தும் இசுரேலி படைப் பிரிவு (படம் : நன்றி rt.com)

சென்ற வாரம் பெயிட் ஹானூன் பகுதியில் இருக்கும் ஒரு ஐநா பாதுகாப்பு பகுதியில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இசுரேல் அறிவித்த 4 மணி நேர போர் நிறுத்தத்தின் போது, தாக்குதல் நடக்காது என்ற நம்பிக்கையில் பொருட்கள் வாங்க கடைகளுக்கு விரைந்த மக்கள் குவிந்திருந்த ஷூஜையா நகர் சந்தையை தாக்கி ஒரு பத்திரிகையாளர் உட்பட 17 பேரை கொன்று 200 பேரை காயப்படுத்தின இசுரேலிய பாதுகாப்பு படைகள்.

அதிகரித்து வரும் இசுரேலின் மூர்க்கமான தாக்குதல் பற்றியும், இசுரேலுக்கு தத்தமது அரசுகள் அளிக்கும் ஆதரவையும் குறித்த மக்களின் கோபத்தை திசை திருப்ப அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாட்டு அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் குழந்தைகளும் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுவதை கண்டிக்கின்றனர். அதே நேரம் இரு தரப்பும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளனையும், ஆக்கிரமிப்படுபவர்களையும் ஒரே தட்டில் வைப்பதோடு, காசாவை ஆக்கிரமிக்கவும், தாக்கவும் இசுரேலுக்கு இருக்கும் உரிமையையும் அங்கீகரிக்கின்றனர்.

ஐநா பாதுகாப்பு சபை, இசுரேல், ஹமாஸ் இருதரப்பும், “ஈத் காலகட்டத்திலும் அதற்கு அப்பாலும் மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையாக அமல்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறது.

லண்டன் ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பி, “இந்த வன்முறை வட்டம் தாங்க முடியாத துன்பங்களை விளைவித்திருக்கிறது” என்று கூறி “காசாவிலிருந்து வரும் படங்களை பார்க்கும் போது மனம் உடைந்து போகிறது. நாம் கடவுளை நோக்கி கதற வேண்டும். சொர்க்கத்தின் கதவுகளை உடைத்து, அமைதி, நீதி, பாதுகாப்பு இவற்றுக்காக பிரார்த்திக்க வேண்டும். இசுரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு விலை கொடுக்க வேண்டிய, திறந்த மனதுடனான அமைதி தேடல் மட்டும்தான் இன்னும் மோசமான வன்முறையிலிருந்து அப்பாவி மக்களையும் அவர்களது குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்” என்று கடவுள், சொர்க்கம் என்ற மத மோசடிகளோடு, ஆக்கிரமிப்பு குற்றவாளி இசுரேலின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தாக்கப்பட்ட பள்ளி
ஜபாலியா அகதிகள் முகாமில் இசுரேல் படைகளால் தாக்கப்பட்ட ஐ.நா பள்ளியின் வாசலில் கொல்லப்பட்ட கழுதைகளை பார்க்கும் சிறுவன். (படம் : நன்றி theguardian.com)

“ஐக்கிய நாடுகள் அகதிகள் நிவாரண முகாம் மீது குண்டு வீசி தாக்கப்பட்டதை அமெரிக்கா கண்டிக்கிறது. அது குழந்தைகள் உட்பட அப்பாவி பாலஸ்தீனர்களையும், ஐ.நா மனிதாபிமான ஊழியர்களையும் கொன்றிருப்பதாக தகவல் வந்துள்ளன” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக்குழுவின் பத்திரிகை தொடர்பாளர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

‘ஹமாஸ் பள்ளிக் கட்டிடத்தின் அருகாமையில் இருந்து இசுரேலிய படைகளை தாக்கியதால், தாக்குதல் வந்த திசையை நோக்கி இசுரேல் படைகள் சுட்டதால் இது நடந்தது’ என்று இந்த தாக்குதலை நடத்தியது தனது படைகள்தான் என்று இசுரேலே ஏற்றுக் கொண்டாலும் இசுரேலை கண்டிக்க அமெரிக்கா முன்வரவில்லை.

மாறாக, காசா முனை மீது தாக்குதல் நடத்தும் இசுரேலுக்கு கூடுதல் ஆயுதங்கள் கொடுக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை காசா மீது தாக்குதல் நடத்த இசுரேலுக்குத் தேவையான புதிய ஆயுதங்களை வழங்கப் போகிறது. இவற்றில் 120 மி.மீ பீரங்கிக் குண்டுகள், 40 மிமீ எறிகுண்டுகள் அடங்கும். இவை இசுரேலில் அமெரிக்கா பராமரித்து வரும் $1 பில்லியன் (ரூ 6,000 கோடி) மதிப்பிலான ஆயுதக் கிடங்கிலிருந்து வழங்கப்படும். இனி இசுரேலின் கொலை விகிதம் அதிகரிக்கும். இதை ரசித்துக் கொண்டே நம்மூர் அம்பிகள் ஹமாசின் பயங்கரவாதத்தை கண்டித்து பிரச்சாரமும் செய்வர்.

இதே அமெரிக்கா தன்னால் வளர்த்து விடப்பட்ட இராக் சர்வாதிகாரி சதாம் உசைன் அண்டைநாடான குவைத்தை ஆக்கிரமித்த போது, மேற்கத்திய நாடுகளின் கூட்டணி அமைத்து, தனது முப்படைகளையும் குவித்து போர் தொடுத்தது. அமெரிக்காவின் படையெடுப்புகளும், அறிக்கை கண்டனங்களும், ஆயுத உதவிகளும், அது சொல்லிக் கொள்ளும், ‘ஜனநாயகம்’, ‘மனிதாபிமானம்’, ‘மனித உரிமைகள்’ போன்ற காரணங்களுக்காக செய்யப்படுபவை அல்ல; அதன் ஏகாதிபத்திய பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள ‘நடுநிலை’ மற்றும் ‘இடதுசாரி’ ஊடகங்களும், அறிஞர்களும் இந்த தாக்குதலின் விளைவாக கொல்லப்படும் குழந்தைகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கண்ணீர் வடிக்கின்றனர். நெஞ்சை உருக்கும் அழிவுகளையும், கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்களையும் காட்டி சோககீதம் இசைக்கின்றனர். உலகெங்கும் மக்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றனர்.

அப்பாவி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதையே தனது வளர்ச்சிக்கான உத்தியாக கொண்டிருக்கும் மோடியின் அரசு கூட இருதரப்பும் வன்முறையை கைவிட்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்கிறது. இசுரேலையும், நாஜி ஹிட்லரையும் அவர்களது உறுதியான தேசியவாதத்துக்காக விதந்தோதும் பார்ப்பனிய இந்துமதவெறி சித்தாந்தவாதிகள் கூட துன்புறும் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்து பதிவு செய்யலாம்.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக ஏகாதிபத்தியங்களின் ஆதரவோடு இசுரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் இராணுவ ஆக்கிரமிப்பு போர்களையும், பாலஸ்தீன  பகுதிகளில் திட்டமிட்டு அமல்படுத்தி வரும் சட்ட விரோத யூத குடியேற்றங்கள் பற்றியும், யாசர் அராஃபத்தின் பாலஸ்தீன விடுதலை அமைப்பு போன்ற மதசார்பற்ற அமைப்புகளை சீர்குலைத்து பணியவைத்து வீழ்த்தி விடுவதோடு, ஹமாஸ் போன்ற மதவாத அமைப்புகளை திட்டமிட்டு வளர்த்து விடுவதையும் இவர்கள்  மறந்தும் குறிப்பிடுவதில்லை. அமெரிக்கா இசுரேலுக்கு அளித்து வரும் இராணுவ உதவிகளையோ அம்பலப்படுத்தி கண்டிப்பதில்லை. மாறாக, ஹமாஸ் எப்படி கொடூரமாக காசா மக்களை சுரண்டுகிறது என்று இசுரேலின் பிரச்சார வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.

இப்போதைய மோடி அரசும், இதற்கு முந்தைய காங்கிரசு அரசுகளும் இசுரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது, இசுரேலுடன் பொருளாதார தொடர்புகளை வளர்த்துக் கொள்வது என்று மாறாமல் அதே உறவை தொடர்கின்றனர். அதற்கு முன்பு பெயரளவுக்காவது இசுரேல் ஆக்கிரமிப்பைக் கண்டித்த டிராமா கூட இப்போது இல்லை.

இந்நிலையில் இசுரேலின் பயங்கரவாதம், அதற்கு ஆதரவான அமெரிக்க ஏகாதிபத்தியம், இசுரேலை கோட்பாட்டளவில் ஆதரிக்கும் இந்துத்துவ அமைப்புகளை அம்பலப்படுத்தி கோவை மக்கள்  கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இன்று மாலை 5 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

*பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து’’!

கண்டன ஆர்ப்பாட்டம்

உழைக்கும் மக்களே!

  • அமெரிக்க அடியாள் யூதவெறி இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்!
  • இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
  • இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!

ம.க.இ.க – பு.ஜ.தொ.மு

நாள் : 31-07-2014 மாலை 5 மணி
இடம் : செஞ்சிலுவை சங்கம் முன்பு , கோவை.

தலைமை
தோழர்.மணிவண்ணன்
மாவட்ட செயலாளர், ம.க.இ.க

கண்டன உரை:
தோழர்.விளவை இராமசாமி
மாவட்ட செயலாளர் பு.ஜ.தொ.மு

நன்றி உரை:
தோழர்.இராஜன்
மாவட்ட தலைவர் பு.ஜ.தொ.மு

palastine-notice

மேலும் படிக்க

  1. இப்போது ஈராக்கிற்கு அமெரிக்க ஆயுத உதவி அளித்துவருகிறது.இதுவும் இஸ்லாமிய நாடுதான்! ஈராக் அரசுதான் ஆயுத உதவி கேட்டது.

    உங்களுடைய தமிழ் நன்றாக உள்ளது. “பாலஸ்தீனம்” என்றும் “இசுரேல்” என்றும் தமிழில் வடமொழி கலக்காமல் செய்துள்ளீர்கள். ( ஸ் சு)

  2. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அது “சும்மா” தான் என்பதை அறிவிப்பதற்கு தான் பத்திரிக்கை வானொலி தொலைக்காட்சி.

    ஈரான் -ஈராக்கு நடந்த ஏழுவருடயுத்ததிலும் சதாம்குசேயின் பக்கமே அமெரிக்க நின்றது. இறுதியில் குசேயினை தூக்கில் ஏற்றியதும் அவர்கள் தான்.குவைத் ஈராக் நிலப்பகுதிக்கு உட்பட்டது என சதாம்முக்கு ஆலோசணை கூறியவர் அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு பிரதிநிதியே!.

    ஐஸ்ஐஸ் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்திற்கு உதவிகள் ஆலோசணைகளை அமெரிக்க உளவுத்துறை வழங்கவில்லை என யாராவது கூறமுடியுமா?

    சாதரண குடிமகனுடை நடத்தையே கங்காணிக்க அரசு ஒரு எண்ணவளமிக்க அரசுடன் எவ்வளவு கரிசரணையாக நடந்து கொள்ளும்?

    இது அமெரிக்கயரசுக்கு மட்டும் பொருத்தமானதல்ல. உலகவளங்களை கொள்ளையிடுகிற எல்லா வல்லரசுகளுக்கும் பொருந்தும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க