privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி

வாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி

-

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 5 (இறுதிப் பகுதி) :
கல்விக் கொள்கையும், வரலாற்றுப் பார்வையும்

பாடத்திட்டம்
அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இன்னது எனத் தெரியாமலேயே பாடத் திட்டக் குழு பாடத்திட்டத்தை வகுக்கிறது.

முன்னர் பாடத்திட்டக் குழுவை துவக்கி வைக்க அமைச்சர் வருவார். அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இதுதான் என்று அப்போது அவர் பேசுவார். இப்போதெல்லாம் அதனை துவக்கி வைக்க அரசு செயலரே வருவதில்லை. எனவே அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இன்னது எனத் தெரியாமலேயே பாடத் திட்டக் குழு பாடத்திட்டத்தை வகுக்கிறது. அரசாங்கத்திற்கு மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை தனியாக இல்லை. எனக்கு நெருங்கிய உறவில் இருந்த காரணத்தால் இதனையெல்லாம் எம்.ஜி.ஆரிடமே சொன்னேன். “ஐயா மெட்ரிக் பள்ளிகளை அனுமதித்தால் இலவச கல்வி அழியும், தமிழ் வழிக் கல்வி அழியும்” என்றெல்லாம் எச்சரித்தேன். ஆனால் நிதியில்லை என்று கைவிரித்து விட்டார்.

நம்மிடம் ஒருவழிச் சிந்தனைகள்தான் உள்ளன. மாற்றுச் சிந்தனைகள் வளர வேண்டுமானால் கட்டுப்பாடற்ற கல்விதான் அவசியம். “இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு வரக் கூடாது” என்று உயர் கல்வி இயக்குநர் கட்டளை பிறப்பித்துள்ளார். “ஓட்டுநர் உரிமம் மாணவர்களுக்கு வழங்கக் கூடாது” என்று சட்டம் போடலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு, “மாணவன் டூவீலரில் வந்தால் முதல்வரை இடைநீக்கம் செய்வேன்” என்பது முட்டாள்தனம். கல்வி பயிலும் இடத்தில் ஐந்து மணி நேரமும் இருசக்கர வாகனம் சும்மாதான் இருக்கப் போகிறது. மீதி நேரம் முழுவதும் அவன் சாலையில் தான் போகப் போகிறான். இந்த விதி நான்கு சக்கர காரில் வருபவனுக்கு பொருந்தாதா? வசதியான மாணவன் காரில் வருவதை அரசு தடை செய்யவில்லை.

சோவியத் வகுப்பறை (ஓவியம்)
சோவியத் வகுப்பறை (ஓவியம்)

பெற்றோர்களை வகுப்பறைகளுக்குள் அனுமதிப்பதில்லை. பள்ளி வளாகத்துக்கு வெளியேவே நிறுத்தி அந்நியப்படுத்தி விடுகிறார்கள். இது தவறு.

இங்கிலாந்தில் ஒரு நர்சரி பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கு பதினைந்து குழந்தைகளுக்கு மேல் வகுப்பறையில் கிடையாது. வகுப்பிற்கருகில் அம்மாக்களின் அரட்டை மையம் என்று ஒன்று உள்ளது. அதில் இருக்கும் ஒரு அம்மாவிடம் ஒரு நிமிடம் வகுப்பை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு ஆசிரியர் என்னிடம் பேச வந்தார். அடுத்த ஒரு நிமிடம் கழித்து அவர் மீண்டும் வந்த போது “எப்படி இந்த ராஸ்கல்களை உன்னால் சமாளிக்க முடிகிறது” என்று ஆச்சரியமாக கேட்கிறார் அந்த தாய். “இப்போது உனக்கு எங்களுடைய வேலை புரிகிறதா” என்று அந்த ஆசிரியை அவரிடம் தனது வேலைப்பளுவை புரிய வைக்கிறார்.

சோவியத் ஒன்றியத்தில் எந்த பெற்றோரும் எந்த வகுப்பிலும் சென்று பாடத்தை கவனிக்க உரிமை இருந்தது. நம்மிடம் இரண்டாயிரம் ஆண்டு கால அடிமைப் புத்தி இருப்பதால், நாமே வகுத்துள்ள கட்டுப்பாடுகளை மீறி நடக்கவும், சுதந்திரம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் நமக்கு பல மாற்றங்கள் தேவைப்படும்.

முரளி மனோகர் ஜோஷி - மோடி
முரளி மனோகர் ஜோசி அறிவியல் படித்திருந்துமே தனது மதவாத நம்பிக்கையின் பிடிமானத்தில் இருந்தவர்.

முரளி மனோகர் ஜோசி விட்டுச் சென்ற பணியைத்தான் மோடி அரசின் கல்விக் கொள்கையும் பின்பற்றும். எனவே வேதபாடம் வருவது எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் ஸ்மிருதி இரானிக்கு தங்களது இந்துத்துவா கொள்கை பற்றிய அறிவே முழுமையாக இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமான ஒன்றுதான். அவரது கல்வித் தகுதியை விட கலாச்சார பின்னணிதான் இந்த பதவியை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.  அவர் ஒரு தொலைக்காட்சி நடிகை என்பதை தாண்டி பெரிய அளவில் அனுபவமுள்ளவர் அல்ல. முரளி மனோகர் ஜோசி இயற்பியல் பேராசிரியர், நிரம்ப படித்தவர். சிறுவயதில் இருந்தே இந்துமகா சபாவில் ஜனசங்கில் இருந்தவர். அவர் அறிவியல் படித்திருந்துமே தனது மதவாத நம்பிக்கையின் பிடிமானத்தில் இருந்தவர். அவர் சொல்வதை ஒரு பிடிமானத்தின் அடிப்படையில் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அம்மா சொல்வதெல்லாம் ஒரு கத்துக்குட்டியின் சொல்தான்.

வரலாற்றை மாற்றி எழுத முற்படுவது, வேத கல்வி, சமஸ்கிருத திணிப்பு, இந்தி திணிப்பை எதிர்கொள்ள அல்லது சரிசெய்ய கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். நெருக்கடி காலத்தில் தான் அது பொதுப்பட்டியலுக்கு போனது. இப்போதுதான் நெருக்கடி இல்லையே.

இப்போது கூட தனியார் சட்டக் கல்லூரியை துவங்க கூடாது என தமிழக அரசு சட்டமியற்றுகிறது. இதற்கு மாநில அரசுக்கு உண்மையில் உரிமையில்லை. ஆனால் நீதிமன்றம் இதற்கு தடை போடும். கடைசியில், “நான் முயற்சி செய்தேன் நீதிமன்றம்தான் தடை போட்டு விட்டது” என்று தப்பித்துக் கொள்ளத்தான் மாநில அரசின் இம்முயற்சி உதவப் போகிறது. பெங்களூரு மத்திய சட்டக் கல்லூரியில் மூன்று மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் வீதம் இருந்தும் தமிழ் நாட்டில் இருந்து இரு மாணவர்கள்தான் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட பீகார் மாநிலத்திலிருந்து அதனை விட அதிகமாக இருக்கிறார்கள். மாணவர்களுக்கு நாம் நிறைய வழிகாட்ட வேண்டியிருக்கிறது.

வரலாற்றுக் கல்வி
தன்னைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வதில் இருந்துதான் வரலாற்றை அங்கு கற்றுத் தரத் துவங்குவார்கள்.

வேலை வாய்ப்பை பொறுத்தவரையில் நமது அரசு புதிய வேலைகளை உருவாக்குவதாக இல்லை. சிறுசிறு வேலைகளை உருவாக்க வேண்டும். பெரிய பெரிய கார் கம்பெனிகள் இங்கு தேவையில்லை. காரைக்குடி சிக்கரி உதவியுடன் குன்றக்குடி அடிகளார் குன்றக்குடியில் இதனை சாதித்தார். ஒவ்வொரு வீடும் ஒரு தொழிற்சாலையாக மாறியது. சென்னையிலும் மத்திய தோல்துறை தொழிற்பயிற்சி நிறுவனம் இதற்கு முயற்சி செய்கிறது.

அடுத்து வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதலை கல்வி தர வேண்டும். பைக் ரேசிங் செய்ய முயன்று  கொல்லப்பட்ட அந்த பையனையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு யமஹாதான் வாழ்க்கை என்று நினைத்தான். அதுவே எமகாதகனாக போய் விட்டது. எது வாழ்க்கை என்ற புரிதல் மாணவர்களிடையே இல்லை. அதைக் கற்றுத் தருவதும் கல்வியின் நோக்கம் தான்.

ஊரும் பேரும்
இன்று எத்தனை பேருக்கு தங்களது ஊர் பெயருக்கான காரணம் தெரியும்.

பிரிட்டனில் வரலாற்றை சொல்லித் தருகையில் மாணவனது குடும்ப பின்னணி வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள சொல்லுவார்கள். பாட்டன், முப்பாட்டன் என எந்தளவு செல்ல சாத்தியமோ அதுவரை தன் குடும்ப வரலாற்றை ஆராய சொல்வார்கள். அதில் ஒரு மாணவன் தன் மூதாதையர் செருப்பு தைக்கும் தொழில் செய்தார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்வான். இப்படி தன்னைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வதில் இருந்துதான் வரலாற்றை அங்கு கற்றுத் தரத் துவங்குவார்கள்.

இப்படி சிந்திக்கிறவர்கள் பாடத்திட்டம் வகுக்கும் குழுவில் இருக்க மாட்டார்கள், அல்லது வகுப்பறைகளுக்கு செல்ல மாட்டார்கள் என்பதுதான் இப்போதைய நிலைமை. நம்பிக்கைதான் வரலாறு என்று இப்போது இந்திய வரலாற்று ஆய்வுக் கழக இயக்குநர் கூறியிருப்பது வரலாற்றுக்கான அவரவரது ஊடாடல்களில் ஒன்றே தவிர முழு வரலாறல்ல. உதாரணமாக,  கோத்ரா சம்பவத்தை ஒட்டி, “இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?” என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு. “வைசிராயை சந்தித்தது போல ஆளுபவரைத்தானே அவர் சந்திக்க வேண்டும்” என்று சொன்னால் அவன் வரலாற்று மாணவன் என்றுதான் அர்த்தம். ராமர் பாலம் உண்மை என்றெல்லாம் எழுதி விடுவார்கள் என்று அஞ்ச வேண்டியதில்லை.

வினவுதல்
மாணவன் கேள்வி கேட்பதால் ஏதாவது ஏடாகூடமான கேள்விகள் வந்து விடுமோ என்று நாம் பயப்படுகிறோம்

இன்று எத்தனை பேருக்கு தங்களது ஊர் பெயருக்கான காரணம் தெரியும். ரா.பி. சேதுப்பிள்ளை ஊரும் பேரும் எழுதியதை தொடர்ந்து இதற்கான முயற்சிகள் நடந்தாலும் பெரியளவில் எந்த முயற்சியும் அதன்பிறகு நடைபெறவில்லை. கோயமுத்தூர் மாவட்டத்தில் செட்டிப் பாளையம் பதினைந்தாவது இருக்கும். கவுண்டம் பாளையம் இருக்கிறது, முதலி பாளையம் இருக்கிறது, பெரிய கவுண்டம் பாளையம் இருக்கிறது. சாதியின் பெயரால் ஏன் ஊர் பெயர்கள் ஏற்பட்டன, பாளையம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பாளையம் என்றால் ஒன்றாக வாழும் கூட்டம். ஏன் அப்படி மக்கள் ஒன்றாக கூட்டம்கூட்டமாக வாழ்ந்தார்கள்? இதுதான் வரலாற்றில் விவாதிக்க வேண்டிய விசயம்.
வரலாறு என்பதே கற்பதோ சொல்லிக் கொடுப்பதோ அல்ல, விவாதிப்பது தான். விவாதிப்பதன் மூலம் அவரவர் ஒரு முடிவுக்கு வந்துகொள்ள வேண்டியதுதான். பல பேருக்கு தன் பெயருக்கான காரணம் கூட தெரியாது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள குழந்தைகளுக்கு தன் பெயர்க் காரணம் தெரியும். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் வரும் குழந்தைகளுக்கு அனுஷ்கா, மோனிஷ்கா என வடமொழிப் பெயர்களாகவே இருக்கிறது. இதில் எந்தக் குழந்தைக்கும் தன் பெயர் காரணமும் தெரியாது, அர்த்தமும் தெரியாது.

தீவிரமான காலிஸ்தான் இயக்கம் நடந்த போது அங்கு சில ஆசிரியர்கள் அவர்களது அரசியல் காரணத்துக்காக சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அங்கிருந்தும் அரியானா, தில்லியில் இருந்து அநேகமாக பாதி ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த ஆண்டு தேர்வானார்கள். நான் அங்கு ஒரு கல்லூரிக்கு சென்ற போது பாபர் பற்றிய வகுப்பில் அங்குள்ள நூலகத்தில் அவரைப் பற்றி உள்ள புத்தகங்கள், அவர் பற்றி கட்டுரைகள் வந்துள்ள பத்திரிகைகளை சொல்கிறார் ஆசிரியர். பிறகு குழுக்களாக பிரித்து அதுபற்றி ஆராய்ந்து அறிக்கை தரச் சொல்கிறார். கலைந்து சென்ற மாணவர்கள் பிறகு வந்து அவரவர் அறிக்கையை தருகின்றனர். அதில் எதனை ஏற்கலாம், ஏற்க முடியாது என்பதை விவாதித்து அவர்களையே முடிவு எடுக்க வைக்கிறார். ஒழுங்குபடுத்தும் வேலையை மாத்திரம்தான் ஆசிரியர் மேற்கொள்கிறார்.

இங்கு மாணவன் கேள்வி கேட்பதால் ஏதாவது ஏடாகூடமான கேள்விகள் வந்து விடுமோ என்று நாம் பயப்படுகிறோம். பஞ்சாபில் சாத்தியமானதை இங்கு சாத்தியமாக்க முடியாதா? ஆசிரியர்கள் எப்போதும் கற்பதற்கு தயாராக இருக்க வேண்டும். கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள்தான் ஆசிரியராகவும் இருக்க முடியும். கற்றுக்கொள்வதை நிறுத்தும்போது அவர் ஆசிரியராக இருப்பதற்கான தகுதியையும் இழக்கிறார்.

ss-rajagopalan-2

(நிறைவடைந்தது)

முந்தைய பகுதிகள்

  1. ரசியா,இங்கிலாந்து,பஞ்சாப் இங்குள்ள கல்விச் செய்திகள் உண்மையிலேயே நான் இப்போதுதான் தெரிந்து கொண்டது,மேலும் நான் விரும்புவதும் கூட…நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க