privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்புஜதொமு மாவட்ட செயலாளர் தோழர் சிவா பொய் வழக்கில் கைது

புஜதொமு மாவட்ட செயலாளர் தோழர் சிவா பொய் வழக்கில் கைது

-

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், தோழர் சிவா மீது போலீசு பொய் வழக்கு போட்டு வேலூர் சிறையிலடைத்திருக்கிறது.

தோழர் சிவா
தோழர் சிவா (கோப்புப் படம்)

21/09/2014 அன்று காலை 6.00 மணிக்கு திருபெரும்புதூர் செக்போஸ்ட் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த போது அங்கே வந்த போலீசு விசாரணை என்ற பெயரில் திருபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தோழர் சிவாவை கூட்டிச் சென்று செல்போனை பிடுங்கி அணைத்து வைத்தது. காலை 6.00 மணிக்கு கைது செய்த போலீசு காலை 10.00 மணி வரை யாருக்கும் தகவல் சொல்ல அனுமதிக்கவில்லை. தகராறு செய்த பின்னர்தான் இன்ஸ்பெக்டரின் போனில் இருந்து மட்டும் தகவல் சொல்ல அனுமதித்திருக்கிறது.

தகவல் அறிந்த பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகக்குழு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் தோழர்கள் திருபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது, தோழர் சிவா மீது திருபெரும்புதூர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (ACL) தர்மசீலன் கொடுத்த புகாரின் பேரில் தான் கைது செய்ததாக இன்ஸ்பெக்டர் பாலு தெரிவித்தார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக திட்டியது, கலவரத்தை தூண்டும் படி வன்மமாக பேசியது என நான்கு பிரிவுகளில் தோழர் சிவா மீது போலீசு பொய் வழக்கு போட்டு வேலூர் சிறையிலடைத்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் போலி சுதந்திர தினத்தன்று GSH ஆலைத் தொழிலாளர்கள் சார்பாக நடந்த காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக முற்றுகையின் போது 167 தொழிலாளர்கள் மீது போலீசு பொய் வழக்கு போட்டு வேலூர் சிறையிலடைத்தது. இதைக் கண்டித்து GSH ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆகஸ்ட்-30 அன்று திருபெரும்புதூர் பேருந்து நிலையத்திற்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏசியன் பெயிண்ட் தொழிலாளர்களும், AICCTU தொழிற்சங்கமும் அழைப்பு விடுத்தன. இக்கூட்டத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்யும் மாவட்ட ஆட்சியரையும், தொழிலாளர் துறை உதவி ஆணையர் (ACL) தர்மசீலனையும், காவல் துறையையும் அம்பலப்படுத்தி தோழர்கள் பேசினர். இதை உளவு பிரிவு போலீசு வீடியோவில் பதிவு செய்தது

ஒரு வாரம் கழித்து பு.ஜ.தொ.மு காஞ்சி மாவட்ட நிர்வாககுழு தோழர்கள் தொழிலாளர் பிரச்சினைக்காக தொழிலாளர் துறை உதவி ஆணையர் (ACL) தர்மசீலனை சந்தித்த போது ஆகஸ்ட்-30 கண்டன ஆர்ப்பாட்டத்தில் தன்னை அம்பலப்படுத்தி பேசியதை சுட்டிக்காட்டி உங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் எனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று மிரட்டியுள்ளார்.

திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்ச்சத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களில் (நோக்கியா முதல் நிசான் வரை ) கொத்துக் கொத்தாக ஆட்குறைப்பு நடைபெற்று வருகிறது, இதை அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு இப்பகுதிகளில் ஆலைவாயில்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுவதைக் கண்டித்து இம்மாத இறுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர்.

இதை தெரிந்து கொண்ட முதலாளிகளின் அடியாள் படையான அதிகார வர்க்கமும், உளவு பிரிவு போலீசு தோழர் சிவாவை தீவிரமாக கண்காணித்து வந்தது. இதன் விளைவாகவே கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது.  உளவுத்துறை போலீசு தோழர் சிவா வசிக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரிடம் சென்று மிரட்டியிருக்கிறது. வீட்டின் உரிமையாளரிடம் மாவட்ட நிர்வாகக்குழு தோழர்கள் பேசி அவரை தைரியப்படுத்தியிருக்கின்றனர்.

தொடர்ச்சியாக பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது பல பொய் வழக்குகளை போட்டு இதன் மூலம் பு.ஜ.தொ.மு-வின் செயல்பாட்டை இப்பகுதிகளில் முடக்கி விடலாம் என மனப்பால் குடிக்கிறது, காவல்துறை. போராட்டமும், சிறையும் வாழ்வின் ஒரு அங்கம் தான் என தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் ஆளும்வர்க்கத்திற்கு உணர்த்துவார்கள்.

தோழர் சிவா கைது

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-காஞ்சிபுரம் மாவட்டம்