இணையத்தில் கருவாடு ஆவணப்படம்

1

‘கோயம்பேடு சந்தையில் விதிமுறைகளை மீறி கருவாடு விற்கப்படுகிறது, அது அங்கு காய்கறி வாங்கப் போகும்  சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று தி இந்து நாளிதழ் ஆகஸ்ட் 17-ம் தேதி செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 19-ம் தேதி, கோயம்பேடு சந்தையில் விதிமீறி விற்கப்பட்டுக் கொண்டிருந்த ரூ 20,000 மதிப்புள்ள கருவாடு பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர், இந்து செய்தி எதிரொலி என்று வெற்றி அறிவிப்பு வெளியிட்டது அந்நாளிதழ்.

இந்துவின் அசைவ உணவு மீதான வன்மம் தொடர்பான இந்த பார்ப்பன ஆதிக்கத் திமிரைக் கண்டித்து வினவில் வெளியான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. வினவிலும் பின்னூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இந்துவைக் கண்டித்து பேஸ்புக்கில் பலர் ஸ்டேட்டஸ் போட்டனர்.

பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த  எதிர்வினைகளை தொகுத்து வினவில் பதிவுகளாக வெளியிட்டோம், அவை வாசகர்களிடையே மேலும் விவாதத்தை கிளப்பின.

இந்த விவாதங்களில் வெளியான கருத்துக்கள், கேள்விகளை பொதுவாக பார்ப்பனர்கள் முன்வைக்கும் அசைவ உணவு மீதான தீண்டாமை கருத்துக்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பதிவு செய்யும் விதமாக கோயம்பேடு வியாபாரிகள், அங்கு கருவாடு சப்ளை செய்யும் வணிகர்கள், அங்கிருந்து கருவாடு வாங்கிச் செல்லும் கடைக்காரர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், காய்கறிக் கடைக்காரர்கள், தரைக்கடை வணிகர்கள் ஆகியோரிடம் பேசினோம்.

இந்தப் பதிவுகளை ஒரு ஆவணப்படமாக தொகுத்திருக்கிறோம்.

இதன் டிவிடி விற்பனை, திரையிடலைத் தொடர்ந்து தற்போது இணையத்தில் முழுமையாக வெளியிடுகிறோம். நண்பர்கள் பாருங்கள், பரப்புங்கள், கருத்து தெரிவியுங்கள்….

ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும்  பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.

நன்கொடை அனுப்ப வேண்டிய விபரங்களை அறிய இந்த சுட்டியில் பார்க்கவும்.

1 மறுமொழி

  1. அருமையான இசையுடன் கலந்த சிறந்த விளக்கங்களுடன் கூடிய ஆவணப்படம். பாராட்டுகள்.நானும் அசைவச்சாப்பட்டு விரும்பி. ஆனாலும் சில கருத்துகள் கூற விரும்புகிறேன். எல்லா சைவச்சாப்பாட்டுக்காரர்களும் எல்லா காய்கறிகளையும் விரும்பிச் சாப்பிட்டு விடுவதில்லை. அதேபோல் எல்லா அசைவ விரும்பிகளும் அனைத்து விதமான அசைவ உணவுகளையும் விரும்புவதில்லை. ஆட்டுக்கறியை எடுத்துக் கொண்டால், தலை, மூளை, கால், குடல், ஈரல், கறி, மண்ணீரல், இரத்தம், எலும்பு என்று பல பாகங்கள் இருந்தாலும் ஒரு சில பாகங்கள் ஒரு சிலருக்குப் பிடிப்பதில்லை என்பது உன்மையே. எல்லா விதமான மீன் வகைகளையும் ஒருவர் விரும்புவார் என்று சொல்ல முடியாது. ஒருவருக்குப் பிடிக்காத ஒரு வகை மீன் இன்னொருவருக்கு மிகவும் விருப்பமாகவும் அமிர்தமாகவும் அமையும். டிஸ்கவரி சேனலில் சீனா, கொரியா போன்றநாடுகளில் அசைவம் சாப்பிடுவோர் பற்றி காட்டினார்கள்.நாய்,கரப்பான் பூச்சி, தேள்,எலி,முதலை,பல்லி, ஒருவகை வண்டு, மண்புழு இவற்றை எப்படியெல்லாம் சமைத்து அவற்றை உணவு விடுதிகளில் விற்பனைக்கு வைத்துள்ளார்கள் என்று காட்டினார்கள். அசைவம் சாப்பிடும் எனக்கே அதைப் பார்க்கும் போது மனதுக்கு ஒப்பாமல் இருந்தது. எனவே, உணவு என்பது ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பம் சார்ந்தது. ஒருவர் சாப்பிடும் உணவை மற்றவர் அருவெறுப்புடன் பார்ப்பது தவறு. வெறும் சோற்றுடன் பாகற்காய் மட்டும் சேர்த்து வேறு எந்த தொடுகறியில்லாமல் விருப்பமாக உண்ணும் என் மனைவியின் செயல் எனக்கு வியப்பாக இருக்கும்.நமது வீட்டில் நடக்கும் விருந்து விழாக்களில் அசைவ உணவு பரிமாறினாலும், வருபவர்களில் ஒரு சில சைவ சாப்பாட்டுக்காரர்களும் இருப்பர். அவர்களுக்கு நாம் தனியிடத்தில் வைத்து சைவச்சாப்பாடு போடுவதில்லையா? அசைவம் சாப்பிடுபவர்கள் கூட ஆண்டில் சில நாள்கள் விரதம் இருந்து, சைவ சாப்பாடு மட்டும் சாப்பிடுவதில்லையா? அதே போன்று சைவ சாப்பாட்டுக்காரர்கள் வீட்டுக்குத் தெரியாமல் அசைவச் சாப்பாடு அதன் மீதுள்ள விருப்பம் காரணமாக சாப்பிடுகிறார்கள். என்னைப் பொருத்தவரை கோயம்பேடு சந்தை காய்கறி விற்பனை செய்யப்படும் இடம். அங்கு, கருவாடு என்னும் ஒரு அசைவ உணவை விற்றால் அது அவர்களுக்கு ஒப்பாமல்தான் இருக்கும்.நமக்கு கருவாடு ஒரு வாசம் தரும் பொருள். ஆனால் அவர்களுக்கு அந்த வாசனை பிடிப்பதில்லை. எனவே, சைவப் பொருள்கள் விற்கும் இடத்தில் அசைவப் பொருள்கள் விற்பனையை தவிர்ப்பது தவறில்லையே.
    இந்த இடத்தில் சைவப் பொருள்கள் மட்டும் விற்கப்படும். இந்த இடத்தில் அசைவப் பொருள்கள் மட்டும் விற்கப்படும் என்று வைத்தால் அதில் தப்பில்லை என்பதே என் கருத்து. சாப்பாட்டை சைவம் அசைவம் என்று மத ரீதியிலோ, சாதி ரீதியிலோ பிரிப்பது தவறு. அசைவம் விரும்பாத இஸ்லாமிய்ரும், கிறிஸ்தவரும், பார்ப்பனர் அல்லாத பல வகை சாதியினரும் உள்ளனர் எனபதுவும் உண்மையே.. அசைவம் சாப்பிடுபவர்களை கீழ்சாதியினர் என்று முத்திரை குத்துவது சரியல்ல. சமூகத்தில் அடித்தட்டில் உள்ள கடும் உடல் உழைப்பை அளிப்பவர்களில் கூட ஒரு சிலர் அசைவம் விரும்பாதவர்களும் உள்ளனர். இது மனம் சார்ந்த ஒன்று. சாதி, மதம் சார்ந்தது அல்ல..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க