privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு

இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு

-

இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்தியா

டந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனான தமது பிழைப்புவாத கூட்டணியை நியாயப்படுத்த, குஜராத்தில் 2,000-க்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப் படுகொலை செய்த சங்க பரிவாரத்தின் தளபதி ‘நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால், ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை தண்டிக்க நடவடிக்கை எடுப்பார்’ என்று மோசடி செய்தனர் மதிமுகவின் வைகோவும், பா.ம.கவின் ராமதாசும். அதன் மூலம் மக்கள் விரோதியான பாஜகவுக்கு அங்கீகாரம் தேடித் தரும் பணியில் தமிழ் மக்களின் துரோகிகளாக ஆனாலும் பரவாயில்லை என்று அலைந்தனர்.

மோடியோ வெற்றி பெற்ற பிறகு தனது பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்து சிறப்பித்தது முதல், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்க மறுப்பது, ஐநா குழுவுக்கு அனுமதி மறுப்பு என்று இலங்கை அரசுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றி வருகிறார். “இலங்கையுடனான வர்த்தக, தொழில் உறவுகளை மேம்படுத்தி, அந்நாட்டை இந்தியாவின் செல்வாக்குக்குள் கொண்டு வருவதுதான் எங்கள் நோக்கம்” என்று பா.ஜ.க பேச்சாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இந்திய தரகு முதலாளிகளின் தொழில் வளர்ச்சிக்கு இலங்கையில் ஏற்பாடு செய்து தருவதே தமது நோக்கம் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின், காங்கிரசுக் கட்சியின் கொள்கைதான் தமது கொள்கை என்பதை தெளிவுபடுத்தி விட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு மாதம் இலங்கை அரசு நடத்தவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சேஷாத்ரி சாரியும், சுப்பிரமணிய சாமியும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். சேஷாத்ரி சாரி “வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் வைகோ, “இந்திய இராணுவத் தளபதிகளும், பா.ஜ.க. குழுவும் இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பது என்பது சகிக்க முடியாத, மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும்.” என்றும் “தமிழர்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவதாகும்“ என்றும், “இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது.” என்றும், “இந்திய அரசின் சார்பில் அவர்கள் தெரிவித்த கருத்து, தாய்த் தமிழ்நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.” என்றும் கூறியிருக்கிறார். ராமதாசோ, “இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது” என்கிறார்.

இந்த இரண்டு பித்தலாட்ட பேர்வழிகளுக்கும் சேஷாத்ரி சாரியும், சுப்பிரமணியசாமியும் பா.ஜ.கவில் இருப்பது தேர்தலுக்கு முன் தெரியாதது போலவும், இப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர்கள் பேசுவதும், செயல்படுவதும் மோடி அரசுக்கு தெரியாமல் நடப்பது போலவும், தாம் பா.ஜ.கவிடம் திறமையாக பேசி, புத்திமதி சொல்லி அரசின் கொள்கையை மாற்றி விடப் போவதாகவும் மோசடி செய்கின்றனர்.

பா.ஜ.கவைச் சேர்ந்த பேராசிரியர் அழகப்பன் மறைவு குறித்து, “பாரதீய ஜனதா கட்சியின் அறிவுச் சிந்தனையாளர்கள் குழுமத்தின் ஆலோசகராகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் அழகப்பன் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் தாங்க முடியாத அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானேன்” என்றும் “ஈழத்தமிழர்களுக்காக பாரதீய ஜனதா கட்சியில் எந்தத் தயக்கமும் இன்றித் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்த ஒரு அறிவாளியை, சிந்தனையாளரை இழந்து தவிக்கின்றோம்.” என்றும் வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பதிலிருந்து பா.ஜ.கவின் இலங்கை குறித்த கொள்கையை கண்டிக்கும் அவரது போலித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாஜக தயவில் சமூக நீதி பேசி பிழைக்கும் வைகோவும், ஆதிக்க சாதிவெறியில் குளிர் காய நினைக்கும் ராமதாசும் இன்னமும் தமிழர், ஈழம் என்று உச்சரிப்பது தமிழினத்துக்கே அவமானம். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பேர்வழிகளே வைகோ ஒரு காமடி பீசு அவர் சொல்வதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்று பகிரங்கமாக பேசுகின்றனர். இதெல்லாம் தேவைதான வைகோ என்று திருச்சி வேலுச்சாமி போன்ற காங்கிரசு நபர்களே கேலி செய்கின்றனர். பாஜகவோ ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல, தமிழக மீனவர்களுக்கும் எதிராகத்தான் அன்றாடம் செயல்பட்டு வருகிறது.

சுப்ரமணிய சாமியோ  பாஜகவின் கொள்கையாளர் குழாமில் அமர்ந்து கொண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை என்று சொல்வது தவறு, அது பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சப்புக் கொட்டியவாறு எள்ளல் செய்கிறார். இருந்தும் பல்வேறு தமிழனக் குழுக்கள் வைகோவையும், ராமதாசையும் போராளிகளாக மேடை ஏற்றி அழகு பார்க்கின்றனர்.

ஏற்கனவே இந்தியாவுக்கான இலங்கைத் தூதர், வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தது நல்லது, அவரை திருத்தி விடுவார்கள் என்று கூறியிருந்தார். உண்மைதான், வைகோ மட்டுமல்ல ராமதாசும் திருந்தி விட்டார்.

மேலும் படிக்க