privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஐடிபிஐ வங்கிப் பணம் மல்லையாவின் பாக்கெட் மணியா ?

ஐடிபிஐ வங்கிப் பணம் மல்லையாவின் பாக்கெட் மணியா ?

-

கிங்பிஷர் நிறுவனத்திற்கு ரூ 950 கோடி கடன் கொடுத்ததில் ஊழல் நடந்திருப்பது தொடர்பாக ஐடிபிஐ வங்கிக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் மல்லையா
மல்லையா தனது காலண்டர் வெளியீட்டு விழா ஒன்றில்.

“ஐடிபிஐ வங்கியைப் பொறுத்த வரை அதுதான் மல்லையாவுக்கு தனியாக கொடுக்கப்பட்ட முதல் கடன். ஏற்கனவே கிங் ஃபிஷர் ஏர்லைன்சுக்கு மற்ற வங்கிகள் கொடுத்த கடன்கள் பிரச்சனைக்குள்ளாக்கியிருந்த நிலையில், வங்கிகளின் கூட்டமைப்புக்கு வெளியில் ஐ.டி.பி.ஐ தனியாக கடன் கொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை” என்கிறார் ஒரு மூத்த சி.பி.ஐ அதிகாரி. ஐ.டி.பி.ஐ-ன் அதிகாரிகள் தயாரித்த உள்சுற்றுக்கான அறிக்கை மல்லையாவுக்கு கடன் கொடுப்பதை எதிர்த்து பரிந்துரைத்திருந்தது.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் மீதான சி.பி.ஐ விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.டி.பி.ஐ மல்லையாவுக்குக் கொடுத்த கடன் மீது விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக முறையே ரூ 50 லட்சம், ரூ 3.5 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு பூஷன் ஸ்டீல் மற்றும் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக கடன் உச்சவரம்பை உயர்த்தி கடன் கொடுத்ததோடு, திருப்பிச் செலுத்தத் தவறிய கடன்களுக்கு போலி கணக்கு காட்ட உதவியதாக சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜெயின் கைது செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்தது தொடர்பாக ஐடிபிஐ வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாகவும், இது குறித்து தகவல் கோரி அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு வங்கி முறையான பதில் தரவில்லை என்றும் சி.பி.ஐ கூறியிருக்கிறது. ரூ 950 கோடி கடன் கொடுக்கப்படுவதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு ரூ 150 கோடி கடன் விண்ணப்பத்தை நிராகரித்து வங்கி முடிவெடுத்திருந்தது.

கிங் ஃபிஷர் விமான சேவை
மூழ்கிக் கொண்டிருந்த கிங் ஃபிஷருக்கு நிதியை கொட்டிய வங்கிகள்

ஏற்கனவே, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளின் கூட்டமைப்பு  மல்லையாவுக்கு ரூ 7,000 கோடி கடன் கொடுத்திருந்தன. அதில், பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ 1,600 கோடி தாரை வார்த்திருந்தது. இந்நிலையில் ஐடிபிஐ தனியாக கடன் கொடுத்திருப்பது  ஊழல் நடந்திருப்பதாக பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் ஒரு சி.பி.ஐ அதிகாரி.

சந்தையில் மோசமான நிலையில் இருந்த கிங் பிஷர் நிறுவனத்தின் மீதான எதிர்மறை மதிப்பீடு, எதிர்மறை நிகர மதிப்பு போன்றவற்றை அலட்சியப்படுத்தி அந்நிறுவனத்துக்கு பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் கடனை வாரி வழங்கியிருக்கின்றன வங்கிகள்.

கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்தின் சொந்த நிதிநிலை அறிக்கையின் படியே 2005-ம் ஆண்டு முதல் அது சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ 5,960 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அது தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.

முன்னதாக, ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஐ.டி.பி.ஐ, பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பிஎன்பி ஆகிய வங்கிகள் கடன் பணத்தை பகுதியளவு சரிக்கட்ட கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தன. இதில் ஐ.டி.பி.ஐ ரூ 109 கோடி மதிப்பில் 1.7 கோடி பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.

கடந்த மே மாதம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம், 2008-ல் 39,000 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2013-ம் ஆண்டு இறுதியில் 5,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடம் (ரூ 4,022 கோடி) வகிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள முதல் 5 நிறுவனங்களில் வின்சம் டயமண்ட்ஸ் (ரூ 3,243 கோடி), எலக்ட்ரோதெர்ம் இந்தியா ரூ (2,653 கோடி), கார்ப்பரேட் பவர் (ரூ 2,487 கோடி), ஸ்டெர்லிங் பயோடெக் (ரூ 2,031 கோடி) ஆகியவை அடக்கம். ஆயிரக்கணக்கான வங்கிப் பணத்தை கொள்ளை அடித்த இத்தகைய நிறுவனங்கள்தான் தொழில் முனைவு மூலம் இந்தியாவை முன்னேற்றப் போகிறவர்களாம். இந்நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தன என்பது மட்டுமில்லை, இவை வாங்கிய கடன்கள் எதற்கு பயன்பட்டன என்பது கூட கேள்விக்குரியது.

மல்லையா
வங்கிப் பணத்தை விழுங்கிய மல்லையா – ‘மகிழ்ச்சியான தருணங்களின் அரசன்’

தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்துள்ள நிறுவனத்திற்கு வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? முதலாளிகள் தமது தகிடுதித்தங்களின் மூலமாகவோ, லஞ்சம் மூலமாகவோ அல்லது லாபியின் மூலமாகவோ விதிமுறைகளை வளைத்து தேவையான கடனை பெற்றுக் கொள்கின்றனர்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வேறு தொழில்களுக்கு திருப்பிவிடுவது மல்லையாவுக்கு இது முதல் முறை அல்ல. கொள்ளையடிப்பதிலும் அதற்கு ஆளும் வர்க்கங்களை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு வரலாறே இருக்கிறது.

தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பெனியைத் துவக்கி, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியைத் தருவதாக வாக்களித்தார் மல்லையா. இதை நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்த அப்பாவி மக்களின் பணத்தை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்டு, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாத்தினார். இதற்கு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் ஆளும் அதிகாரவர்க்கம் உடந்தையாக இருந்தது. மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் எந்தத் திசையில் எங்கே போய் சேர்ந்ததென்று தெரிந்தும் இன்றுவரை அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் மௌனம் சாதித்து வந்திருக்கின்றன.

இப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையனை சிறையில் அடைத்து அவனது சொத்துக்களை பறிமுதல் செய்து அதன் மூலம் வங்கிகளின் கடனை அடைத்திருக்க வேண்டும். ஆனால், ஐ.பி.எல் அணி, ஃபோர்ஸ் இந்தியா பார்முலா கார் அணி என ஊதாரித்தனமாக இருப்பதோடு கிங்பிஷர் நிர்வாண காலண்டர் தயாரிப்பில் அழகிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டு திரிந்தார் விஜய் மல்லையா. இந்த கிரிமினல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்ற, சட்டமன்றங்கள் இப்படிப்பட்ட பிளேடு பக்கிரிகள், அவர்களுக்கு சேவை செய்வோரின் கூடாரமாக இருக்கிறது.

முதலாளிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுக்கும் இதே பொதுத்துறை வங்கிகள் தான் சிறிய கடனுதவிக்காக சாதாரண மக்களை விதிமுறைகளைக் காட்டி பயமுறுத்துகின்றன, நடையாய் நடக்க வைக்கின்றன. வேலை கிடைக்காததால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன.

சாராய மல்லையா போன்ற பெருமுதலைகளுக்கு கடன் கொடுத்து வாராக்கடன்களால் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கின்றன பொதுத்துறை வங்கிகள். அதே நெருக்கடியை காரணம் காட்டி அரசுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

மக்கள் பணத்தை முதலாளிகளின் பாக்கெட்டுக்கு திருப்பிவிடுவதையே முதலாளித்துவ அரசுகள் தம் தலையாய கடமையாக செய்யும் போது இந்த போலி ஜனநாயக முறைகளை கொண்டு மல்லையா போன்ற கொள்ளையர்களை தண்டிக்கவோ, அவர்களது சொத்தை பறிமுதல் செய்யவோ முடியாது.

மேலும் படிக்க