privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!

மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!

-

உணவு மானியம்: மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!

ந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் ஒன்பதாவது அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியங்களை அதிரடியாகக் குறைக்கக் கோரிய மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள், அது தொடர்பாக, “ஏழை நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தமது ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் 10 சதவீத அளவிற்கே விவசாய மானியமாக வழங்கவேண்டும். இந்த மானியமும் 1985-88-ம் ஆண்டைய விவசாய உற்பத்தியின் மதிப்பைத் தாண்டக்கூடாது” என்ற நிபந்தனையை முன்வைத்தன. இந்த நிபந்தனையை ஏழை நாடுகள் முழுமையாகவும் உடனடியாகவும் ஏற்க மறுத்ததையடுத்து, “ஏழை நாடுகள் தற்பொழுது வழங்கிவரும் விவசாய மானியத்தை 2017-ம் ஆண்டு வரை தொடரலாம். அதற்குள் இப்பிரச்சினையில் ஓர் இறுதி முடிவை எட்ட வேண்டும்” என சமரச உடன்பாடு கொண்டு வரப்பட்டது.

இந்தோனேஷியா ஆர்ப்பாட்டம்
ஏழை நாடுகளின் விவசாயிகளை வேரறுக்கும் உ.வ.க.வின் பாலி மாநாட்டுத் தீர்மானங்களை எதிர்த்து இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இந்தச் சமரச உடன்பாடை ஏழை நாடுகள் பெறுவதற்கு ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. இதன்படி, ஏழை நாடுகளின் இறக்குமதி வர்த்தகத்தை மேலும் தாராளமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தமொன்று (Trade Facilitation Agreement) இறுதி செய்யப்பட்டது. இப்புதிய ஒப்பந்தத்தை 2014-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் உ.வ.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பு நாடுகளும் அங்கீகரித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பாலி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறாக, பாலி மாநாடு ஏழை நாடுகள் மீது இரண்டு இடிகளை இறக்கி, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்குச் சாதகமாக முடிந்தது. இம்முடிவுகளை ஏழை நாடுகள் மீது திணிப்பதற்கு இந்திய அரசு – மன்மோகன் சிங் தலைமையில் இருந்த காங்கிரசு அரசு – ஏகாதிபத்தியங்களின் அல்லக்கையாக நடந்துகொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் நடந்த உ.வ.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி அரசு, விவசாயத்திற்கு மானியம் அளிக்கும் விசயத்தில் ஓர் இறுதியான முடிவை எட்டாமல், இறக்குமதி வர்த்தகம் தொடர்பாக பாலி மாநாட்டில் எடுத்த முடிவை அங்கீகரிக்க முடியாது எனக் கூறியதையடுத்து, அக்கூட்டம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏமாற்றமளிப்பதாக முடிந்து போனது. 160 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள உ.வ.க.வில் இந்தியாவின் முடிவை தென் ஆப்பிரிக்கா, கியூபா, வெனிசுலா உள்ளிட்டு ஒரு நான்கைந்து நாடுகள் மட்டுமே ஆதரித்து நின்றன. எனினும், உ.வ.க.வில் எடுக்கப்படும் முடிவுகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால், இந்திய அரசின் திடீர் கலகம் வெற்றிகரமாக முடிந்தது.

இந்த திடீர் கலகத்தைக் காட்டி, ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நிற்கும் உறுதி கொண்ட சுயமரியாதைமிக்க போராளி போலவும்; இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வந்த இரட்சகன் போலவும் மோடி அரசை ஊடகங்கள் துதி பாடின. “மோடி அரசு இறுதிவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்” என நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் அறிவுரை வழங்கி, மோடி அரசிற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால், அவரது அரசோ அரிசி மற்றும் கோதுமை கொள்முதலின்பொழுது மாநில அரசுகளால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்குத் தடைவிதித்துத் தனது உண்மைச் சொரூபத்தை வெளிகாட்டிக் கொண்டது.

மோடி- ஜான் கெர்ரி
உ.வ.க.வின் வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வற்புறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து உரையாடும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி.

உ.வ.க.வின் ஜெனீவா மாநாடு தோல்வியில் முடிந்து போனதற்கு இந்தியாதான் காரணமென்று கூறி, ஏகாதிபத்தியவாதிகள் மோடி அரசைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியவுடனேயே, அவரது அரசு தன்னிலை விளக்கம் என்ற வெள்ளைக் கொடியைக் கையில் ஏந்தி, இம்சை அரசன் வடிவேலு கணக்காக சரணடைந்தது என்பதே உண்மை.

“வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதை இந்தியா மறுக்கவில்லை. விவசாய மானியம் பற்றிய முடிவும் வர்த்தக ஒப்பந்தமும் ஒரே சமயத்தில் நிறைவேற வேண்டும் என்பதுதான் அடியேனின் கோரிக்கை.

“செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உ.வ.க.வின் கூட்டத்தில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடுகிறோம். செப்டம்பரில் முடியாவிட்டால்கூட, டிசம்பர் இறுதியில் நடைபெறும் கூட்டத்தில் கையெழுத்துப் போட்டுவிடுவோம்.

“விவசாயத்திற்கும் ரேசன் பொருட்களுக்கும் எவ்வளவு மானியம் தர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஆண்டை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் விண்ணப்பம்.”

– என்றெல்லாம் அதிகாரிகள் மூலம் விளக்கத்திற்கு மேல் விளக்கமளித்து அமெரிக்க எஜமானர்களின் கோபத்தைத் தணிக்க முயன்றது மோடி அரசு. ஜெனீவா மாநாட்டில் மோடி அரசு நடத்திய சவடால் நாடகம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உ.வ.க. கூட்டத்திலோ அல்லது பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் செல்லும் சமயத்திலோ முடிவுக்கு வந்துவிடக் கூடும். ஆனால், விவசாயிகளின் மானிய உரிமையைக் காப்பதற்காகவோ அல்லது விவசாயத்திற்கு எவ்வளவு மானியம் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நமது நாட்டின் சுயாதிபத்திய உரிமையைத் தட்டிப் பறிக்க முயலும் ஏகாதிபத்தியங்களின் அடாவடித்தனத்தை எதிர்த்து நிற்பதற்காகவோ இந்த சவடால் நாடகம் நடத்தப்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கரும்புக்கான ஆதார விலையைக் கூட்டித் தரக் கோரித் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சை இரயில் நிலையம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஏனென்றால், நெல்லுக்கு ஆதார விலையாக ரூ 2,500/- ரூபாய் தர வேண்டும் என விவசாயிகள் கோருகிறார்கள். ஆனால், மோடி அரசோ சன்ன ரக நெல்லுக்கு ஆதார விலையாக ரூ.1,400/-ஐ மட்டும் அறிவித்து, இதற்கு மேல் ஒரு தம்பிடிகூடத் தரக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு மேல் மாநில அரசுகள் ஊக்கத் தொகை கொடுத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி கொள்முதல் செய்ய மாட்டோம் என்று மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மேலும், யூரியாவிற்குத் தரப்படும் மானியத்தை ரத்து செய்ய ஆலோசித்து வருவதாக பட்ஜெட் உரையிலேயே அறிவித்திருக்கிறது, மோடி அரசு. யூரியா மானியத்தை ரத்து செய்வதன் மூலம் அரசிற்கு 20,000 கோடி ரூபாய் வரை மிச்சமாவது ஒருபுறமிருக்க, விவசாயிகளிடமிருந்து 20,000 கோடி ரூபாய் அளவிற்குப் பகற்கொள்ளையடிக்கும் வாய்ப்பு உரக் கம்பெனிகளுக்குக் கிடைக்கும். உணவுப் பொருள் கொள்முதலில் தனியாரையும் அனுமதிக்கும் நோக்கில் தேசியப் பொதுச் சந்தை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள மோடி அரசு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல, “மானியம் வழங்குவது நாட்டுக்கோ அல்லது பொருளாதாரத்துக்கோ நல்லதல்ல. பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியத்தால், அதன் சுமை அதிகரித்து வருகிறது. எனவே, மானியங்களுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்வதன் மூலம் அந்தச் சுமையைக் குறைக்க வேண்டியுள்ளது” என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்த அறிவிப்பை வழக்கமான மிரட்டல் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனென்றால், அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செலவு மேலாண்மைக் கமிட்டியை அமைத்து, அதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலானைத் தலைவராக நியமித்திருக்கிறது மோடி அரசு. பிமல் ஜலான் முந்தைய காங்கிரசு அரசுக்கு நெருக்கமானவர் என்பதெல்லாம் மோடிக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அம்பை எய்யத் தயாராக இருந்த அர்ஜுனனுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்ததாகக் கூறப்படுவதைப் போல, மோடியின் கண்களுக்கு பிமல் ஜலான் தனியார்மயத்தின் தீவிர விசுவாசி என்பது மட்டுமே தெரிகிறது. தனியார்மயம் என்ற சரடு காங்கிரசையும் பா.ஜ.க.வையும் எப்படியெல்லாம் பிணைக்கிறது என்பதற்கு இது இன்னொரு சான்று.

விவசாய மானிய வெட்டுமானியம் வழங்குவது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டும் என உ.வ.க. கூட்டத்தில் மோடி அரசு வாதாடியிருப்பதன் பொருள், தற்பொழுது விவசாயிகள் பெற்றுவரும் மானியத்தையும் தட்டிப் பறிப்பதாகத்தான் அமையுமேயொழிய, வேறெதுவுமாக இருக்க வாய்ப்பே இல்லை. மானியத் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை, ரேசன் கடைகளில் அரிசியையும் கோதுமையையும் என்ன விலையில் விற்க வேண்டும், எவ்வளவு விற்க வேண்டும், யாருக்கு விற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்தியங்களிடம் தாரை வார்க்கும் துரோகத்தை மூடிமறைப்பதற்காகவே மோடி அரசு ஜெனீவாவில் சவடால் நாடகத்தை நடத்தியிருக்கிறது என்பதைத்தான் இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன.

உ.வ.க. பரிந்துரைக்கும் விவசாய மானிய வெட்டு நேரடியாக விவசாயிகளையும், ரேசன் கடையில் கிடைக்கும் அரிசியையும் கோதுமையையும் பருப்பையும் பாமாயிலையும் நம்பிவாழும் ஏழைகளையும் பாதிக்குமென்றால், வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கை சிறுதொழில்கள் மீதும் அதனை நம்பி வாழும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தலையிலும் இறங்கப் போகும் இடியாகும்.

ஆப்பிள், ஜெனரல் எலெக்ட்ரிக், காட்டர் பில்லர், ஃபைசர், சாம்சங், சோனி, எரிக்சன், இ-பே, ஹுண்டா, லெனோவா உள்ளிட்ட கையளவேயான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் உ.வ.க. கொண்டுவரவுள்ள வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கையால் பலன் அடையவுள்ளன. இந்நிறுவனங்கள் தயாரிக்கும் நுகர்பொருட்களைக் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டியாக இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் மாற்றப்படும். எனவே, பாலி மாநாட்டில் எடுக்கப்பட்ட இரண்டு முடிவுகளையும் எதிர்ப்பதற்குப் பதிலாக விவசாயத்திற்கு மானியம் வழங்குவதில் கொஞ்சம் சலுகை காட்டினால் வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் என்பது கீழ்த்தரமான பேரமன்றி வேறல்ல. இந்த பேரம் எதிர்வரவுள்ள பஞ்சாப், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஓட்டுப் பொறுக்குவதற்கு மோடிக்கு உதவக்கூடும்.

– செல்வம்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________