privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வீரபத்ர சுவாமி கோவில் நிலம் காக்க விவிமு போராட்டம் !

வீரபத்ர சுவாமி கோவில் நிலம் காக்க விவிமு போராட்டம் !

-

வட்டாட்சியர் அலுவலகமா? புரோக்கர்களின் தலைமையகமா?

ருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகம் நிலத்திருட்டு கும்பலின் தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.இதை அம்பலப்படுத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10.10.2014 வெள்ளிக் கிழமையன்று போலீஸ் தடையை மீறி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பென்னாகரம் வட்டத்தில் இருக்கின்ற ஒகேனக்கல் பிரபலமான சுற்றுலா தலம். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லில் இருக்கின்ற பாரத சாரணியர் முகாம் அருகில், வீரபத்திர சுவாமி கோயில் என்ற சிறு தெய்வ வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18-க்கு ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் திரண்டு வழிபட்டு விழாவாக  கொண்டாடுவது வழக்கம். இந்த கோயில் மற்றும் இடத்தை பழங்குடி இன குருமன்ஸ் மக்கள் பராமரித்தும், கந்தாய ரசீது செலுத்தியும் வருகின்றனர். இதற்கான அடங்கலும் அரசுப் பதிவேட்டில் 1987-ல் இருந்து வருகிறது.

தற்போது ஒகேனக்கல் பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதாலும், ரியல் எஸ்டேட் சூதாட்டம் மூலம் நிலத்தின் விலை உயர்ந்து உள்ளதாலும் இந்த வீரபத்திர சுவாமி நிலத்தை (30 சென்ட்) எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்று நிலத்திருட்டு கும்பல் முயற்சித்து வருகிறது. இந்த கும்பலின் தலைவன் மாரிமுத்து. இவன் ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவன். இவனது கூட்டாளிகள் மணி, ஜெயபால், காளியப்பன், சக்திவேல் ஆகியவர்கள் நிலத்தை அபகரிக்க கோயிலைச் சுற்றி இருந்த சுற்றுச் சுவரை இடித்து பெயர்ப்பலகையை உடைத்து எறிந்து அடையாளம் தெரியாதவாறு சமப்பபடுத்தி உள்ளனர்.

வீரபத்திர சுவாமி கோயிலை ஒட்டியிருந்த மகாதேவ சுவாமிகள் லிங்காயித்து மடம். இந்த மடத்தில் இருந்த சிவலிங்கத்தை தூக்கி ஆற்றில் வீசிவிட்டு, சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம்  என்று பொய்யுரைத்து அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் விடுதிகள் கட்டவும், இடத்தை வாடகைக்கு விட்டு காசு பார்க்கவும் திட்டமிட்டு வருகின்றனர். மேற்கண்ட நிலத்தினை கைப்பற்றி எப்படியாவது போலி பட்டா பெறுவது என்று பென்னாகர வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புரோக்கர்கள் மூலம் முயன்று வருகின்றனர்.

வட்டாட்சியர் கனகராஜ் இந்த நிலத்திருட்டு கும்பலிடம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுவது வெளிவந்து ஊரே நாறிக் கொண்டிருக்கிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் சக அதிகாரிகளே முகம் சுழித்துக் கொண்டாலும், கனகராஜ் இந்த திருட்டுக் கும்பலுடன் இணைந்து செயல்படுவதை இதுவரை நிறுத்திக் கொள்ளவில்லை. இது போதாது என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை தினத்தன்று புரோக்கர்கள்தான் பூஜை செய்துள்ளனர். அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு புரோக்கர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி போலிப்பட்டா பெறுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. சஞ்சீவன் என்ற ஒரு புரோக்கர் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு நிலத்தை அபகரித்து உள்ளான்.

மேற்கண்டவாறு வீரபத்திரசுவாமி கோயில் நிலத்தை அபகரிக்கவும், இந்த கூட்டுக்கும்பல் முயல்கிறது. வீரபத்திர சுவாமி கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் கொடுத்தால், வட்டாட்சியர் சொன்னால்தான் வழக்கு பதிவு செய்வேன் என்று நடவடிக்கை எடுக்க மறுக்கிறது, காவல்துறை. இதற்குப் பிறகு உயர்நீதி மன்றத்தில் கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மோசடித்தனத்திற்கு எதிராகவும், நில அபகரிப்பு கும்பலுக்கு எதிராகவும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணம் காட்டி காவல்துறை இரண்டு முறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. மறுபக்கத்தில் அதிமுக ரவுடிகள் கடையடைப்பு, பேருந்து எரிப்பு போன்ற சட்டவிரோத பயங்கரவாத வேலைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற சட்டவிரோத வேலைகளை காவல்துறை செய்து வந்தது.

பொறுத்துப் பார்த்த மக்கள் வி.வி.மு தலைமையில் தடையை மீறி திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்த கட்டமாக காவல்துறை பொய்வழக்கு போட முயற்சித்து வருகிறது. மக்களோ நிலத்திருடர்களிடமிருந்து நிலத்தை மீட்டெடுக்க வி.வி.மு தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

துண்டறிக்கை

ஒகேனக்கல்லில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான வீரபத்திரசாமி கோயில் மற்றும் நிலத்தை மீட்டுக்கொடு!

ஆர்ப்பாட்டம்.

இடம் : பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில்
நாள் : 10.10.2014, வெள்ளிக் கிழமை காலை 11 மணி அளவில்
தலைமை : தோழர் சரவணன், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்

முன்னிலை : கோயில் நிர்வாகிகள்

  • திரு நடராஜ், கே. அக்ரகாரம்
  • திரு. எல் மாதையன், ஜங்கமையனூர்
  • திரு. கிருஷ்ணன், பூதிப்பட்டி
  • திரு சின்னசாமி, மல்லாபுரம்
  • திரு சிக்கமல்லன், நாட்ராபாளையம்
  • திரு. முனியப்பன், பருவதனஅள்ளி

உரையாற்றுவோர்

  • திரு. ராசு, பழங்குடி குருமன்ஸ் சங்க மாவட்டை தலைவர்
  • திரு ரவி, இளம் வழக்கறிஞர் சமூக நீதி மையம், உயர்நீதிமன்றம், சென்னை
  • திரு இலட்சுமணன், ஒன்றிய செயலாளர், பழங்குடி குருமன்ஸ் சங்கம், பென்னாகரம்
  • தோழர் ஜானகிராமன், வழக்கறிஞர், தருமபுரி மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
  • தோழர் ராஜ, தருமபுரி மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
  • தோழர் அருண், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
  • தோழர் கோபிநாத், வட்டார செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்

நன்றியுரை
திரு. முனிராஜ், கூத்தம்பாடி

notice-1

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா மையமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. சுற்றுலா மையத்திற்கு முன்பு இருந்தே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்களது சிறு தெய்வங்களை எடுத்துச் சென்று, காவேரி நீரில் குளிப்பாட்டி, ஓரிரு நாட்கள் தங்கி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட குருமன்ஸ் சமூக பழங்குடி மக்கள் தங்களின் வீரபத்திர சாமிக்கு கோயில் ஏற்படுத்தி, அதைச் சுற்றி கருங்கல் கட்டிடம் கட்டி காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயில் ஒகேனக்கல் பாரத சாரணியர் பயிற்சி முகாம் அருகில் உள்ளது. இதன் நிலம் 30 சென்ட் ஆகும். இந்த நிலத்திற்கும், கோயிலுக்கும் சட்டபூர்வமான முறையில் உரிய ஆதாரங்களும் உள்ளன.

வழக்கம் போல இந்த ஆண்டு ஆடிமாதம் பழங்குடி மக்கள் தங்கள் தெய்வத்தை வழிபட சென்று பார்க்கும் போது அம்மக்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் இந்தக் கோயிலைச் சுற்றி இருந்த கருங்கல் கட்டிடம், பெயர்ப்பலகை மற்றும் கோயிலின் பிற பகுதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டிருந்தது. வீரபத்திர சாமி கோயிலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஏனெனில், அதிக விலை போகும் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்ற கனவுகளுடன் களமிறங்கி அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இம்மகளின் நிலத்தை கைப்பற்றுவதற்கென்றே இதனை ஒட்டி இருக்கின்ற சித்தலிங்கேஸ்ரவர் என்ற சிவன் கோயிலை முதலில் கைப்பற்றி, இந்த கோயிலில் இருந்த லிங்கத்தை ஆற்றில் வீசிவிட்டு, சென்னகேசவ பொருள் கோயில் என்று உருவாக்கி இதற்கு ஒரு பூசாரியை நியமித்து, இதன்மூலம் இதனை ஒட்டி இருக்கிற வீரபத்திர சாமி கோயில் நிலத்தை அபகரிப்பது என்ற திட்டத்தில் இக்கும்பல் செயல்பட்டு வருகிறது.

ஒகேனக்கல் சுற்றுலா மையம் ஆனபிறகு இதனைச் சுற்றியுள்ள நிலம், தங்கும் விடுதிகள் மற்றும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனை சாதகமாக்கி எப்படியேனும் பெரும் பணத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று குறுக்கு வழியில் பொதுச் சொத்தை அபகரிக்க திட்டம் போட்ட மாரிமுத்து என்பவர் தன்னுடன் மணி, ஜெயபால், காளியப்பன் ஆகியோரை சேர்த்துக் கொண்டு பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்க தீவிரமாக ஈடுபடுகின்றார். உண்மையில் இந்த நிலம் பழங்குடி குருமன்ஸ் சமூக மக்களுக்கே சொந்தமானது. இதற்காக கந்தாய ரசீதும், அடங்களும் அரசு பதிவேட்டிலும் உள்ளன.

மேலும், மேற்கண்ட நான்குபேரில் காளியப்பன் என்பவர் தள்ளுவண்டி வைத்து பிழைப்பு நடத்தி கொள்கிறேன் என்று அம்மக்களின் தலைவரிடன் சென்று விட்டு அனுமதி பெற்றுக் கொண்டவர். தற்போது மாரிமுத்துவுடன் இணைந்து நிலத்தை அபகரிக்கவும், ஆக்கிரமிக்கவும் முயற்சித்து வருகிறார். இவர்கள் இதற்கான போலி பட்டா பெறுவதற்காக அதிகாரிகளை வளைத்து போடும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற “தொழில்” மூலம் வட்டாட்சியர் சம்பளத்திற்கு அதிகமாக வருவாய் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிலத்தை அபகரிப்பதற்காக பல மட்டங்களில் லஞ்ச பணம் கைமாறி இருப்பது கூறப்படுகிறது. தற்போது, நிலத்தைக் கைப்பற்றி வாகன நிறுத்துமிடமாக மாற்றி காசு பார்க்க ஆரம்பித்துள்ளது இந்த கும்பல். இது தொடர்பாக குருமன்ஸ் சமூக மக்கள் அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் உரிய முறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நில அபகரிப்பு சட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்கள் என்பதாலே அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கிறது அரசு.

இதுநாள் வரை நிலத்தை அபகரித்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? கண்துடைப்பு பேச்சுவார்த்தை நடத்தி அம்மக்கள் மிரட்டப்படுவது ஏன்? நிலத்தை அபகரிப்பதுடன் சிறு தெய்வங்களை அழித்து பார்ப்பன கடவுளை ஏற்படுத்தி பின்னர் வழிபாட்டு உரிமைகளை பறித்து நிரந்தரமாக துரத்தியடிக்கவே சதி செய்கின்றனர். ஏனெனில், சாமியை யார் வேண்டும் என்றாலும் வணங்கி விட்டு போகட்டும், பூஜைகள் செய்யட்டும் ஆனால் கோயில் இடம் எங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மாரிமுத்து கூறுவதிலிருந்து நிலத்தை அபகரிக்கும் இவர்களது நோக்கம் தெரியவருகிறது.

சுற்றுலா மையத்தில் விடுதி கட்டியும், வாகன நிறுத்துமிடமாக்கியும் பணம் சம்பாதிக்கும் வேலையை செய்திட பல விடுதி உரிமையாளர்கள் இவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். எனவே, இந்த மோசடி கும்பலை தனிமைப்படுத்தி பொதுச்சொத்தை மீட்க ஒன்று திரள்வதும், இந்த கூட்டுக் கும்பல் சதியை முறியடிப்பதும் நமது கடமையாகும்.

கட்டிடத்தை இடித்தும் பெயர் பலகையை உடைத்தும் ஆக்கிரமிக்க முயற்சிக்கும் நபர்கள் மாரிமுத்து, மணி, ஜெயபால், காளியப்பன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியில் அணிதிரள்வோம்!

notice-2

விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம்.

தொடர்பு கொள்ள
தோழர் கோபிநாத்,
வட்டார செயலாளர்
9943312467