privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கசிறப்புற நடந்த கருவாடு திரையிடல் நிகழ்வு!

சிறப்புற நடந்த கருவாடு திரையிடல் நிகழ்வு!

-

வினவு தளத்தின் முதல் ஆவணப்படமான “கருவாடு “படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் கடந்த சனிக்கிழமை (20-09-2014) அன்று உற்சாகத்துடன் நடைபெற்றது.

விரிவான ஏற்பாடுகளோ, அணிதிரட்டலோ இல்லாமல் மிகக்குறைந்த அவகாசத்தில் நடைபெறும் கூட்டம் என்பதால் தோழர்களும் வாசகர்களும் சேர்த்தே குறைந்த அளவில்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். அதை தகர்க்கும் வண்ணம் வினவு வாசகர்கள், தோழர்களுக்கு இணையாக கலந்து கொண்டார்கள். வினவு வாசகர்கள், தோழர்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என சற்று நேரத்திற்கெல்லாம் அரங்கம் முழுவதும் நிரம்பிவிட்டது. அதற்கு மேலும், பல வாசகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அனைவருக்கும் இருக்கை வசதி செய்ய முடியாதது வருத்தம் அளித்தது.

இத்தகைய சூழலை முன்னரே எதிர்பார்த்து விழா அரங்கத்தின் கீழ் தளத்திலுள்ள மற்றொரு அரங்கத்தையும் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்வது என பதிவு செய்திருந்தோம். இதன்படி தோழர்களை கீழ் தளத்திலும் வாசகர்களை மேல் தளத்திலுமாக என இரண்டு திரைகளில் கருவாடு வெளியிடுவது என முடிவானது. இரண்டு தளங்களிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது.

விழாவிற்கு தோழர் அஜிதா வினவு சார்பாக தலைமை தாங்கினார். அனைவரையும் வரவேற்று இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்கினார்.

தோழர் அஜிதா
தோழர் அஜிதா

அவர் பேசியதாவது,

“கோயம்பேட்டில் கருவாடு விற்பது சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு பிரச்சனையாக இருப்பதாக கூறி தி இந்து செய்தி வெளியிட்டதையும் அதன் எதிரொலியாக கருவாடு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய வைத்ததையும் கண்டித்து வினவில் செய்தி வெளியிட்டோம். அது வாசகர்களால் பரவலாக வரவேற்புடன் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்த கருத்துக்களையும் தொகுத்து வெளியிட்டோம்.

சரி இணையத்தைத் தாண்டியும் மக்கள் கருத்தை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து கோயம்பேடு சந்தை, எம்.ஜி.ஆர் நகர் சந்தை, மூலக்கொத்தளம் சந்தைகளில் மக்களை சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். சரி போகிறதுதான் போகிறோம், ஒரு கேமராவையும் எடுத்துச் சென்றால் நன்றாக இருக்குமே என்று நண்பர்கள் உதவியுடன் கேமராவை எடுத்துச் சென்று மக்கள் கருத்தை பதிவு செய்தோம்.

அதன் படி ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள்தான் கருவாடு ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன” என படம் கருவாகி வளர்ந்து கருவாடான வரலாற்றை கூறினார்.

“கருவாடு படத்தில் மக்கள் கருத்தை தொகுத்து அளித்திருக்கிறோம். இதைத் தாண்டி நாம் செய்ய வேண்டிய வேலைகளும் இருக்கின்றன. தந்தை பெரியாரின் காலத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் எங்கெல்லாம் தலை எடுத்ததோ அங்கெல்லாம் அதை தலையில் அடித்து உட்கார வைத்தார். அந்தப் பணியை தற்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டும்”  என்று கேட்டுக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக கருவாடு ஆவணப்படத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் வெளியிட்டார். ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முன்னாள் ஸ்டன்ட் மாஸ்டரான பெரியவர் டி ராஜா பெற்றுக் கொண்டார்.

ஆவணப்பட வெளியீடு
ஆவணப்பட வெளியீடு

அதைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய தோழர் கதிரவன்,

தோழர் கதிரவன்
தோழர் கதிரவன் உரை

“செய்தி வெளியிட்டு, கருவாட்டை பறிமுதல் செய்ய வைத்து தன் பார்ப்பன செல்வாக்கை காட்டியிருக்கிறது பார்ப்பன இந்து பத்திரிகை. உழைக்கும் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளுக்காக போராடும் போது கண்டுகொள்ளாத அரசு கருவாடு பிரச்சனையில்  உடனடியாக தலையிட்டு ரூ 20,000 மதிப்புள்ள கருவாடுகளை பறிமுதல் செய்ததன் மூலம் தன் பார்ப்பன பாசத்தை காட்டியிருக்கிறது.

பார்ப்பனர்களை தவிர மற்றவர்கள் சூத்திரர்கள், இழிந்தவர்கள் என்று கூறி கருவறைக்குள் நுழையக்கூடாது என்று பார்ப்பனர்களும், உச்சநீதிமன்றமும் சொல்கிறார்கள். அதுபோல தான் இங்கேயும். கருவாடு என்பது ‘இழிந்த’ உணவு, ‘இழிந்த’ மக்களின் உணவு என்பதால்தான் தடை செய்திருக்கிறார்கள். இரண்டும் ஒரே சங்கிலியின் இரண்டு கண்ணிகள்.

இதே ஜெயலலிதாதான் 2002-ல் கிடாவெட்டு தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். மதுரை பக்கம் ஆண்ட பரம்பரை என்று வீரம் காட்டும் எவனும் சட்டத்தை மீறி கிடாவெட்டத் தயாராக இல்லை. மகஇக மற்றும் எமது தோழமை அமைப்புகளைச் சேர்நத தோழர்கள்தான் கிடா வெட்டும் போராட்டம் நடத்தி சிறை சென்றனர். இறுதியில் அந்த சட்டம் முறியடிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என்று பேசியிருக்கிறார். ஏனென்றால் அது தேவ பாஷை. மற்ற மொழிகள் நீச்ச பாசை என்கிறார்கள்.

ஆக இது ஏதோ கருவாட்டு பிரச்சனை மட்டும் என்பதல்ல, கருவறை தீண்டாமை, மொழித் தீண்டாமை போன்ற ஒரு பார்ப்பனிய பிரச்சனை. அதற்கு எதிரான போராட்டத்தில் இந்த ஆவணப்படத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று  கேட்டுக்கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து “கருவாடு” படம் திரையிடப்பட்டது. வாசகர்கள் பல காட்சிகளுக்கு கைதட்டி தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார்கள். “எங்களுக்கு உசிதமா படலை”, ”உயிரை கொன்ன்ன்னு”, “என் பையன் அப்படி இல்லை” என்பன போன்ற பார்ப்பனர்களின் கருத்துக்கள் வெளிவரும்போது மாணவர்களும் இளைஞர்களும் அரங்கத்தை கேலிச் சிரிப்பால் நிறைத்தனர். பார்ப்பனர்களின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் “மனுசன்னு இருந்தா கோவம் வரணும்” “எம்.ஜி.ஆரே கருவாடு இல்லாம சாப்பிட மாட்டாரு தெரியுமா” என்பன போன்ற கோயம்பேடு தொழிலாளிகளின் கருத்துக்களும், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பெரியவர் பேசிய கருத்துக்களும் கைத்தட்டல்களை அள்ளியது.

படம் திரையிடல்
படம் திரையிடல்

“தமிழகத்திற்கு வரும் கருவாட்டின் பெரும்பகுதி மோடியின் குஜராத்தில் இருந்துதான் வருகிறது. கருவாடு தேவையில்லை என்றால் அவரே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்” என்ற கருவாடு மொத்த வியாபாரி கூறிய செய்தி ஆச்சரியமளித்தது.

தோழர்கள் மற்றும் பொதுவான வாசகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் “கருவாடு” கவர்ந்ததை பார்க்க முடிந்தது. படம் நிறைவடைந்ததும் ஆரவாரமாக கைதட்டி படத்தை வரவேற்றார்கள்.

இதைத் தொடர்ந்து படத்தின் மீதான் விவாதத்தை துவக்கிவைத்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் பேசினார். அதில் குஜராத்தில் இருந்து வந்த நண்பர் ஒருவரை சந்தித்ததாகவும், குஜராத்தின் அகமதாபாத் போன்ற நகரங்களின் மையப் பகுதிகளில் புலால் உணவு கிடைப்பதில்லை. நகரின் ஒதுக்குப் புறமான பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். புலால் வாங்க அங்கு தான் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்ததாகவும் பதிவு செய்தார். மஹாராஷ்டிராவில் மகாவீரார் ஜெயந்தியை ஒட்டி பத்து நாட்களுக்கு புலால் கிடைப்பதை தடைசெய்கிறார்கள் இந்துமத வெறியர்கள் என்பதையும் இது இன்னும் பல பண்டிகைகளுக்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு இருப்பதையும் கூறி எச்சரித்தார்.

தோழர் மருதையன்
தோழர் மருதையன்

பெரும்பான்மை மக்களின் உணவு பழக்கத்தை தடைசெய்யும் பார்ப்பனியத்தின் அராஜகத்தை கண்டித்தார்.

“நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனை பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டிலும் பல பத்தாண்டுகளாக நம் மக்கள் இதற்கு பழக்கப்படுகிறார்கள் என்பது தான். தாங்கள் இழிந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு பார்ப்பனர்கள் போல தாங்களை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இதை அகற்ற வேண்டியது முக்கியமான வேலை” என்று கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து படத்தில் கருத்து சொல்லிய எம்.ஜி.ஆர் நகர் பகுதி பெரியவர் ராஜா, தான் சிறு வயதில் அனுபவித்த பார்ப்பன சாதி ஒடுக்குமுறையை பற்றி விளக்கினார்.

பெரியவர் ராஜா உரை
பெரியவர் ராஜா உரை

“ஏன் பார்ப்பனீயம் பார்ப்பனீயம்னு சொல்றேனா அதை அனுபவிச்சவங்க நாங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.

இப்போ எனக்கு 90 வயசு ஆகுது. எனக்கு 14 வயசு இருக்கும் போது, தம்பி எந்திரிபா, (ஒரு வாசகரை எழும்பச் சொல்கிறார்). இந்தத் தம்பி மாதிரிதான் இருப்பேன். எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம். என் அம்மா டீச்சரா இருந்தாங்க.

லீவுக்கு எங்க அம்மா வேலை பார்க்கும் ஊருக்கு போயிருந்தேன். குளிக்க கால்வாய்க்கு போனேன். அது தாமிரபரணி ஆத்தோட கால்வாய். ஆத்தில குளிக்க படித்துறை கட்டி வைச்சிருப்பாங்க. அந்த ஊரில் பார்ப்பனர்களுக்கு என்று ஒரு படித்துறை. ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுது என்றால் முதலில் பார்ப்பனர்களுக்கான படித்துறை இருக்கும். அடுத்து பார்ப்பனர்கள் இல்லாத ஜாதியினருக்கான படித்துறை. இன்னும் பத்து பதினைந்து அடி தள்ளி பள்ளர், பறையர்களுக்கான படித்துறை இருக்கும்.

நான் ஊருக்கு புதுசு, சின்ன பையன். எனக்கு இது எதுவும் தெரியாது. தெரியாம போய் பார்ப்பனர்களுக்கான படித்துறையில் குளிச்சிட்டு தலை துவட்டிக்கிட்டிருந்தேன். அங்க வந்த பூணூல் போட்ட ஐயர் ஒருத்தர்

“ஏண்டா இங்கே குளிச்ச” என்றார்.

“படித்துறை இருந்தது. தண்ணி இருந்தது குளிச்சேன். இன்னா இப்போ?” என்று கேட்டேன்.

அந்த பார்ப்பனர் அங்கிருந்த மரக்குச்சியை எடுத்து என்னை அடிக்க முயற்சிக்க நான் ஓடினேன். அவரும் விரட்டினார்.

இறுதியில் வேறு நபர்கள் வந்து காப்பாற்றி, “தெரியாம பண்ணிட்டான். இனி இப்படி நடக்காது” என்று உறுதிமொழி கொடுக்கவும்

“இனி இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிடுவேன்” என்று  அனுப்பி வைத்தான் அந்த பார்ப்பான். எனக்கு அவமானமாக இருந்தது.” இதை நினைவு கூர்ந்த பெரியவர் தன்னால் அந்த அவமானத்தை இப்போது நினைத்தாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

“பெரியார் என்ற ஒருவர் இல்லை என்றால் நாம் அவ்வளவுதான்” என்று பெரியாரின் பணிகளின் தாக்கத்தை தன் சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “இளைஞர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். சின்ன வயசுல போஸ்ட் ஆபீஸ்ல போய் ஒரு ஸ்டாம்ப் வாங்க வேண்டும் என்றால் “சாமீமீமீமீ ஒரு ஸ்டாம்ப் குடுங்க” என்று தான் கேட்க வேண்டும். நாமம் போட்டுக்கொண்டு ஒரு பார்ப்பான் உள்ள உக்காந்திருப்பான். போலீஸ் ஸ்டேசன் போனா சப்-இஸ்பெக்டர் நாமம் போட்டிருப்பார். “சாமீஈஈஈஈ என்ன விட்டிருங்க”-ன்னு கெஞ்சணும்.

கோர்ட்டுக்கு போனா ஜட்ஜ் நாமம் போட்டிருப்பாரு. அவருக்கு விசிறிவிட நம்மாளு இருப்பான். பக்கத்துல இருந்து விசிறுனா தீட்டுனு சொல்லி பத்தடி தூரத்தில நின்னு கயிற்றை பிடித்து இழுத்துக் கொண்டிருப்பான். அவரும் ஜாலியா தீர்ப்பெழுதுவாரு. இப்படித் தான் இருந்தது.

இப்போ மாதிரி சார் என்று சொல்ல முடியாது, சாமி சாமின்னு தான் சொல்லனும். சாமி தான் நமக்கு பிரச்சனை. இப்ப திருப்பியும் சாமிகளை கொண்டு வருகிறான்.

பெரியார் இல்லைனா நாம் இன்னைக்கு மாதிரி இருக்க முடியாது. இப்போ முன்ன மாதிரி இல்ல. முன்ன எங்க ஊரு அக்கிரகார தெருவுல போகும் போது செருப்பு போட்டு நடக்கக் கூடாது, துண்டை தோள்மேல போடக் கூடாது. இப்ப ஊருக்கு போனா அக்கிரகார தெருவுல அவங்க யாருமே இல்ல. கொஞ்ச வருசத்து முன்னாடி கல்கத்தா, டெல்லினு போனானுக. இப்போ அமெரிக்கா, யூரோப் னு செட்டிலாயிட்டாங்க.

டிரெயின்ல 3 டயர் ஏசி கம்பாட்மென்டுல போனா நீங்களே கூட இதத் தெரிஞ்சிக்கலாம்.  “என்ன அத்திம்பேர்! அமெரிகாவுல இருக்குற பொண்ணு எப்படி இருக்கா”, “மாமா அமெரிகாவுல இருந்து ஆப்பிரிக்கா போயிட்டாளேமே” இப்படித் தான் பேசிப்பானுக.. இந்தித் திணிப்பு போன்றவற்றை சுட்டிக் காட்டி எனக்கு வயசாயிருச்சி. இளைஞர்களா நிறைஞ்சி இருக்கீங்க. போராடுங்க” என்று கேட்டுக்கொண்டு தன் கருத்தை பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து படம் தொடர்பாக வாசகர்கள் தங்கள் கருத்துக்களை கூறினர். இறுதியாக தோழர் அஜிதா நன்றி கூறினார். வெளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டிவிடிகளை பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றார்கள். பதிவு செய்யப்பட்ட வாசகர்களின் கருத்துக்களை தனியாக வெளியிடுகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நாம் நேரடியாக கருத்து கேட்டால் நன்றாக இருப்பதாகத் தான் கூறுவார்கள். எனவே என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்டால் அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம் என்று கூடி பேசிக்கொண்டிந்த ஒரு வாசகர்களின் கூட்டத்தில் புகுந்தோம்.

படம் நன்றாக இருப்பதாகத் தான் அவர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். கூடவே வினவு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற படங்கள் எடுக்கப் போவதாகவும், அடுத்து தண்ணீரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் கூற

அதுதான் ஒரு நாளில் படம் எடுத்துவிட்டார்களாமே அப்படியானால் மாதத்திற்கு ஒரு படம் எடுத்து வெளியிடலாமே என்றார் இன்னொருவர்.

நல்ல ஆலோசனை தான், முயற்சிக்கிறோம்!

வினவு செய்தியாளர்

(திரையிடல் நிகழ்விற்கு வந்த நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் விரைவில் வீடியோ பதிவாக வெளியிடப்படும்)

டி.வி.டி பெற விரும்புபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

cd-stickers

முகவரி :  எண் 16, முல்லை நகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
மொபைல் : (+91) 99411 75876
லேண்ட்லைன் : (+91 44) 23718705 (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை)

  1. தெய்வத்தன்மை வாய்ந்த திருவள்ளுவரும் இதனாலன்றோ,

    ” மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்”

    என்றும்,

    “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்”

    என்றும்,

    “மேலருந்தும் மேல்ல்லார் மேல்ல்லர் கீழிருந்துங்
    கீழ்அல்லார் கீழ்அல்லவர்”

    என்றும் அருளிச் செய்தனர்? இழிந்த தன்மைகளும் இழிந்த செய்கைகளும் உலகிற் கணக்கற்றனவாய்ப் பெருகி இருப்பினும் அவை எல்லாவற்றுள்ளும் மிக்க் கொடியவை இரக்கம் அற்ற வன்னெஞ்சமுங் கொலைத் தொழிலுமே யாகும். உயிர்களைக் கொலை செய்தலும் அவற்றின் ஊனைத் தின்னுதலுமாகிய புலைத்தொழில், எல்லாத் தீவினைத் தொழிலிலும் கடைப்பட்ட தென்னும் உண்மை,
    “நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை”
    என்னுந் தமிழ் மறையான குறளினாலும்,

    “உயிர்களைக் கொல்லச் சொன்னவன், கொன்றவன், ஊனை அறுக்கிறவன், அதனை விற்கிறவன், அதனை வாங்குகிறவன், அதனைச் சமைக்கிவறவன், பரிமாறுகிறவன், தின்கிறவன் என்னும் அவர்கள் அனைவருங் கொலைகாரர்களென்று சொல்லப்படுகிறவர்கள்”
    -மறைமலைஅடிகள் (“அறிவுரைக் கொத்து”)

  2. “குஜராத்தின் அகமதாபாத் போன்ற நகரங்களின் மையப் பகுதிகளில் புலால் உணவு கிடைப்பதில்லை.” ஹரித்துவாரிலும் இதுதான் நிலை.

  3. //குஜராத்தின் அகமதாபாத் போன்ற நகரங்களின் மையப் பகுதிகளில் புலால் உணவு கிடைப்பதில்லை. நகரின் ஒதுக்குப் புறமான பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். புலால் வாங்க அங்கு தான் செல்ல வேண்டும்//

    நான் மஸ்கட்டில் பணிபுரியும் இடத்தில் நிறைய குஜராத்திகள் பணிபுரிகின்றனர். அவர்களிடம் நான் விசாரித்த வரை, அவர்கள் இதை கடுமையாக மறுக்கின்றனர். அகமதாபாத்தின் மையமான பல இடங்களில் புலால் உணவு கிடைப்பதாகவும், புலாலுக்கு அங்கு தடையேதும் இல்லை எனவும் கூறுகின்றனர். தேர்தலுக்கு முன்பு நடந்த மோடி எதிர்ப்பு கூட்டத்திலும் தோழர் மருதையன் இதையே கூறினார். இந்த செய்தியின் உண்மைதன்மை குறித்து ஆராய்வது நலம்.

  4. I hate caste system. It is ridiculous. I’ve traveled all over the country but never seen such a stupid system exists. It was there 300-400 years back. Also, generally indians are very dirty. If you step into any indian house in abroad, you mostly see a dirty bathroom and kitchen. Indian food is touch to cook but should be cleaned everyday!

    tamil should eradicate the caste and move forward with knowledge based system.

  5. வாசக் கருவாட்டு வாசம் நாடுபூரா மணக்கட்டும். நாத்த பூணூல் அதிகாரத்த வேறோட மாத்தட்டும்.மக்களெல்லாம் ஒண்ணுகூடி வினவு தளத்த வாழ்த்தட்டும்…வருங்காலம் இது தொடரட்டும்.மக்கள் உறவு வளரட்டும்.மற்றம் ஒண்ணு வேகமா வரட்டும்,வரட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க