privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !

குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !

-

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நெருப்புக்குத் தம் பிள்ளைகளைச் சாகக் கொடுத்த பெற்றோரின் மனம் இன்னொருமுறை வெந்து துடிக்கும்படி வந்திருக்கிறது நீதிமன்றத் தீர்ப்பு. மாவட்டக் கல்வி அதிகாரி முதல் தொடக்கக் கல்வி அதிகாரி வரையிலான அதிகாரிகள், பள்ளி ஆசிரியைகள், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளி நிறுவனருக்கு மட்டும் ஆயுள் தண்டனை, நிறுவனரின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சத்துணவு உதவியாளர், கல்வித்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள், கட்டிடப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் என்று தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பெற்றோர்
தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பெற்றோர் (படம் : நன்றி http://www.justknow.in/Tiruvarur/News/kudanthaipallivazhakkilthiirppu/ )

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளை ஒரே கட்டிடத்தில் நடத்த அனுமதி கொடுத்ததும், தப்பிக்க வழியில்லாத ஆபத்தான அந்தக் கூரைக் கட்டிடத்திற்குள் பன்றிகளைப் போல பிள்ளைகளை அடைத்து வைத்திருந்ததும் இலஞ்சப் பேகளான அதிகாரிகளின் உதவியோடுதான் நடந்திருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். அவ்வாறிருக்க கீழ்நிலை ஊழியர்களைத் தண்டித்திருக்கும் நீதிமன்றம், அதிகாரிகளை விடுவித்திருக்கிறது. எனவே, இத்தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டுமென்று கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கோரியிருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கை, பெற்றோரின் கோபத்திலிருந்தும் ஆதங்கத்திலிருந்தும் பிறக்கிறது. எனினும், மூலமுதல் குற்றவாளியும், குற்றவாளிகளின் காவலனும் அரசுதான் எனும்போது, நீதி வேண்டி அரசிடம் மன்றாடுவதில் என்ன பயன் இருக்கிறது? 2004-ல் நடந்த இந்தப் படுகொலை 2007-ல்தான் நீதிமன்றத்திற்கே வந்திருக்கிறது. பிறகு குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் தங்களை இக்குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று மனுச்செய்திருக்கின்றனர். “முடியாது” என்று கூறுவதற்கு நீதிமன்றம் 3 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. பிறகு 2012-ல்தான் குற்றச்சாட்டு பதியப்பட்டிருக்கிறது. 2014 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. அரசு 3 அதிகாரிகளை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. கூடுதல் இழப்பீடு கோரிய பெற்றோரின் மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று, “கூடுதல் இழப்பீடு தரமுடியாது” என்று நெஞ்சில் ஈரமின்றி வாதாடுகிறது ஜெ அரசு.

ஆகவே, தற்போதைய தீர்ப்பு மட்டுமின்றி, கடந்த பத்து ஆண்டுகளில் அதிகாரிகள், போலீசு, ஆளும் கட்சிகள், நீதிபதிகள் ஆகிய அனைவருமே குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையைத்தான் செய்திருக்கின்றனர். தப்பிக்க வழி தெரியாமல், தீயில் வெந்து கருகிய அந்த 94 குழந்தைகளின் துடிப்பையோ, பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் உள்ளக் குமுறலையோ அவர்கள் கடுகளவும் பொருட்படுத்தவில்லை. “சட்டம் சரியாக இருக்கிறது, அமல் படுத்துபவர்கள்தான் சரியில்லை” என்ற கருத்து ஒவ்வொரு அநீதி நிகழும்போதும் நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், கும்பகோணம் வழக்கு விசாரணையின் காலதாமதத்தில் தொடங்கி, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது வரையிலான அனைத்தும் சட்டப்படிதான் நடந்திருக்கின்றன. எந்தத் தனியார் கல்விக் கொள்ளையின் ரத்த சாட்சியமாக 94 குழந்தைகள் வெந்து மடிந்தார்களோ, அதே தனியார் கல்விக் கொள்ளை அரசு ஆதரவுடன், நீதித்துறை அங்கீகாரத்துடன் இன்று கொடி கட்டிப் பறக்கிறது.

“ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்” என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல; வாழ்வின் எல்லாத் திசைகளிலும் இந்த அரசியல் சமூக அமைப்பினால் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் உள்ளக் குமுறல்! இம்மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வல்லது மேல்முறையீடல்ல, இவ்வரசமைப்புக்கு எதிரானதோர் மக்கள் எழுச்சி!
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________