privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக்கை மூடு – டாஸ்மாக் ஊழியர் போராட்டம் !

டாஸ்மாக்கை மூடு – டாஸ்மாக் ஊழியர் போராட்டம் !

-

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் அருகில், டாஸ்மார்க் ஊழியர்கள் தாங்கள்  வேலை பார்க்கும் கடைகளை  படிப்படியாக மூட வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்து கடந்த வியாழன்று (02/10/2014) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

பத்திரிக்கையின் மூலம் இப்போராட்டத் தகவல் அறிந்த பெண்கள் விடுதலை முன்னணி  மற்றும்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி  அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சுவரொட்டிகளும், பிரசுரங்களும் அச்சிட்டு மக்களிடம் விநியோகித்தோம். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தோம்.

எமது தோழர்கள் பந்தலை அடையும் பொழுது, உண்ணாவிரத பந்தல் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களால் நிறைந்திருந்தது. பிஇ, எம்பிஏ படித்த பட்டதாரி இளைஞர்கள், அரசு நடத்தும் மதுபானக் கடைகளில், கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் அவலத்தை அவர்களின் உரை மூலம்  நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.

தங்களது 6 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி பலரும் பேசினார்கள்.

  • மது விலக்கை படிப்படியாக அமுல் படுத்து!
  • மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைத்து அறிவித்திடு!
  • மதுக் கடை பார்களுக்கான உரிமங்களை உடனடியாக ரத்து செய்!
  • வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை, மாதம் முதல் தேதி விடுமுறை தினமாக அறிவித்திடு!
  • அரசு வேலைக்கான காலி பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நியமனம் செய்! என்பதே அவர்களின் கோரிக்கை.

போராட்டத்தில் மதுபானக் கடை ஊழியர்கள், தங்கள் அனுபவங்களையும், அல்லல்களையும் கொட்டித் தீர்த்தனர்.

திருவள்ளூரைச் சேர்ந்த ஊழியர், திரு. மாரி பேசுகையில் அன்றாட வேலையின் சிரமங்களையும், இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட வழியில்லாத அவல நிலையையும் எடுத்துரைத்தார். இந்த குடியினால் பல குடும்பங்கள் சீரழிவதை கண்கூடாக கண்டதையும் கூறினார்.

தன் பணிச்சுமை  அரசால் அங்கீகரிக்கப்படாத போதும் குடிக்கு அடிமையான ஒருவரை மீட்ட கதையை கூட்டத்தினரிடம் பகிர்ந்தார். குடியிலிருந்து மீண்டவர், தன் துணைவியாருடன் வந்து, மகளின் திருமண பத்திரிக்கையுடன், ரூ. 10,000 கொடுத்து அழைத்ததையும், அவரது துணைவியார்  தன் கணவரை குடியிலிருந்து மீட்டதினால் தன் குடும்பம் சரியான நிலைக்கு வந்துள்ளதையும், தான் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றிய நிலைமை மாறியதையும் நெஞ்சுருகிப் பேசியதை கூட்டத்தினரிடம் பகிர்ந்துக் கொண்டார்.

பட்டதாரி இளைஞர்கள் மதுபானக் கடைகளில் வேலை பார்த்து பலத் தரப்பட்ட மக்களுடன் பழகிப் பக்குவப்பட்டுள்ளதையும், படிப்படியாக மதுக்கடைகளை மூடிவிட்டு, அரசின் மற்ற துறைகளில் எங்களுக்கு வேலைக் கொடுத்துப் பாருங்கள் , நிலுவையில் இருக்கும் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் காட்டுவோம் என்று அரசுக்கு சவால் விட்டனர்.

அவரைத் தொடர்ந்து பேசிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர் அமிர்தா, அரசு நடத்தும் மதுபானக் கடையை படிப்படியாக மூடக் கோரி அதில் பணிபுரியும் ஊழியர்களே நடத்தும் இந்த போராட்டம் ஒரு நல்ல துவக்கம் என்றும், குடிப்பவர்கள் ஆண்கள், விற்பது அரசு, ஆனால் இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள், குழந்தைகள் தான்! இலவச, விஞ்ஞானப்பூர்வமான கல்வியைக் கொடுக்க முடியாத அரசு மதுபானக் கடைகளுக்கு அதிக இலக்கு வைத்து குடிமக்களிடம் பணம் பறிக்கிறது.  மேலும், நீதிமன்ற தீர்ப்பால், குரோம்பேட்டை அருகே நெடுஞ்சாலையிலிருந்து அகற்றிய மது கடைகளை மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புப்பகுதி என்றும் பாராமல் கடையை திறக்கமுற்பட்டபோது, அதற்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணி பகுதிப் பெண்களுடன் 10 நாட்கள் போராடி கடையை திறக்க விடாமல் செய்தோம். மேலும், இதற்காக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் என ஒரு இயக்கமாக முன்னெடுத்து அரசு நடத்தும் மதுபானக் கடை ஒழிப்புக்கு முன் நின்று போராடுகிறோம்.

அரசானது பண்டைய சாண்டில்யன் காலந்தொட்டே மக்களை மது போதைக்கு திட்டமிட்டே உட்படுத்தி, மக்கள் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருக்க மயக்கத்திலேயே  வைத்திருப்பது  இன்றும் தொடர்கிறது.

தொடர்ந்து குடிப்பதினால் குடும்பங்கள் சீரழிவதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுக்கடை ஒழிப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழகமோ குடிமக்களின் நலனை பாரமால், கல்லா கட்டும் நோக்கதோடு  அதன் விற்பனை இலக்கை அதிகமாக உயர்த்துகிறது. மேலும், அரசு மதுபானக்கடைகளை முற்றிலும் ஒழிக்கும் வரை  நமது போராட்டங்கள்  தொடரவேண்டும்  என வலியுறுத்திப் பேசினார்.

பிறகு பேசிய டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு. மோகன், தனக்கு முன் பேசிய பெவிமு தோழர் அமிர்தாவின் உரையில் மக்களின்  குடிகெடுக்கும் பின்னணியில் ஆணிவேராக செயல்படும் அரசின் பங்கைப் புரிந்து விளக்கியதை சுட்டிக் காட்டினார். மேலும்,  கடைகளில் பணிபுரியும் 60% இளைஞர்களே  குடிக்கு அடிமையாகி நோய்களுக்கு ஆட்படுவதை வேதனையுடன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் அலை அலையாய் எழுந்து டாஸ்மார்க் கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பொழுது தான் அரசை பணிய வைக்க முடியும். மது விலக்கை அமுல்படுத்துமாறு அரசை பணிய வைக்க முடியும், என்றார்.

தமிழக மக்களை ஒட்டு மொத்தமாக சீரழித்து வரும் டாஸ்மாக் எனும் குடி போதையை ஒழிக்க அதை விற்பனை செய்யும் ஊழியர்களே முன் வந்து போராடுவது அரிதினும் அரிதான விசயம். இதனால் அவர்கள் வேலை வாய்ப்பு பறிபோனாலும், மாற்று ஏற்பாடுகளுக்கு உத்திரவாதம் இல்லையென்றாலும் அவர்கள் இப்படி ஒரு கோரிக்கை வைத்து போராடுவது மிக முன்னுதாரணமான விசயம். இந்த போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.

தகவல்: பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.