privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஆன்மீகக் கண்காட்சியில் அரசியல் பேசக் கூடாதாம் !

ஆன்மீகக் கண்காட்சியில் அரசியல் பேசக் கூடாதாம் !

-

ஹிந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நுழைவாயிலில் எந்த ‘தீவிரவாதி’யும் நுழையாமல் தடுப்பதற்காக, காவல்துறை அதிநவீன பாதுகாப்பு கருவிகளுடன் அனைவரையும் ஸ்கேன் செய்து அனுப்பிக் கொண்டிருந்தது. தீவிரவாதிகளே கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது போலீசு வெளியே ஸ்கேன் செய்து என்ன பயன்?

பரிசோதனை முடிந்து உள்ளே நுழைந்தால் வலப்பக்க அரங்கில் வந்தே மாதர்ர்ரம்……… என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். அரங்கிற்கு கீழே பலர் அந்த பாடலுக்கு விரைப்பாக நின்று கொண்டிருந்தனர். அதில் ராணுவ உடை அணிந்த ஒரு அணியும் உண்டு. ஒருவேளை மோடிஜி இந்திய ராணுவத்தை அனுப்பி கண்காட்சிக்கு பாதுகாப்பு கொடுத்திருப்பாரோ என்று பார்த்தால், ராணுவ உடையில் வந்து நிற்பது பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்தோம். இந்தியாவின் அநீதியான காஷ்மீர் ஆக்கிரமிப்பு காரணமாக உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அந்த மாணவர்கள், கார்கில் சவப்பட்டி ஊழல் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

நாளைய பாரதம்ஆர்.எஸ்.எஸ் அரங்கத்துக்குள் ஹெட்கேவார், சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்து ‘தலைவர்களின்’ படங்களை வைத்திருந்தார்கள். ஏதோ பாரிமுனை மொத்த சேட்டு வியாபாரிகள் போன்றிருந்த அந்த படங்களுக்காக, அரங்கத்தை கடந்து சென்றவர்களை எல்லாம் கையை பிடித்து இழுக்காத குறையாக, “வாங்கஜி புஷ்பாஞ்சலி செலுத்துவோம்” என்று உள்ளே இழுத்தார்கள்.

உள்ளே சென்றவர்களை “நமஸ்தேஜி, உள்ளே வாங்க”. “நீங்க எந்த ஊருஜி? எங்கள மாதிரி தேஷபக்தர்களை உங்க பகுதியில சந்திக்க விரும்புறீங்களா” என்று கேட்டு நச்சரித்தனர். அதாவது, அந்த பகுதியில் ஷாகா(ஆர்.எஸ்.எஸ் கிளை) ஆரம்பிக்க முயற்சிக்கிறார்களாம், “வேண்டாம்” என்று மறுத்தவர்களை “சரி, பூவாவது போடுங்கஜி” என்று புன்னகையுடன் கட்டளை இட்டனர். அவர்களெல்லாம் பிரிட்டீஷ் காலனியாதிக்கவாதிகளின் ரசிகர்கள் என்பதறியாத சிலர் ஏதோ பொட்டு வைத்த மகான்கள் என்று கடனுக்கு ரெண்டு பூ போட்டார்கள். ஆக அந்த பூ மரியாதை என்பதே ஒரு வித பரிதாபமான முறையில் வரவழைக்கப்பட்டதே.

பள்ளிக் குழந்தைகளுக்கு போட்டி நடத்துகிறோம் என்கிற பெயரில் சிறுவர்களை தனியே ஒதுக்கி வேதம் ஓதச் செய்து கொண்டிருந்தனர். ‘தமிழில் வேதம் ஓதினால் சாமி தீட்டாகிவிடும்’ என்பதால் ஓதுதலில் தமிழ் இல்லை போலும். அதே போல ‘பெண்கள் வேதம் ஓதினால் வேதமே தீட்டாகிவிடும்’ என்பதால் மாணவிகளும் இல்லை. ஆயினும் வேத மந்திர உச்சாடனம் கம்பீரமாகவே ஒலித்தது.

ராஷ்ட்ரியா சேவிகா சமிதிவேதத்திற்கு லாயக்கற்ற பெண் பிள்ளைகளுக்கு கோலம் போடுவது, கும்மி அடிப்பது, பல்லாங்குழி விளையாடுவது என்று தனி விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இது தவிர குடும்பப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறார்களாம். அது என்ன? விளக்கு பூஜைதான். குத்து விளக்கு ஏற்றும் பயற்சி மூலம் பெண்கள் தமது அடிமைத்தனங்களையும், பிரச்சினைகளையும் சடுதியில் களைந்து கொள்ளலாமாம். ஏன், நீண்ட கூந்தலை தலை வாருவது, மருதாணி, நகப் பூச்சு, பூ சூடுதல், நகை அணிதல் போன்ற சிருங்காரங்களையும் பயிற்சியாக கொடுத்து பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்திருக்கலாமே?

அடுத்து, அடக்கம் செய்து பல நூற்றாண்டுகளாகிப் போன சமஸ்கிருதத்திற்கு ஒரு ஸ்டால். நவீன அறிவியல் அனைத்துமே வேதங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்பட்டிருப்பதாக புளியைப் போட்டு விளக்கிகொண்டிருந்தது சமஸ்கிருத பாரதி என்கிற அந்த அரங்கு. சில்வர் நைட்ரைட்டுகே சவால் விடும் வகையில் தங்களது யாக வலிமையின் மூலமாக மழையை வரவழைப்பதாக கூறி வடிவேல் பாணியில் வசூல் செய்து கொண்டிருந்தனர் சில கனவான்கள்.

சங்க பரிவாரம்“இது சமஸ்கிருதத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் முயற்சி. நமது முன்னோர்கள் என்ன சொன்னார்கள், ஒரு கண்ணில் தமிழையும், மற்றொரு கண்ணில் சமஸ்கிருதத்தையும் வைக்கச் சொன்னார்கள். ஆனால் நாம் ரெண்டு கண்களையுமே மூடிவிட்டு இங்கிலீஷில் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ளாததால் தான் கோவிலில் உச்சரிக்கும் மந்திரத்திற்கு அர்த்தம் புரியவில்லை. அது தான் பிரச்சினைக்கு காரணம்” என்று பேசிக் கொண்டிருந்தார் ஒரு அறிஞர். சம்ஸ்கிருதம் படித்து, மந்திரம் கற்று பயிற்சி முடித்து அர்ச்சக மாணவர்கள் சாதியில் பார்ப்பனர்கள் இல்லை என்பதற்காக வேலையற்று நிர்க்கதியாக இருக்கிறார்களே, ஏனென்று கேட்பதற்கு வந்த மக்களுக்கு தெரியாது. இந்த தெரியாததுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் பலம்.

செத்துபோன சமஸ்கிருதத்தை சூத்திரர்களோ பஞ்சமர்களோ கொல்லவில்லை. அடிமைகளுக்கு ஏது நீதிபதி பதவி? பெரும்பான்மை மக்கள் பேசக்கூடாது என்று தடைவிதித்து சம்ஸ்கிருதத்தின் சாவை துரிதப்படுத்தியவர்களே இன்று அதை பேசுமாறு கோருவது வேடிக்கை. தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் பேசும் தமிழை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தீட்டு என்று ஒதுக்குகின்ற பார்ப்பனிய தீண்டாமைக்கு எதிராக போராடாமல், இவர்களே வழக்கொழியச் செய்த சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் இவ்வளவு முக்குகிறது என்றால் இது யாருக்கான அமைப்பு?

விவேகானந்தா கேந்திரத்தின் கடையில் உயரமாக ஒரு பாத்திரம் வைத்து சமையலறை கழிவுகளை கரைத்து ஊற்றினால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஒருவர். அந்த பாத்திரத்தில் ஊற்றுவதற்கு தேவையான அளவு சமையலறைக் கழிவுகள் சாதாரண மக்கள் வீடுகளில் ஒரு போதும் கிடைக்காது. பெரும் பண்ணையார்கள், முதலாளிகள், மடங்கள், பணக்காரர்கள் வீடுகளில்தான் தின்றது போக, கழித்தது போக நிறைய கழிவுகள் இருக்கும். எனவே, இத்தகைய குப்பை சேவை கூட சாதாரண ‘இந்துக்களுக்கு’ கிட்டிவிடாது. எளிய மக்களுக்கு சேவை செய்தால் கணக்கில் கம்மியாகத்தான் வருமென்பதால் விவேகானந்தா கேந்திரம் காஸ்ட்லியான ஹிந்துக்களுக்கு மட்டும் சேவை செய்கிறது போலும்.

கன்னியாகுமரிக்கு அருகில் மீனவர் பகுதிகளில் பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த கேந்திரம் மீனவ மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று விசாரித்ததும் உள்ளே அழைத்துப் போனார் அரங்கத்தில் இருந்தவர்.

ராமேஸ்வரத்தில் மீனவர் வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்திக் கொடுப்பதாக புகைப்படங்களைக் காட்டினார். “சரி, மீனவ மக்களுக்கு என்ன செய்கிறீர்கள், கடலில் மீன் பிடிக்கப் போகும் போது இலங்கை கடற்படையினரால் சுடப்படுகிறார்கள், மீன் பிடி தடைக்காலத்தில் உதவி தேவைப்படுகிறது. இதற்கு என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டால், “அவர்கள் வீடுகளுக்குப் போய் வீடுகளையும், தெருக்களையும் சுத்தமாக பராமரிக்க சொல்லிக் கொடுக்கிறோம்” என்றார். இவர்களைப் பொறுத்த வரை மீன் என்றாலே நாத்தம், குப்பை, கழிவு. மீனவர் வீடுகள் என்றாலே ஏதோ அநாகரிகமான குடியிருப்புகள். உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதாக கிளம்பும் அம்பிகள் எவ்வளவு வன்மத்துடன் நமது மக்களை பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சோறு.

அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து என்று ஒரு பெரிய கடை விரிக்கப்பட்டிருந்தது. அமைப்புக்கு ஒரு தமிழ் பெயர் கூட வைக்காமல் தமிழ்நாட்டில் கடை விரித்திருந்தார்கள். க்ராஹக் என்றால் நுகர்வோர் என்று பொருளாம்.

“நாங்க பல ரிட்டையர்ட் ஆபிசர்ஸ் எல்லாம் இதில இருக்கோம். உங்களுக்கு என்ன பிரச்சனைன்னாலும் நாங்க கையில எடுத்து தீர்த்து வைப்போம். அதுக்காக, உங்க வீட்டில மிக்சி ஓடலை, ஃபேன் ரிப்பேர் போல இல்லாம, கணிசமான பேருக்கான பிரச்சனையா இருக்கணும்” என்று கொள்கை விளக்க பிரகடனம் செய்தார் அங்கு இருந்த பெருசு ஒருவர். பதவியில் இருக்கும் போது அதிகார வர்க்கமாக மக்களை கசக்கிப் பிழிந்த இந்த ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்கிறார்கள் என்று கேட்டால்,

சென்னை மாநகர பேருந்துகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தினார்களாம், சென்னை மாம்பலம் காய்கறி சந்தையில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத எடைக் கற்களை பறிமுதல் செய்து தவறிழைத்தவர்களை தண்டித்தார்களாம், தாம்பரத்தில் நில்லாது சென்ற சோழன் எக்ஸ்பிரசை நின்று செல்லுமாறு உத்தரவிட வைத்தார்களாம், சேலம் இரவு ரயிலை சூப்பர் ஃபாஸ்ட் வகையிலிருந்து எக்ஸ்பிரஸ் வகைக்கு மாற்றினார்களாம் (அதன் மூலம் டிக்கெட்டுக்கு ரூ 20 பயணிகளுக்கு மிச்சமானதாம்). இப்படி இவர்களது நுகர்வோர் நலன்கள் எல்லாம் மாம்பலத்து ‘மக்களுக்காக’ தாம்பரம் ‘சான்றோர்களுக்காக’ மட்டுமே இருந்தன.

கிராஹக் பஞ்சாயத்து
அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து

மேலும் நடவடிக்கைகளும் சாதாரண சிறு வணிகர்கள் மேல் இருந்தன. அம்பானி, டாடா, அதானி போன்ற முதலைகள் மீது நடவடிக்கைகள் எடுப்பீர்களா என்று கேட்டால் அவர் முறைத்து பார்த்தார். மக்கள் சேவையில் அரசியலை கலக்காதீர்கள் என்று பேசினார். கோயம்பேடு கருவாடு விற்பனை கூட இவர்களால் புகார் எழுதி தி இந்து பத்திரிகையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

கூடவே, சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த ஏற்பாடு செய்ததும் இவர்கள்தானாம். “நாங்க ஆர்ப்பாட்டம், போராட்டம்னெல்லாம் போக மாட்டோம். நேரா மினிஸ்டரா பார்த்து பேசினோம். மீட்டர் இல்லாம ஆட்டோ ஓடறதால கஷ்டங்களை பத்தி அமைச்சர் செந்தில் பாலாஜிகிட்ட எடுத்துச் சொன்னோம். ஆட்டோகாரங்க எதிர்ப்பாங்களேன்னு கேட்டார். கடைசியில, அவர சம்மதிக்க வச்சி மீட்டர் கொண்டு வர வைத்து விட்டோம்”, என்றார்கள். இது மட்டும் ‘அம்மா’ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அடுத்த ஆண்டு கண்காட்சிக்கு இடமே கிடைக்காது. பொதுப் போக்குவரத்தின் கஷ்டங்களை சொல்லி அதை தீர்த்து வைத்தால் ஆட்டோவுக்கு அவசியமே இல்லையே, ஏன் அமைச்சரை பார்க்கவில்லை என்றதும் அவர் பதிலேதும் சொல்லவில்லை. பொதுவில் கண்காட்சியில் கேள்வி கேட்பவர்களை அவர்கள் எங்கேயும் விரும்புவதே இல்லை.

வெளியே வந்த போது ஆடிட்டர் குருமூர்த்தி எதிரில் வேகமாக வந்து கொண்டிருந்தார். பேசலாம் என்று அருகில் சென்றோம்.

குருமூர்த்தி
“வேறு வேலை இருக்கு இப்ப அதைப்பத்தி பேச முடியாது”

“உங்க கட்டுரைகளை எல்லாம் ரெகுலரா படிப்பேன், ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதின தினமணி கட்டுரையை கூட படித்தேன். ஒரு சின்ன சந்தேகம்.” என்ன என்று கூட கேட்கவில்லை சொல்லுங்க என்பதை போல தலையை மட்டும் ஆட்டினார்.

“பொருளாதார கொள்கையில் காங்கிரஸ் என்ன செய்ததோ அதையே தான்  பா.ஜ.க-வும் இப்போது செய்கிறது, ஆனால் நீங்க காங்கிரசை மட்டும் எதிர்த்துவிட்டு பா.ஜ.கவை ஆதரித்து எழுதுவது வாசகர்களை ஏமாற்றுவதாகாதா,” என்றதும்,

“வேறு வேலை இருக்கு இப்ப அதைப்பத்தி பேச முடியாது” என்று விறுவிறுவென்று நடந்தார். அரங்கங்களில் இருக்கும் சாதா அம்பிக்களாவது பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில்தான் முறித்துக் கொண்டனர். ஆனால் ஸ்பெஷல் அம்பியான குருமூர்த்தியோ துவக்கத்திலேயே முன்னறிந்து துண்டித்தார். பேசி, எழுதுவதில் மட்டுமல்ல, பேச்சை துண்டிப்பதிலும் ஒரு சாமர்த்தியம் வேண்டுமல்லவா?

கண்காட்சியை நிர்வாக அலுவலக கடையில் ஒருவர் நோட்டிஸ்களுடன் நின்றிருந்தார். “என்ன சார், கண்காட்சியில சாதி சங்கங்களை எல்லாம் சேர்த்திருக்கீங்க, இந்துக்களை பிளவுபடுத்தறத நீங்க ஆதரிக்கிறீங்களா?” என்று கேட்டதும்,

“அப்படி உங்களுக்கு கருத்து இருந்தா தாராளமா சொல்லுங்க, நம்ம குருமூர்த்தி சார் இருக்காரே, அவருதான் இந்த கண்காட்சிய ஏற்பாடு செய்றவரு”

“ஓ, இந்த சுதேசி இயக்கம் எல்லாம் நடத்துவாரே”

“ஆமாமா, நான் கூட அதிலே எல்லாம் வேலை செஞ்சிருக்கேன்”

“என்ன பலன் சார், இப்போ மோடி அரசு வந்ததும் அன்னிய முதலீடுதான் வளர்ச்சின்னு நாட்டை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுறாங்களே, அதை எதிர்த்து குருமூர்த்தி போராடலையே, ஆதரிக்கிறாரே?”

“அதெல்லாம் உடனே செய்ய முடியாது சார். நேரம் பார்த்து தேவைப்படும் போது அதை ஆரம்பிப்போம்.” என்றார். நாட்டு மக்களுக்கு நேரம் சரியில்லை, அவர்களது உணர்வு மட்டம் வளர்ந்து நேரத்தை நல்லதாக்க முனைந்தால் இவர்கள் கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பார்கள் போலும்! அதைத்தான் உடனே செய்ய முடியாது என்று அவர் கூறியிருக்கலாம்.

முந்தைய ஆண்டு கண்காட்சி புகைப்படங்களை ஆல்பமாக வைத்திருந்தார்கள். அதைப் புரட்டி பார்த்தால் தினமலர் பத்திரிகை செய்திகள் நிறைய இருந்தன.

“என்ன சார், தினமலர கொஞ்சம் தட்டிக் கேட்கக் கூடாதா. அவன் போடற ஆபாச படங்கள்லாம் இந்து ஆன்மீக இமேஜூக்கு நல்லதா, கெட்டதா?.”

“ஆமா சார், அவங்க அப்படித்தான். இப்போ ரெண்டு மூணு குரூப்பா பிரிஞ்சிட்டாங்க. அதனால நமக்கும் சப்போர்ட் குறைவுதான். தினமணி, இந்து பத்திரிகை எல்லாம் நல்லா கவர் பண்றாங்க” என்று பார்ப்பனிய ஊடக தருமத்தை விளக்கினார்.

ரதம்
ஹவானா தீவு காக்டெயில் போக கலந்து அடித்திருந்தனர். என்றாலும் எங்கும் ‘இந்து’ உணர்வு ஓடிக் கொண்டிருந்தது.

இந்து ஆன்மீக கம்பெனிகளை ஒரு சுற்றுச் சுற்றினால் சாதி சங்கங்கள், கார்ப்பரேட் மடங்கள், கல்வி நிறுவனங்கள், என்ஜிவோக்கள் தவிர ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்த ராஸ்ட்ரிய சேவிகா சமிதி, லிங்க பைரவி, வேத விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம், அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத், ஹிந்து ஜன ஜாக்ருதி ஸமிதி, ஸனாதன் ஸன்ஸ்தா, சமஸ்கிருத பாரதி, சேவாலயா, பாரத் விகாஸ் பரிஷித், வனவாசி சேவா கேந்திரம் என்று ஹவானா தீவு காக்டெயில் போக கலந்து அடித்திருந்தனர். என்றாலும் எங்கும் ‘இந்து’ உணர்வு ஓடிக் கொண்டிருந்தது.

சரி சந்தைக் கடைகளை பார்த்துவிட்டோம் அடுத்து சந்தைக்கு வந்தவர்களை சந்திக்கலாம் என்று வாயிலருகே வந்தோம். நடுத்தரவர்க்கத்தை தவிர வேறு எந்தப் பிரிவும் இந்த கண்காட்சிக்கு வரவில்லை என்று சொல்லலாம். எதிரே ஒருவர் வந்தார், அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம்.

“கண்காட்சியை பத்தி என்ன நினைக்கிறீங்க சார், இது எந்த வகையில் இந்து மதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்”.

இவர் அக்ரஹாரத் தமிழர் எனவே அவரின் தாய் மொழியான ஆங்கிலத்தில் தான் துவங்கினார்.

“நீங்க பாத்தீங்கன்னா, எனக்கு இந்த நாட்ல வாழவே பயமா இருக்கு, போன வாரம் கூட பாருங்க அம்பத்தூர்ல ஒருத்தரை துடிக்கத் துடிக்க வெட்டி கொன்னுருக்காங்க பாவிங்க, ஆனா போலீஸ் வேற ஏதோ காரணம் சொல்லுது, நேராவே சொல்றனே, ஐ வோட் பார் பி.ஜே.பி, நான் ஆர் எஸ் எஸ் கருத்துக்களோட உடன்படுறேன். நான் பதினஞ்சு வருஷம் குஜராத்ல இருந்தேன். ரெண்டாயிரத்து ரெண்டுக்கு முன்னால நான் இருந்த ஏரியா பூரா முஸ்லீம்ஸ் தான் அதிகம். அங்க இருக்கவே பயமா இருக்கும்! ஆனா அதுக்கப்புறம் பாருங்க அங்க எந்த பிரச்சனையும் இல்ல. இங்க இன்னும் அஞ்சு வருஷத்துல இந்த மாதிரி ஈவேன்ட்லாம் நம்மால நடத்த முடியுமான்னு சந்தேகமா இருக்கு.”

“ஏன் சார் ? ஏன் அப்டி சொல்றீங்க…”

“நோ, ஐ எம் சீரியஸ்லி டெல்லிங், குறிப்பா தமிழ்நாடு அண்ட் கேரளால முஸ்லீம்ஸ் அதிகமாய்டே வர்றாங்க நான் சென்னைக்கு வந்தப்புறம் எய்ட் டைம்ஸ் என்ன மதம் மாத்த ட்ரை பண்ணங்க. நாம தான் நம்ம மதத்தையும் கல்ச்சரையும் காப்பாத்தணும். ஒற்றுமையா இருக்கணும்.”

“ஒரே மதம்னு சொல்றீங்க, ஒத்துமையா இருக்கணும்னு சொல்றீங்க ஆனா உள்ளே பார்த்தால் ஐம்பது சாதி சங்கங்கள் ஸ்டால் போட்ருக்காங்க, இதிலேயே இந்து ஒற்றுமை இல்லையே சார் ?”

“ஸீ, அப்படிதான் இருப்பாங்க ஆனா முஸ்லீம்சுக்கு எதிரா ஒரு பிரச்சனைன்னா ஒன்னா சேர்ந்துப்பாங்க, நீங்க முசாபர் நகர்ல இதை பாத்திருக்கலாம். நமக்கு எதிரிகள் முஸ்லீம்ஸ் அண்ட் கிருஸ்டியன்ஸ் தான். இந்த சாதிகளில் ஒரு சாதி அழிஞ்சு போனாலும் இன்னொரு சாதி மூலம் நம்ம மதம் இருக்கும்ல அதனால சாதி நல்லது தான், பட் அன்டச்சப்ளிட்டி தப்பு.”

“தமிழ்நாடும் கேரளாவும் மட்டும் ஏன் இப்படி இருக்குன்னு நினைக்குறீங்க ?”

அம்பேத்கர் ஸ்டால்
“இந்த சாதிகளில் ஒரு சாதி அழிஞ்சு போனாலும் இன்னொரு சாதி மூலம் நம்ம மதம் இருக்கும்ல அதனால சாதி நல்லது தான்”

“இங்க இருக்குற ஷத்ரியா கேஸ்ட், எல்லாம் ச்சப்பாஸ், இங்க இருக்குற லோ கேஸ்ட் கூட சண்ட போடுவானுங்க, ஆனா முஸ்லீம்ஸ்சை ஒன்னும் பண்ண மாட்டானுங்க. இங்க ஆட்சி பன்றவங்க எல்லாம் டெரர்ரிஸ்ட் சார், கருணாநிதி ஈவன் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரும் எல்லா தீவிரவாதிகளுக்கும் சப்போர்ட் பண்ணுறாங்க. இந்த ரெண்டு மாநிலமும் முஸ்லிம் கொடுமையில் இருந்து தப்பிச்சுட்டாங்க அதனால் அவங்களைப் பத்தி தெரியல! “

“பீஜேபீ…” என்று ஆரம்பிப்பதற்குள் பதில் சொல்லத் தொடங்கி விட்டார்.

“ஒரே மாசத்துல இத செய்யல அத செய்யல அப்டீன்னா எப்டி சார்… ஹி இஸ் நாட் சூப்பர் மேன்…”

“சார் நாங்க அதை கேட்கவில்லை அவங்க ஆட்சில மத்த மதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?”

“ஆகாதுங்க, சீ, வோட் பாலிடிக்ஸ்னு வந்துட்டாலே, எல்லார் வோட்டும் வேணும் அதனால அவங்க கூட ஒன்னும் பண்ண முடியாது, காங்கிரஸ் மாதிரி ஒரு தேசதுரோக கட்சிக்கு மோடி எவ்வளவோ பரவாயில்லை.“

தேசபக்தர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பு துறையில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட இருப்பதை பற்றி கேட்ட போது சத்தியமா எனக்கு விசயமே தெரியாதே, என்று சூடத்தை தேடினார்.

“உங்க பசங்களை கூட்டிட்டு வந்திருக்கீங்களா?”

“பையனை கூப்பிட்டேன், வந்தான் ஆனா அவனுக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல அதனால பாதியிலேயே போய்ட்டான். இப்ப எம்.எஸ்.சி பயோடெக் பண்றான்.”

“இந்து ஆன்மீக கண்காட்சின்னு பெயர் வச்சுருக்காங்க ஆனா உள்ளே மதத்தை பத்தி ஒண்ணுமே இல்லையே நிறைய கடைங்க தான் இருக்கு, இதை எப்படி பாக்குறீங்க ?”

சற்று யோசித்தவர், தனது பையை திறந்து காட்டுகிறார். “நானே சில மெடிசின்ஸ் வாங்கத்தான் வந்தேன். அண்ட் எக்கோ டூரிசம் பத்தி விசாரிச்சுட்டு போலாம்னு, பாருங்க எல்லாத்துலயும் இப்டி நெகட்டிவே பார்க்கக் கூடாது. எதோ நாலு விஷயம் மதத்தை பத்தி மக்களுக்கு போய் சேர்ந்தா அதுவே போதும்.”

அவர் தெரிந்து கொண்ட அந்த நாலு விஷயங்கள் என்னவாக இருக்கும்? சாதி வெறி, முசுலீம் எதிர்ப்பு, மோடி ஆதரவு, பார்ப்பனிய சடங்கு போன்றவை அன்றி வேறென்ன?

பள்ளி வேன்
பல்வேறு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கில் சீருடைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அன்று விடுமுறை என்பதால், பல்வேறு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கில் சீருடைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆன்மிகத்தின் பெயரில் மதவெறி எப்படி சுலபமாக பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு செல்லப்படுகிறது? நடுத்தர வர்க்கத்திடம் மட்டுமல்ல பிஞ்சு நெஞ்சங்களிலும் இந்து பாசிசத்தை விதைப்பது இப்படித் தான். இது தமிழகம் தானா என்று ஒரு கணம் கிள்ளிப்பார்த்துக்கொள்ளும் அளவிற்கு குழந்தைகளை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஸ்டாலிலும் குழந்தைகளுக்கேற்ற மொழியில் மதவெறி நஞ்சை ஊட்டிக்கொண்டிருந்தனர்.

கண்காட்சி என்கிற பெயரில் நடத்தப்பட்ட இது, சங்கப்பரிவார பாசிச கும்பலுக்கு ஒரு விசிட்டிங் கார்ட். பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், இந்து நடுத்தர வர்க்கத்தின் மனதிலும் மதவெறியை விதைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு வாய்த்த களம். இந்த கண்காட்சி முழுவதும் மதவெறியை தூண்டும் வாசகங்களும், காட்சிகளும், படங்களும், விளக்கவுரைகளும் நிரம்பி வழிந்தன. ஒன்றுமே தெரியாத ஒருவன் இந்த அரங்குகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினாலே அவன் இந்துவெறியனாக மாறி விடுவான்.

ஆதிக்க சாதி வெறி சங்கங்களை திரட்டி, ஒன்றுபடுத்தி அதை முசுலீம் எதிர்ப்பாக மாற்றி, நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு கலாச்சாரத்தை மனதில் கொண்டு ‘சேவை’ செய்து அவர்களையும் மதவெறிக்குள் கொண்டு வந்து மொத்தத்தில் தமிழகத்தில் ஒரு கலவரத்திற்கான மனத்தயாரிப்பை கருத்துக்கள் காட்சிகள் பேரில் செய்கிறது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி.

பாஜக ஆட்சி நடைபெறுவதால் வரும் ஆண்டுகளில் இதே அணுகுமுறை இன்னமும் தீவிரமாக நடைபெறும். தமிழகம் அமைதிப்பூங்காவாக நீடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அதை களத்தில் காட்டாவிட்டால் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்தி பேசும் மாநிலங்களின் பிற்போக்குத்தனம் பிரச்சினைகள் அனைத்தும் இங்கேயும் அமலாக்கப்படும். என்ன செய்யப் போகிறோம்?

–    முற்றும்.

–    வினவு செய்தியாளர் குழு.

  1. ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
  2. வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
  3. ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி
  4. ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?
  1. உடனடியாக தமிழக அரசு இந்த ஆன்மீகக் கண்காட்சியை தடை செய்ய வேண்டும் மக்கள் மனதில் மதவெறியை பாரப்பும் யாரக இருந்தாலும் அவனை கைது செய்யாவேண்டும்

  2. vinavu ppl, you have some serious mental disturbances, it may be saffron phobia.. you will be damn frustrated to see the people who your propaganda is aimed at following hinduism and you are taking out it in near filthy language,, Hinduism has seen numerous slanders who can be worse than that ill-minded Ramasamy naikar, always prevailed, hindu ideology will stand forever… better you get treatment for your degeneration…

  3. ஹிந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நுழைவாயிலில் எந்த ‘தீவிரவாதி’யும் நுழையாமல் தடுப்பதற்காக, காவல்துறை அதிநவீன பாதுகாப்பு கருவிகளுடன் அனைவரையும் ஸ்கேன் செய்து அனுப்பிக் கொண்டிருந்தது. தீவிரவாதிகளே கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது போலீசு வெளியே ஸ்கேன் செய்து என்ன பயன்?

  4. DAVID BILL சுப்பரமணி,ரங்கராஜன்,சேஷாத்ரி என்று எதாவது இருக்கும் உன் ஒரிஜினல் பெயரை போட்டு கொள் அம்பி.ஏன் கிறிஸ்தவன் பெயரில் வந்து நடுநிலைமை மாதிரி act கொடுக்கவேண்டாம்.நீங்க எப்போ எப்படி வேஷம் போடுவிங்கனு எங்க தாத்தா பெரியார் சொல்லி இருக்காரு.

  5. //இவர் அக்ரஹாரத் தமிழர் எனவே அவரின் தாய் மொழியான ஆங்கிலத்தில் தான் துவங்கினார்.//
    இத படிச்ச உடனே பறிக்குமார், தும்பி, கேனெசு , பூந்தியன், குணவை கூவா என்று எல்லா பார்ப்புகளும் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.

  6. கட்டுரையை ஆமோதிக்கிறேன். அதே சமயம் நாட்டுப்பற்றை கிண்டலடிக்கும் பழக்கத்தை தவிர்த்தால் நன்றாக இருக்கும். ஆள்பவன் ஊழல் செய்தால் இராணுவத்தில் உயிர் நீத்த வீரரின் உயிரின் மதிப்பு குறைந்து விடுமா என்ன?

    மற்றபடி கட்டுரையின் பெரும்பாலான கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன்.

    ஆங்கிலத்தில் பேசினால் தான் நம்மை மதிப்போர் என்ற எண்ணம் பார்ப்பனர் மனதில் எப்போதும் உண்டு.

    ஜனநாயக நாட்டில் இத்தகைய கண்காட்சிகளை தடுக்க இயலாது. அதே சமயம் மக்களிடம் சாதி, மத, இன வெறியை அகற்றுவதற்கு என்ன வழி என்று யோசிப்போம். முக்கியமாக பள்ளிக்குழந்தைகள் சமூகத்தை பார்க்கும் பார்வையை நாம் சரி செய்ய வேண்டும். இத்தகைய கண்காட்சிகள் RSS இற்கு ஆள் சேர்த்து விடும் வேலையை தான் செய்கின்றன.

    நான் முன்பே வினவின் தோழர்களுக்கு ஒன்றை சொல்லியுள்ளேன். மக்களை நேரடியாக அடைவதற்கு அவர்களுக்கு நேரடியாக சில நன்மைகள் நம் மூலம் கிடைக்க வேண்டும். பின்னர் தானாக அவர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். மாம்பலம், தாம்பரம் மக்களுக்கு இந்த ஒய்வுபெற்றவர்கள் குழு ஏதோ நன்மை செய்துள்ளதை கிண்டல் செய்வதை விட, அதே போல் நாமும் நம் மக்களுக்கு ஏதேனும் பயனுள்ள வகையில் நன்மை கிடைக்க வழி செய்வோம்.

    ஆக்கபூர்வமாக யோசிப்போம், மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் முதலில் மக்களுக்கு நம் மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும். அவர்களுக்கு நம்மால் ஆனா பயன் கிடைத்தால் தான் மக்கள் நம் பக்கம் கவனத்தை திருப்புவார்கள்.

    வெறும் கொடி, கோஷம், போராட்டம், முழு பயன் தராது.
    ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வோம்.

    முன்னரே ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். கம்மியுநிசத்தின் சாரத்தை பறைசாற்ற வேண்டும் என்றால் ஒரு சிறந்த மாடல் மக்களுக்கு ஒரு சிறிய அளவிலாவது நாம் கண்ணில் காட்ட வேண்டும். ஒரு சிறிய தொழில், ஒரு சிறிய தொழிற்சாலை, கம்மியுனிச தோழர்கள் இணைந்து உருவாக்கலாம். அந்த சிறிய தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அந்த தொழிற்சாலையின் பங்குதாரராக இருக்க வேண்டும். அந்த தொழிற்சாலையில் வேலையின் அளவை கொண்டு, உற்பத்தி செய்யும் திறனை வைத்து ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வெறும் மேலாளர் வேலை என்பது அதிக ஊதியத்திற்கான காரணமாக இருக்க கூடாது. ஒரு மாதிரி வடிவ தொழிற்சாலையை நிறுவுங்கள். கம்மியுனிச கோட்பாட்டுடன் சிறப்பாக ஒரு தொழிற்சாலை நடக்குரதேன்று மக்களுக்கு தெரிய வேண்டும். பின்னர் நீங்கள் தனியாக ஆதரவு திரட்ட தேவையில்லை. தானாக மக்கள் ஆதரவு கிடைக்கும்.

    முயற்சித்து தான் பார்ப்போமே.

    • நண்பர் க.கை அவர்களுக்கு,

      இரண்டுமுறையுமே உங்களது கருதுகோள்களை வாசித்திருக்கிறேன். இது குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

      நீங்கள் சுட்டிக்காட்டும் மாடல் சமூக விஞ்ஞானத்தில் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னமே விரிவாக அலசப்பட்டிருக்கிறது (கம்யுனிச கட்சியின் அறிக்கை கற்பனாவாத சோசலிசம் என்றால் என்ன? அது ஏன் நடைமுறையை எதார்தத்தை பிரதிபலிக்கவில்லை என்பதை விளக்கியிருக்கிறது) மேலும் ராபர்ட் ஓவன் நீங்கள் சுட்டிக்காட்டுகிற முறையை அறிமுகப்படுத்தி தோல்வி கண்டவர். தொழிலாளிகளுக்கு வாழ்வை ஏற்படுத்தி தருவதன் மூலமாக மக்கள் தானாகவே சோசலிசத்தை நாடுவார்கள் என்ற கருத்து பொய்யாகிப்போனது. நீங்கள் சுட்டிக்காட்டுகிற மாடல் ஏன் தவறு என்பதற்கான எனது பட்டியல்.

      1. முதலில் நீங்கள் சொல்வதைச் செய்வதற்கு கம்யுனிச தத்துவமோ அல்லது கம்யுனிஸ்டுகளோ தேவையில்லை.

      2. ஏனெனில் சில முதலாளிகளை நல்மனம் படைத்தவர்களாக மாற்றுவதன் மூலமாகவே தாங்கள் சொல்வதைச் செய்யமுடியும். அதாவது ராபர்ட் ஓவன் போன்ற ஆட்களை உருவாக்குவது மிகவும் எளிதான காரியமாகும்.

      3. ஆனால் ராபர்ட் ஓவன் போன்ற முதலாளிகளை உருவாக்குவது உங்களது நோக்கமும் அல்ல. ஏனெனில் உங்களது மாடலில் நீங்கள் கம்யுனிச சித்தாந்தத்தை நடைமுறைபடுத்தச் சொல்லியிருக்கிறீர்கள்.

      4. அப்படியானால் சுற்றிவந்து தாங்கள் சொல்லவருவது முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்து என்பதுதான்.

      இப்பொழுது இன்னொன்றையும் கவனியுங்கள். ஒரு சிறு தொழிற்சாலை என்பதைவிட முதலாளிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் பங்குச்சந்தையில் மக்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது மக்களே முதலாளிகள் என்று சொல்கிறார்கள். ஒரு தொழிலாளி ஹோண்டாவின் பங்குகளை 10ரூபாய் என்ற வீதம் பத்தாண்டுகளுக்கு முன்னே வாங்கியிருந்தால் இன்றைக்கு அவன் கோடிஸ்வரன் என்று சொல்கிறது நிப்டி. நீங்கள் சொல்கிற மாடலை விட இது ஏதோ சுலபமானதாக இருப்பதைப்போல் தெரிகிறதே!! இந்தமாடல் சரியா? தவறு எனில் எப்படித் தவறு?

      • தென்றல் அவர்களே,

        பங்கு சந்தை என்பது சூதாட்டம் போன்றது.

        நான் குறிப்பிட்டது ஒரு சிறந்த மாடல் தொழிற்சாலை.

        தொழிலாளர் நலனும் பேணப்படவேண்டும்.
        இலாபமும் பார்க்க வேண்டும்.
        நிர்வாகமும் சீராக இருக்க வேண்டும்.

        கம்மியுனிசம் என்று நான் குறிப்பிட்டது முதலாளி, தொழிலாளி என்ற முறையிலல்லாது அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைவரும் முதலாளிகள், அனைவருக்கும் சீரான வருமானம் இதை கொண்டு வர முயலலாம்.

        மக்களிடம் ஒரு வெற்றிகரமான மாடலை நாம் காட்ட வேண்டும்.

        என்னை பொறுத்தவரை இது நடைமுறையில் நிச்சயம் சாத்தியமே.

        எனக்கு வசதி இருந்தால் நானே அப்படிப்பட்ட தொழிற்சாலையை ஆரம்பிப்பேன். அதற்கு இன்னும் பல காலம் ஆகும்.

        • நண்பர் க.கை அவர்களுக்கு,

          பங்குச்சந்தை சூதாட்டம் போன்றது என்பது சரியான புரிதல். கறாராக சொல்வதென்றால் ‘போன்றது’ என்று சொல்லத்தேவையில்லை. பங்குச்சந்தை முழுக்க முழுக்க சூதாட்டம் தான். சரி; நமது விசயத்திற்கு வருவோம்.

          தாங்கள் சுட்டிக்காட்டிய மாடல்-தொழிற்சாலை அமைவது சாத்தியமற்றது என்று சொல்லவரவில்லை. நீங்கள் கூறுவது முழுக்கவும் சாத்தியம். ஆனால் அது அடைகிற பலன்கள் என்ன என்பதுதான் கேள்வி; இது ஏன் தோல்வி அடைந்தது என்பதற்கு நமக்கு சித்தாந்தம் மட்டுமல்ல; நீண்ட நெடிய வரலாற்றுத் தரவுகளும் உண்டு.

          எப்படி தோல்வியென்று கேட்டிருக்கிறீர்கள். ராபர்ட் ஓவன் செய்த நற்பணிகள் மற்றும் அதன் நிலை என்ன என்பது எங்கெல்சின் கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் என்ற படைப்பில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த பின்னூட்டத்தில் இப்பகுதியை பிரதியெடுத்து வைத்திருக்கிறேன். இதை நீங்கள் வாசித்து உங்களது பார்வையை முன்வைக்கவும்.

        • ராபர்ட் ஓவனின் சோசலிச நடவடிக்கைகளின் தன்மைகள்:

          ஏங்கெல்சின் “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற படைப்பில் இருந்து (https://www.marxists.org/tamil/marx/1880/soc-utop/ch01.htm)
          ——————————————————————————-

          “ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், புதிய கருவித் தயாரிப்பு எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. பட்டறைத் தொழில் காலத்தில் மந்த கதியில் நடைபோட்டு வந்த வளர்ச்சி, உற்பத்தியில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமாக மாறியது. சமுதாயம் பெரு முதலாளிகளாகவும் உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுறுவது, தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வேகத்தில் நிகழ்ந்தது. இவ்விரு வர்க்கங்களுக்கும் இடையில், முன்பிருந்த நிலையான நடுத்தர வர்க்கத்துக்குப் பதிலாகக் கைவினைத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் அடங்கிய ஒரு நிலையற்ற மக்கள் திரள் இடம்பெற்றது. மக்களில் மிகவும் ஊசலாட்டமான பகுதியினரான இவர்கள் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கை நடத்தினர்.

          புதிய உற்பத்தி முறை அதன் ஏறுமுகத்தின் தொடக்க நிலையிலேதான் இன்னமும் இருந்தது. இப்போது அதுதான் இயல்பான, முறையான உற்பத்தி முறையாக இருந்தது. தற்போதைய நிலைமைகளில் சாத்தியமான ஒரேவொரு உற்பத்தி முறையாகவும் இருந்தது. எனினும், இந்த நிலையிலுங்கூட அது மிக மோசமான சமூகக் கேடுகளை உண்டாக்கி வந்தது. வசிக்க வீடில்லாத மக்கள் கூட்டம், பெரிய நகரங்களின் படுமோசமான குடியிருப்புகளில் மந்தைகளாக அடைபட்டுக் கிடந்தனர். மரபு வழியிலான அனைத்து ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளும், குடும்பத் தலைவருக்குக் கீழ்ப்படிதலும், குடும்பப் பிணைப்புகளும் தளர்ந்து போயின. மிகுதியான வேலைப்பளு, முக்கியமாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தும் அளவுக்கு இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தினர், நாட்டுப்புறத்திலிருந்து நகரத்துக்கும், விவசாயத்திலிருந்து நவீனத் தொழில்துறைக்கும், நிலையான வாழ்க்கை நிலைமைகளிலிருந்து நாள்தோறும் மாறுகின்ற பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகளுக்குமாக, முற்றிலும் புதிய நிலைமைகளுக்குள் திடீரெனத் தூக்கியெறியப்பட்டு, முழுதும் நம்பிக்கை இழந்தோராயினர்.

          இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஓர் ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார். ஏறத்தாழ குழந்தையைப் போன்ற எளிய உன்னதப் பண்புகள் கொண்ட ஒரு மனிதர். அதேவேளையில், மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர். இராபர்ட் ஓவன் பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்களின் போதனையை ஏற்றுக் கொண்டவர். அதாவது, மனிதனின் பண்பியல்பு, ஒருபுறம் மரபுவழியிலும், மறுபுறம் அத்தனிநபரின் ஆயுள்காலத்தில் அதிலும் முக்கியமாக அவனுடைய வளர்ச்சிக் கட்டத்தில் நிலவுகின்ற சூழ்நிலையாலும் உருவாக்கப்படுகின்றது. அவர்சார்ந்த வர்க்கத்தினரில் மிகப்பலர் தொழில்புரட்சியில் குளறுபடியையும், குழப்பத்தையும், குழம்பிய குட்டையில் மீன்பிடித்து, குறுகிய காலத்தில் பெருஞ்செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பையுமே கண்ணுற்றனர். ஓவனோ தன்னுடைய மிகவிருப்பமான கொள்கையை நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் குளறுபடியிலிருந்து ஒழுங்கை நிலைநாட்ட, இந்தத் தொழில்புரட்சியில் நல்வாய்ப்பு இருப்பதைக் கண்டார். ஏற்கெனவே மான்செஸ்டர் ஆலை ஒன்றில் ஐந்நூறுக்கு மேற்பட்டோரின் மேலாளராக இருந்தபோது, அவருடைய கொள்கையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். [அதன்பின்] 1800-லிருந்து 1829 வரையில், ஸ்காட்லாந்தில் நியூ லானார்க் என்னும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாக இருந்துகொண்டு, அதே வழிமுறைகளில், ஆனால் மேலும் அதிக சுதந்திரத்துடன் அப்பஞ்சாலையை வழிநடத்தி வெற்றி கண்டார். அவ்வெற்றி ஐரோப்பிய அளவில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. தொடக்கத்தில், மிகவும் மாறுபட்ட தன்மை கொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப் போன மனிதர்களைக் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற ஒரு மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரியான குடியிருப்பாக மாற்றிக் காட்டினார். அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை இவைபற்றி அறிந்ததில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் முக்கியமாக வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் ஓவன் இதனைச் சாதித்தார். அவர்தான் குழந்தைப் பள்ளிகளைத் தோற்றுவித்த முன்னோடி. முதன்முதலாக நியூ லானார்க்கில் அவற்றை அறிமுகப்படுத்தினார். இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வராதபடி, அந்த அளவுக்கு அங்கே அவர்கள் ஆனந்தமாக இருந்தனர். ஓவனின் போட்டியாளர்கள் தங்கள் தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு 13, 14 மணிநேரம் வேலை வாங்கியபோது, நியூ லானார்க்கில் வேலைநாள் பத்தரை மணிநேரம் கொண்டதாகவே இருந்தது. ஒருமுறை பருத்திப் பற்றாக்குறையால் நான்கு மாத காலம் பஞ்சாலையில் வேலை நிறுத்தப்பட்டபோது, ஓவனின் தொழிலாளர்கள் எல்லாக் காலத்துக்கும் முழுச் சம்பளம் பெற்றனர். இவ்வளவும் இருந்தபோதும், ஆலையின் வணிக மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாகப் பெருகியது. இறுதிவரை ஆலையின் உடைமையாளர்களுக்கு மிகுந்த இலாபத்தை அளித்து வந்தது.

          இத்தனைக்குப் பிறகும் ஓவன் மனநிறைவு அடையவில்லை. தன்னுடைய தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த வாழ்க்கை, அவர் பார்வையில், மனிதர்களுக்குத் தகுதியான வாழ்விலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவே பட்டது. ”இம்மக்கள் என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்.” தன்னுடைய தொழிலாளர்களுக்கு ஓவன் வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே அவை இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாகச் செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன. ”இருந்த போதிலும், இந்த 2,500 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி, சமுதாயத்துக்கு நாள்தோறும் உற்பத்தி செய்து வருகின்ற உண்மையான செல்வத்தின் அளவுக்கு, அரை நூற்றாண்டுக்கும் குறைவான காலத்துக்கு முன்பு உற்பத்தி செய்திட, 6,00,000 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி தேவைப்பட்டிருக்கும். [இன்று] 2,500 பேர் நுகர்ந்த செல்வத்துக்கும், [அன்று] 6,00,000 பேர் நுகர்ந்திருக்கக்கூடிய செல்வத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு, [அவ்வகையில் மீந்திருக்க வேண்டிய செல்வம்] என்ன ஆயிற்று என என்னை நானே கேட்டுக் கொண்டேன்” [என்று ஓவன் எழுதினார்].

          விடை தெளிவானது. ஆலையின் உடைமையாளர்களுக்கு, அவர்கள் போட்ட மூலதனத்துக்கான 5 சதவீதத் தொகையையும், அதோடு சேர்த்து 3,00,000 பவுண்டுகளுக்கு மேற்பட்ட நிகர இலாபத்தையும் வழங்குவதற்காக இச்செல்வம் பயன்படுத்தப்பட்டுவிட்டது. நியூ லானார்க் ஆலைக்குக் கூறப்பட்ட இந்த உண்மை, இங்கிலாந்திலுள்ள அனைத்து ஆலைகளுக்கும் இன்னும் அதிக அளவுக்குப் பொருந்துவதாக இருந்தது.

          ”எந்திரச் சாதனங்கள், சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட நிலையிலும், இந்தப் புதிய செல்வத்தைப் படைக்காமல் இருந்திருப்பின், நெப்போலியனுக்கு எதிராகவும், சமுதாயத்தின் பிரபுக்குலக் கோட்பாடுகளை ஆதரித்தும், ஐரோப்பாவில் நடத்தப்பட்ட யுத்ததங்களைத் தொடர்ந்து நடத்த முடிந்திருக்காது. என்றாலும், இந்தப் புதிய சக்தி உழைக்கும் வர்க்கங்களின் படைப்பாகும்.” [குறிப்பு 1.சி., பக்கம் 22]. எனவே, இந்தப் புதிய சக்தியின் பலன்கள் அவர்களுக்கே உரியனவாகும். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரம்மாண்ட உற்பத்தி சக்திகள், இதுநாள்வரை தனிநபர்களைச் செழிப்பாக்கவும், சாதாரண மக்களை அடிமையாக்கவுமே பயன்படுத்தப்பட்டன. ஓவனுக்கோ அவை சமுதாயத்தின் மறுகட்டமைப்புக்கான அடித்தளங்களை நல்கின. அனைவரின் பொதுச் சொத்தாகவும், அனைவரின் பொது நன்மைக்காகச் செயல்படுத்தப்படப் போகிற சக்திகளாகவும் அமைந்தன.

          ஓவனுடைய கம்யூனிசம் முற்றிலும் இந்தத் தொழில்முறை அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். வணிகக் கணக்கீட்டின் விளைவு எனக் கூறலாம். இறுதிவரை, இந்த நடைமுறை சார்ந்த தன்மையை அது தொடர்ந்து மெய்ப்பித்து வந்தது. இவ்வாறு, 1823-இல் ஓவன் அயர்லாந்தில் கம்யூனிசக் குடியிருப்புகள் மூலம், [மக்களின்] இன்னல் களைவதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தக் குடியிருப்புகளை அமைப்பதற்கான செலவு, [பராமரிப்புக்கான] ஆண்டுச் செலவினங்கள், அனேகமாக [அதிலிருந்து பெறப்படும்] வருமானம் ஆகியவை அடங்கிய முழுமையான திட்ட மதிப்பீடுகளை வகுத்திட்டார். வருங்காலத்துக்கான அவருடைய வரையறுக்கப்பட்ட திட்டத்தில், விவரங்களின் நுட்பமான வரையறுப்புகள், அப்படியொரு நடைமுறை அனுபவ அறிவுடன் கையாளப்பட்டுள்ளன. அடித்தளத் திட்டம், முன்புறக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, மேலிருந்து நோக்கும் பொதுவான காட்சி என அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. சமூகச் சீர்திருத்தத்துக்கான ஓவனின் வழிமுறையை ஏற்றுக் கொண்டால், அவர் உள்ளபடியே முன்வைத்துள்ள விவரங்களின் ஒழுங்கமைப்புக்கு எதிராக, நடைமுறைக் கண்ணோட்டத்திலிருந்து சொல்வதற்கு ஏதுமில்லை.

          கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. முக்கியமாகச் சமூகச் சீர்திருத்தத்துக்கான பாதையைத் தடுக்கும் மூன்று பெரும் தடைகள் அவருக்குத் தென்பட்டன: தனியார் சொத்துடைமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம். இவற்றின்மீது தாக்குதல் தொடுத்தால் தாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என ஓவன் அறிந்து வைத்திருந்தார். சட்டப் பாதுகாப்பின்மை, அதிகாரபூர்வ சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், தம்முடைய முழுமையான சமூக அந்தஸ்தையே இழத்தல் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் விளைவுகள் பற்றிய அச்சமின்றி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்து இவற்றுள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. [இவ்வாறுதான் நடக்குமென] அவர் முன்னறிந்தபடியே நிகழ்ந்தது. பத்திரிகைகளில் அவருக்கு எதிரான மௌனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்து நொடித்துப் போனார். நேரடியாகத் தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் அவர்களிடையே பணியாற்றினார். [அக்காலகட்டத்தில்] இங்கிலாந்தில் தொழிலாளர்கள் சார்பிலான ஒவ்வொரு சமூக இயக்கமும், ஒவ்வொரு மெய்யான முன்னேற்றமும் இராபர்ட் ஓவனின் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளன. தொழில்கூடங்களில் பெண்கள், குழந்தைகளின் வேலைநேரத்துக்கு வரம்பு விதித்த முதலாவது சட்டத்தை[37], ஐந்து ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின், 1819-இல் நிர்ப்பந்தம் கொடுத்து. நிறைவேறச் செய்தார். இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒரே மாபெரும் தொழிற்சங்க கூட்டமைப்பாக இணைந்து நடத்திய முதலாவது காங்கிரசின் தலைவராக இருந்தார்[38]. சமுதாயத்தின் முழுமையான கம்யூனிசவழி அமைப்புமுறைக்குரிய இடைக்கால நடவடிக்கைகளாக, ஒருபுறம் சில்லறை வணிகத்துக்கும் உற்பத்திக்குமாகக் கூட்டுறவுக் கழகங்களை ஓவன் அறிமுகப்படுத்தினார். அக்காலகட்டம் முதலாக, குறைந்தது அவை வியாபாரிகளும் ஆலையதிபர்களும் சமூக ரீதியாகச் சிறிதும் தேவையற்றவர்கள் என்பதற்கான நடைமுறை நிரூபணத்தை வழங்கின. மறுபுறம், தொழிலாளர்களின் உற்பத்திப் பொருள்களை உழைப்பு-நோட்டுகளுக்குப் பரிவர்த்தனை செய்துகொள்ள உழைப்புக் கடைவீதிகளை[39] அவர் அறிமுகப்படுத்தினார். இந்த உழைப்பு-நோட்டுகளின் அலகு ஒரு மணிநேர வேலை ஆகும். இந்த நிறுவனங்களின் தோல்வி நிச்சயமாகத் தவிர்க்கமுடியாத ஒன்று என்றாலும், மிகவும் பிந்தைய ஒரு காலகட்டத்தில் புரூதோனின் (Proudhon) பரிவர்த்தனை வங்கி[40] அமைக்கப்படுவதற்கு இவை முழு அளவில் முன்னோடியாக விளங்கின. [புரூதோனின் வங்கியைப்போல] இவை சமூகக் கேடுகள் அனைத்துக்கும் சஞ்சீவி மருந்தெனக் கூறிக் கொள்ளவில்லை. ஆனால் சமுதாயத்தை மேலும் தீவிரமாக மாற்றியமைப்பதற்கான முதலாவது முயற்சி மட்டுமே. அந்த வகையில், ஓவனின் நிறுவனங்கள் புரூதோனின் வங்கியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்கின.

          கற்பனாவாதிகளின் சிந்தனை முறை 19-ஆம் நூற்றாண்டின் சோஷலிசக் கருத்துக்களின் மீது நீண்ட காலத்துக்கு ஆளுமை செலுத்தி வந்தது. அவற்றுள் சிலவற்றின் மீது இன்னமும் ஆளுமை செலுத்தி வருகிறது. மிக அண்மைக் காலம்வரை ஃபிரெஞ்சு, ஆங்கில சோஷலிஸ்டுகள் அனைவரும் இவ்வகைச் சிந்தனை முறைக்கு வழிபாடு செய்துவந்தனர். வைட்லிங்கின் (Weitling) சிந்தனை உட்பட, முற்பட்ட ஜெர்மன் கம்யூனிசம் இதே சிந்தனை மரபைச் சேர்ந்ததுதான். இவர்கள் அனைவருக்கும் சோஷலிசம் என்பது முற்றான உண்மை (absolute truth), பகுத்தறிவு, நீதி ஆகியவற்றின் வெளிப்பாடாகும். சோஷலிசம் தன் சொந்த சக்தியின் சிறப்புத் தன்மையாலேயே அனைத்துலகையும் வெற்றிகொள்ள அதனைக் கண்டுபிடித்துச் சொன்னாலே போதும். முற்றான உண்மை என்ற வகையில் அது காலம், இடம், மனிதனுடைய வரலாற்று ரீதியான வளர்ச்சி ஆகியவற்றைச் சார்ந்திருக்கவில்லை. எப்போது, எங்கே அது கண்டுபிடிக்கப்படுகிறது என்பது வெறும் தற்செயல் நிகழ்ச்சியே ஆகும். இவ்வளவு இருந்தும்கூட முற்றான உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகியவை வெவ்வேறு சிந்தனை மரபுகள் ஒவ்வொன்றின் நிறுவனருக்கும் வெவ்வேறு வகையினதாகவே இருக்கின்றன. ஒவ்வொருவருடைய விசேஷ வகைப்பட்ட முற்றான உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகியவை மீண்டும், அவருடைய அகவயப் புரிதல், அவருடைய வாழ்க்கை நிலைமைகள், அவருடைய அறிவின் ஆழம், அவருடைய மதிநுட்பப் பயிற்சி ஆகியவற்றால் தாக்கம் பெறுகின்றன. இந்தக் காரணத்தால், இந்த முற்றான உண்மைகள் [தமக்குள் பொதுக் கூறுகள் எதுவுமின்றி] ஒன்றையொன்று பரஸ்பரம் விலக்கி வைப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் வந்தடைவது சாத்தியமன்று. எனவே, இதிலிருந்து ஒருவகையான கதம்பவாத, சராசரி சோஷலிசத்தைத் தவிர வேறெதுவும் தோன்ற வழியில்லை. உண்மையில் பார்க்கப் போனால், இத்தகைய ஒரு சோஷலிசம்தான் ஃபிரான்சிலும் இங்கிலாந்திலும் மிகப் பெரும்பாலான சோஷலிஸ்டுத் தொழிலாளர்களின் உள்ளங்களை இன்றைய நாள்வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, இது, மிகப் பன்முகக் கருத்துச் சாயல்களுக்கும் இடம்தரும் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு; வேறுபட்ட குழுக்களின் நிறுவனர்களால் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச எதிர்ப்பைத் தூண்டும்படியான அத்தகு விமர்சன அறிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், வருங்காலச் சமுதாயம் குறித்த சித்திரங்கள் ஆகியவற்றின் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு; [பல்வேறு சிந்தனைகளில் அடங்கியிருந்த] தனிப்பட்ட உள்ளடக்கக் கூறுகளின் மிகத் தெளிவான கூர்முனைகள், நீரோடையில் உருண்டு மழுங்கிய கூழாங்கற்களைப் போல, விவாத நீரோட்டத்தில் மழுங்கடிக்கப்பட்டு, மிக எளிதில் கலந்து உருவாக்கப்பட்ட குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு.

          சோஷலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க, முதலில் அதை [கற்பனை அல்லாத] ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது.”

      • தென்றல் அவர்களே,

        பங்கு சந்தை விவகாரங்களில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை.

        நான் கூறிய அந்த மாடல் ஏன் தோல்வியை தழுவும் என்று நினைக்கிறீர்கள்?

        • //பங்கு சந்தை விவகாரங்களில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை.//

          I would suggest you to learn, how this stock market thingy came to picture?
          How it evolved, what problems it addressed?

          Then proposing an alternate model would be beneficial to everybody.

          //பங்கு சந்தை என்பது சூதாட்டம் போன்றது.//

          Storing 1kg rice for tomorrow is also a bet that you will live tomorrow.

          While taking a bus you bet you will reach safely to the destination.

          In stock market , you can bet on growth stocks or take ownership in profit and get dividends

          //நான் கூறிய அந்த மாடல் ஏன் தோல்வியை தழுவும் என்று நினைக்கிறீர்கள்?//

          In your ideal factory, if one employee wants to go back to his village for his personal reason, What should he do?

          When share holding laborers retire, how will new employees will join?

          When factory doesnt make profit how will they survive?

          Lets say if your factory has to break even it will take 5 years, how will the share holding employees survive?

    • க.கை,

      தென்றல் அவர்களின் பதிலுடன் என் பங்கிற்கு இந்த பின்னூட்டம்.

      //மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் முதலில் மக்களுக்கு நம் மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும். ***//

      கிட்டத்தட்ட 10 மாதங்களாக வினவினால் மற்றும் தோழர்களால் உங்களின் ஆரம்ப நிலையிலிருந்து இம்மியளவும் நகர்த்த முடியவில்லை என்பதை உங்களின் இந்த பின்னூட்டம் காட்டுகிறது.

      //ஒரு சிறிய தொழிற்சாலை, கம்மியுனிச தோழர்கள் இணைந்து உருவாக்கலாம்.***//

      முதலில் இது போன்ற முயற்சிக்கு அதிகார வர்க்கத்திலிருந்து 1000க் கணக்கான தடைகள் வரும் என்பதை உங்களால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

      நமது முந்தைய உரையாடலில் இலங்கையிலிருந்து திருப்பியனுப்ப்பட்ட மலையக தமிழர்களின் முயற்சியைப்பற்றி கூறியிருந்தேன். அவர்கள் தங்களுக்கு தமிழகத்தின் மலைக்காடுகளில் இடம் குத்தகைக்குக் கேட்டு அரசினால் கண்டுகொள்ளப் படவில்லை. தனியார் முதலைகளுக்குத்தான் இடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் மீண்டும் கொத்தடிமைகளாகத் தான் மாற்றப்பட்டார்கள். மற்றுமொரு எ.கா இங்கே எனக்கு நினைவு வருகிறது. ஆங்கிலேயர் காலத்திய தமிழக தலித் தலைவர் ஒருவர். எம் சி ராஜா வாக இருக்கலாம். தோல் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவை சங்கம் அமைத்து சிறப்பான முறையில் வணிகம் செய்து வந்தார்கள். சுதந்திரம் கிடைத்தவுடன் அதிகார வர்க்கம் அந்த சங்கத்தை வலுக்கட்டாயமாக அரசுடைமையாக்கி சிறிது காலத்திலேயே அதை சீரழித்தது. இதைப்பற்றி மேலதிக தகவல் ஒரிரு நாட்களில் தருகிறேன்.

      ஒரு 100 தோழர்கள் சேரந்து ஒரு தொழிற்சாலை நன்கு தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்கு வெற்றி கரமாக நடத்துகிறார்கள் என்றே கொள்வோம். மற்ற எல்லா துறைகளிலும் உள்ள மற்ற தோழர்கள் அந்தந்த தொழில்களை விட்டு விட்டு இவர்களுடன் இணைந்து கொள்ள முடியுமா?
      நான் முன்னரே உங்களுக்குச் சொன்னதைப்போல நாங்கள் எல்லோருக்குமான தீர்வை நோக்கியுள்ளோம். சிலரின் தீர்வுகளுக்காக அல்ல.

      (பி.கு. வியாசனிடம் மெனக்கெடும் நீங்கள் தென்றல் வைத்த வேண்டுகோளுக்கு ஒரு வரி பதிலைக்கூட தரவில்லை.)

  7. இதை போல் நிறைய article பார்ப்பதால் வினவுக்கும் மற்ற வாசகர்களுக்கும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

    உங்கள் கருத்தில், ஒரு பார்பனன் நல்ல மனிதனாக இருக்க முடியுமா? மற்ற மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதித்து, நடுவில் இந்து மதம் அடைந்த கேவலமான நிலைமையை நினைத்து வெட்கி, சாதிய கொடுமை, பெண் கொடுமை, அரசாங்கத்தின் தவறான முடிவுக்கு எதிராக போராடும் ஒரு சராசரி தேச பற்றுள்ள இந்தியனாக இருப்பது சாத்தியம் என்று நம்புகீர்களா? இல்லை என்றால் எதனால் என்று கூற முடியுமா?

    • சந்துரு,

      உங்களது கேள்விக்கு பதில் தர முயற்சி செய்கிறேன். தோழர்கள்/நண்பர்கள் வேறு விளக்கங்கள் அளித்தாலும் நன்று.

      ஒருப் பார்ப்பனன் நல்ல மனிதனாக இருக்க முடியுமா?
      பொதுவாக பார்ப்பனர் என்று நாம் தமிழில் விளிப்பது பிராமணர்கள் மட்டுமல்ல, இந்த கீழிருந்து மேல் மற்றும் மேலிருந்து கீழ் என்ற இந்த சாதிய அடுக்குமுறையை தூக்கிப் பிடிப்பவர் எவராயினும் அவர்கள் பார்ப்பனர்களே.

      ஆனால் குறிப்பிட்ட வரையில், இந்த ஒடுக்குமுறைக்கு ஒரு சித்தாந்தம் வகுத்துக் கொடுத்த முறையில், அந்த சித்தாந்தத்திற்கு பல்வேறு விளக்கங்கள் கொடுத்து அதை நீட்டிக்க செய்யும் நிலையில், பார்ப்பன எதிர்ப்பு என்ற வட்டத்தில், பிராமணர்களுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

      ஒருவன் தன்னளவில்,தனிப்பட்ட முறையில் நல்லவனாக இருப்பது ஏட்டில் படிப்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் சமூகத்தை நேசிக்காத ஒரு மனிதன் நல்லவனாக இருக்க முடியாது. இங்கே நேசித்தல் என்பது தன்னைப் போலவே பிறரையும் கருதுதல் அதாவது ஒட்டு மொத்த சமூகத்தையும் நேசித்தல். இப்படிபட்ட மனிதன் அதாவது சமூகத்தை நேசிக்கும், சுரண்டல் முறையை எதிர்க்கும் மனிதன் கண்டிப்பாக, வருண பேதத்தை ஏற்க முடியாது. அதனால் அவன் கண்டிப்பாக பார்ப்பனராக இருக்க முடியாது.

      அதாவது , ஒருவன் தன்னளவில், அதாவது தாங்கள் சொல்வது போல, //மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதித்து, நடுவில் இந்து மதம் அடைந்த கேவலமான நிலைமையை நினைத்து வெட்கி, சாதிய கொடுமை, பெண் கொடுமை, அரசாங்கத்தின் தவறான முடிவுக்கு எதிராக போராடும் ஒரு சராசரி தேச பற்றுள்ள இந்தியனாக // இருக்கும் நிலையில் அவர் ஒரு பார்ப்பனராக இருக்க முடியாது. அதாவது அதன் பிறகு, அவரை நாம் பார்ப்பனர் என்று தூற்றுதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

      ஒருபக்கத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்டும் மறுபுறத்தில் இந்த நாட்டை நேசிப்பதும் சாத்தியபடாதது மட்டுமல்ல இரண்டும் எதிரெதிர் துருவங்கள். இங்கே நாடு என்பது இங்கு உள்ள மக்கள் தான் என்றால், இந்த மக்களை ஒடுக்கும் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் எப்படி இந்த நாட்டை நேசிக்க முடியும்?

      //நடுவில் இந்து மதம் அடைந்த கேவலமான நிலைமையை நினைத்து வெட்கி,//
      இந்து மதம் என்று தனித்து ஒன்றோ அதற்க்கு என ஒரு தனித்துவமான ஒரு மத நூலோ, தனித்துவமான கலாச்சாரமோ,பண்பாடோ கிடையா. அதனால் நடுவில் இந்து மதம் \\அடைந்த கேவலமான நிலைமையை\\ போன்ற கருத்துக்கள் பொருளற்றவை. இதில் தங்களுக்கு உடன்பாடில்லைஎன்றால் ஏன் என்று விளக்கவும்.

      நன்றி.

    • \\ ஒரு பார்பனன் நல்ல மனிதனாக இருக்க முடியுமா?\\

      கொஞ்சம் மாற்றிப்போடுவோமே! ஒரு நல்ல மனிதன் பார்ப்பானாக இருக்க முடியுமா? இந்துமதத்தின் கொடூரங்களை கண்டுகொள்கிறவர் தன்னை பார்ப்பனராக அடையாளப்படுத்திக்கொள்வாரா? (தோழர் சிவப்பு இதனைச் சுருக்கமாக சிறப்பாக விளக்கியிருக்கிறார் என்று கருதுகிறேன்)

      \\ மற்ற மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதித்து, நடுவில் இந்து மதம் அடைந்த கேவலமான நிலைமையை நினைத்து வெட்கி, சாதிய கொடுமை, பெண் கொடுமை, அரசாங்கத்தின் தவறான முடிவுக்கு எதிராக போராடும் ஒரு சராசரி தேச பற்றுள்ள இந்தியனாக இருப்பது சாத்தியம் என்று நம்புகீர்களா?\\

      இதில் இரு விசயங்கள் உள்ளன.

      “நடுவில் இந்துமதம் அடைந்த கேவலமான நிலை” என்பது தவறானதும் வரலாற்றுத் திரிபுமாகும். உழைக்கிற மக்களின் வழிபாடுகள் இந்துமதத்திற்குள் வராது. எனவே நாம் ஒன்றைப் பகுத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். ஆதிமுதலே இந்துமதத்தின் கொள்கைகள் மக்களுக்கு விரோதமானவை. நாமே இந்து என்றாலும் நம்மை இந்துவாக ஏற்கமாட்டார்கள். ஏனெனில் இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவமே வருணம் ஆகும். இதில் ஒருவருக்கு என்று வரையறுக்கப்பட்ட கடமைகள் தான் உண்டு. விழுமியங்கள் என்று ஏதும் இல்லை. பிராமணன் வேதோக்தா முறையிலும் சூத்திரன் புராணோக்தா முறையிலும் வாழ வேண்டும் என்பது சனநாயகமல்ல. நீங்கள் நாட்டார் வழிபாடு குறித்து தெரிந்துகொள்வீர்களேயானால் இந்துதுவத்தின் பாசிசத்தைப் புரிந்துகொள்ள இயலும்.

      உழைக்கிற மக்களுக்கு தன்மானம் அதிகம் உண்டு. தாய்மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு உழைக்கிற மக்கள் தான் வடிவம் தருகின்றனர். எனவே உழைக்கிற மக்கள் சராசரி அல்லர்; உண்மையில் மக்கள் யாருக்கும் நிகரானவர்கள் அல்லர்; மாறாக தேசபக்தி என்று சொல்கிற ஆர் எஸ் எஸ் கூட்டங்கள் விடுதலைப்போராட்டத்திலோ இந்திய நலனிலோ அக்கறை கொண்டதாக எந்த வரலாறும் கிடையாது. எனவே நாம் சராசரி தேசப்பற்று நமக்கு சாத்தியமா என்று எதற்காக வினவ வேண்டும்?

  8. வினவில் நான் முதன் முதலாகப் படித்த sensible ஆன வார்த்தைகள். மிகச் சரியான வாதம். இம்மாதிரி முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • எனது மேற்கூறிய கருத்து (மறுமொழி 8) கற்றது கையளவு அவர்களின் கருத்துக்கு (மறுமொழி 6) தெரிவித்த வரவேற்பு.

  9. Very well said. If they demonstrate one simple case, automatically people will follow. Unfortunately, they won’t listen/try this one, rather you will get some more kidding from …wait and see

  10. //இந்தியாவின் அநீதியான காஷ்மீர் ஆக்கிரமிப்பு காரணமாக உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அந்த மாணவர்கள், கார்கில் சவப்பட்டி ஊழல் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?//
    அப்ப ஊழல் செய்தது அந்த இறந்த ராணுவ வீரர்களா?

  11. ஊலழ் செய்தவர்களே அஞ்சலி செலுத்துகிரார்கள் என்பதுதான் அதன் பொருள்…

  12. அரசியல்வாதிகள் ஊழல் செய்தார்கள் என்பது உண்மை. ஆனால் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியது இராணுவ வீரர்களுக்கு. அரசியல்வாதிகளுக்கு அல்ல. அந்த ஊழல் பற்றி தெரிந்தால் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த கூடாதா? நீங்கள் கம்யூனிசம் பேசுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் நாட்டை பற்றி இழிவு கூறுவதோ இராணுவ வீரர்களை அவமதிபபதோ வேண்டாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க