privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !

இந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !

-

ரசியப் புரட்சி! செயலின் மகிழ்ச்சி!

விளக்கவே தேவையில்லை
கண்ணைத் திறந்து
வெளி உலகைப் பார்த்தாலே
விளங்கிவிடும் உண்மை,
காண்பவைகள்
சமூக அநீதி மட்டுமல்ல
இந்த சமூக அமைப்பே அநீதி!

ரசியப் புரட்சியின் போது லெனின்
ரசியப் புரட்சியின் போது லெனின்

‘வளர்ச்சியை’ நம்பி
வாழ்க்கையை ஒப்படைத்த
நோக்கியா தொழிலாளிகள்
தெருவில்,

வரி ஏய்ப்பு செய்து
கொள்ளையடித்து
தொழிலாளரின் செல்லையே சிதைத்த
பன்னாட்டு முதலாளி பாதுகாப்பாக
திமிரில்.

ஒரே இரவில்
போபால் மக்களை
அறுத்துக் கொன்றது
அமெரிக்க மூலதனத்தின் நஞ்சு.

காரணமான,
யூனியன் கார்பைடு ஆண்டர்சனுக்கு
அரசாங்க செலவில் விருந்து,
பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டு
அவன் பங்குகள் விற்க அனுமதிக்கப்பட்டு
கடைசி வரை தண்டிக்கப்படாமலேயே
அமெரிக்காவில் (அவன்) இயற்கை மரணம்.

பாதிக்கப்பட்ட இந்தியனுக்கோ
கருக்குலைந்து, முகம் பிதுங்கி
புற்று வைத்து… இன்று வரை தண்டனை,
அன்றாடம் நடை பிணம்!

ஸ்மோல்னி இன்ஸ்டிட்யூட்டுக்கு போகும் புரட்சிப் படையினர்
ஸ்மோல்னி இன்ஸ்டிட்யூட்டுக்கு போகும் புரட்சிப் படையினர்

அரசு அன்றே கொல்லும்
நிதி மூலதனம்
நின்று கொல்லும்,
இரண்டையும் பார்க்கையில்,
உழைக்கும் வர்க்கத்தின்
ஒவ்வொரு அனுபவமும்
இந்தக் கட்டமைப்பையே
நொறுக்கச் சொல்லும்!

முதலாளித்துவ தேள்களின் கொடுக்குக்கு
முழுநீள வாலாக சட்டங்கள்,
சுரண்டலுக்கு தட்டிக் கொடுக்க
நீதிமன்றச் சுத்தியல்கள்.

நீதி தேவதையின்
கண் கட்டை அவிழ்த்தால்
அங்கே
கார்ப்பரேட்டுகளின் திருட்டு முழிகள்!

ராமனுக்கு கோயில் கட்ட
சூலங்கள்!
அந்நிய மூலதனத்துக்கு
தேசத்தையே வாரிக் கொட்ட
துடைப்பங்கள்!
நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு
நாடகமாடும் தர்ப்பைகள்!

குளிர்கால அரண்மனை மீது தாக்குதல்
குளிர்கால அரண்மனை மீது தாக்குதல்

இழந்த நீர்ப்பெருக்கின்
உலர்ந்த நம்பிக்கையில்
இன்னும் மிச்சமிருக்கும்
அந்த ஆற்றின் அடிமனம் கேட்டுப்பார்
சுரண்டலுக்கு எதிராக
ஒரு புரட்சி வாராதா
எனுமதன் ஏக்கத்தை
கருமணல் விரித்துக் காட்டும்!

வெடிவைத்து பிளக்கப்படும்
பாறையின் இதயத்தில் பொருந்து,
“இந்தப் பாவிகளை நொறுக்க
ஒரு புரட்சி வாராதா”
என எழும்பும் ஒலி
உனக்கும் கேட்கும்!

பன்னெடுங்காலமாய்
மண் கரு சேர்த்த தாதுக்களை
தனி ஒரு முதலாளி சுரண்டிக் கொழுக்க
தாய்மடி கிழிக்கும் குரூரத்தில்
“இந்தத் தனியார்மயக் கொடுமைக்கெதிராக
ஒரு புரட்சி வாராதா?”
என ஏங்கும் இயற்கையின்
எதிர்பார்ப்பு குரல்
இன்னுமா நீ கேட்கவில்லை…

ரசியப் புரட்சி 2-ம் ஆண்டு நாளில்
ரசியப் புரட்சி 2-ம் ஆண்டு நினைவு நாளில்

முற்றிலும்
முதலாளிகளை காப்பாற்றுவதற்காக மட்டுமே
திணிக்கப்படும் இந்த அரசமைப்பை
ஏற்க எந்த நியாயமும் இல்லை!

எது வளர்ச்சி?
எங்கள் ஊருக்கு தேவை
விவசாயம்,
தண்ணீர், மின்சாரம், இடுபொருள் வசதி
செய்ய வேண்டியது அவசியம்.
இதுக்கில்லாமல் எதுக்கு அரசு?

கார் கம்பெனிகளுக்கு சகல வசதி
கழனியில் பாடுபடும் விவசாயிக்கு
சமாதி!

உலகுக்கே உணவூட்ட
வேளாண்மை இருக்க
எதுக்கு மீத்தேன் திட்டம்?

எங்களுக்கு கடமையாற்றத்தான்
மாவட்ட ஆட்சியரும், தாசில்தாரும்
எதிரி பன்னாட்டுக் கம்பெனிக்கு அடியாளானால்
களைகளோடு சேர்த்து
கலெக்டரையும் புடுங்கி எறி!

எது முன்னேற்றம்?
இயற்கை வழங்கும் தண்ணீருக்கு
எதுக்கு காசு,
குடிக்க தண்ணிகூட தரமுடியாத
நகராட்சிக்கு எதுக்கு ஆபீசு!

LENINஎங்கள் ஊருக்கு
பொதுக்குழாய் தேவை,
எங்கள் மக்களுக்கு
மருத்துவமனை தேவை,
எங்கள் தெருவுக்கு
சாலை வசதி தேவை,

மொத்தத்தையும்
முதலாளிகளுக்கு காசாக்கிவிட்ட
இந்த அரசை புதைக்க
உடனே ஒரு சுடுகாடு தேவை!

எங்கள் பிள்ளைகளுக்குத் தேவை
அரசு பள்ளிக்கூடம்.
டாஸ்மாக் நடத்த ஐ.ஏ.எஸ். உண்டு
பாஸ் மார்க் போட ஆசிரியரில்லையா?
எதுக்கு தனியார் பள்ளிக்கூடம்
இழுத்து மூடு!
எல்லோர்க்கும் தாய்மொழியில்
கல்வி கொடு!
மக்களுக்கான அரசு இல்லையேல்
தூக்கி குப்பையில் போடு!

மனித குலத்தையே
மூலதன அடிமையாக
மரபணு மாற்றம் செய்வதா வளர்ச்சி?
இழி முதலாளித்துவத்தை அழித்தொழித்து
மனித மாண்பை மண்ணில் வளர்க்க
இப்படியெல்லாம் சிந்திப்பதும், செயலாற்றுவதும் தான்
நவம்பர் ஏழு ரசியப் புரட்சி!

– துரை.சண்முகம்

_______________________________________

அனைவருக்கும் 97-வது நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

காரல் மார்க்ஸும், பிரடெரிக் ஏங்கெல்சும் ஆரம்பித்த கம்யூனிஸ்டு அகிலத்தின் 150-வது ஆண்டு இது. 19-வது நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்படுத்தவும், பொதுவுடமை தத்துவத்தை உலகெங்கும் பரப்பவும், தத்துவத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகளை ஈட்டவும் இந்த அகிலம் ஆரம்பிக்கப்பட்டது. எல்லா பிரிவினைகளையும் கடந்து தொழிலாளி வர்க்கம் உலகெங்கும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் எனும் உன்னத நோக்கமும் இந்த அகிலத்தின் நோக்கங்களில் ஒன்று.

உலகெங்கும் பொதுவுடமைத் தத்துவம் பரவி சில வெற்றிகளையும், சில பின்னடைவுகளையும்  கண்டிருந்தாலும் பாரிய படிப்பினைகளையும் கம்யூனிச இயக்கம் கற்றிருக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளிலேயே முதலாளித்துவ கட்டுமானங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் நிகழ்காலம் தொடங்கி வருங்கால வரலாறு வரையிலும் பொதுவுடைமை இயக்கமே மனித குலத்தை மீட்டெடுக்கும். அதை முதலில் சாதித்து, இது கனவல்ல, நிஜம் என்று உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்திய நாள் நவம்பர் 7! ரசியாவில் 1917-ல் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைதான் இந்த உலகிலேயே மிக முக்கியமான நாள்!

அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளை அறிவதும், ஏற்பதும், பரப்புவதும் நமது கடமை!

மீண்டும் வாழ்த்துக்கள்!

– வினவு