privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்! - புமாஇமு அழைப்பு

அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்! – புமாஇமு அழைப்பு

-

உயர்நீதி மன்றத்தால் மாநகராட்சிப் பள்ளிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவை சந்திப்போம்! அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்!

“மாநகராட்சிப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடு !” என்ற இயக்கத்தை இவ்வாண்டு தொடக்கம் முதல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் வீச்சாக கொண்டு சென்றோம் என்பது அனைவரும் அறிந்ததே.

மணலி அருகே உள்ள சடையான் குப்பம் என்ற ஊரில் உள்ள மாநகராட்சிப்பள்ளி ஒன்றின் கான்கிரீட் தளம் பெயர்ந்து விழுந்ததும் அதன் காரணமாக இரு மாணவர்கள் படுகாயமுற்றதையும் கண்டித்து மாநகராட்சிப்பள்ளிகளின் அவலநிலையை அம்பலப்படுத்தும் விதமாக ரிப்பன் கட்டிடத்தை முற்றுகையிட்டோம்.

முதல்வன் படபாணியில் மேயர் சைதை துரைசாமி “மாநகராட்சிப் பள்ளிகளில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. இருப்பதாக நீங்கள் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார். சவாலை ஏற்றுக்கொண்டோம். கல்வி தனியார்மயத்தில் அரசுப்பள்ளிகளுக்கு இடம் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம் தான் என்றாலும் அந்த ரகசியத்தை அனைவரின் முகத்துக்கு நேராக கொண்டு வர வேண்டியவேலை எங்களின் கைகளில் வந்தது.

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் புமாஇமுவினரும் மாநகராட்சி கல்வி அதிகாரிகளும் இணைந்த ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. குழு என்று அமைத்துவிட்டால் மட்டும் போதுமா? வேலைகள் எல்லாம் தானாக நிறைவேற இது மக்கள் நல அரசா என்ன? எருமை மாட்டுத்தோலை போர்த்திக்கொண்டு இருக்கும் இந்த அதிகார வர்க்கம் மக்களுக்காக வேலை செய்து விடுமா என்ன?

காலை 10 மணிக்கு ஒன்றிரண்டு பள்ளிகளுக்கு செல்வது, கோப்புகளில் கையெழுத்து இடுவது, மாதம் மும்மாரி மழை பொழிந்ததா என்று அமைச்சரிடம் மன்னன் கேட்பது போல “எப்படிம்மா இருக்கு ஸ்கூல்?” என்று கேட்டுவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் மாநகராட்சிக்கு திரும்புவது என இப்படி ஒரு வேலைப்பாணியை கொண்டுள்ளவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஆய்வு நடத்துவது? வேறு வழியே இல்லை. கிடைத்துள்ள சிறு வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தீர வேண்டும் . அதிகாரிகள் இழுத்தடித்தார்கள், வரமுடியாது என்றார்கள், லீவ் என்றார்கள். ஏதாவது சாக்கு சொல்லி வர மறுத்தவர்களை இழுத்துக்கொண்டும் சில இடங்களில் தவிர்த்துக்கொண்டும் ஓடினோம். 3 நாட்களில் 67 பள்ளிகளுக்குச் சென்றோம்.

தனியார்மயத்தில் அரசுப்பள்ளிகள் எவ்வாறு பலியிடப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்பதை நேரடியாகக் கண்டோம். மழை பெய்தால் கணுக்கால் வரை நீர் தேங்கும் ஒரு பள்ளி, தினமும் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கும் பள்ளிகள், கழிவறையே இல்லாத பள்ளிகள், குடிக்க தண்ணீர் இல்லாத பள்ளிகள், சாக்கடை ஓடும் பள்ளிகள், வாத்தியார் இல்லாத பள்ளிகள்,விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகள், கொடுங்கையூரில் குப்பையால் புகையால் செத்துக்கொண்டு இருக்கும் பள்ளி என உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்க இருக்கும் பள்ளிகள் தனியார்மய புதைகிணற்றில் திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டோம். அரசு ஊழியர்களிடம் “செஸ்” வரியென்று பிடித்தம் செய்யப்பட்ட 175 கோடி ரூபாயை செலவு செய்ய மறுத்து தனியார்பள்ளிகளை கொழுக்க வைப்பதை நேரடியாக உணர்ந்தோம். தானாகவே அரசுப்பள்ளிகள் அழியவேண்டும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட வேண்டும் என்கிறது, வாங்குகின்ற ஒவ்வொரு பொருளிலும் கல்விக்கான நிதியை பெறும் அரசு.

ஆய்வறிக்கையை தயாரித்துக்கொடுத்தோம் மேயரிடம். அவரோ உடனே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆரம்பப்பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்க தீர்மானம் கொண்டு வந்தார் மாநகராட்சியில். மக்கள் மன்றத்தில் ஆர்ப்பாட்டங்களாக, போராட்டங்களாக இந்த அரசு நமக்கானதல்ல என்பதை காட்டினோம். வீதியில் இறங்காமல் பள்ளிகளைக் காக்க முடியாது என்பதை வலியுறுத்தினோம்.

நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையின் படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். வழக்கு வந்த போதெல்லாம் அரசு வழக்குரைஞர் எழுந்து முதலில் சொல்லும் வார்த்தை “ 4 வாரம் டைம் கொடுங்கள் ” என்பதுதான். எதற்கு நான்கு வாரம், இருக்கிற பணத்தை கொடுக்க எத்தனை நான்கு வாரங்களைக் கேட்பாய் என்று எந்த நீதிபதியும் கேட்கவில்லை. இழுத்துக்கொண்டு வந்தோம் வழக்கை. முதலை வாயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றியது போல இந்த கேடுகெட்ட அரசின் வாயில் இருந்து தீர்ப்பைப் பெற்றோம்.

இரு தரப்பினரும் இணைந்து மாநகராட்சிப்பள்ளிகளினை ஆய்வு மேற்கொள்வது என்றும் அக்குழுவில் பச்சையப்பன் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா ஜெயச்சந்திரனும், டான் பாஸ்கோவின் முன்னாள் தலைமை ஆசிரியரும், கல்வி அதிகாரிகளும் இருப்பார்கள் என்ற தீர்ப்பு கிடைதது. போர்க்கால அடிப்படையில் 4 கோடி ரூபாயை மாநகராட்சிப்பள்ளிகளுக்கு ஒதுக்கவும் உத்தரவு கிடைத்தது. எமது அமைப்பின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த உத்தரவையும் கூட உடனே நடைமுறைப்படுத்தவில்லை. பலமுறை புகார் அளித்தும் போராடிய பிறகே கடந்த சில நாட்களாக அக்குழுவை ஆய்வு மேற்கொள்ளச் செய்துள்ளோம். அக்குழுவும் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றது.

அன்பார்ந்த மாணவர்களே! பெற்றோர்களே! ஆசிரியர்களே!

அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது நமது உரிமை. அதைப்பெற அரசுப்பள்ளிகளை பாதுகாப்பது நமது கடமை! போராடிப்பெற்ற ஆய்வுக்குழு உங்கள் பள்ளிக்கும் வருகின்றது. ஆய்வுக்குழுவை சந்தியுங்கள் ! அரசுப்பள்ளிகளை காக்கும் போராட்டத்தில் இணையுங்கள்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை
9445112675