privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசுப் பள்ளிகள் : பெற்றோர் சங்கத்தின் நேரடி நடவடிக்கை

அரசுப் பள்ளிகள் : பெற்றோர் சங்கத்தின் நேரடி நடவடிக்கை

-

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் இல்லை
கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பறை இல்லை

என்பதை கண்டித்து 27.8.2014 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மாவட்ட கல்வி துறை அதிகாரி ஒரு வாரகாலத்தில் போதுமான ஆசிரியர்களை நியமிக்கின்றோம் என உறுதி அளித்தார். கோட்டாட்சியர் அன்றே கம்மாபுரம் சென்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து புதிய வகுப்பறை கட்டுவதை துரிதப் படுத்தினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேரணியை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். பேரணியில் பெற்றோர் சங்கத்தினர், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனியினர், பெற்றோர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பேரணி பாலக்கரை, கடலூர் சாலை, காய்கறி சந்தை வழியாக மாவட்ட கல்வி அலுவலகத்தை அடைந்தது. அலுவலகம் முன்பாக மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் செந்தாமரைக்கந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி +2 மாணவிகளுக்கு இதர பள்ளிகளிலிருந்து முதுகலைபட்டதாரி ஆசிரியர்களை தற்காலிக மாற்றம் செய்து ஒருவாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் நியமிக்க உள்ளார் என்றும், கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

பேரணி,ஆர்ப்பாட்டம் போஸ்டர்

விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குறித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் 25-6-2014 அன்று ஆய்வு செய்ததில் கீழ்கண்ட விபரங்கள் தெரியவந்தன.

  • மேற்படி பள்ளியில் 2013-ம் ஆண்டு +2 பொதுத்தேர்வு எழுதிய 479 மாணவிகளில் 212 பேர் பெயிலாகி விட்டனர். 2014-ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய 411 மாணவிகளில் 100 மாணவிகள் பெயிலாகிவிட்டனர். ஆசிரியர் பற்றாக்குறையே இதற்கு காரணம்.
  • இவ்வாண்டு (2014-15) +1 மற்றும் +2 படிக்கும் மாணவிகள், அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பற்றிய விவரம்:
    தமிழ்- 863 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    இயற்பியல்- 650 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    வேதியல் – 651 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    கணிதம் – 331 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு தலா 1 ஆசிரியர் பணியிடம் தான் நிரந்தரமாக அரசு அனுமதித்துள்ளது.
  • போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் ஒரே ஆசிரியர் பல வகுப்பு மாணவிகளை ஒன்றாக கூட்டமாக வைத்து மரத்தடியில் பாடம் நடத்துவதால் மாணவிகளின் கல்வித்தரம் குறைந்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் அதிக மதிப்பெண் பெறாமல் உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படுகிறது. பள்ளியில் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.

போதுமான ஆசிரியர்களை உடன் நியமிக்குமாறு கோரி கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும், சென்னை, பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் எங்களது 9-7-2014 நாளிட்ட கடிதத்தில் முறையீடு செய்யப்பட்டது.

27-7-2014 நாளிட்ட செயற்குழுவில், “மேற்படி பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை 15 தினங்களில் நியமிக்காவிட்டால் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப்படும்” என்று தீர்மானம் இயற்றி அவற்றை கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது.

மேற்படி பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 மாணவிகளின் பெற்றோர் தனித்தனியாக கையொப்பமிட்ட 265 மனுக்கள் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும், சென்னை பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் 7.8.2014 அன்று அனுப்பப்பட்டன.

எந்த நடவடிக்கையும் கல்வித் துறை எடுக்கவில்லை. எனவே, பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 மாணவிகளின் பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம் 16.8.2014 அன்று நடத்தியதில் போராட்டம் நடத்தினால்தான் தீர்வு கிடைக்கும் என பெண்கள் வலியுறுத்தினர். 27-8-2014 அன்று விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

4.8.2014 அன்று கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் பார்வையிட்ட போது அப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்களுக்கு மரத்தடியில் மண்தரையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். மதில் சுவரே கரும்பலகையாக காட்சியளித்தது. இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், விருத்தாசலம் கோட்டாச்சியர், வட்டாச்சியார், என அனைத்து ஆட்சியர்களுக்கும் 6.8.14 நாளிட்ட கடிதத்தில் முறையீடு செய்யப்பட்டது. எந்த அசைவும் இல்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நமது போராட்ட அறிவிப்பிற்கு பிறகு கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட விருத்தாசலம் வட்டாட்சியர் 23-8-14 அன்று தேர்வு செய்து அளவீடு செய்துள்ளார். மேலும் விருத்தாசலம் கோட்டாட்சியர் 26-8-14 அன்று மேற்படி பள்ளிக்கு கட்டிடம் கட்டும் இடத்தை ஆய்வு செய்துள்ளார்.

மது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை எதிர்த்தும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற கல்வி ஆண்டின் இறுதியிலே விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் சந்திப்பினை ஏற்பாடு செய்து தொடர்ந்து பல கூட்டங்களை நடத்தினர்.

இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் 13 ஏக்கரில் அமைந்துள்ள விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமது சங்கத்தினர் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பினை ஏற்பாடு செய்தோம். அந்த பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் புதர்கள் மண்டி கிடந்தது. அதை புகைப்படமாக எடுத்து அப்படியே மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்பினோம். உடனே நகராட்சி ஊழியர்கள் புதரை அகற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் அவர் பங்குக்கும் சுத்தம் செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு 5 அல்லது 10 பெற்றோர் வந்தாலே பெரிய விஷயம் என்றும் அப்பள்ளி ஆசிரியர் நினைத்து இருந்த நிலையில் நமது முயற்சியால் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் வந்தனர்.

நமது சங்கத்தின் சார்பில்  “மாணவர்களின் எதிர்காலம், பெற்றோர்-ஆசிரியர் கையில்” என தலைப்பிட்டு நோட்டீஸ் அச்சிட்டு 10-ம் வகுப்பு மற்றும் +2 மாணவிகள் ஒவ்வொருவரிடமும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு பெற்றோர்கள் அவசியம் வரவேண்டும் என வலியுறுத்தி கூட்டம் நடைபெறும் முதல் நாள் மாலை கொடுத்து அனுப்பப்பட்டது.

பிரசுரத்தில் “அன்பார்ந்த பெற்றோர்களே அனைத்து சுக துக்க காரியங்களுக்கும் தவறாமல் போகிறோம். டி.வி சீரியல் பார்க்க் தவறுவதில்லை. நம் பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை சந்திக்க தவறலாமா? நேரம் இல்லை வேறு வேலை இருக்கிறது என்று காரணம் சொல்லாதீர்கள். உங்கள் பிள்ளைகள் நல்ல மனிதனாக வளர,பொதுத்தேர்வில் வெற்றி பெற அதிக மதிப்பெண் பெற கல்வித்தரம் மேம்பட ஆசிரியர்களை சந்திப்பது அவசியம். அனைவரும் தவறாமல் வாரீர். மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள்” என அச்ச்டித்து விநியோகித்தோம்.

Notice

மறுநாள் கூட்டத்திற்கு 500-க்கும் மேற்பட்டோர் ஆண்கள், பெண்கள் என திரளாக வந்திருந்தனர். பெற்றோர்களிடம் பேசிய ஆசிரியர்கள், உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருகின்றனரா, தினமும் மாலையில் வீட்டில் படிக்கின்றனரா, பள்ளியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா” என்பதை கண்காணித்து அவர்களின் கல்வியில் கவனம் செலுத்துமாறு கூறினர். கைபேசி போன்றவற்றை பிள்ளைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பக் கூடாது என வலியுறுத்தினர்.

ஒரு ஆசிரியர், மாதம் தோறும், வாரம் தோறும் நடைபெறும் தேர்வுகளின் தேர்ச்சி மதிப்பெண்ணை பார்த்து குறையிருந்தால் ஆசிரியரிடம் தெரிவித்தால் தாங்கள் அந்த மாணவியிடம் சிறப்பு கவனம் எடுத்து சொல்லிக் கொடுப்போம் என்றார்.

“பள்ளிக்கு பல மாணவிகள் காலம் தாமதமாக வருகின்றனர். இலவச சைக்கிள்கொடுக்கிறோம். இலவச பஸ் பாஸ் கொடுக்கிறோம். ஏன் தாமதம்?சாப்பிடாமல் பல மாணவிகள் வந்து இங்கு மயங்கி விழுகின்றனர். இதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மதிய உணவு நாங்கள் தருகிறோம். கிராமத்தில் இருந்து வரும் மாணவிகள் சாப்பாட்டிற்காக தாமதமாக வருவதை தவிக்க வேண்டும்” என்பதை பெற்றோர்களிடம் வலியுறுத்தி தலைமை ஆசிரியர் பேசினார்.

“பிள்ளைகள் தவறு செய்யும்பொழுது ஆசிரியர் கண்டித்தால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் ஆசிரியரை புகார் கூறும் போக்கு உள்ளது. அதனை பெற்றோர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

நமது சங்கத்தின் தலைவர் வை.வெங்கடேசன் பேசும் பொழுது, “அரசுப் பள்ளி நமது பள்ளி, அதனை தரம் உயர்த்த போராட வேண்டும் அதுதான் நிரந்தர தீர்வு. நமது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதன் மூலமே தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தை கட்டணக் கொள்ளையை ஒழிக்க முடியும்” என பேசினர்.

இறுதியில் பெற்றோர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். பெற்றோர்கள் பெரும் விழிப்புணர்வு பெற்றதாகவும் தங்கள் பிள்ளைகளின் படிப்பின் மீது முழு கவனம் செலுத்துவதாகவும் கூறி அன்றே நிறைய பெற்றோர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து சங்கத்தின் செயல்பாடுகளில் தங்களையும் இணைத்துக் கொள்வதாக உறுதியளித்தனர்.

நமது தொடர் போரட்டத்தால் முதன்மை கல்வி அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தி ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளுமாறு வாய்மொழி உத்தரவிட்டார். ஆனால் பள்ளியில் போதிய நிதியில்லை. மேலும் +2 விற்கு அனுபவமில்லாத ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை உள்ளது.

நமது பெற்றோர் சங்க போராட்டத்தை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் தூண்டிவிடுகின்றனர் என கல்வி துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதனால் நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். நாங்கள் நிலைமையை சமாளிக்கிறோம் என சங்கத்தினரிடம் தலைமை ஆசிரியர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் நமது சங்கம் தற்காலிக ஆசிரியர் தேவையில்லை, நிரந்தர ஆசிரியர் நியமிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்து நடத்தினோம். இந்நிகழ்ச்சி பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துவதாகவும் சங்கமாக திரண்டு போராடுவதன் வலிமையினையும் உணர்த்துவதாக அமைந்தது.

இது போல் விருத்தாசலம் டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்தினோம்.

மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்தினோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சங்கத்தின் சார்பில் மாணவர்கள் மூலமாக பிரசுரம் கொடுத்து அழைத்தது நல்ல பலனை கொடுத்தது. ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உற்சாகம் அடைந்நதனர். நாங்கள் அழைத்தால் பெற்றோர்கள் வருவதில்லை என நமது சங்கத்தை பாராட்டினர்.

பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு கல்வித்  துறையை, நிர்வாகத்தை சுலபமாக நாம் அணுக பெற்றோர் சங்கத்தில் சேர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம்.

2-9-14 அன்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பிரசுரம் அச்சடித்து மாணவர்களிடம் கொடுத்து உள்ளோம்.

அரசு பள்ளிக்காக மாணவர்களின் கல்வி உரிமைக்காக பெற்றோர் சங்கத்தின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தொடர்கிறது.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு
வை.வெங்கடேசன்,தலைவர்
9345067646